வெள்ளி, செப்டம்பர் 18, 2015

இருபத்தைந்து வருடம்


இருபத்தைந்து வருடம்
[தில்லி வந்து சேர்ந்து இன்றோடு 25 வருடங்கள் கடந்து விட்டன. இருந்தாலும் பழைய நினைவுகளும் தொடர்புகளும் மனதைவிட்டு அகலவில்லை]


தலைநகரின் திசைநோக்கித்

தடம் வைத்தத் துவக்கம் அது.அறியாத தேசம்

புரியாத மொழி

தெரியாத ஊர்

புகலில்லா இடம்

திசையறியா வழி

திக்கற்ற வாசம்

பெயரறியா மனிதர்கள்

நிலையறியா உறவுஇடையே…

பாலைவனச் சோலையென

கிட்டியதோர் நண்பர் குழாம்

பரிவும் பாசமும் கலந்த நட்பில்

பறந்ததோர் பத்து வருடம்பின்னர்…

மணவாழ்க்கை

மக்கட் செல்வம்

ஒதுங்க ஓர் இடம்

ஓங்கிய மகிழ்ச்சிஎன்ன இருந்து என்ன?

சொர்கம் என்றால்

சொந்த ஊர் என்று

சும்மாவா சொன்னார்கள்வீடு திரும்பும் ஏக்கம்

விட்டு விட்டு போகவில்லை

ஆவி விட்டு போனாலும் – அந்த

ஆவல் விட்டு போகாது.

திங்கள், செப்டம்பர் 07, 2015

நாகா ஒப்பந்தம் (தொடர்ச்சி)


இது சென்ற பகுதியின் தொடர்ச்சி

 

1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் நாள், அங்காமி ஸபூ பிழோ-வின் தலைமையில் நாகா தேசிய அமைப்பின் ஒரு குழு நாகாலாந்தை சுதந்திர நாடாக அறிவித்தது. நிலைமையை அடக்க இந்திய ராணுவம் அனுப்பப்பட்டது. 1948-இல் பிழோ கைது செய்யப்பட்டார். பின்னர் பிழோ 1950-ஆம் ஆண்டு நாகா தேசிய அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றார். உடனே, 1951-ஆம் ஆண்டு மே மாதம் நாகாலாந்தில் இந்தியாவுடன் சேருவதா அல்லது தனி நாடாக இயங்குவதா என்று ஒரு பொது கருத்துக் கணிப்பு நடத்தினார். அதில் 99% தனிநாடாக இயங்க வாக்களித்தனர். இந்தியா இந்தக் கருத்துக் கணிப்பை ஏற்கவில்லை. இந்தியா குடியரசு ஆனதைத் தொடர்ந்து 1952-ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலை நாகாலாந்து புறக்கணித்தது.

 

ஆனால், நிலைமையை மேலும் மோசமாக்கியது வேறு ஒரு நிகழ்வு. நேரு பர்மா பிரதமர் தகின் யூனு-உடன் நாகாலாந்து சென்றார். அப்போது அவர் பேச எழுந்த போது அதை புறக்கணிக்கும் வண்ணம் நாகா உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். இது நேருவிற்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு, இந்திய அரசும் ராணுவமும் நாகாக்களை தங்கள் விரோதிகளாகப் பார்க்கத் துவங்கி அத்துமீறல்களை கட்டவிழ்த்து விட்டதாக நாகாக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

பின்னர், 1956-இல் பிழோ ‘நாகா கூட்டாச்சி அரசு’ என்ற பல இனக்குழுக்களை உள்ளடக்கிய தனி அரசை நிறுவினார். பல்வேறு 11 துறைகளை உள்ளடக்கிய இந்த அரசில் நாகா கூட்டு படை என்ற ராணுவம் இந்தியாவிற்கு எதிராக போராடத் துவங்கியது.  அச்சமயத்தில் எழுந்த கொள்கை வேறுபாட்டின் காரணமாக நாகா தேசிய அமைப்பின் செயலாளர் டி.செக்ரி-ஐ பிழோ கொன்ற நிகழ்வும் நடந்தது. தொடர்ந்து 1958-இல் இந்திய அரசு AFSPA-என்ற ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை செயல் படுத்தியது. ஆனால், அதற்கு முன்னரே பிழோ கிழக்கு பாகீஸ்தானுக்குத் (தற்போதைய வங்க தேசம்) தப்பிச் சென்றார். பின்னர், 1960-இல் லண்டனுக்குச் சென்று, அங்கு 1990-இல் மரணமடைந்தார்.

 

இடையில் 1963-ஆம் ஆண்டு நாகாலாந்து தனி மாநிலமாக உருவானது. 1964-ஆம் ஆண்டு ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் ஒரு குழு அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி வன்முறையைக் கைவிட ஓர் ஒப்பந்தம் செய்தது. ஆனாலும், வன்முறையாளர்கள் பல்வேறு சிறுசிறு குழுக்களாகச் செயல் பட்டதால்  இந்த ஒப்பந்தம் தோல்வியுற்றது; 1967-இல் இந்த அமைதிப் பேச்சு வார்த்தைகள் கைவிடப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்டது.  இதன் மூலம் நாகா தேசிய அமைப்பு, நாகா கூட்டாட்சி அரசு, நாகா கூட்டு படை ஆகியவை தடை செய்யப்பட்டன.

