அது….
2012….
ஒரு தேசத்தின்
அரசியலை ஒரு ஆண்டின் நிகழ்வுகள் மட்டும் தீர்மானிப்பதில்லை. அதே நேரம், ஒவ்வொரு
நிகழ்விலும் சில அரசியலும் - குறைந்த பட்சம் சில அரசியல் சங்கேதங்களும் - அவற்றால்
அரசியலில் சில மாற்றங்களும் நிகழ்வதும் அது அந்த தேசத்தின் அரசியல் போக்கை
மாற்றுவதும் உண்டு.
முதலில் சென்ற ஆண்டில் செய்தித்தாள்களின் முதல்
பக்கங்களை அலங்கரித்த முக்கிய அரசியல் நிகழ்வுகளைப் பார்ப்போம்...
1. குடியரசுத் தலைவராக திரு.பிரணாப் முகர்ஜியும் தேர்ந்தெடுக்கப்பட குடியரசுத்
துணைத் தலைவர் (மாநிலங்கள் அவையின் தலைவரும் இவரே) திரு.ஹமித் அன்சாரி மீண்டும்
அப்பதவிக்கு இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்;
2. ஏழு மாநிலங்களில் (பிப்ரவரியில் 5 மாநிலங்களிலும்
டிசம்பரில் இரண்டிலும்) சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. இரண்டில் காங்கிரஸும் இரண்டில்
பாஜக-வும் வென்றன. ஒரு மாநிலத்தில் இரண்டும் சம அளவு உறுப்பினர்களும் ஒரு
மாநிலத்தில் இரண்டுக்கும் மூன்றாவது நான்காவது இடமும், ஒரு
மாநிலத்தில் மாநில கட்சியும் வெற்றி பெற்றன.
3. த்ரிணாமுல் காங்கிரஸின் தினேஷ் த்ரிவேதி கட்சித் தலைமையின் விருப்பத்திற்கு
மாறான இரயில்வே நிதிநிலையறிக்கையை வெளியிட்டதால் கட்சியால் பதவியிலிருந்து
இறக்கப்பட்டார்.
4. ஒரிஸாவில் பிஜு ஜனதா தளத்தின் சட்டமன்ற உறுப்பினரும் சுக்மா
மாவட்ட ஆட்சியாளரும் மாவோயிஸ்டுகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
5. 2ஜி விவகாரத்தில் 122 உரிமங்கள் உச்ச
நீதிமன்றத்தால் மறுக்கப்பட முதலில் அதை எதிர்த்து மனு செய்த மத்திய அரசு பின்னர்
அந்த மனுவைத் திரும்பப் பெற்றது. மறு ஏலத்தில் ஊழலில் கணிக்கப்பட்ட அளவு ஏலத்தொகை
கிடைக்கவில்லை.
6. அஸ்ஸாமில் மத/இனக்கலவரங்கள் வெடித்து பல குடும்பங்கள் வீடு,
உடமைகளை இழந்தன. நாட்டின் பிற பாகங்களில் வசித்து வந்த வடகிழக்கு
பகுதி மக்களுக்கு எதிராக வதந்திகளால் பரவ பதட்டமடைய நேரிட்டது.
7. ஐநா-வில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய மனித
உரிமை மீரல்களை விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.
8. மும்பை தீவிரவாதத் தாக்குதல்களில் பிடிக்கப்பட்ட அஜ்மல் கசாப்
தூக்கிலிடப்பட்டான்.
9. (பிறந்த தேதி விவகாரத்தில்) அரசுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை
தரைப்படைத் தளபதி திரும்பப் பெற்றார்.
10. சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு
அனுமதிக்கப்பட்டு அதன் காரணமாக கூட்டணியிலிருந்து த்ரிணாமுல் காங்கிரஸ்
வெளியேறியது. ஆனாலும் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஒன்றுக்கொன்று எதிர்நிலை
எடுக்கும் முலாயம் சிங்-இன் சமாஜ்வாதி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ்
கட்சியும் காங்கிரஸுக்கு உதவின.
******************
இவற்றைத் தவிர தெலுங்கானா, கூடங்குளம் அணுமின்
உலை எதிர்ப்பு, கேரளக்கடலில் இத்தாலியக் கப்பல் மாலுமிகளால்
இரு மீனவர்கள் கொல்லப்பட்டது, மம்தா பானர்ஜி ஊடகங்களையும்
எதிர்கருத்துக்களை கையாண்ட விதமும், ஏர்-இந்திய விமானிகளின்
வேலை நிறுத்தமும், கிங்-பிஷர் நிறுவணத்தின் நிதி நிலைமையும்,
ராகுல் காந்தி கட்சிப் பொறுப்பை ஏற்பது (அல்லது பொறுப்பேற்பதில்
காட்டும் தயக்கம் என்று கூற வேண்டுமோ?), ’டைம்’ பத்திரிகை பிரதமரின் கையாளாகாதத்தனத்தை விமர்சித்தமையும் முக்கியச்
செய்திகளாக இடம் பெற்றன.
