வெள்ளி, அக்டோபர் 14, 2011

ஒரு வார்த்தை ஒரு லட்சம்



ஹய்யா!! தம்பி பாப்பா!! என்று மகள் துள்ளிக் குதித்ததைப் பார்த்த மனதில் ஒரே மகிழ்ச்சி.

ஒரே குழந்தையாக இருந்தால், அதற்கு ஒரே அடியாக செல்லம் கொடுத்து அது சுயநல வாதியாகவும், சொல் பேச்சு கேட்காமலும் போய் விடும் என்பதை நெருங்கிய குடும்பங்களில் பார்த்தும், அப்பெற்றொரின் நாங்கள் தான் அந்த தவறைச் செய்துவிட்டோம்; நீங்களாவது ஒன்றோடு நிறுத்தி விடாதீர்கள் என்பது போன்ற அறிவுரைகளைக் கேட்டும் மற்றொரு குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்துவிட்டாலும், மகள் அதை எப்படி எதிர்கொள்வாள் என்ற கவலை இருந்ததென்னவோ உண்மை.

மருத்துவமனையில் கூடவே கவலையுடன் தம்பியா தங்கையா என்று ஆர்வத்துடன் பார்த்தும், அதே நேரம் அது என்னுடன் பேசுமா விளையாடுமா என்றும் கேட்டுக் கொண்டிருந்தவள் துள்ளிக் குதித்த்தும் மனதில் ஒரே மகிழ்ச்சி.

ஆனால், அந்த மகிழ்ச்சி 6-7 மாதங்களில் கவலையாக மாறும் என்று அன்று தெரியவில்லை.

அம்மா, பக்கத்து வீட்டு ஆன்டி தம்பியை பற்றியே உன்னிடம் விசாரிக்கிறாள். என்னைப் பற்றி எதுவுமே கேட்கமாட்டேன் என்கிறாரே, அது ஏன்?

அப்பா, உன் ஃப்ரெண்ட், தம்பிக்கு மட்டும் கிஃப்ட் தருகிறாரே? எனக்குக் கிடையாதா?

பாட்டி, தம்பியையே தூக்கிக் கொள்கிறாளே. என்னைத் தூக்க மாட்டாளா?

மாமா, தம்பிக்கு மட்டும பால் பாட்டில் வாங்கித் தந்திருக்கிறாரே எனக்கு இல்லையா?

தம்பி வந்த்திலிருந்தே நீ என்னை கவனிப்பதில்லை. அவனை மட்டும் கொஞ்சுகிறாய்.

இப்படி தினமும் எதற்காகவாவது போட்டி. அழுகை. இத்தனைக்கும் நாங்களும் சரி எங்கள் வீட்டிற்கு வரும் நண்பர்களும், உறவினர்களும் அவளையும் விசாரிக்கவும் அவள் தேவையை கவணித்து, கணித்து அன்பாக உரையாற்றவும் தவறியதில்லை.

இது போல் தினமும் நடந்தால் அவளுக்கு தம்பியிடம் பாசமே இல்லாமல் போட்டியும் வெறுப்பும் அல்லவா வளரும். அதனால் தினமும் லட்சம் முறை நீதான் எங்களுக்கு முக்கியம் என்பதை நானும் அவள் தாயும் சொல்லத் தவறியதே இல்லை. ஆனாலும், அவள் முழுதாக திருப்தி அடைந்த்தாக/அடைவதாகத் தான் தெரியவில்லை.

எங்கள் கவலையை மேலும் மேலும் வளர்க்க இவன் வேறு ரொம்ப படுத்துகிறான். ஒன்றரை வயதுதான் ஆகிறது; ஆனாலும், இவன் நாள் முழுவதும் ஒரு நொடி கூட சும்மா இருப்பதில்லை.

பொதுவாகவே, முதல் குழந்தையை விட இரண்டாவது குழந்தை சற்று active-ஆக இருக்கும் என்று கூறுவர். இவனோ hyper-active. அதிலும் அக்காவைச் சீண்டுவதென்றால் தேன் குடித்த நரிதான். பேச்சு தான் வரவில்லை. விஷமம் மட்டும் தேவைக்கு அதிகமாகவே.

இன்று காலை மகள், அப்பா, நாளைக்கு எனக்கு பர்த் டே கொண்டாட வேண்டாம் என்றதும் எங்களுக்கு அதிர்ச்சி.