 

பின்னர், நாகாக்களின் போராட்டம் வங்க தேசம் தனி நாடாகப் பிரிந்த்தால் கிழக்குப் பாகீஸ்தானிலிருந்து வந்த ஆதரவு  குறைந்ததாலும் அந்தப் போருக்காக அங்கு இந்திய இராணுவம் குவிக்கப் பட்டிருந்ததாலும் சற்று வலுவிழந்தது. மேலும், அதீத வன்முறை, பல்வேறு குழுக்களின் போட்டி மனப்பான்மை ஆகியவற்றாலும் மக்களின் ஆதரவும் குறைந்திருந்தது. நிலைமையை சாதகமாக பயன்படுத்திய இந்திய அரசு 1975-இல் பல்வேறு இனக்குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஷில்லாங் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. இதில், நாகா தேசிய அமைப்பின் சார்பில் பிழோ-வின் சகோதரர் கேவியாலே கலந்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தில் நாகா குழுக்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று தனிநாட்டிற்கான கோரிக்கையை கைவிட்டு தங்கள் ஆயுதங்களையும்  ஒப்படைக்க ஒத்துக் கொண்டனர்.  மேலும், நாகா குழுக்கள் தனிநாடு கோரிக்கையைத் தவிர மீதமுள்ள கோரிக்கைகளில் தங்களிடம் இருந்த வேறுபாடுகளைக் களைந்து ஒரு பொது நிலை எடுக்கக் கால அவகாசம் கோரியது. இந்தியாவும் அதை ஏற்றுக் கொண்டது.

 

ஆனால், நாகா தேசிய அமைப்பைச் சேர்ந்த, சீனாவில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த 140-பேர் குழு இதை ஆதரிக்காமல் விலகி சரணடைய மறுத்தனர். பின்னர் 1980-ஆம் ஆண்டு, அவர்கள் துயங்லிங் முவையா, ஐசக் சிசி சூ, கப்லாங் ஆகியோர் தலைமையில் நாகா தேசிய சோஷியலிஸ அமைப்பை பர்மாவில் உருவாக்கினர். இவர்களின் 9-பேர் அடங்கிய ஒரு குழு பிழோ-வை சந்தித்து ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து அறிக்கை விட வலியுறுத்தினர். ஆனால், பிழோ ஒப்பந்த்ததை ஆதரித்தோ அல்லது ஏற்க மறுத்தோ கருத்துகள் கூற மறுத்து மௌனமாகவே இருந்துவிட்டார். மற்ற குழுக்கள் ஆயுதங்களை சமர்பித்து தலைவர்கள் சரணடைந்து வலுவிழந்த நிலையில் இந்தக் குழுவே மிகவும் வலிமையான குழுவாகத் திகழ்ந்தது.

 

என்னதான் நாகாக்கள் தங்களுக்குத் தனிநாடு வேண்டும் என்று ஒன்றாகப் போராடினாலும் அவர்களுக்குள் பல்வேறு இன வேறுபாடுகள் உள்ளன. நாகா தேசிய சோசியலிஸ அமைப்பில் பெரும்பாலான உறுப்பினர்கள் கோன்யாக் என்ற பிரிவைச் சேர்ந்தவர்களே அதிகம். ஆனால், இதன் தலைமையில் இருப்பவர்கள் பெரும்பாலும் தங்குல் இனத்தவர்களே. இது நாளடைவில் – 1988 - அவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்தியது. கோன்யாக் இனத்தவர்கள் கோலே கோன்யாக் என்பவர் தலைமையில் தனியாக பிரிந்தனர்; பர்மாவின் ஹெமி நாகா பிரிவைச் சேர்ந்தவரான கப்லாங்-ஐ தங்கள் தலைவராக அறிவித்தனர். ஆக, இந்த அமைப்பு NSCN(IM) என்று முவையா-ஐசக் தலைமையிலும், NSCM(K) என்று கப்லாங் தலைமையிலும் இரு வேறு இயக்கங்களாகச் செயல்படுகின்றன. இதில் கப்லாங் தலைமையிலான இயக்கத்தின் வேர்களும் செயல்பாடுகளும் பர்மாவை மையமாகக் கொண்டுள்ளன. பின்னர் 2011, இதுவும் உடைந்து NSCN(KK) - கோலே கோன்யாக் – என்று பிரிந்தது.

 

இதைத் தவிர ஸெலியாங்ராங் இனத்தவர்கள் ஸெலியாங்ராங் கூட்டு முன்னணி என்ற அமைப்பையும்  உள்ளது. நாகா தேசிய சோஷலிச அமைப்பின் நோக்கத்திலேயே அது கிருத்துவ மத அடிப்படையில் அமைந்த சோஷலிஸ அரசை உருவாக்க வேண்டும் என்று தான் கூறுகிறது. கிருத்துவ மதத்திலும் ப்ரொடஸ்டண்ட் மதமான பாப்டிஸ்ட் பிரிவு கிருத்துவ மதத்தைத் தான் இந்த அமைப்பு ஆதரிக்கிறது. இடையில் சில கத்தோலிக பாதிரியார்கள் கடத்தப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளது. இதனாலேயே, முன்பு ஸெலியாங்ராங் இனத்தவர்கள் பிரிட்டனுடன் மதமாற்றத்தை எதிர்து பொரிட்டதை வைத்து ஹிந்துத்துவ அமைப்புகளின் தூண்டுதல்களால் ஸெலியாங்ராங் கூட்டு முன்னணி அமைப்பு உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சமீபத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட ராணி கைடின்லியூ ஸெலியாங்ராங் இனத்தவரே. எனினும், இந்தியாவைப் பொறுத்தவரை ஐசக்-முவையாவின் இயக்கம் தான் தற்போது வலுவான நிலையில் உள்ளது.

