வெள்ளி, செப்டம்பர் 21, 2012

காந்தாரம்


56  புராதன இந்திய தேசங்களின் வரிசையில் காம்போஜம்தராடம் ஆகியவற்றைத் தொடர்ந்து அடுத்ததாக...

3.  காந்தாரம்.

காந்தாரம் தற்போது ஆஃப்கானிஸ்தானில் காந்தஹார் என்ற பெயரில் வழங்கப் பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

 

அலெக்ஸாந்தர் காலத்திலிருந்தே காந்தாரமும், குபா நதி என்கிற காபுல் நதிக்கரையில் அமைந்த அதன் புருஷபுரமும் (தற்போதைய பெஷாவர்) தக்ஷசீலமும் (தற்போது டக்ஸிலா) பெயர் பெற்ற நகரங்கள். கிட்டத்தட்ட 11-ம் நூற்றாண்டு வரை, அதாவது முகமது கஜினி அதைக் கைப்பற்றும் வரை அது தனி நாடாகவே இருந்து வந்துள்ளது. பின் அது துருக்கியர்களாலும், மங்கோலியர்களாலும், முகலாயர்களாலும் கைப்பற்றப்பட்டு தனி அரச வம்சத்தினரால் ஆளப்படாமல் அவர்கள் நாட்டின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. பின், அது ஆஃப்கானிஸ்தானின் பகுதியாக ஆகியது.

 

இப்பகுதிக்கு ஸ்வட் (Swat) பள்ளத்தாக்கு என்ற பெயரும் உண்டு. இதை சமஸ்க்ருத சொல்லான சுவஸ்து என்பதன் திரிபு என்றும் கூறிவர்.

 

வேதங்களைப் பொருத்தவரை மிகவும் பழமையான ரிக் வேதத்திலேயே காந்தாரத்தைப் பற்றிப் பல குறிப்புகள் உண்டு. யயாதியின் வம்சத்தைச் சேர்ந்தவன் அருதன்; அவனுடைய மகன் காந்தாரன். அவன் தான் இந்த அரசைத் தோற்றுவித்ததாக ரிக் வேதம் கூறுகிறது. இவர்கள் த்ருஹுயு என்ற குழுவை/ வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.

 

அதே நேரம், வருண புராணத்தில் கலியுக முடிவில் காந்தாரம், காலிகா என்ற பிரமதியால் அழிக்கப் பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

ஐத்ரேய ப்ரமாணத்தில் காந்தார அரசன் நகனஜித், ஜனக ராஜனின் சமகாலத்தவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

 

அதர்வண வேதம் காந்தார தேசத்தவர்களையும் மத்ர பஹாலிக தேசத்தவர்களுடன் இவர்களையும் தூர தேசத்தவர்கள் என்று கூறுகிறது.

 

புராணங்களில், ராமாயத்தில் ராமர் அரசாண்ட பொழுது வட மேற்கு பகுதியின் (குறிப்பாக, கேகேய நாட்டின்) ஆளுமை பரதனின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது. அப்பொழுது, பரதன் அருகிலுள்ள நாடுகளைத் தன் கட்டுப்பாட்டில் இணைத்ததாகக் குறிப்பிடப்படுகிறது. பரதனுக்குப் பின் இப்பகுதிகள் அவனுடைய மகன்களான தக்ஷன், புஷ்கரன் ஆகியவர்களின் அரசாட்சியைக் கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. [தலைநகரங்களான தக்ஷசீலமும், புஷ்கலாவதியும் (தற்போதைய சர்ஸத்தா) அவர்களின் பெயராலேயே வழங்கப்பட்டதாகவும் கூறுவர்]. புஷ்கலாவதியில் காபுல் நதியின் மூன்று கிளைகள் இணையும் இடமும் முன் காலத்தில் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப் பட்டதாகவும்  குறிப்பிடப் பட்டுள்ளது. இப்பகுதியை இன்றும் ப்ராங் (ப்ரயாகை என்பதன் மரூஉ) என்றே அழைக்கப்படுகிறது. காஷ்மீரத்திலும் இதுபோல மூன்று நதிகள் கூடும் ‘ப்ராங்’ என்ற இடம் இருக்கிறது. ஆனால், ராமாயணத்தில் காந்தாரப் பகுதிகள் குறிக்கப்பட்டாலும் காந்தாரம் என்ற பெயர் குறிப்பிடபப்டவில்லை. வருண புராணத்தில் காந்தாரம் (தேசம்) அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் காலம் இதுவாக இருக்கலாம்.

