சினிமாத் துறையில் ஜாம்பவானாக இருந்து
அவர் இறந்துவிட்டால் அனைவராலும் சில வருடங்களில் மறக்கப்பட்டு விடுவார். சூப்பர் ஸ்டார்களே
(எ.கா. எம்.கே.தியாகராஜ பாகவதர்) ஆனால், அவர் இறந்து 30 வருடங்களுக்குப் பின்னும் இன்னமும்
மக்களால் நினைவில் வைத்துக் கொண்டாடப்படும் ஒரு கலைஞன் என்றால் அவர் முஹமத் ரஃபி தான்.
1980-ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி இறந்த
அவரை, இருபது ஆண்டுகளுக்குப் பின் 2000-ஆம் ஆண்டில் ’இந்த நூற்றாண்டின் சிறந்த பாடகர்’ என்று Stardust பத்திரிக்கை நடத்திய தேர்வில்
பொதுமக்களின் 70%க்கும் அதிக வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கும் அளவுக்குப் புகழ் பெற்றவர். இந்த வருடம் கூட சென்னையில் சென்ற வாரம் (காமரஜர் அரங்கம்) அவர் நினைவுநாள் அவர் பாடல்களுடன் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இத்தனைக்கும் அவர் தமிழில் ஒரு பாடல் கூட பாடவில்லை.
சாதாரணமாக ஒவ்வொருவருக்கும் பிடித்த பாடகர்
என்றால் யாராவது ஒருவரைக் காட்டுவர். ஆனால், இந்திய திரைத் துறையில் (அவர் எந்த மொழியைச்
சேர்ந்தவராக இருந்தாலும்) எந்த ஒரு பாடகரையும் அவருக்குப் பிடித்த பாடகர் என்றால் அது
பெரும்பாலும் முஹமத் ரஃபி-யாகத் தான் இருக்கும்.
1924-ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் எல்லை
கிராமத்தில் பிறந்த அவர் 1944-ஆம் ஆண்டு பம்பாய் வந்து திரைத் துறையில் பிரவேசித்தார்.
கோரஸ் பாடுவதுடன் கே.எல்.ஸெஹகல், ஜி.எம்.துராணி ஆகியோருக்கு track பாட ஆரம்பித்து மெல்ல
இரண்டு மூன்று பேர் பாடும் பாடல்கள் மற்றும் மற்ற கேரக்டர் ஆர்டிஸ்டுகளுக்குப் பாடுவது
என்று இருந்த அவர் நௌஷாத்-ஐ சந்தித்தது பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நௌஷாதின் அபிமானப்
பாடகர் தலாத் முஹமத், நௌஷாதின் ஸ்டுடியோவில் புகைப்பிடிக்க, அதைக் கண்டித்த நௌஷாதுக்கும்
தலத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, வேறு பாடகரைத் தேடிக் கொண்டிருந்த நௌஷாதின் கண்ணில்
ரஃபி பட (இல்லை காதில் ரஃபி-யின் குரல் விழ) அது முதல் அவருக்கு ஆஸ்தான பாடகரானார்
ரஃபி. இன்றும் ஹிந்துஸ்தானி க்ளாஸிகலுக்கு எடுத்துகாட்டு என்றால் இவர்கள் இணைந்து பணியாற்றிய
’பைஜு பாவ்ரா’ [இவரும் தான்சேன்-உம் விருந்தாவனத்தில் ’பாங்கே பிஹாரி’ சிலை வைத்து
வழிபட்டு வந்த ஸ்வாமி ஹரிதாஸ்-இன் சீடர்கள். தன் தந்தை இறப்பிற்குக் காரணமான அக்பரின்
அரசாங்கப் பாடகரான தான்சேனைப் பழிவாங்க குவாலியரின் அரசாங்கப் பாடகரான இவர் பாடல் போட்டிக்கு
அழைத்து – பரிசு மற்றவரின் தலை – அதில் தான்சேன்-ஐத் தோற்கடிக்க அவர் பைஜு-வின் காலில்
விழுந்தவுடன் பழியுணர்சி நீங்கி தான்சேன்-ஐ மன்னித்ததாக வரலாறு. அபுல் ஃபசல்-இன் (அக்பர்
நாமா என்ற அக்பரின் சரிதத்தை எழுதியவர்) குறிப்புகளிலும் இது இடம் பெற்றுள்ளது]. பாரம்பரிய
இசையின் பல நுணுக்கங்களைக் கொண்ட இப்படம் இன்றும் ரஃபி ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு
வருகிறது. இதில் இடம் பெற்ற ‘மன் தர்பட் ஹரி
தர்ஷன் கோ ஆஜ்’ என்ற பாடல் அனைத்து பஜனைகளிலும் இடம் பெறும் ஒரு முக்கிய பாடல் ஆகும்.