 

நாகாக் குழுக்கள் தொடர்ந்து ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டுக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவது பொதுமக்களிடம் சற்று தொய்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்ற 2014-ஆம் ஆண்டு தேர்தலில் நாகாலாந்தில் 87% வாக்குப் பதிவு நடந்துள்ளது. இது நாகா பிரிவினை வாதிகளுக்கு மக்களிடம் ஆதரவு குறைந்து வருவதை  காட்டுவதாக வரலாற்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

 

முன்பே கூறியது போல், இந்தியாவைப் பொறுத்தவரை ஐசக்-முவையாவின் இயக்கம் தான் தற்போது வலுவான நிலையில் உள்ளது. எனவே இந்த நிலையைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் 80க்கும் மேற்பட்ட முறை பேச்சு வார்த்தை நடந்தாலும் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. இந்நிலையில், இவர்கள் இந்த ஒப்பந்த்தை ஏற்படுத்தியிருப்பது ஓரளவு வெற்றிதான். ஆனாலும், இதில் சில சிக்கல்கள் உள்ளன.

 

முதலில், இன்னமும் இந்த ஒப்பந்தத்தின் இறுதி வடிவம் வெளியிடப் படவில்லை. தனிநாடு என்ற நாகா குழுக்களின் கோரிக்கையை கொள்கையளவில் இந்தியா ஏற்க முடியாது. ஆனால், இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களில் – அஸ்ஸாம், மணிப்பூர், அருணாசல பிரதேசம் –  நாகாக்கள் வாழும் பகுதிகளை இனைத்து நாகாலிம் என்ற பெரிய மாநிலமாக மறுசீரமைப்பு நடத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும் ஒப்பந்தத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் சம உரிமை, சம மரியாதை தரப்பட வேண்டும் என்று கூறியதைக் கருத்தில் கொண்டால் சில சிறப்புச் சலுகைகள் (ஜம்மு-காஷ்மீரத்திற்கு அளித்துள்ளது போல்) – தனி கொடி, தனி அரசியல் அமைப்புச்சட்டம் – ஆகியவை அளிக்கப்படலாம். இச்சலுகைகளால் பொது மக்களுக்கு பெருமளவில் நன்மை கிட்டாவிட்டாலும், ஐசக்-முவையா குழு தன் சுயமரியாதையை தனிநாடு கோரிக்கையை விட்டுக் கொடுத்த நிலையில் காப்பாற்றிக் கொள்ள இது போன்றவை உதவும். மேலும், கனிம வளங்களை – குறிப்பாக பெட்ரோலிய, இயற்கை எரிவாயு, நிலக்கரி ஆகியவை – எடுப்பதில் நாகா மாநிலத்திற்குத் தனி உரிமை வழங்கப்படலாம். [சாதாரணமாக, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எடுக்கப்படும் கனிமவளத்திற்கு ராயல்டியில் 22% அந்த மாநிலத்திற்குக் கொடுக்கப்படும்; இங்கு, அதன் பங்கு மேலும் உயர்த்தப்படலாம்].

 

கப்லாங்-இன் அமைப்பு இந்த ஒப்பந்தத்தை இது வரை ஏற்கவில்லை. அவர்கள் ஏற்பதும் கடினம் தான். காரணம், அவர்கள் பெருவாரியாக இயங்குவது பர்மாவின் இந்திய எல்லைப் பகுதிகளில் தான். சென்ற மாதம் இந்திய அரசு பர்மாவின் பகுதிகளில் இருந்த தீவிரவாத இயக்கங்கள் மீது தாக்குதல் நடத்தியதை படித்திருப்போம். அது பொதுவாக இந்தக் குழுவினர் மீது தான். பேச்சு வார்த்தையின் போது ஐசக்-முவையா குழுவின் ஆதரவைக் கொணர்வதர்காகவோ அல்லது அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காகவும் கூட இந்த தாக்குதல்கள் நடைபெற்றிருக்கலாம். தற்போது கப்லாங் குழுவினர் வலுவாக இல்லாமல் இருந்தாலும், வரும் காலங்களில் சீனா, பர்மா அல்லது வேறு நாட்டினரின் உதவி அவர்களுக்குக் கிட்டினால் அவர்கள் வலுப்பெற முடியும். அந்த நிலைமையில் என்ன நடக்கும் என்பதைத் தீர்மானிப்பது கடினம்.

 

மற்றொரு பிரச்சனை என்னவெனில் நாகாக்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு மற்ற மாநிலங்களின் பகுதிகளை நாகாலாந்துடன் இணைத்தால் அந்த மாநிலங்கள், அதிலும் குறிப்பாக மணிப்பூர், இதனை எதிர்க்கும். சென்ற மாதம் மணிப்பூர் சட்டசபையில் உட்கோட்டு அனுமதி-யை ஆதரித்து மசோதா நிறைவேறிய நிலையில் மீண்டும் கலவரம் நிகழ்ந்தது, அங்குள்ள இனக்குழுக்களுக்கிடையே நிலவி வரும் போட்டி மனப்பான்மையை மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது.

 

ஆனால், ஒப்பந்தத்திற்குப் பிறகு நாகாலாந்தில் நடைபெற்ற முதல் பொதுக் கூட்டத்தில் பேசிய முவையா, மற்ற மாநிலங்களின் உரிமையையும் இந்தியா கருத்தில் கொள்ள வேண்டிய கடமை இந்தியாவிற்கு இருக்கும் நிலமையையும் அதைக் கருத்தில் கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளது சற்று ஆறுதல் தரும் வகையில் உள்ளது. அதே நேரம் முவையாவிற்கு தங்களின் இந்த ஒப்பந்தம் 1964-இல் பிழோ ஏற்படுத்திய ஒப்பந்தத்தை விட இந்த ஒப்பந்தம் சிறந்தது என்று நிறுவ வேண்டிய அவசியமும் இருக்கிறது.

 

எப்படியோ அமைதி ஏற்பட்டால் சரிதான்!

புதன், ஆகஸ்ட் 19, 2015

நாகா ஒப்பந்தம் (பகுதி-1)


நாகா ஒப்பந்தம் (பகுதி-1)

 
சமீபத்தில் இந்தியா நாகா போராட்ட அமைப்புகளுடன் அமைதி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் பின்னணி என்ன?