முக்கிய 10 நிகழ்வுகளில் சில குறித்து இன்னும்
சற்று விரிவாக பேசுவோம்.
சுதந்திர இந்தியா-வின் மக்களாட்சி என்கிற தேரை இழுத்துச் செல்லும்
அரசுக் குதிரையின் கடிவாளமாக விளங்கும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க நடந்தத்
தேர்தல் தான் முதல் முக்கிய நிகழ்வு. கடிவாளத்தின் பிடி என்னவோ பிரதமரிடம் தான்
இருக்கிறது.
[அந்த பிரதமர் என்கிற இயந்திர மனிதரைக் கட்டுப் படுத்தும் ரிமோட்
தற்போது யாரிடம் இருக்கிறது? என்று கேள்விக் கேட்கக் கூடாது]
குடியரசுத் தலைவராக திரு. பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறுத்
தலைவரகளின் பெயர்கள் யூகமாக வெளியிடப்பட்டுக் கொண்டே வர அதிலும் குறிப்பாக
ஐ.மு.முன்னணிக்கு அப்போது ஆதரவளித்து வந்த த்ரிணாமுல் காங்கிரஸ் முன்னால்
குடியரசுத் தலைவர் கலாமின் பெயரைப் பரிந்துரைக்க முயல, நிலைமை
கைமீறிப் போவதை உணர்ந்த காங்கிரஸ் ஒரே நாளில் முகர்ஜியின் பெயரை சிபாரிசு செய்து
சுதாரித்துக் கொண்டது. அதற்கு, முன்னரே மற்றொரு ஆதரவுக்
கட்சியான தேசியவாத காங்கிரஸின் சங்மா (தே.கா. அவரை வெளியேற்றிவிட்டது தனிகதை)
தன்னை முன்னிலைப் படுத்தி எதிர் கூட்டணியின் (தே.ஜ. கூட்டணி) பிஜு ஜனதாதளம்,
அதிமுக ஆகியவற்றின் ஆதரவுடன் நிற்க அக்கூட்டணியின் முக்கிய கட்சியான
பாஜக-விற்கு என்ன முடிவெடுப்பது என்பதே புரியாத நிலையில், காங்கிரஸின்
அறிவிப்புக்குப் பின்னர் கலாம் தான் போட்டி-யிட விரும்பாததை அறிவித்த நிலையில்
வேறு வழியின்றி சங்மா-வை ஆதரித்தது.
கட்சி அடிப்படையில் முகர்ஜி ஆதரவாளர்கள் அதிகம் இருந்தாலும், இந்திரா ஆட்சியில்
கட்சி மாறிப் போட்ட ஓட்டுகளில் திரு. சஞ்சீவ ரெட்டிக்கு வெற்றி கிட்டியது போல்
தனக்கும் கிடைக்குமோ என்ற சங்மா-வின் எண்ணம் நிறைவேறவில்லை. முகர்ஜி-யே
பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். குடியரசுத் தலைவர் பதவிக்கு
ஆரம்பத்தில் அடிபட்ட பெயர்களில் முக்கியமான குடியரசுத் துணைத் தலைவர் திரு.அன்சாரி
மீண்டும் அப்பதவிக்கு இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த ஆண்டு இந்தியாவின் ஏழு மாநிலங்களில் பொதுத் தேர்தல்கள்
நடைபெற்றன. முதல் பாதியில் (பிப்ரவரி-மார்ச் மாதம்) கோவா, பஞ்சாப்,
மணிப்பூர், உத்திரபிரதேசம், உத்ராகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் பிற்பாதியில் (டிசம்பர்) குஜராத்,
ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன.
இதில் மணிப்பூர், ஹிமாசல மாநிலங்களில் காங்கிரஸும், கோவா, குஜராத் ஆகியவற்றில் பாஜக-வும், உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியும், பஞ்சாபில் அகாலிதளமும்
வெற்றி பெற்றன. உத்ராஞ்சலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை
என்றாலும் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.
