ஞாயிறு, நவம்பர் 29, 2020

ஆறுபடையப்பன்


ஆறுபடையப்பன்

[வல்லமை இதழின் 285-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 

 

நெற்றிச்சுடர் எரித்த வெம்மைநோய் தீர்த்து
ஆற்றுப்படுத்தி நக்கீரன் நலம்பெற்று வாழ
போற்று தெய்வயானை மணமுடித்த கோலமுடன்
பரமசினக் குன்றமர்ந்து அருளும் பெருமானே!

வியாழனவர் தவமியற்ற, தூயசுடர் தனிலுதித்து
தாய்சக்திவேல் தொடுத்துத் தீயசூரன் தனையழித்து
ஆழிசூழ் புவனங்காக்கச் சேவற்கொடி ஏந்தி
சேயோனாய் குன்றழித்து நின்ற செந்தில்நாதா!

பானுவும் தேனுவும் இலக்குமியுடனே
பேணிடும் வேல் கொண்ட கரத்துடனே
சுத்த ஞான சித்தம் கொள் பக்தர் நலங்காக்க
தென்பொதிகை பழனிபதி நின்ற பாலகுருநாதா!

ஓரெழுத்து மந்திரத்து பொருள் மறந்த காரணத்தால்
பிரமனையே சிறைபிடித்து, பரமனுக்குப் பொருளுரைத்து
சீரகத்தின் பிணி நீக்கி அடியவரை
ஏரகத்தே காத்து நிற்கும் சாமிநாதா!

துள்ளிவரு வேலெடுத்து சூரர்தலை கிள்ளி
சினம்விடுத்து தேவவேழ வாகனத்திலேறி
வள்ளிமலைப் பெண் மயக்கி மணமுடித்து
குன்றுதோறும் ஆடிநிற்கும் ஞானவஜ்ரவேலா!

சிலம்பாற்றங் கரையினிலே இளைப்பாற வந்தவளின்
ஞானப்பசிதீர நாவல் பழந்தானுதிர்த்து
அழகுமாமன் சூடும் அரளி மாலையேந்தி
சோலைமலை தானமார்ந்த வெற்றிவேலா!

ஆறுபடை மீதுறைந்து நீயருளுகின்ற போதும்
கூறுதமிழ் நல்லுலகம் சென்றவிடந்தோறும்
குன்றிருக்குமிடமெல்லாம் குமரன் இடம் எனவே
செந்தமிழால் போற்றித்தொழும் கந்தகுருநாதா!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக