தமிழ் புத்தாண்டு என்றதும் கடந்த சில
வருடங்களாக நம்மிடையே எழும் கேள்வி தையா? சித்திரையா? என்பதுதான்.
பூமியின் வட தென் பகுதிகளைப் பிரிக்கும்
கற்பனைக் கோடு பூமத்திய ரேகை. அதே நேரம் பூமி 23.5 டிகிரி பாகை சாய்ந்த நிலையில் சூரியனைச் சுற்றி
வருகிறது. எனவே, சூரியனின் கிரணங்கள் நேரடியாக பூமியின் பூமத்திய ரேகையை வருடத்தில் இரண்டு முறையே
சந்திக்கும்; அவை, மார்ச்-21ம் தேதி, செப்டம்பர் மாதங்களின் 23-ம் தேதி. (இதில்
மார்ச் மாத தினத்தை வசந்த சம நிலை நாள் – Vernal Equinox – என்றும் செப்டம்பர் மாத
தினத்தை இலையுதிர்கால சம நிலை நாள் – Autumn Equinox – என்றும் கூறுவர்) இத்தினத்தில்
இரவு-பகல் இரண்டும் சம நிலையில் இருக்கும். இந்த இரண்டு மாதங்களிலும் இரவு-பகல் சற்றேரக்குறைய
சரிசமமாக இருக்கும். இதில் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசியில் சூரியன் நுழையும்
மேஷ சங்கராந்தியைத் தான் சித்திரையில் வருடப் பிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
உலகின் பெரும்பாலான நாட்காட்டிகளின்
வருடப் பிறப்பு இந்த வசந்த காலத்தில் தான் இருந்தன. க்ரேக்க ரோமானிய நாட்காட்டிகளே
இன்றைய சர்வதேச நாட்காட்டிகளுக்கு அடிப்படை. ஐரோப்பியர்களின் வருடம், கி.மு. 7-ஆம்
நூற்றாண்டு வரை, குளிர்காலம் முடிந்து மார்ச் மாதமே துவங்கின. [குளிர்காலம் கணக்கில்
கொள்ளப் பட மாட்டாது. 30 நாட்களுடன் 10 மாதங்களைக் கணக்கிட்டு 300 நாட்கள் கொண்ட வருடம்
டிசம்பரில் முடிந்தது. பின்னர், தற்போதைய காலண்டரின் துவக்க வடிவத்தில் சீரமைக்கப்
பட்டு குளிர்காலமும் கணக்கில் கொள்ளப்பட்டு தற்போதைய வடிவத்தை பதினாறாம் நூற்றாண்டில்
தான் அடைந்தது.]
ஆக ஈக்வினாக்ஸ்-உம் மேஷ ராசியும் தான்
பொதுவாக ஆரம்பம் என்று கொள்ளப்பட்டு பெரும்பாலான நாட்காட்டிகள் வருடத் துவக்கத்தைக்
கொள்கின்றன.
ஆனாலும்,
இதைப் பொது விதியாகக் கூற முடியாது. ஏனெனில், இந்தியாவிலேயே சில இடங்களில்
(குஜராத், நேபாளம்) ஐப்பசி-யை ஆண்டுத் துவக்கமாகக் கொள்கிறார்கள். மேலும், பல்வேறு
தரப்பினர் பல்வேறு நாற்காட்டிகளை உபயோகிக்கின்றனர்.
கேரளாவை எடுத்துக் கொண்டோமென்றால் விஷு-பண்டிகையை ஒட்டி சில இடங்களில் வருடப் பிறப்பு கொண்டாடினாலும், பல பகுதிகளில் (குறிப்பாக, கொல்லம் பகுதியில்) ஓணம்-பண்டிகையை ஒட்டி வருடப்பிறப்புக் கொண்டாடப்படுகிறது; இதையொட்டியே தற்போது அம்மாநில அரசு அதிகார பூர்வமாக அம்மாநில வருடப் பிறப்பாகக்
கொண்டாடுகிறது. அவ்வாறு,
கொண்டாடப்படுவதால், விஷு பண்டிகை புறக்கணிக்கப்படவும் இல்லை.
எனவே, சித்திரையில் கொண்டாடுவதா அல்லது
தையில் கொண்டாடுவதா என்று குழம்புவது தேவையில்லை. ஒரு பொது வழக்கமாகத் தைமாதம் ஏற்கப்
பட்டு அரசு தரப்பில் பொது விழாவாகக் கொண்டாடப்பட்டாலும் தவறில்லை; அது ஏற்கத்தக்கதே.
சித்திரையில் மதச் சடங்காக அதைச் சார்ந்த மக்களால் கொண்டாடப் படுவதும் இதனால் மாறிவிடும்
என்றும் தோன்றவில்லை. ஊடகங்களும் வணிகர்களும் தங்கள் வணிக நோக்கில் இந்த பண்டிகையை,
வேறு பெயரிலாவது, மக்களிடம் விளம்பரம் செய்து கொண்டுதான் இருப்பார்கள். உதாரணமாக,
10-15 வருடங்களுக்கு முன் அக்ஷய த்ரிதியை என்பது ஒரு சாதாரண தினமாகத்தான் இருந்தது.
ஆனால் இன்று அது ஒரு முக்கிய பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது. இதற்கு வணிக நோக்கத்தைத்
தவிர வேறு காரணம் தெரியவில்லை. கிட்டத்தட்ட காதலர் தினமும் இவ்வாறு தான் பிரபலப் படுத்தப்படுகிறது.
எனவே, இந்த மாற்றங்களை ஏற்பதும் ஏற்காத்தும் அவரவர்கள் மனம் சம்பந்தப் பட்டதே.
இந்த வருடத்தைப் பொருத்தவரை அரசுத் தரப்பிலும்
சித்திரையிலேயே கொண்டாடுகிறார்கள்.
புத்தாண்டில் இல்லங்களிலும் ஆலயங்களிலும்
பஞ்சாங்கம் படிப்பது வழக்கம்.
பஞ்சாங்கம் என்றால் ஐந்து
விவரங்களைக் காட்டும் நாட்காட்டி தான். திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம்
ஆகியவையே அந்த ஐந்து விவரங்கள். இந்த அடிப்படையிலேயே மாதங்களும் வெவ்வேறு
பண்டிகைகளும் கொண்டாடப் படுகின்றன.
பஞ்சாங்கங்களில், கனக்கிடுதலின்
அடிப்படையில், வாக்கிய பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம் என்று முக்கிய இரண்டு
பிரிவுகள் உள்ளன.
வாக்கிய பஞ்சாங்கம் என்பது
சூரிய சிந்தாந்தம் என்ற சூத்திரத்தின் அடிப்படையில் கோள்கள், விண்மீன்கள் ஆகியவற்றின் நிலைகளைக் கணக்கிட்டு அவற்றின்
அடிப்படையில் கணக்கிடப்படுவது. சூரிய சித்தாந்தத்தைப் போல 18-வகையான சித்தாந்தங்கள்
இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூரிய சித்தாந்தத்தை இயற்றியவர் யார் என்பது தீர்மாணிக்க முடியவில்லை. கி.மு. 12-ம் நூற்றாண்டு
முதல் இந்த முறை வழக்கத்தில் இருப்பதாகக் கருதப்பட்டாலும் நூல்களில் இந்த வழக்கம் துவங்கிய
காலம் குறிக்கப்படவில்லை. என்றாலும், கி.பி. 4-ஆம்
நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஆர்யபட்டரின் நூலில் இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இதன் கணிப்பில் சில தவறுகள் இருக்கலாம்
என்று கூறப்படுகிறது, உதாரணமாக, பூமி சூரியனைச் சுற்ற ஆகும் நேரம் 365.2564
நாட்கள்; ஆனால், சூரிய சிந்தாந்த அடிப்படையில் அது 365.258756 நாட்களாகக்
கூறப்படுகிறது. இது சற்றேரக்குறைய 3½ நிமிட வேறுபாடு ஆகும்.
ஆனால், பாரம்பரிய பஞ்சாங்கங்கள் இந்த அடிப்படையிலேயே கணிக்கப் படுகின்றன. தமிழ்நாட்டில் பாம்பு பஞ்சாங்கம் என்று
கூறப்படும் சுத்த வாக்கிய பஞ்சாங்கம் இதன் அடிப்படையில் கணிக்கப்படுவதே.