இந்தத் தேர்தல்களில் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டவை குஜராத்
மற்றும் உத்திரபிரதேசத் தேர்தல்கள் தான். குஜராத்தில் மோதி தொடர்ந்து வெல்வதைத் தொடர்ந்து
2014-இல் மத்திய பொதுத் தேர்தலில் மத்திய அரசை நேக்கி நகர முயற்சிப்பது
தான் இதன் முக்கியத்துவத்திற்குக் காரணம். ஆனால், காங்கிரஸோ கடந்த
4½ ஆண்டுகளில் மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்தாமல் கடைசி
நேரத்தில் மத்திய தலைமையின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையிலேயே இருக்கிறது
(கிட்டத்தட்ட தமிழக காங்கிரஸின் நிலைதான். ஆனால், தமிழகத்தில்
இரண்டு பெரிய கட்சிகள் இருக்கின்றன. குஜராத்தில் அது இல்லாததால் மோதிக்கு எதிரான
வாக்குகள் காங்கிரஸுக்கு கிடைப்பதால் ஓரளவு இருப்பைக் காட்டிக் கொள்ள முடிகிறது).
கடந்த ஆறு மாதங்களாக ஊடகங்களாலும் மத்திய காங்கிரஸ் தலைமையாலும்
மோதிக்கு எதிராகக் கூறப்படும் எந்தக் குற்றச்சாட்டையும் மாநில காங்கிரஸ் சுட்டிக் காட்டவில்லை
என்பதிலிருந்தே அந்த மாநில கட்சி நடக்கும் விதம் புரிபடும். எனவே, தேர்தலுக்கு முன்னரே மோதியின் வெற்றி உறுதியாகிவிட்டது. சோனியாவும்,
ராகுலும் ஒரு நாள் மட்டுமே பிரசாரம் செய்தது அவர்களின் கையறு
நிலையைக் காட்டிவிட்டது. ஆனால், இந்த வெற்றி மோதியின்
பிரதமர் கனவை நிறைவேற்றும் என்று தோன்றவில்லை. காரணம், முதலில்
பாஜகவிலேயே அவரை முன்னிறுத்த ஒத்த கருத்து இல்லை; அடுத்து,
சங்பரிவாரம் அவரை இன்னமும் முழுமையாக ஏற்கவில்லை; மூன்றாவதாக, கூட்டணிகள் (அதிமுக, அகாலிதளம், சிவசேனா தவிர பெரும்பாலானவை, முக்கியமாக ஜனதாதளம்) அவரை ஏற்பதில் காட்டும் தயக்கம் ஆகியவையே. இவையனைத்தையும்
விட முக்கிய காரணமாக ஒன்றைக் கூற வேண்டுமானால் அது சமீப காலமாக பாஜக கண்டு வரும்
சரிவும் அக்கட்சியின் உட்கட்சிப் பூசல்களும் தான்.
கட்கரி, எதியூரப்பா விஷயத்தில் பாஜக-வின் ஊழல்
எதிர்ப்பும் கட்சிக் கட்டுப்பாடும் ஆட்டம் கண்டு அது காங்கிரஸின் நகலாகவேத்
தோற்றம் காணுகிறது. காங்கிரஸிலாவது நேரு குடும்பம் என்ற பசை கட்சியை இணைக்க
இருக்கிறது. பாஜக-வில் சங்பரிவாரம் (குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்) தான் அந்த வேலையைச்
செய்து வருகிறது. ஆனால் சங்பரிவாரத்தின் நடவடிக்கைகளே கட்சியை மக்களிடமிருந்து தள்ளி
வைக்கிறதோ என்ற எண்ணம் அவர்களிடம் எழுந்துள்ளதால் எந்தப் பக்கம் செல்வது என்று
புரியாமல் இருக்கின்றனர்.
மாநிலங்களின் தேர்தலில் குஜராத்திற்கு அடுத்த நிலையில் அனைவராலும்
கூர்ந்து கவனிக்கப்பட்டது உத்திரபிரதேச தேர்தல் தான். காரணம், காங்கிரஸைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் முழுக்க முழுக்க ஒரு
குடும்பத்தினரால் ஒரு குடும்பத்தினருக்காக ஒரு குடும்பத்தின் மூலம் நடத்தப்
பட்டதுஎன்பது தான். தேர்தல் பிரசாரத்தில் அக்குடும்பத்தின் நண்டு சிண்டுகள் கூட மேடையேற்றப்பட்டன.
ஆனாலும், காங்கிரஸால் ஏற்கனவே இருந்த இடங்களைக் கூடத் தக்கவைத்துக்கொள்ள
முடியாத நிலைதான் ஏற்பட்டது. ஒரு வருடத்திற்கும் மேலாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட
ராகுலால் கூட கட்சியின் தோல்வியை தடுக்க முடியவில்லை. முலாயம் சிங் தனிப்பெரும்
முன்னிலை பெற்றுத் தன் மகனை முதல்வராகவும் ஆக்கியது தான் நடந்தது.