முதலில் இந்த நாகாக்கள் யார்?
நாகா என்பது தனி ஒரு குழு அல்ல. இது அங்காமி, சேமா, ரெங்மா, லோதா, ஸெமெ, லியங்மை, ரோங்மை, கோன்யாக், தங்குல் என்று பல பழங்குடிகளை உள்ளடிக்கிய இனமாகும். வட கிழக்கு மாநிலங்களிலும் மயன்மாரின் (முந்தைய பர்மா) வடபகுதியிலும் பல இனக்குழுக்களாக தங்களுக்குள் போட்டியிட்டு, போரிட்டு வாழ்ந்த இந்தக் குழுக்களை பிரிட்டிஷார் – இந்தியாவின் கிழக்கு வடகிழக்குப் பகுதிகளை தங்கள் வசமாக்கிய போது – இவர்களை ஒன்றிணைத்து நாகாக்கள் என்று பெயரிட்டு, இவர்கள் வாழ்ந்துவந்த பகுதிகளை ‘அஸ்ஸாமின் நாகா மலை மாவட்டம்’ என்று பெயரிட்டு அங்கு ஒருங்கிணைத்தனர். வடகிழக்கில் அஸ்ஸாமின் பெரும் பகுதிகள் வங்காள மாநிலத்தில் இணைக்கப்பட்டன. மணிப்பூர், திரிபுரா ஆகியவை அரச வம்சங்களைக் கொண்ட சமஸ்தானமாக இருந்தன.

1929-33 வாக்கில் தலைப்பட்ட ஹெராக்கா என்ற மத வழக்கத் தொன்மையின் படி, நாகா இனத்தவர்கள் தங்களை மெஹகெல் என்ற இடத்தில் தோன்றியதாகவும் பின்னர் தங்களின் மக்கள் தொகை உயர்ந்ததால் பல குழுக்களாகப் பிரிந்து குடிபெயர்ந்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு அவர்கள் பிரிந்தபோது பின்னர் தாங்கள் வலுப்பெற்று ஒன்றிணைந்து தங்களுக்கென்று ஓர் தனி அரசாட்சியை அமைத்துக் கொள்ளவும் சபதமேற்றதாகவும் அந்தத் தொன்மம் குறிப்பிடுகிறது. இந்த மெஹகெல் என்பது மணிப்பூரின் மக்ஹீல் என்ற பகுதியைக் குறிப்பதாகவும், பர்மாவின் சந்த்வின் நதிப்பகுதியைச் சேர்ந்தது என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன.

ஆரம்பக் காலத்தில் வடமேற்கிலிருந்த திமார்பூரை ஆண்ட கச்சாரி அரசும் தென்பகுதியைச் சேர்ந்த மணிப்பூரை ஆண்ட குக்கி இனத்தவரும், கிழக்கிலிருந்த பர்மாவைச் சேர்ந்த ஆவா அரசும் தங்கள் எல்லைகளை விரிவு படுத்த பழங்குடிகளான நாகாக்களுடன் போரிட்டு வந்துள்ளனர்.  பிரிட்டிஷார் இவர்களின் அரசாங்கங்களைக் கைப்பற்றிய பின், அருகிலிருந்த இந்த மலைகுடி மக்களை அடக்க பெரும்பாலும் மணிப்பூரைச் சேர்ந்த குக்கி இன மக்களையே பயன்படுத்தினர். 1825-களில் நடந்த ஆங்கில-பர்மா போருக்கு பெரும்பாலும் குக்கி இனத்தவர்களே ஈடுபடுத்தப்பட்டனர். அதற்குப் பரிசாக மணிப்பூர் சமஸ்தானத்திற்கு நாகாக்களின் இடங்கள் கொடுக்கப்பட்டு அங்கு குக்கி இன மக்கள் குடியேற்றப்பட்டனர். 1858-இன் சிப்பாய் கலகத்தைத் தொடர்ந்தும், பிரிட்டிஷார் குக்கி இன மக்களை நம்பாமல் அவர்களை அடக்க நாகாக்களுக்கு சலுகைகள் வழங்கினர். பின்னர் 1919-இல் மணிப்பூர் சுதந்திரப் போர் என்ற குக்கி போராட்டத்தில் பிரிட்டிஷாரின் சார்பில் நாகாக்களே ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து பிரித்தாளும் கொள்கையால் இரு இனத்தவரும் ஒருவருக்கொருவர் எதிராகச் செயல் படத் தூண்டப்பட்டனர். இதனால், நாகாக்களுக்கும் குக்கி இனத்தவருக்கும் இன்று வரை பகைத் தொடர்ந்து வருகிறது. 

ஆனால், பல்வேறு இனக்குழுக்களாக தங்களுக்குள் போட்டியிட்டு வந்த இவர்களை ஒருங்கிணைப்பது பிரிட்டிஷாருக்கு இன்றியமையாததாக இருந்தது. காரணம், இப்பகுதியின் வனவளமும் 18-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மரம், காபி, தேயிலை பொருட்களின் தேவையே. தவிர, தன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அஸாமிலிருந்து மணிப்பூர், பர்மா ஆகியவற்றை அடைய நடுவில் இருக்கும் நாகாக்களின் பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும், இப்பகுதிகளின் தேயிலை, காபி தோட்டங்களுக்கும் மரம் வெட்டுதலுக்கும் அவற்றை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்ய ரயில் பாதைகள் போடுவதற்கும் மிகுந்த கூலியாட்கள் தேவைப்பட்டனர். பின்னர், 1914-18-இல் முதல் உலகப் போருக்கும், 1917-19-இல் குக்கி போராட்டத்தின் போதும் நாகாக்கள் பெருமளவில் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். முதல் உலகப்போரில் ஜெர்மனிடமிருந்து பிரெஞ்சு பகுதிகளை மீட்க பிரிட்டன் நடத்திய போரில், 2000-க்கும் மேற்பட்ட நாகாக்கள் போரிட அனுப்பப்பட்டனர் என்பது வரலாறு.

