புதன், ஆகஸ்ட் 19, 2015

நாகா ஒப்பந்தம் (பகுதி-1)


நாகா ஒப்பந்தம் (பகுதி-1)

சமீபத்தில் இந்தியா நாகா போராட்ட அமைப்புகளுடன் அமைதி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் பின்னணி என்ன?

முதலில் இந்த நாகாக்கள் யார்?




நாகா என்பது தனி ஒரு குழு அல்ல. இது அங்காமி, சேமா, ரெங்மா, லோதா, ஸெமெ, லியங்மை, ரோங்மை, கோன்யாக், தங்குல் என்று பல பழங்குடிகளை உள்ளடிக்கிய இனமாகும். வட கிழக்கு மாநிலங்களிலும் மயன்மாரின் (முந்தைய பர்மா) வடபகுதியிலும் பல இனக்குழுக்களாக தங்களுக்குள் போட்டியிட்டு, போரிட்டு வாழ்ந்த இந்தக் குழுக்களை பிரிட்டிஷார் – இந்தியாவின் கிழக்கு வடகிழக்குப் பகுதிகளை தங்கள் வசமாக்கிய போது – இவர்களை ஒன்றிணைத்து நாகாக்கள் என்று பெயரிட்டு, இவர்கள் வாழ்ந்துவந்த பகுதிகளை ‘அஸ்ஸாமின் நாகா மலை மாவட்டம்’ என்று பெயரிட்டு அங்கு ஒருங்கிணைத்தனர். வடகிழக்கில் அஸ்ஸாமின் பெரும் பகுதிகள் வங்காள மாநிலத்தில் இணைக்கப்பட்டன. மணிப்பூர், திரிபுரா ஆகியவை அரச வம்சங்களைக் கொண்ட சமஸ்தானமாக இருந்தன.

1929-33 வாக்கில் தலைப்பட்ட ஹெராக்கா என்ற மத வழக்கத் தொன்மையின் படி, நாகா இனத்தவர்கள் தங்களை மெஹகெல் என்ற இடத்தில் தோன்றியதாகவும் பின்னர் தங்களின் மக்கள் தொகை உயர்ந்ததால் பல குழுக்களாகப் பிரிந்து குடிபெயர்ந்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு அவர்கள் பிரிந்தபோது பின்னர் தாங்கள் வலுப்பெற்று ஒன்றிணைந்து தங்களுக்கென்று ஓர் தனி அரசாட்சியை அமைத்துக் கொள்ளவும் சபதமேற்றதாகவும் அந்தத் தொன்மம் குறிப்பிடுகிறது. இந்த மெஹகெல் என்பது மணிப்பூரின் மக்ஹீல் என்ற பகுதியைக் குறிப்பதாகவும், பர்மாவின் சந்த்வின் நதிப்பகுதியைச் சேர்ந்தது என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன.

ஆரம்பக் காலத்தில் வடமேற்கிலிருந்த திமார்பூரை ஆண்ட கச்சாரி அரசும் தென்பகுதியைச் சேர்ந்த மணிப்பூரை ஆண்ட குக்கி இனத்தவரும், கிழக்கிலிருந்த பர்மாவைச் சேர்ந்த ஆவா அரசும் தங்கள் எல்லைகளை விரிவு படுத்த பழங்குடிகளான நாகாக்களுடன் போரிட்டு வந்துள்ளனர்.  பிரிட்டிஷார் இவர்களின் அரசாங்கங்களைக் கைப்பற்றிய பின், அருகிலிருந்த இந்த மலைகுடி மக்களை அடக்க பெரும்பாலும் மணிப்பூரைச் சேர்ந்த குக்கி இன மக்களையே பயன்படுத்தினர். 1825-களில் நடந்த ஆங்கில-பர்மா போருக்கு பெரும்பாலும் குக்கி இனத்தவர்களே ஈடுபடுத்தப்பட்டனர். அதற்குப் பரிசாக மணிப்பூர் சமஸ்தானத்திற்கு நாகாக்களின் இடங்கள் கொடுக்கப்பட்டு அங்கு குக்கி இன மக்கள் குடியேற்றப்பட்டனர். 1858-இன் சிப்பாய் கலகத்தைத் தொடர்ந்தும், பிரிட்டிஷார் குக்கி இன மக்களை நம்பாமல் அவர்களை அடக்க நாகாக்களுக்கு சலுகைகள் வழங்கினர். பின்னர் 1919-இல் மணிப்பூர் சுதந்திரப் போர் என்ற குக்கி போராட்டத்தில் பிரிட்டிஷாரின் சார்பில் நாகாக்களே ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து பிரித்தாளும் கொள்கையால் இரு இனத்தவரும் ஒருவருக்கொருவர் எதிராகச் செயல் படத் தூண்டப்பட்டனர். இதனால், நாகாக்களுக்கும் குக்கி இனத்தவருக்கும் இன்று வரை பகைத் தொடர்ந்து வருகிறது. 

