சனி, பிப்ரவரி 27, 2021

குருட்டுப் பூனை

குருட்டுப் பூனை

[வல்லமை இதழின் 295-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 




பால் வைத்து பரிவுகாட்டி
மடிமீது தானமார்த்தி
தாலாட்டித் தூங்கவைத்து
அன்பு காட்டி வளர்த்தாலும்
முழுவதுமாய் நம்பவில்லை
மதிலமர்ந்த பூனையிது

தாவிச்சென்று சட்டென்று கவ்வி
தூரமாய்த் தூக்கிச் சென்று
கண்ணில் காட்டாமல்
மறைத்துப் பதுக்கிவைத்து
சந்தேகத்தின் சாரலில் நனைந்திருக்கும்
முக்காடிட்டச் சைவப் பூனை

உள்ளுக்குள் வஞ்சம் வைத்து
வெளியிலே வேடமிட்டு
கள்ளத்தின் நாற்றத்தை
வார்த்தை புனுகுபூசி
தினந்தோறும் மறைத்ததினால்
உண்மைக்கும் பொய்மைக்கும்
வேற்றுமையை அறியாமல்
தன் பிம்பக் காட்சியினை
பிறர்மீது ஏற்றிவைத்து
இருண்டு போன உலகமென்று
கண்மூடி அழுகின்றோம்

வெள்ளி, பிப்ரவரி 19, 2021

பிள்ளை உள்ளம்

பிள்ளை உள்ளம்

[வல்லமை இதழின் 292-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 



துள்ளிப் பாயும் வெள்ளோட்டம்
பள்ளம் மேடு பார்ப்பதில்லை
கள்ளம் இல்லா உள்ளத்தில்
பொய்யும் கசடும் சேர்வதில்லை

விரிந்து மலர்ந்த மலரைப் போல்
சிரித்து மலர்ந்த முகம் கொண்டு
திறந்து வைத்த புத்தகமென – மனதை
மறைத்து மூடிப் பூட்டவில்லை

சொல்லும் சொல்லில் பொய்யில்லை
வெள்ளை கருப்புப் பேதம் இல்லை
உள்ளத்தில் உள்ளதை மறைப்பதில்லை
பிள்ளையாய் இருந்தால் தொல்லையில்லை