இந்தத் தேர்தல்களைப் பொறுத்தவரை இவை முறைப்படி நடத்தப்பட்டு உரிய
நேரத்தில் சரியான முறையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஆட்சி மாற்றங்கள்
இயல்பாகவும் நேர்மையான முறையிலும் வெளியிடப்பட்ட விதம் இந்திய மக்களுக்கு
ஜனநாயகத்தில் உள்ள நம்பிக்கையை மேலும் வளர்க்கும் விதத்தில் இருந்தது என்றே
கூறவேண்டும். தேர்தல்கள் பொதுவாக நேர்மையான முறையில் பாரபட்சமில்லாமல் முறைகேடுகள்
இன்றியே நடத்தப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தை இவ்விஷயத்தில் பாராட்ட வேண்டும்.
அடுத்த முக்கிய நிகழ்வு,ஆண்டு துவங்கும்
முன்னரே அரசுக்கு எதிராகத் தரைப்படைத் தளபதி வி.கே.சிங் உச்ச நீதிமன்றத்தில்
(பிறந்த தின சர்ச்சையில்) வழக்குத் தொடுத்திருந்தார். இது அரசுக்கும்
ராணுவத்திற்கும் இடையிலான பிணக்காக மாறிவிடும் அச்சம் தொடர்ந்தது. ஆனால், பிப்ரவரி மத்தியில் சிங் தன் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
இந்தியாவுடன் சுதந்திரம் அடைந்த அண்டை நாடுகளின் ஜனநாயகம் பெரும்பாலும் அரசுக்கும்
ராணுவத்திற்குமானப் பிணக்குகளினாலேயே அதிகம் பாதிப்படைந்தன என்பதை எண்ணிப்
பார்க்கும் பொழுது இதன் முக்கியத்துவம் புரிபடும்.
ஊழல்களைப் பொறுத்தவரை இதுவரை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை
ஏதாவது ஒரு பெரிய ஊழலை நாம் சந்தித்துக் கொண்டே வந்திருக்கிறோம். 85-90களில் போபர்ஸ், 90-95களில் பங்குச் சந்தை (ஹர்ஷத்
மேத்தா) ஊழல், 95-2000-இல் முத்திரைத் தாள் ஊழல்,
2000-2005இல் 2ஜி ஒளிக்கற்றை 2005-10இல் நிலக்கரி ஊழல் ஆகியவை. ஆனால், இவை எதிலும் எந்த
அரசியல்வாதியும் இதுவரைத் தண்டிக்கப் படவில்லை என்பது தான் நிலைமை. அரசியல்வாதிகள்
தண்டிக்கப்படும் வரை இது போன்ற ஊழல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
நீதிமன்றங்கள் தண்டிக்காவிட்டாலும் மக்களாவது இவர்களைத் தொடர்ந்து தண்டிக்க
வேண்டும்.
என்னதான் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டாலும் இந்திய
ஜனநாயகம் இன்னமும் முதிர்ச்சி அடையவில்லை என்று பெரும்பாலான ஊடகங்கள் விமர்சிக்கின்றன.
குறிப்பாக, மத்தியில் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி ஆட்சியில்
(கடந்த இரு தசாப்தங்களாக) மாநிலக் கட்சிகளின் மிரட்டல்களுக்கு பணிந்து வருவதாக வட
மாநில ஊடகங்கள் கருதுகின்றன. ஆனால், மத்தியில் கூட்டாட்சி
மாநிலங்களில் சுயாட்சி என்ற (திராவிட கட்சிகளின் ஆரம்ப கால கோஷமாக இருந்தாலும்)
நிலைதான் சரியென்று தோன்றுகிறது. வலுவான மத்திய அரசு இருந்த போது அது சிறு
மாநிலங்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் பெரிய மாநிலங்களில் தங்கள் வாக்கு
வங்கிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஏற்ற முடிவுகளையே எடுத்துவந்துள்ளன/வருகின்றன.
உதாரணமாக, காவிரி, மீனவர்கள் கொல்லப்படுவது,
அணுமின் உலை விவகாரங்களில் மத்திய அரசுகள் எடுத்துவரும் நிலையைக்
கூறலாம். சில மாநிலக் கட்சி அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக மத்திய அரசை
மிரட்டுவதைக் கொண்டு இந்தக் கூட்டாட்சி முறையே தவறென்று கூற முடியாது. இதற்கு
மக்கள் சரியானத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது தான் தீர்வாக இருக்க முடியும்.
வரும் ஆண்டுகளிலாவது இந்த முதிர்ச்சியை நாம் அடைய வேண்டும்…!
திரு.மோகன் குமார் அவர்களுக்கு என் நன்றிகள்!