திங்கள், அக்டோபர் 17, 2011

எந்திரனா? சுதந்திரனா?



தில்லி புறநகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு ஒரு வசதி. பொதுவாக, அலுவலகம் சென்றுவர இவர்கள் Chartered Bus”  என்று அழைக்கப் படும் ஒப்பந்த - ஒரே குறிப்பிட்ட இடத்திலிருந்து குறிப்பிட்ட இடம் வரை சென்று வர – பேருந்துகளைப் பயன்படுத்துவது. பயணம் செய்பவர்கள் அணைவருக்குள்ளும் ஒரு நட்பு வட்டம் உருவாகும்; ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே வருவதால் பயணக் களைப்பும் தெரியாது.

நேற்று ஒரு விவாதம்.

ஒரு நண்பர் தன் வீட்டில் எல்லாம் ஒரு குறிப்பிட்ட கால அட்டவணைப் படி நடப்பதால் தான் என்றுமே பேருந்திற்குச் சரியான நேரத்திற்கு வருவதாகக் குறிப்பிட்டார். உடனே, வேறு ஒரு நண்பரோ தன் வீட்டில் இப்படி அட்டவணையெல்லாம் கிடையாது; ஏனெனில், அது குழந்தைகளின் சுதந்திரத்தைப் பாதிக்கும்; அவர்கள் எந்திரங்கள் இல்லை; மேலும், அவர்கள் எப்பொழுதும் யாரையாவது சார்ந்தே இருக்க வேண்டியிருக்கும்; சுய முடிவுகள் எடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இதில், எது சரி?

தினசரி செய்யும் வேலைகளுக்கு ஓர் அட்டவணைத் தேவையா? அல்லது, நண்பர் கூறியது போல் குழந்தைகளை அவர்கள் விருப்பத்திற்கு சுதந்திரமாகவிட்டுவிடலாமா?

இதில் ஒன்றை நாம் கவனத்தில் கொள்வது முக்கியம். “Independent” என்ற ஆங்கில வார்த்தையை நாம் அனைவரும் தவறாகவே பயன்படுத்தி வருகிறோம். அதற்கு பொருள்யாரையும் சார்ந்து இல்லாமல் தனிப்பட்டு இயங்குவதுஎன்பதே. ஆனால், நாம் அதை எந்தக் கட்டுபாடும் இன்றி தான் தோன்றிதனமாக இருப்பது என்ற பொருளிலேயே பயன்படுத்துவதுதான் இந்த குழப்பத்திற்கும் குளறுபடிக்கும் காரணம். சுதந்திரம் என்றால் ஒழுங்கின்மை என்று பழகிக் கொண்டுவிட்டோம். அதை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். சுதந்திரம் அடைந்த தேசத்திற்கு கட்டுபாட்டுடன் ஓர் அரசியல் சட்டமோ, மக்களுக்கு ஒரு சிவில் சட்டமோ இல்லை என்றால் அங்கு அமைதியும் சமாதானமும் எப்படி இருக்க முடியும்.

எனவே, தினசரி நடவடிக்கைகளில் ஒரு ஒழுங்கு இருப்பது மிகவும் தேவை. அது காலதாமங்களைத் தவிர்க உதவும். மேலும், குழந்தைகளுக்கு அவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும், அவர்களின் கடமைகள் என்ன,  அதை எப்படி செய்ய வேண்டும் என்ற தெளிவும் பெற பெருமளவில் உதவும். பெரும்பாலான நேரங்களில், குழப்பமும் சிக்கலும் இல்லாத நடைமுறை தான் குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும். செய்யும் முறைகளில் அவர்கள் தங்கள் விருப்பப்படி, அது மற்றவர்களைப் பாதிக்காத வண்ணம், செய்ய அனுமதிக்கவும் வேண்டும். அது தான் சுதந்திரம். மாறாக, ஒழுங்கின்மை சுதந்திரமாகாது என்பதுடம் அது மேலும் அவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்வதில் தான் முடியும்.

பாரதி கூட இதனால் தான்,
காலை எழுந்தவுடம் படிப்புபின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டுஎன்று
      வழக்கப் படுத்திக் கொள் நீ பாப்பா  என்று பாடினான்.