திருக்கணித பஞ்சாங்கம்
என்பவை நவீன கணக்கீடுகளின் அடிப்படையில் கோள்கள் விண்மீன்கள் ஆகியவற்றின் நிலைகள்
கணக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுவது. ஆர்யபட்டர் காலத்திற்கு
முன்னரே இந்தத் திருக்கணித முறைக் கைக்கொள்ளப்பட்டது. ஆர்யபட்டரின் காலத்தில் இவை மேலும்
சீரமைக்கப்பட்டன. இந்த அடிப்படையிலான கணிப்புகள் பின்னர் வந்த வானவியல் நிபுணர்களால் ஆராயப்பட்டு ஏற்றுக்கொள்ளப்
பட்டுள்ளன. காலிதாஸரின் ’உத்தர காலாம்ருதம்’ என்ற ஜோதிட நூலும் திருக்கணித முறையையே
பரிந்துரைக்கிறது. காஞ்சி சங்கர மடம் வெளியிடும் பஞ்சாங்கம்,
ஆனந்த போதினி பஞ்சாங்கங்கள் திருக்கணித முறையில் கணிக்கப்பட்ட
பஞ்சாங்கங்களே.
இவற்றைத் தவிர வெவ்வேறு தரப்பினர்
மற்றும் வெவ்வேறு குழுக்கள் தங்களின் தேவைக் கேற்ப அக்குழுக்களின் தலைமையிடங்களின்
இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடும். உதாரணமாக, காஞ்சி சங்கர மடம்
வெளியிடும் பஞ்சாங்கம் கோள்கள், விண்மீன்கள் நிலைமை காஞ்சி நகரத்தை மையமாகக்
கொண்டு கணிக்கப்படும். ஸ்ரீரங்க ஜீயர் மட பஞ்சாங்கம் ஸ்ரீரங்கத்தை மையமாக கொண்டு
கணிக்கப்படும். வேறு நகரங்களில் இருப்பவர்கள் இந்த பஞ்சாங்களை உபயோகிக்கும் பொழுது
அவர்கள் இருக்கும் இடத்திம் அட்ச தீர்க ரேகைகளுக்கு ஏற்ப நேர வேறுபாடுகளை சமன் (reconcile)
செய்து கொள்ள வேண்டும்.
இந்த வாக்கிய-திருகணித நேர வேறுபாட்டால்,
இந்த வருடம் வாக்கிய பஞ்சாங்கப்படி வெள்ளி மதியமே சூரியன் மேஷ ராசியில் நுழைந்து விடுகிறது;
அதனால், வெள்ளியன்று சித்திரை 1-ஆம் தேதியாகக் கொள்ளப்படும். ஆனால், திருக்கணிதப்படி
இரவு 7½ மணிக்கு தான் மேஷ ராசியில் நுழைகிறது; சூரிய அஸ்தமனம் ஆகிவிடுவதால், சனிக்கிழமைதான்
சித்திரை 1-ம் தேதியாகக் கருதப்படும். கேரள விஷு பண்டிகையைப் பொறுத்தவரை சூரிய உதயத்தின்
பொழுது சூரியன் மேஷ ராசியில் இருக்க வேண்டும். எனவே, விஷு பண்டிகையும் சனிக்கிழமையே.
இப்போது
பஞ்சாங்கம் தரும் விவரங்களைப் பார்ப்போம்….
(1) திதி: நாம் சாதாரணமாக
தேதி என்று குறிப்பிடுவது திதி என்பதன் திரிபு. ஆனால் இந்த திதி என்பது 24 மணி
நேரம் கொண்ட ஒரு ஆங்கில நாள் இல்லை. அதாவது, ஆங்கில நாட்களைப் போல் இரவு 00.00.01
மணியிலிருந்து துவங்கி அடுத்த நாள் இரவு 12.00.00 வரை கணக்கிடப் படுவது இல்லை. இவை
சந்திர நாட்கள் அதாவது பிறை வளர்ச்சியை – திதியை – அடிப்படையாகக்
கொண்டே கணக்கிடப்படுகின்றன. இவை பிறைகளின் வளர்ச்சியை/தேய்வையே குறிக்கின்றன.