நாகாக்களை ஒன்றிணைக்க பிரிட்டிஷார் தேர்ந்தெடுத்த வழி மதமாற்றம்.  மைல்ஸ் ப்ரோன்சன் – எட்வின் க்ளார்க் ஆகியோர் தலைமையில் கிருத்துவ மிஷனரிகள் வரவழைக்கப்பட்டனர். அவ்வாறு, ஒன்றிணைந்த போது உருவானது தான் தற்போது வழக்கத்தில் இருக்கும் நாகாமீஸ் மொழியாகும். முதல் உலகப் போரிலிருந்து மீண்டு நாகாக்கள் ஆங்கிலேயருடன் ஒன்று சேர்ந்து தங்களின் தேவைகளை அரசுக்கு எடுத்துரைக்க 1918-இல் நாகா கழகம் (Naga Club) என்ற ஒன்றை உருவாக்கினர். [1885-இல் காங்கிரஸும் இதே போல் தான் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது].

பின்னர், 1930களில் மிஷனரிகளின் மதமாற்றக் கொள்கையை எதிர்த்து நாகாக்களின் ஒரு பிரிவினர் குறிப்பாக ஸெலியாங்ராங் என்றழைக்கப்படும் ஸெமெ, லியங்மை, ரோங்மை ஆகியோர் ஹெராக்கா மத இயக்கத்தைத் தொடங்கி போராட்டம் நடத்தினர். இது மெல்ல பிரிட்டனுக்கு எதிரான சுதந்திர போராட்டமாக  மாறியது. இந்தப் போராட்டம் அடக்கப்பட்டாலும் பிரிட்டன் தன் மதமாற்றக் கொள்கையை மட்டுப்படுத்திக் கொண்டது.

1929-இல் சைமன் கமிஷன் என்று நம்மால் அழைக்கப்படும் இந்திய சட்ட ஆணையத்திடம் இவர்கள் பிரிட்டன் இந்தியாவிலிருந்து வெளியேறும் பொழுது தங்களுக்கான (காங்கிரஸிலிருந்து வேறுபட்ட) தனி நிலையைத் தேர்ந்தெடுக்கத் தங்களுக்கு உரிமை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். [சைமன் கமிஷன் மாண்டேகு-செம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்ததின் கீழ் இரட்டை ஆட்சி முறையை (Dyarchy) – அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்களும் பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதிகளான ஆளுநர்களும் ஆளும் ஆட்சிமுறை – செயல்படுத்த ஏற்படுத்தப்பட்டக் குழுவாகும்]

 சைமன் கமிஷன் பொதுவாகத் தோல்வி அடைந்ததாகக் கூறப்பட்டாலும், இன்றைய இந்திய அரசின் அமைப்பில் அதன் அங்கம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். காரணம், அதன் ஒரு உறுப்பினராக வந்தவர் பின்னர் இந்திய சுதந்திரத்தின் போது பிரிட்டனின் பிரதமராக இருந்த க்லெமெண்ட் அட்லி. சைமன் கமிஷனிடம் கொடுக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் பரிச்சயம் அட்லி எடுத்த பல முடிவுகளுக்கு ஆதாரமாக இருந்தது என்பது தான் உண்மை.

சைமன் கமிஷனின் தோல்விக்குக் காரணம் அதில் இந்திய பிரதிநிதிகள் உறுப்பினராக இருக்கவில்லை என்ற காங்கிரஸின் எதிர்ப்பே காரணம். ஆனாலும் அந்த கமிஷன் தன் அறிக்கையை பிரிட்டிஷ் அரசிற்கு சமர்ப்பித்தது.

அதன் அறிக்கையில் இந்தியாவின் பிராந்தியங்களை வரையறுக்கையில் மற்ற பிராந்தியங்களைப் போலல்லாமல் வடகிழக்கு மலைகுடியிருப்புகளைத் தனியாக வகைப்படுத்தியது. நாகாக்கள் மட்டுமன்றி மிசோக்கள், காரோக்கள், காஸிக்கள், ஜெயின்ந்தியர்கள் ஆகியோரின் குடியிருப்புகளும் அருணாசலப்பிரதேசத்தின் லக்மிபூர் பகுதிகளும் இவ்வாறு தனியாக வகைப்படுத்தப்பட்டன. இப்பகுதிகள் மற்ற பகுதிகள் போலன்றி மாநில முதல்வர்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், அந்த அறிக்கையில் இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போலன்றி இவ்வாறு தனிபடுத்தப்பட்டதைக் குறிப்பிடும் பொழுது, இந்த மலைகுடியினர் மற்ற பகுதிகளிலிருந்து வேறுபட்ட  பழக்கவழக்கங்களும் கலாச்சாரமும் கொண்டவர்கள் என்றும் பொது நிலைக்கு இவர்களைக் கொணர்வது என்பது வளர்ச்சியை அடிப்படையாக் கொண்டதாக இருக்க வேண்டும்; மாறாக, அவர்களின் அடையாளத்தை அழிப்பதாக இருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டது. தவிர, சுதந்திரமான மலைக்குடியினர் விடுதலையால் மற்ற மக்களை அண்டி வாழும் நிலைக்குத் தள்ளப்படக் கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தது.

1935-இல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சைமன் குழுவின் அறிக்கையில் நடைபெற்ற விவாதத்தில் குழுவினர் இந்த மலைக்குடியினருக்கு சுதந்திரத்தை அல்லாமல் பாதுகாப்பையே பரிந்துரை செய்வதாகக் கூறினர்.