இதன் பின்னர் 1970-கள் வரை ரஃபி-யின்
ராஜ்ஜியம் தான். 70-ன் இறுதியில் ‘ஆராதனா’ படத்தில் S.D.பர்மன் ராஜேஷ் கன்னாவிற்கு
இரண்டு பாடல்களில் (குன்குனாரஹேன் ஹைன் பவ்(ன்)ரே, பாகோன் மேம் பஹார் ஹை) ரஃபியை பயன்படுத்திய
நிலையில் உடல் நலக் குறைவால் அவர் மகன் R.D.பர்மன் மற்ற பாடல்கள் அனைத்திலும் கிஷோர்குமாரைப்
பயன்படுத்தினார். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஃபி-யின் வாய்ப்புகள் குறைந்தன. 1970-1974
மிகப் பெரிய வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். இடையில்
லதா மங்கேஷகருடன் வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அவர் இவருடன் பாட மறுத்தார்.
[இதற்கு மூல காரணம் Royalty பிரச்சனை. லதா பாடகருக்கும் பங்கு வேண்டும் என்று கேட்க
ரஃபி-யோ பாடுவதோடு பாடகரின் கடமை முடிந்துவிட்டது என்று அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
தொடர்ந்து ஒரு பாடலின் போது இருவருக்கும் கருத்து
வேறுபாடு ஏற்பட லதா அவரோடு பாடமாட்டேன் என்று அறிவித்தார்]
ஆனால், 1974-ஆம் ஆண்டு உஷா கன்னா மூலம்
அவருக்கு மறுவாய்ப்பு கிட்டி அவரது இரண்டாவது இன்னிங்க்ஸ் 1980-ல் அவர் இறக்கும் வரைத்
தொடர்ந்தது. 1977-ஆம் ஆண்டு R.D.-யின் இசையிலேயே அவருக்கு மீண்டும் சிறந்த பாடகருக்கான
தேசிய விருது கிடைத்தது.
1980-ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி அன்று
அவரின் ஃபேவரெட் லக்ஷ்மிகாந்த்-ப்யாரேலால் (இவர்கள் இசையில் தான் அதிக பாடல்கள் பாடியுள்ளார்)
இசையில் ’ஆஸ்-பாஸ்’ படத்தின் பாடல்களைப் பாடிமுடித்து அன்று இரவு 10.30க்கு மாரடைப்பால்
தன் 56-ஆவது வயதில் காலமானார்.
ஹிந்தி பட உலகில்
ராஜேந்த்ர குமார், ஷம்மி கபூர், ரிஷிகபூர் ஆகியோருக்கு ரஃபி-யின் குரல் போல வேறு குரல்கள் சரியாக இருந்ததில்லை.
ஷம்மி கபூர் ஒரு பேட்டியில் ரஃபி இல்லை என்றால் தானே இல்லை என்று கூட குறிப்பிட்டுள்ளார்.
தேவ் ஆனந்த், சஷிகபூர் ஆகியோருக்கும் ஆரம்பகாலங்களில் இவர் தான் பாடியுள்ளார்.
தெலுங்கில்
N.T.ராமாராவ் (கண்டசாலா இல்லாத பொழுது) இவரை பல பாடல்கள் பாட வைத்துள்ளார். தமிழில்
ஒரு பாடல் கூட பாடவில்லை என்பது சற்று வருத்தமான விஷயம் தான்.
அவர் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும்
பிடித்தவை…
1. சௌத்-வின்
கா சாந்த் ஹோ (சௌத்-வின் கா சாந்த்)
2. பஹாரோன்
பூல் பர்ஸாவோ (படம்:சூரஜ்)
3. மேரே
மெஹபூப் துஜே (மேரே மெஹபூப்)
4. பர்தேஸியோன்
ஸே அக்கியான் மிலா நா (பர்தேஸி)
5. க்யா
ஹுவா தேரா வாதா (ஹம் கிஸிஸே கம் நஹி)
6. கிலோனா
ஜான்கர் முஜ்கோ (கிலோனா)
7. சாஹூன்கா
மே துஜே (தோஸ்தி)
8. சூ
லேனே தோ நாஸுக் ஹோட்டோன் கோ (காஜல்)
9. மேனே
பூச்சா சாந்த் ஸே (அப்துல்லா)
10. தர்த்-ஏ-தில்
(கர்ஸ்)