 

மகாபாரதத்தில் காந்தாரத்தின் பங்கு நாம் அறிந்ததே. திருதராஷ்டரரின் மனைவி காந்தாரி (பெயர் காரணமே காந்தாரத்தைச் சேர்ந்தவள் என்பது தான்), அவளின் தமையன் சகுனி ஆகியோர் காந்தாரத்தைச் சேர்ந்தவர்கள்.

 

அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்புப் பற்றியக் குறிப்புகளில் காம்போஜம், காந்தாரம் ஆகியவற்றின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அலெக்ஸாண்டரிடம் பணிந்த அம்பி குமாரனைக் குறிப்பிடும் பொழுது அவன் பரதன், சகுனி ஆகியோரின் வம்ச வழி என்று குறிப்பிடப்படுகிறான். அப்பொழுது, காந்தாரம் 5 அல்லது 6 தனிதனி மன்னர்ளால் ஆளப்பட்டு வந்தது. குபேசன், ஹஸ்தின், அஸ்வஜித், அஸ்வகாயன் என்பவை மற்ற அரசர்களின் பெயர்கள்.

 

[சென்னைத் தொலைக்காட்சியில் 1980-82 களில் செவ்வாய் கிழமை 7மணிக்கு இரண்டு மூன்று பிரிவுகளாக ஒளிபரப்பப்பட்ட ஹெரான் த்யேடரின் ’அலெக்ஸாண்டர்’ நாடகத்தில் அம்பி-யின் பெயர் குறிப்பிடப்படுவது ஞாபகம் வருகிறது – ஹெரன் ராமசாமி பற்றி வேறு ஒரு சமயம் எழுதுவேன்; ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த நாடக நடிகர்களில்  அவரும் ஒருவர்]

 

பௌத்தர்களைப் பொறுத்தவரை, திபெத்திய புத்தமதப் பிரிவைத் தோற்றுவித்தவர் என்று கருதப்படும் பத்மசம்பவர் என்பவர் தோன்றியதாகக்  கூறப்படும் தனகோசம் என்ற ஏரி  காந்தாரத்தில் இருப்பதாக அவர்களின்  தொன்மக் கதைகளில் உள்ளது. திபெத்தின் ‘ககயூ’ புத்த மதப் பிரிவின் தொன்மங்களில் இந்த ஸ்வட் பள்ளத்தாக்கின் ஊற்று ஏரியில் ‘அந்தன் தேரி’ ஸ்தூபி இப்பகுதியில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. [தொல்பொருள் ஆரய்ச்சியாளர்கள் இப்பகுதியின் சக்தாரா என்னும் இடத்தில் இந்த ஸ்தூபி-யைக் கண்டுபிடித்துள்ளனர்; ஆனால் ஏரி இருப்பதற்கான அடையாளம் கிட்டவில்லை].

 

மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை அஹமேனியன் (கிரேக்கர்) வரலாறுகளிலும் குறிப்பாக சைப்ரஸின் ஆளுகையின் கீழ் காந்தாரம் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

 

 இந்திய வரலாற்றின் முதல் பேரரசான மகதத்தில் அமைந்த மௌரியப் பேரரசு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதன் தலைநகரம் பாடலிபுத்திரம் என்பதும் அது இன்றைய பீகார் மாநிலத்தின் தலைநகரமான ‘பாட்னா’-வின் பழைய பெயர் என்பது நாம் அனைவரும் படித்ததே. இந்த மௌரியப் பேரரசை நிறுவியவர் சந்த்ர குப்த மௌரியர். இவர் தக்ஷசீலத்தைச் சேர்ந்தவர்/வாழ்ந்தவர். மகத்த்தை ஆண்ட நந்த வம்சத்தினரால் கைது செய்யப்பட இருந்த சாணக்கியர் அங்கிருந்து தப்பி கால் நடையாகவே தக்ஷசீலத்தை அடைந்து சந்திரகுப்த மௌரியரைச் சந்தித்ததாகக் கூறுவர். அலெக்ஸாண்டருக்குப் அவருடைய இந்தியப் பகுதிகளை  ஆண்ட செல்யூக்கஸ் நிகோடரை சந்திரகுப்த மௌரியர் வென்று அவரிடமிருந்த காந்தார பகுதிகளையும் காம்போஜத்தையும் ஆண்டார் என்று மெகஸ்தனிஸ்-இன் (செல்யூகஸ்-ஆல் பின்னர் அனுப்பிவைக்கப்பட்ட தூதர்) குறிப்புகள் கூறுகின்றன.