ஆனால், பல்வேறு இனக்குழுக்களாக தங்களுக்குள் போட்டியிட்டு வந்த இவர்களை ஒருங்கிணைப்பது பிரிட்டிஷாருக்கு இன்றியமையாததாக இருந்தது. காரணம், இப்பகுதியின் வனவளமும் 18-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மரம், காபி, தேயிலை பொருட்களின் தேவையே. தவிர, தன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அஸாமிலிருந்து மணிப்பூர், பர்மா ஆகியவற்றை அடைய நடுவில் இருக்கும் நாகாக்களின் பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும், இப்பகுதிகளின் தேயிலை, காபி தோட்டங்களுக்கும் மரம் வெட்டுதலுக்கும் அவற்றை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்ய ரயில் பாதைகள் போடுவதற்கும் மிகுந்த கூலியாட்கள் தேவைப்பட்டனர். பின்னர், 1914-18-இல் முதல் உலகப் போருக்கும், 1917-19-இல் குக்கி போராட்டத்தின் போதும் நாகாக்கள் பெருமளவில் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். முதல் உலகப்போரில் ஜெர்மனிடமிருந்து பிரெஞ்சு பகுதிகளை மீட்க பிரிட்டன் நடத்திய போரில், 2000-க்கும் மேற்பட்ட நாகாக்கள் போரிட அனுப்பப்பட்டனர் என்பது வரலாறு.

நாகாக்களை ஒன்றிணைக்க பிரிட்டிஷார் தேர்ந்தெடுத்த வழி மதமாற்றம்.  மைல்ஸ் ப்ரோன்சன் – எட்வின் க்ளார்க் ஆகியோர் தலைமையில் கிருத்துவ மிஷனரிகள் வரவழைக்கப்பட்டனர். அவ்வாறு, ஒன்றிணைந்த போது உருவானது தான் தற்போது வழக்கத்தில் இருக்கும் நாகாமீஸ் மொழியாகும். முதல் உலகப் போரிலிருந்து மீண்டு நாகாக்கள் ஆங்கிலேயருடன் ஒன்று சேர்ந்து தங்களின் தேவைகளை அரசுக்கு எடுத்துரைக்க 1918-இல் நாகா கழகம் (Naga Club) என்ற ஒன்றை உருவாக்கினர். [1885-இல் காங்கிரஸும் இதே போல் தான் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது].

பின்னர், 1930களில் மிஷனரிகளின் மதமாற்றக் கொள்கையை எதிர்த்து நாகாக்களின் ஒரு பிரிவினர் குறிப்பாக ஸெலியாங்ராங் என்றழைக்கப்படும் ஸெமெ, லியங்மை, ரோங்மை ஆகியோர் ஹெராக்கா மத இயக்கத்தைத் தொடங்கி போராட்டம் நடத்தினர். இது மெல்ல பிரிட்டனுக்கு எதிரான சுதந்திர போராட்டமாக  மாறியது. இந்தப் போராட்டம் அடக்கப்பட்டாலும் பிரிட்டன் தன் மதமாற்றக் கொள்கையை மட்டுப்படுத்திக் கொண்டது.