ஏண்டா செல்லம். உன் ஃப்ரெண்ட்ஸ்-லாம் வருவார்கள். ஜாலியாக இருக்கும். எல்லோரோடும் விளையாடலாம். போன வருடம் கூட விளையாடினாயே. போன வருடம் தம்பி தூங்கிக் கொண்டே இருந்தான். இந்த வருடம் அவனும் விளையாடுவான். நல்லா இருக்கும் என்று சமாதானம் கூறினோம்

ஆமாம் அப்பா, தம்பி நன்றாக ஆடுவான். எல்லோரும் அவனையே கொஞ்சுவார்கள். என்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள். அதுவும் இல்லாமல் அவன் எப்பவும் என் தலை முடியை இழுத்து, ட்ரெஸெல்லாம் கலைத்து அழுக்காக்கி விடுவான். அதனால் தான் கொண்டாட வேண்டாம். அப்படி கொண்டாடினால் அவனை கீழ் வீட்டு அங்கிளோடோ அல்லது வேறு யார் வீட்டிலோ விட்டுவிடு என்றவுடன் எங்களுக்கு ஒரே ஷாக்

என்னாடா நீயே தம்பியை வேண்டாம்னு சொன்னால் யார் அவனை வைத்துக் கொள்வார்கள். நாங்கள் அவன் உன் உடையைக் கலைக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று மீண்டும் லட்சம் சமாதானங்கள்.
ஒருவழியாக சமாதானக் கொடி பறக்கவிட்டாகிவிட்டது.
மனைவி மெல்ல எனக்கு மட்டும் கேட்கும் படி, அப்பாடா ஓரளவு நிலமையை சமாளித்தாகி விட்டது. மீண்டும் அவளுக்கு வேறு டவுட் வருவதற்குள் டீவியை போட்டு சமாளிங்க என்றாள்.
செல்லம், நாம டீவி பார்கலாமா என்று அவளுக்குப் பிடித்த கார்டூன் நெட்வொர்க் போட்டால் அதில் - சிவ லீலாவோ பால் கணேஷோ - அண்ணன் முருகன், தம்பி மூஷிக வாகனனுக்கு பழம் கொடுத்ததால் (ஆமாங்க அண்ணன் தான்; வட இந்தியாவில் கார்த்திக் தான் அண்ணன்; கணேஷ் தம்பி) “உங்களுக்கு எப்பவுமே தம்பிதான் முக்கியம் என்று கோவித்துக் கொண்டிருந்தான். சடாரென்று சேனல் மாற்றினால் அங்கு, அண்ணன் ரகுவரன் தன் பெற்றோர் சிவகுமார்-ராதிகா, தம்பி சூர்யா மேல் அதிக பாசம் காட்டுவதால் அவரை மலை மேலிருந்து தள்ளிவிட, அடச்சே என்று அதைவிட வேகமாக சேனல் மாற்றினேன். அங்கேயும் விட்டார்களா கல்யாணியை கயவர்கள், அந்த சேனலில் பார்த்திபன் காவேரியின் மூத்த மகன் இளைய மகனை பூச்சிமருந்தால் கொல்ல எத்தனிக்க, “ஹூஹூம், இன்னிக்கு டீவி சரியாகவேத் தெரியவில்லை என்று கூறி அணைத்து மூட நேர்ந்தது.
மறுநாள்
ஒரு வழியாக இன்று எந்த பிரச்சனையும் இதுவரை இல்லை. இல்லையெனில், பிறந்த நாளும் அதுவுமாக அழ ஆரம்பித்து விடுவாளோ என்று கவலைப்பட்டுக் கொண்டே புத்தாடை அணிய கூப்பிட்ட அம்மாவிடம் எதுவுமே கூறாமல் ஒத்துழைக்கிறாளே.
மெதுவாக நண்பர்களும் உறவினர்களும் ஒவ்வொருவராக வர, மகனுக்கோ ஒரே குஷி, ஆட்டம் பாட்டம். வந்தவர்களும் அவனின் உற்சாகத்தில் பங்கு கொண்டு அவனை உற்சாகப் படுத்தி வாயைத் திறந்து அவனை பேசத் தூண்டி அவனிடம் விளையாட, மெல்ல மெல்ல மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம் போல் அவள் முகத்தில் கவலை, அழுகையின் ரேகைகள். சற்று தீ(சீ)ண்டினாலும் அழுதுவிடுவாள். எப்படியாவது நிலைமையை சமாளிக்க வேண்டும் என மனைவி வேறு ஜாடை காட்டுகிறாள்.
குழந்தையும் எத்தனை நேரம் தான் மற்றவர்களுடன் விளையாடும். அங்கிருந்த  ஒரு ஓரத்தில் ஒட்டி போய் கவலையாக நின்றிருந்த அக்காவைக் காட்டி அவளிடம் போக ஒரே அழுகை. எங்களுக்கோ வயிற்றில் புளி.
நண்பரின் கையிலிருந்துத் திமிறி அழுது அவன் பேசிய அந்த முதல் வார்த்தையில் நாங்கள் அனைவரும் அதிர்ந்தோம். அந்த ஒரு வார்த்தையைக் கேட்டவுடன் அது வரை இடி விழுந்த மரம் போல் இருந்த மகளின் முகத்தில் லட்சம் வாட் மின்னல்.
நண்பரின் கரத்திலிருந்துத் தாவி குதித்து மகளிடம் வந்து அவளைக் கட்டியணைத்து அவன் அன்புடன் சொன்ன அந்தஅக்கா!! என்ற ஒரு வார்த்தை எங்களின் லட்சம் சமாதான வார்த்தைகளால் ஏற்படுத்த முடியாத அமைதியையும், தன் தம்பிக்குத் தான் தான் மிகவும் முக்கியமானவள் என்ற உண்மையையும் உணர்த்திவிட்டது.
இனிமேல், அவர்களிருவரைப் பற்றி  வீணாகக் கவலை கொள்ளத் தேவையில்லை என்ற நிம்மதியையும் எங்களுக்கு தந்தது.