பின்னர் நடந்த அரசியல் மாற்றத்தில் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு விலக இருந்த நிலையில் அட்லி தலைமையிலான அரசு மேற்கு பர்மா முதல் திபெத் வரையிலான மலைப் பகுதிகளை அஸாமின் ஆளுநராக இருந்த சர்.ராபர்ட் ரீட் வழிவகுத்தபடி பிரிட்டிஷ் அரசின் தனி காலணியாக (Crown Colony Plan) அறிவிக்க நினைத்தது. இதை காங்கிரஸ் எதிர்த்தது.  

பின்னர், இந்திய தேசிய ராணுவமும் ஜப்பானும் வடகிழக்குப் பகுதிகளைத் தாக்குவதைக் கருத்தில் கொண்ட பிரிட்டிஷ் இந்த பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைக்கும் எண்ணத்தைக் கைவிட்டது. 1947-இல் அட்லி வடகிழக்குப் பிராந்தியத்தின் நிலைமையை அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் நிர்ணய சபையின் (Constituent Assembly) பிரதிநிதிகளேத் தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அறிக்கை விட்டு கைகழுவினார்.

1947-இல் ஜூலை மாதம் காந்தியடிகள் நாகா இனத்தவர் தங்கள் நிலையைத் தாங்களே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அனுமதிக்கப் படாவிடில் இந்திய அரசை எதிர்ப்பேன் என்றும் அறிவித்தார்.  ஆனால், அதற்கு முன்னரே ஜூன் மாதம் நாகா தேசிய சபையும் பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதியான ஆளுநர் சர்.ஹைதரி அக்பரும் ஓர் ஒன்பது அம்ச உடன்படிக்கையை மேற்கொண்டனர். அதன்படி, நாகா இனத்தவர்களுக்காக ‘நாகாலிம்’ (லிம் என்றால் நிலம்) என்ற மாநிலம் உருவாக்கப்படும் என்றும் அவர்களுக்கு 10 வருடங்கள் இந்தியா பாதுகாவல் அரணாக (Guardian Power) இருக்கவும், அதன் பின் அவர்கள் நிலைமையை அவர்களே தீர்மானிக்கவும் வழி வகுத்தது.  இந்த ஒன்பது அம்ச கோரிக்கைகள் – நீதித்துறை, நிர்வாகம், சட்டம், ஒழுங்கு, நிலம், வரி, எல்லை, ஆயுதங்கள், ஒப்பந்த  காலம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த ஒப்பந்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறும் என்றும் ஹைதரி வாக்களித்தார். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தில் (ஆறாவது அட்டவணை) பெருவாரியான அம்சங்கள் இடம் பெற்றாலும் 10 ஆண்டு கால அவகாசம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. இதை எதிர்த்து அப்போதைய கவர்னர் ஜெனரல் இராஜாஜியை நாகா தேசிய இயக்கத்தின் உறுப்பினர்கள் சந்தித்தனர். அவரும் நாகாக்களின் கோரிக்கைகள் அவர்களுக்குச் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என்று வாக்களித்தார்.

ஹைதரி, நாகாக்களின் இந்த ஒப்பந்தத்தினால் அவர்கள் இந்தியாவுடன் இணையும் எண்ணத்தில் இருப்பதாகவே எண்ணினார். அதையே தில்லிக்கும் அறிவித்தார். பின்னர், அரசியல் நிர்ணய சபையில் இது பற்றிய விவாதங்களில் சபை, நாகாலாந்து இந்தியாவுடன் இணைந்த பகுதியாகவும் சுயநிர்ணயம் மாவட்ட ரீதியிலான பிரிவிற்குமானது என்றும் தீர்மானித்தது.

இடையில், நாகா கழகம், சி.ஆர். பாவ்ஸேயின் தலைமையில் தன்னை நாகா மலை மாவட்ட ஆதிகுடிகள் அமைப்பாகவும் பின்னர் இந்திய சுதந்திரத்திற்காக அரசியல் நிலைமையைப் பரிசீலிக்க பிரிட்டனின் அமைச்சரவைக் குழு (Cabinet Mission) 1945-இல் இந்தியா வந்த பொழுது, நாகா தேசிய அமைப்பாகவும் உருமாற்றிக் கொண்டது. முதலில் அவர்கள் தங்களுக்கென தனி வாக்காளர் பட்டியலும் தங்களை இந்திய குடியரசின் கீழ் சுயாட்சி பெற்ற ஃபெடரல் அமைப்பாகவும் அறிவிக்கக் கோரினர்.
 
அடுத்த பகுதியில் தொடரும்...

திங்கள், ஜூலை 13, 2015

உட்கோட்டு அனுமதிச் சீட்டு (Inner Line Permit)


சென்ற வாரம் மணிப்பூரில் ‘உட்கோட்டு அனுமதிச் சீட்டு’ முறையை அம்மாநிலத்தில் நடைமுறைப் படுத்தக் கோரி எழுந்தப் போராட்டத்தில் ஒரு மாணவர் உயிர் இழந்த்தாகச் செய்திகளில் படித்தோம்.


அந்த ‘உட்கோட்டு அனுமதி’ என்றால் என்ன?

ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் ஒரு குறிப்பிட்டப் பாதுகாக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்டப் பகுதிக்குள் நுழைய/செல்ல, ஒரு குறிப்பட்ட கால அளவிற்கு வழங்கப்ப்படும் அனுமதி சீட்டு ஆகும். குறிப்பாக, இது இந்தியாவின் சில வடகிழக்கு  மாநில எல்லைப் பகுதிகளுக்கு செல்ல வழங்கப்படும் அனுமதியைக் குறிக்கும்.