1929-இல் சைமன் கமிஷன் என்று நம்மால் அழைக்கப்படும் இந்திய சட்ட ஆணையத்திடம் இவர்கள் பிரிட்டன் இந்தியாவிலிருந்து வெளியேறும் பொழுது தங்களுக்கான (காங்கிரஸிலிருந்து வேறுபட்ட) தனி நிலையைத் தேர்ந்தெடுக்கத் தங்களுக்கு உரிமை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். [சைமன் கமிஷன் மாண்டேகு-செம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்ததின் கீழ் இரட்டை ஆட்சி முறையை (Dyarchy) – அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்களும் பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதிகளான ஆளுநர்களும் ஆளும் ஆட்சிமுறை – செயல்படுத்த ஏற்படுத்தப்பட்டக் குழுவாகும்]

 சைமன் கமிஷன் பொதுவாகத் தோல்வி அடைந்ததாகக் கூறப்பட்டாலும், இன்றைய இந்திய அரசின் அமைப்பில் அதன் அங்கம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். காரணம், அதன் ஒரு உறுப்பினராக வந்தவர் பின்னர் இந்திய சுதந்திரத்தின் போது பிரிட்டனின் பிரதமராக இருந்த க்லெமெண்ட் அட்லி. சைமன் கமிஷனிடம் கொடுக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் பரிச்சயம் அட்லி எடுத்த பல முடிவுகளுக்கு ஆதாரமாக இருந்தது என்பது தான் உண்மை.

சைமன் கமிஷனின் தோல்விக்குக் காரணம் அதில் இந்திய பிரதிநிதிகள் உறுப்பினராக இருக்கவில்லை என்ற காங்கிரஸின் எதிர்ப்பே காரணம். ஆனாலும் அந்த கமிஷன் தன் அறிக்கையை பிரிட்டிஷ் அரசிற்கு சமர்ப்பித்தது.

அதன் அறிக்கையில் இந்தியாவின் பிராந்தியங்களை வரையறுக்கையில் மற்ற பிராந்தியங்களைப் போலல்லாமல் வடகிழக்கு மலைகுடியிருப்புகளைத் தனியாக வகைப்படுத்தியது. நாகாக்கள் மட்டுமன்றி மிசோக்கள், காரோக்கள், காஸிக்கள், ஜெயின்ந்தியர்கள் ஆகியோரின் குடியிருப்புகளும் அருணாசலப்பிரதேசத்தின் லக்மிபூர் பகுதிகளும் இவ்வாறு தனியாக வகைப்படுத்தப்பட்டன. இப்பகுதிகள் மற்ற பகுதிகள் போலன்றி மாநில முதல்வர்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், அந்த அறிக்கையில் இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போலன்றி இவ்வாறு தனிபடுத்தப்பட்டதைக் குறிப்பிடும் பொழுது, இந்த மலைகுடியினர் மற்ற பகுதிகளிலிருந்து வேறுபட்ட  பழக்கவழக்கங்களும் கலாச்சாரமும் கொண்டவர்கள் என்றும் பொது நிலைக்கு இவர்களைக் கொணர்வது என்பது வளர்ச்சியை அடிப்படையாக் கொண்டதாக இருக்க வேண்டும்; மாறாக, அவர்களின் அடையாளத்தை அழிப்பதாக இருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டது. தவிர, சுதந்திரமான மலைக்குடியினர் விடுதலையால் மற்ற மக்களை அண்டி வாழும் நிலைக்குத் தள்ளப்படக் கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தது.

1935-இல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சைமன் குழுவின் அறிக்கையில் நடைபெற்ற விவாதத்தில் குழுவினர் இந்த மலைக்குடியினருக்கு சுதந்திரத்தை அல்லாமல் பாதுகாப்பையே பரிந்துரை செய்வதாகக் கூறினர்.

பின்னர் நடந்த அரசியல் மாற்றத்தில் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு விலக இருந்த நிலையில் அட்லி தலைமையிலான அரசு மேற்கு பர்மா முதல் திபெத் வரையிலான மலைப் பகுதிகளை அஸாமின் ஆளுநராக இருந்த சர்.ராபர்ட் ரீட் வழிவகுத்தபடி பிரிட்டிஷ் அரசின் தனி காலணியாக (Crown Colony Plan) அறிவிக்க நினைத்தது. இதை காங்கிரஸ் எதிர்த்தது.  