15 கருத்துகள்:

  1. “அக்கா!!” என்ற ஒரு வார்த்தை எங்களின் லட்சம் சமாதான வார்த்தைகளால் ஏற்படுத்த முடியாத அமைதியையும், தன் தம்பிக்குத் தான் தான் மிகவும் முக்கியமானவள் என்ற உண்மையையும் உணர்த்திவிட்டது.
    இனிமேல், அவர்களிருவரைப் பற்றி வீணாகக் கவலை கொள்ளத் தேவையில்லை என்ற நிம்மதியையும் எங்களுக்கு தந்தது./\\

    மனம் நிறைந்த அருமையான அனுபவ வரிகளுக்குப் பாரட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான அனுபவ வரிகளும், குழந்தைகளின் மனங்களையும் அழகாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள், அந்த அக்கா எனும் சொல் பாசத்தை தூண்டிவிட்டதே...!!!

    பதிலளிநீக்கு
  3. இராஜராஜேஸ்வரி, தங்களின் பாராட்டுகளுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. மனோ, தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. குழந்தைகளின் அனுபவங்களை அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்

    பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. நெகிழ்ச்சியான பதிவு.பிள்ளைகளை சமாதானப்படுத்துவதிலும் தோற்றுவிடுவோம்.ஒற்றுமை உணர்விலும் நாம் தோற்றுவிடுவோம்

    பதிலளிநீக்கு
  7. அட... இது ரொம்ப நல்லா இருக்குடா சீனு...

    புனைவு... ?

    இப்பகிர்வில் சொன்ன பல விஷயங்கள் உண்மை.... நல்ல பகிர்வுக்கு நன்றிடா....

    பதிலளிநீக்கு
  8. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் ஆயிஷா அம்மா.

    பதிலளிநீக்கு
  9. //பிள்ளைகளை சமாதானப்படுத்துவதிலும் தோற்றுவிடுவோம்.ஒற்றுமை உணர்விலும் நாம் தோற்றுவிடுவோம்//
    ஆமாம் ஆச்சி, சில நேரங்களில் அவர்கள் சண்டையைத் தீர்க்க நாங்கள் (நானும் என் மனைவியும்) முற்பட்டு அது எங்களுக்குள் வாக்குவாதத்தை வளர்க்க அவர்கள் அதற்குள் சமாதானமாகி அடுத்த விளையாட்டைத் துவக்கிவிடுவர்.

    பதிலளிநீக்கு
  10. புனைவு... ?

    புனைவுதான். கொஞ்சம் அனுபவம்; கொஞ்சம் பார்த்தது/கேட்டது; கொஞ்சம் கற்பனை.

    பதிலளிநீக்கு
  11. //கொஞ்சம் அனுபவம்,கொஞ்சம் பார்த்தது கேட்டது கொஞ்சம் கற்பனை//

    என்ன பெயர்கள் சூட்டினாலும் சரி,எழுத்தில் நன்றாக உருப் பெற்று உயிர் பெற்றிருக்கிறது.

    பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. ராஜி, தங்கள் வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  13. வித்தியாசமான கோணத்தில் கதை சொல்லி இருகிறீர்கள்.... கதை அருமை சார் " அக்கா " இந்த வார்த்தையைக் கேட்டதும் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது... சிறுகதையின் வெற்றி அது தான்

    பதிலளிநீக்கு