இதில் காலை படிப்பு மாலை விளையாட்டு என்பதிலெல்லாம் கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு கவனமாக இருக்கும் நாம், இந்தவழக்கப்படுத்திக் கொள்வதில் மட்டும் வழுக்கி விடுகிறோம். [ஒருவேளை விளக்கெண்ணெய் அதிகமாகி அதில் கால் வைத்துவிட்டோமோ?]

இங்கு, ஆங்கிலத்தில் சொல்வதென்றால், catch word () key word இந்த வழக்கப்படுத்திக் கொள்வதுதான். மற்றபடி இரவு படிக்கக் கூடாது என்பதோ அல்லது காலை உடல் பயிற்சிக்காக விளையாடுவது கூடாதோ என்பது அல்ல இதன் சாரம்.

எனவே, ஒர் அட்டவணை, அவரவரின் தேவை மற்றும் கால அவகாசம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஏற்படுத்திக் கொண்டு, அதை சரியாகச் செயல் படுத்தவும் வேண்டும்.

8 கருத்துகள்:

  1. நேரம் தவறாமை கடமை தவறாமையின் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது அல்லவோ? அதனால், குறித்த நேரத்தில் உரிய காரியங்களைச் செய்வது தனிமனித ஒழுக்கத்தை வளர்க்கும் என்றுதான் பலரும் கூறுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஆம் சேட்டை, அதனால் தான் கடமைகளைப் பட்டியலிட்டு வைத்துக் கொண்டால் குழந்தைகளுக்குக் (அடுத்து என்ன செய்வது என்ற) குழ்ப்பம் வருவதை தவிர்க்கலாம். தங்கள் கருத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்ல சுதந்திரமான கருத்து.

    நான் Charted Bus-ஐ பயன்படுத்தும் போது மயூர் விஹாரில் ஏறி அமர்ந்து காசு கொடுத்ததும் கண்ணை மூடி தூங்க ஆரம்பித்தால் க்ருஷி பவன் வரை அனந்தசயனம். அதனால் அலுவலகத்தில் தூங்காமல் திறம்பட(?) வேலை செய்ய முடிந்தது.

    பதிலளிநீக்கு
  4. வாங்க பத்து,
    நீங்கள் “அனந்த” பத்மநாபனா?

    நானும் அப்படிதான். ஆனாலும் சில சமயம் இது மாதிரி விவாதங்கள் காதில் விழுவதும் உண்டு.

    பதிலளிநீக்கு
  5. வழக்கப்படுத்திக் கொள்”வதில் மட்டும் வழுக்கி விடுகிறோம்.

    அருமையான பகிர்வு.
    ஒரு வினாடியின் அருமை ஓட்டப்பந்தயத்தில் அந்த நேர பின்தங்கலில் பதக்கத்தைத் தவறவிட்டவனுக்கு நன்றாகவே புரியும்.

    பதிலளிநீக்கு
  6. //ஒரு வினாடியின் அருமை ஓட்டப்பந்தயத்தில் அந்த நேர பின்தங்கலில் பதக்கத்தைத் தவறவிட்டவனுக்கு நன்றாகவே புரியும். //
    ஆமாம். காலந்தவராமையை குழந்தைகளாக இருக்கும் போதே பழக்கினால் தான் பிற்காலத்தில் எளிதாக இருக்கும். திடீரென மாற்றிக் கொள்வது கடினம்.
    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. சீனு, பத்து நீங்க தூங்கறது பத்திதான் எனக்கு நல்லாத் தெரியுமே...

    //எனவே, ஒர் அட்டவணை, அவரவரின் தேவை மற்றும் கால அவகாசம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஏற்படுத்திக் கொண்டு, அதை சரியாகச் செயல் படுத்தவும் வேண்டும்.//

    உண்மை... நல்ல பகிர்வு சீனு...

    பதிலளிநீக்கு
  8. //சீனு, பத்து நீங்க தூங்கறது பத்திதான் எனக்கு நல்லாத் தெரியுமே//
    இப்படியெல்லாம் செய்தும், உடம்பில் சதை மட்டும் கூட மாட்டேன் என்கிறதே(!!!!!).

    பதிலளிநீக்கு