மாதங்களின் நாட்கள் திதிகளைக் கொண்டே குறிக்கப்படும். பொதுவாக சூரிய உதயத்தின்
பொழுது இருந்த திதியே அன்றைய திதியாகக் கருதப்படும். ஒரு திதியின் நேரம் 19.98 மணி
நேரத்திலிருந்து 26.78 மணி நேரம் வரை மாறுபடும். எனவே, சில திதிகள் இரண்டு சூரிய
உதயத்தைச் சந்திக்கும்; அதே நேரம் சில திதிகள் ஒரு சூரிய உதயத்தைக் கூட
சந்திக்காது. திதிகள் வளர் பிறை (சுக்ல பக்ஷம் – சுக்ல
என்றால் வெண்மை) பிரதமையிலிருந்து பௌர்ணமி வரையும் பின் தேய்பிறை (க்ருஷ்ண பக்ஷம் – க்ருஷ்ண என்றால் கருமை) பிரதமையிலிருந்து அமாவாசை வரையும்
கணக்கிடப்படும்.
(2) வாரம்: வாரம் என்பது ஞாயிறு முதல் சனி வரையிலான ஏழு
கிழமைகள் தான். இந்திய,
மேற்கத்திய முறை இரண்டிலுமே கிழமைகள் வானத்தில் நாம் நம் கண்ணால்
காணக் கூடிய வான்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு ஒரே மாதிரி பெயரிடப் பட்டுள்ளன. ஆனால், இவை எந்த அடிப்படைகளில் இந்த
வரிசையில் இந்த பெயர்களைப் பெற்றுள்ளன என்பதைப் பற்றிய விவரங்கள் இதுவரை சரியாகத்
தெரியவில்லை.
(3) நக்ஷத்திரம்: நக்ஷத்திரம்
என்று சாதாரணமாகக் கூறினாலும் இதை நக்ஷத்திரக் கூட்டம் என்று கூறுவது தான் சரியாக
இருக்கும். ஏனென்றால், சில நக்ஷத்திரங்களைத் தவிர
பெரும்பாலானவை ஒன்றுக்கு மேற்பட்டவையே. வானத்தில் கோடிக்கணக்கான
நக்ஷத்திரங்கள் இருந்தாலும், நிலவு பூமியைச் சுற்ற எடுத்துக் கொள்ளும் நாட்களுக்கு
(27 நாட்கள் 7¾ மணி நேரம்) ஏற்ப 27 பாகங்களாகப் பிரித்து அந்த நக்ஷத்திரக் கூட்டத்திற்கு
அருகில் சந்திரன் செல்வது அந்த நக்ஷத்திரமாகக் குறிக்கப் படும்.
(4) யோகம் : யோகம்
என்றால் கூட்டு அல்லது இணைப்பு என்று பொருள். மனமும் உடலும் இணைந்து/சேர்ந்து
ஒருங்கிணைப்பத்து தான் யோகக் கலை. இங்கு இது சூரிய சந்திர சேர்க்கை
என்ற பொருளில் கூறப்படுகிறது. 27 நாட்களில் சூரியனும் சந்திரனும் மாறி மாறி
வெவ்வேறு கோணங்களில் இருக்கும் அவை, 27 வெவ்வேறு பெயருடன் குறிப்பிடப்படும்.
மற்றொரு வகை யோகமும் உண்டு.
அது ஞாயிறு முதல் சனி வரை உள்ள தினங்களும் நக்ஷத்திரமும் சம்பந்தப்பட்டது.
வெவ்வேறு சேர்க்கைகள் வேறு வேறு யோகங்களாகக் – சித்த யோகம்,
அமிர்த யோகம், மரண யோகம் – குறிக்கப்படும்.
(5) கரணம்: கரணம் என்பது திதியில் பாதி. மொத்தம் 30 திதிகள்
என்று பார்த்தோம். அப்படியானால், 60 கரணங்கள் இருக்க வேண்டும். ஆனால், கரணங்கள்
மொத்தம் 11 தான். வளர்பிறை முதல் (பிரதமை) திதியின் முதல் பாதி எப்பொழுதுமே
‘கிம்ஸ்துக’ கரணம் என்று அழக்கப்படும்; தொடர்ந்து 7 கரணங்கள் (பவ, பாலவ, கௌளவ,
தைதூல, கர்ஜ, வணிஜ, விஸ்தி(அ) பத்ரா) 8 முறைத் திரும்பத் திரும்ப வரும். மீதி உள்ள
3 பாதி திதிகள் சகுனி, சதுஷ்பதம், நாகவம் என்ற கரணங்களாகக் குறிக்கப்படும்
பஞ்சாங்கங்களில் இவற்றைத்
தவிர வேறு பல குறிப்புகள் இருந்தாலும், பஞ்ச அங்கம் என்ற ஐந்து அடிப்படைக்
குறிப்புகள் மேற்கூறியவையே.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்….