பின்னர், இந்திய தேசிய ராணுவமும் ஜப்பானும் வடகிழக்குப் பகுதிகளைத் தாக்குவதைக் கருத்தில் கொண்ட பிரிட்டிஷ் இந்த பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைக்கும் எண்ணத்தைக் கைவிட்டது. 1947-இல் அட்லி வடகிழக்குப் பிராந்தியத்தின் நிலைமையை அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் நிர்ணய சபையின் (Constituent Assembly) பிரதிநிதிகளேத் தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அறிக்கை விட்டு கைகழுவினார்.

1947-இல் ஜூலை மாதம் காந்தியடிகள் நாகா இனத்தவர் தங்கள் நிலையைத் தாங்களே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அனுமதிக்கப் படாவிடில் இந்திய அரசை எதிர்ப்பேன் என்றும் அறிவித்தார்.  ஆனால், அதற்கு முன்னரே ஜூன் மாதம் நாகா தேசிய சபையும் பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதியான ஆளுநர் சர்.ஹைதரி அக்பரும் ஓர் ஒன்பது அம்ச உடன்படிக்கையை மேற்கொண்டனர். அதன்படி, நாகா இனத்தவர்களுக்காக ‘நாகாலிம்’ (லிம் என்றால் நிலம்) என்ற மாநிலம் உருவாக்கப்படும் என்றும் அவர்களுக்கு 10 வருடங்கள் இந்தியா பாதுகாவல் அரணாக (Guardian Power) இருக்கவும், அதன் பின் அவர்கள் நிலைமையை அவர்களே தீர்மானிக்கவும் வழி வகுத்தது.  இந்த ஒன்பது அம்ச கோரிக்கைகள் – நீதித்துறை, நிர்வாகம், சட்டம், ஒழுங்கு, நிலம், வரி, எல்லை, ஆயுதங்கள், ஒப்பந்த  காலம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த ஒப்பந்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறும் என்றும் ஹைதரி வாக்களித்தார். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தில் (ஆறாவது அட்டவணை) பெருவாரியான அம்சங்கள் இடம் பெற்றாலும் 10 ஆண்டு கால அவகாசம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. இதை எதிர்த்து அப்போதைய கவர்னர் ஜெனரல் இராஜாஜியை நாகா தேசிய இயக்கத்தின் உறுப்பினர்கள் சந்தித்தனர். அவரும் நாகாக்களின் கோரிக்கைகள் அவர்களுக்குச் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என்று வாக்களித்தார்.

ஹைதரி, நாகாக்களின் இந்த ஒப்பந்தத்தினால் அவர்கள் இந்தியாவுடன் இணையும் எண்ணத்தில் இருப்பதாகவே எண்ணினார். அதையே தில்லிக்கும் அறிவித்தார். பின்னர், அரசியல் நிர்ணய சபையில் இது பற்றிய விவாதங்களில் சபை, நாகாலாந்து இந்தியாவுடன் இணைந்த பகுதியாகவும் சுயநிர்ணயம் மாவட்ட ரீதியிலான பிரிவிற்குமானது என்றும் தீர்மானித்தது.

இடையில், நாகா கழகம், சி.ஆர். பாவ்ஸேயின் தலைமையில் தன்னை நாகா மலை மாவட்ட ஆதிகுடிகள் அமைப்பாகவும் பின்னர் இந்திய சுதந்திரத்திற்காக அரசியல் நிலைமையைப் பரிசீலிக்க பிரிட்டனின் அமைச்சரவைக் குழு (Cabinet Mission) 1945-இல் இந்தியா வந்த பொழுது, நாகா தேசிய அமைப்பாகவும் உருமாற்றிக் கொண்டது. முதலில் அவர்கள் தங்களுக்கென தனி வாக்காளர் பட்டியலும் தங்களை இந்திய குடியரசின் கீழ் சுயாட்சி பெற்ற ஃபெடரல் அமைப்பாகவும் அறிவிக்கக் கோரினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக