குதிரைச் சவாரி
[வல்லமை இதழின் 228-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]தடைகள் அனைத்தும் தவிர்த்து
தளைகள் உடைத்து எறிந்து
சிறுமை அனைத்தும் களைந்து
சிறகுகள் விரித்திட வேண்டும்
குறுநகை புரிந்து பின்னால்
குயுக்திகள் செய்யும் வீணர்
குறுக்கீடு தாண்டிப் பாய்ந்து
சிறுமைகள் செய்திட விழையும்
நேர்பட நிமிர்ந்து செல்லும்
நெஞ்சுரம் பெற்றிட வேண்டும்
மயக்கிடும் வீண்செயல்தனை மறைக்கும்
கடமைக் குதிரை ஏறி - துன்பக்
கடலினைத் தாண்டிட வேண்டும்
எதிர்ப்புகள் எத்தனை வந்தும்
உயிர்ப்புடன் அவற்றை வென்று
பொறுப்புடன் செயலது புரியும்
மனிதரைப் போற்றிட வேண்டும்