 

இவ்வளவு சிறப்புகள் பெற்றிருந்தாலும் கொண்டியரின் (சாணக்கியரின்) அர்த்த சாஸ்த்திரத்தில் காந்தரத்தின் பலப்பகுதிகள் சொல்லப்பட்டு சிறப்பிக்கப்பட்டாலும் காந்தாரம் என்று தனி நாடாகச் சொல்லப் படவில்லை என்பதுதான் வியப்பளிகிறது. அந்த காலகட்டத்தில் காந்தாரம் வாரிசுப் போட்டிகளால் சிற்றரசுகளாகச் சிதறியோ அல்லது தராடம் பற்றிச் சொல்லியது போல் குழுக்களால்  ஆளப்பட்டோ அல்லது காம்போஜ ராஜபாட்டையுடன் இணைந்தோ இருந்திருக்கலாம்.

 

பின்னர், அசோகர் காலத்தில் காந்தாரத்திலும், காம்போஜத்திலும் பல ஸ்தூபிகள் நிறுவப் பட்டன. பானினி-யும் காந்தாரத்தைச் சேர்ந்தவர் என்ற கருத்தும் உண்டு. அசோகருக்குப் பின்னர் கி.மு முதலாம் நூற்றாண்டில் பாரசீக-க்ரேக்க (Greeko-bactarian) வம்சத்தைச் சேர்ந்த டெமுட்ரிஸ் காந்தாரத்தையும் காம்போஜத்தையும் கைப்பற்றினார். அவரது தலைநகராக சாகலம் (தற்போதைய சியால்கோட் நகரம் (பாக்)) இருந்தது.

 

பின்னர் கி.பி. 1-2 ஆம் நூற்றாண்டுகளில் காந்தாரம் குஷானர்களின் வசம் வந்தது. இதுதான் காந்தாரம் மிகவும் புகழ் மிக்கதாகவும் சிறப்புடனும் விளங்கியது காலம் ஆகும். அதன் பின்னர், அங்கு நிரந்தரமான அமைதி என்பதே இல்லாமல் போனது; போர் என்றால் முதலில் பாதிக்கப்படும் பகுதி இதுதான். காரணம் இந்தியாவில் நுழைய வேண்டும் என்றால் இந்த இடத்தின் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.  மங்கோலிய, துருக்கிய, அரேபியர்கள் என்று போர்கலப் பகுதியாகவே உள்ளது. இந்த 20-21 ஆம் நூற்றாண்டிலும் இங்கு அமைதி திரும்ப வாய்ப்பு இருப்பதாகக் கூடத் தெரியவில்லை…..

4 கருத்துகள்:

  1. காம்போஜம்! தராடம், காந்தாரம்....நல்ல தொகுப்பு.

    காம்போஜம் - ஜம்னு இருந்தது.
    தராடம் - டம்! டம்னு முரசு ஒலி.
    காந்தாரம் - ஹி!ஹி!

    சில பதிவுகளைப் படிக்கும் போது சில நிகழ்கால நினைவுகள் மலரும். ஆனால் உங்கள் புராதன தேச பதிவினைப் படிக்கும் போது எனக்கு கடந்த ஜென்ம நினைவு வரும் போல இருக்கிறது. (எந்த தேசத்து ராசாவாப் பொறந்து எத்தனை சுயம்வரத்துல கலந்து அடி வாங்கினேனோ - யாருக்குத் தெரியும்!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றிகள் பத்து.

      காந்தார தேசத்து சுயம்வரம் வைப்பதற்கு முன்னமே ‘பீஷ்மர்’ பெண் கேட்டதால் மறுக்க முடியாமல் த்ரிதராக்ஷ்ட்ரனுக்கு காந்தாரியை மணமுடித்து விட்டார்கள். வேறு நாட்டு சுயம்வரத்தில் தான் உங்களுக்கு ‘சான்ஸ்’ கிடைத்திருக்கும்.

      நீக்கு
  2. "அதே நேரம், வருண புராணத்தில் கலியுக முடிவில் காந்தாரம், காலிகா என்ற பிரமதியால் அழிக்கப் பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது."

    கலியுக முடிவு இன்னும் ஏற்படவில்லை. எனும்போது , காந்தாரம் அழிக்கப்படும் என்று கொண்டால், காந்தாரத்தை சேர்ந்த ஒசாமா அழிந்தாயிற்று. ஆக , ஆப்கன் தீவிரவாதிகள் அழிந்தால், அதுவே கலியுக முடிவாக இருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யுக கணக்குகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி எழுதினால் தனி பதிவாக தான் எழுத வேண்டும்.

      ஆஃப்கான் தீவிரவாதிகள் என்று அல்ல அனைத்துத் தீவிரவாதிகளுமே அழிந்தால் கலியுகம் முடிந்து மீண்டும் க்ருத யுகம் (அனைவரும் நல்லவர்களாக இருப்பதால் இது சத்ய யுகம் என்றும் கூறப்படுகிறது) வந்துவிடும்.

      நீக்கு