இந்தச் சீட்டு வெறும் நுழைவு/பயண அனுமதி மட்டுமே; தங்குவதற்கல்ல. சாதாரணமாக, 15 நாட்களுக்கு மிகாமல் வழங்கப்படும். இதைத் தவிர, வெளி மாநிலத்தவர் இப்பகுதிகளில் அசையாச் சொத்துகளை வாங்க முடியாது; கலப்புத் திருமணம் செய்ய முடியாது போன்ற நிபந்தனைகளும் உண்டு.
                                          
வரலாற்றின் அடிப்படையில் இந்த அனுமதி, 1873-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு  தனது தேநீர், எண்ணெய், யானை தந்தம், காண்டாமிருக கொம்பு மற்றும் தோல் ஆகிய தொழில்களுக்குப் போட்டியாக பிற ஆங்கில நிறுவனங்கள் மற்றும் தனியார் வருவதைத் தடுக்கும் எண்ணத்தில் கொண்டு வரப்பட்ட ‘வங்க எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறை’யின் மூலம் மிசோரம், நாகாலாந்தின் மலைப்பகுதிகளான சின், லுஷாய் மற்றும் நாகா குன்றுகளில் இந்த அனுமதிச் சீட்டு வழங்கியதில் இருந்து துவங்கியது. பின்னர், இது மற்ற வடகிழக்கு எல்லைப் பகுதிகளிலும் செயல் படுத்தப்பட்டது.

இந்திய சுதந்திரத்திற்குப்பின், 1950-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசின் சட்டத்தில் ’பிரிட்டிஷார்’ என்ற வார்த்தையை அகற்றி ‘இந்திய குடிமகன்’ என்று மாற்றப்பட்டு அருணாசல பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டது. இதில் மணிப்பூர் மட்டும் சேர்க்கப்படவில்லை.


இதற்கு முக்கிய காரணம் ஆங்கில அரசைப் பொறுத்தவரை இந்த அனுமதி வணிக அடிப்படையைக் கொண்டது. ஆனால், இந்திய அரசு இதை நடைமுறைப் படுத்தக் காரணம் இப்பகுதியைச் சேர்ந்த ஆதிகுடிகளின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உரிமை. மற்ற முன்று மாநிலங்களிலும் பெரும்பலான மக்கள் மலைப்பகுதியைச் சேர்ந்த ஆதிகுடிகள். தவிர, இந்த மூன்று மாநிலங்களும் பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியில் இருந்தவை.

ஆனால் மணிப்பூரைப் பொறுத்தவரை அது நேரடியாக பிரிட்டிஷாரின் ஆட்சியில் இல்லாமல் தனி சமஸ்தானமாக அரச பரம்பரை வழியாக ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இதன் பெரும்பான்மை மக்கள் மலைவாழ் ஆதிகுடிகள் அல்லர். மேலும், மணிப்பூரின் முன்னாள் அரசர் சௌரசந்தர் நேபாள இளவரசியை மணந்தவர். அதனால், பெருமளவில் நேபாள இனத்தவரும் இங்கு குடியேறி வசித்து வருகின்றனர். (சமீப காலமாக நேபாள இனத்தவர்கள் நாகா, மெய்தி, குகி இனத்தவர்களால் தாக்கப்படுவதால் இங்கிருந்து வெளியேறி டார்ஜிலிங்கில் குடியேறி வருகின்றனர்.)  எனவே, மணிப்பூரில் இந்த அனுமதி சீட்டு முறை நடைமுறைப் படுத்தப்படவில்லை.

ஆனால், சமீபகாலமாக மணிப்பூர் மாநில மக்களிடம் இந்த முறையைக் கொண்டு வர  கோரிக்கை எழும்பியுள்ளது. இதற்காக, அவர்கள் FREINDS என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்; இது பிராந்திய  பழங்குடிச் சமூகங்களின் கூட்டமைப்பு (Federation of Regional Indigenous Societies) என்பதன் சுருக்கமே.

இந்த உட்கோட்டு அனுமதியின் தேவைக்கு அவர்கள் கூறும் காரணங்கள் :

சுதந்திரத்திற்குப் பின் வெளி மாநிலத்தவரின் எண்ணிக்கை அதிகரிப்பு. மேலும், பங்களாதேஷ், மயன்மார் (பர்மா) போன்ற இடங்களிலிருந்தும் சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றங்களும் நடக்கிறது. இதனால், அம்மண்ணின் மக்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் போட்டி. வெளிநாட்டிலிருந்து சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறியவர்கள் குடியுரிமையும் பெற்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றது நடந்துள்ளது. இவ்வாறு, வெளியிலிருந்து வரும் மக்கள் இவர்களுக்கு உண்டான இட ஒதுக்கீட்டையும் முறைகேடாக அனுபவிக்கிறார்கள். மேலும், வெளி மக்களால் இவர்களின் மொழியும் கலாச்சாரமும் பாதிப்படைவதையும் குறிப்பிடுகிறார்கள். இதைத் தவிர, போதைப் பொருள், பாலியல் வன்புணர்வு (இதன் பின்னணியில் சில மாதங்களுக்கு முன் நாகாலாந்தில் சிறைச்சாலையை உடைத்து ஒருவரை பொதுவெளியில் காவு கொடுத்த நடவடிக்கையை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது), அதிகரிக்கும் HIV தொற்று (மணிப்பூர் இந்தியாவில் முதல் ஆறாவது இடத்தில் உள்ளது) ஆகிய சீர்கேட்டிற்கும் வெளி மக்கள் தான் காரணம் என்று நினைக்கின்றனர்.

மேலும், மிசோரம், நாகாலாந்து, அருணாசல பிரதேசம் போன்ற மற்ற வட கிழக்கு மாநிலங்களில் இது நடைமுறையில் இருக்கும் பொழுது இவற்றுக்கு நடுவில் உள்ள இந்த மாநிலத்தில் மட்டும் நடமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல் இருக்க முடியாது என்பதையும் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக AFSPA மூலம் இந்திய ராணுவம் மற்ற மாநிலங்களையும் சேர்த்து இங்கு இருப்பதை (இதற்கு எதிராக ஐரோம் ஷர்மிலா நவ-2, 2000 முதல் உண்ணா நிலை போராட்டம் நட்த்துவது நாம் அறிந்த்தே!) நியாயப் படுத்தும் பொழுது, இந்த அனுமதி மறுப்பதை அவர்களுக்கு மறுக்கப்படும் நியாயமாகப் பார்க்கின்றனர்.
ஆனால் இதில் சில நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன. சாதாரணமாக வடகிழக்கு மாநிலங்களில் மருத்துவம் போன்ற பயிற்சி பெற்ற தொழில் முறை பணியாற்றுபவர்கள் குறைவு. பிற மாநிலத்தவர் குடியேற்றம் என்பது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நிகழ்வதே! (குறிப்பாக பீகார், ஒரிசா போன்ற மாநிலத்தவர்கள் பஞ்சாப், மகாராக்ஷ்ட்ரம், டெல்லி, தமிழ்நாடு, பெங்களூர் போன்ற வளர்ச்சி பெற்ற மாநிலங்களில்/நகரங்களில் குடியேறுகின்றனர். அங்கெல்லாம் மண்ணின் மைந்தர்கள் போன்ற கோரிக்கைகள் எழுந்தாலும்  அவை சிறிய அளவிலேயே உள்ளன). எனவே இதை அனுமதித்தால் மற்ற மாநிலங்களும் இது போன்ற கோரிக்கைகளை எழுப்பிக் கொண்டே இருக்கும்.  தவிர சட்டத்திற்குப் புறம்பான வெளிநாட்டவர் குடியேற்றத்திற்குக் காரணம் மோசமான நிர்வாகமே. இதை இந்த உட்சீட்டு அனுமதியால் மட்டுமே சீர்செய்ய முடியாது.

சென்ற வருடம் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடந்த பொழுது

2010-ஆம் ஆண்டு மத்திய அரசு (உள்துறை) இதை நடைமுறைப் படுத்த முடியாது என்று அறிவித்தது.

2012-ஆம் ஆண்டு மணிப்பூர் மாநில சட்டசபை இந்திய அரசுக்கு இந்த முறையை கொண்டுவரக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு தன் நிலையை இதுவரை மாற்றிக் கொள்ளவில்லை.


இந்தக் கோரிக்கைத் தற்போது மேகாலயா-விலும் எழுந்துள்ளது. 

புதன், ஜூலை 01, 2015

லீப் நொடி

லீப் நொடி


ஒரு நாள் என்பது பூமி தன்னைத் தானே சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம். ஆனால், பூமி எப்பொழுதும் ஒரே வேகத்தில் சுற்றுவதில்லை. அதன் சுழற்சி புவியின் ஈர்ப்பு விசை, சந்திரனின் ஈர்ப்பு விசை, காற்று சீதோஷணநிலை, புவிமையத்தின் தன்மை, புவித்தட்டின் (tectonic plates) நகர்வு என்று பல காரணங்களை அடிப்படையாகக் கொண்டது.

ஒரு நாள் என்பது சராசரியாக 24 மணி நேரத்தைக் கொண்டது. அதன் அடிப்படையில், ஒரு நொடி என்பது ஒரு நாளின் 1/86400 (60 X 60 X 24) பகுதியைக் கொண்டது. ஆனால், தற்போது சர்வதேச நேரம் என்பது சீசியம் அணு கடிகாரத்தின் மூலம் கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில் சீசியம் அணு மாறுபடாத வெப்பநிலையில் (0 டிகிரி கெப்லர்-இல்) 9192631770 நுண்ணலைகளை(radiations)ப் பரப்பும் கால அளவு ஒரு நொடியாகக் குறிக்கப்படுகிறது.

அணு கடிகாரத்தின் அடிப்படையில் பூமி தன்னைத் தானேச் சுற்றிக் கொள்ள 86400.025 நொடிகளை எடுத்துக் கொள்கிறது. (சில ஆய்வுகள்,  86400.0031 நொடிகள் என்றும் குறிப்பிடுகின்றன. மேலும், பூமியின் சுழற்சி வேகம் மேலும் மேலும் குறைவதாகவும் கூறப்படுகிறது.) அதாவது, பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரத்திற்கு மேலாக ஆயிரத்தில் இரண்டு அல்லது மூன்று பங்கு நொடிகள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.

இதன் அடிப்படையில் 1972-ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிட்ட சில நாட்களில் (ஜூன் 30 அல்லது டிசம்பர் 31-ஆம் தேதி இரவு) 12.00 மணிக்கு ஒரு நொடி நீட்டிக்கப்படுகிறது. அதாவது சாதாரணமாக 11.59.59 நொடிக்குப் பின் அடுத்த நாளின் 00.00.00 நொடியாக மாறுவதற்கு மாறாக ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் 11.59.59 க்குப் பின் 11.59.60 என்றும் அதன் பின் அடுத்த நாளின் 00.00.00 நொடியாகவும் குறிக்கப்படுகிறது.  சர்வதேசநேரத்திற்கும் இந்திய நேரத்திற்கும் 5.30 மணி நேர வேறுபாடு உள்ளதால், இந்த லீப் நொடி ஜூலை 1-ஆம் தேதி காலை 5.29.59க்குப் பிறகு 5.29.60 என்றும் அதன் பிறகு 5.30.00 என்றும் குறிப்பிடப்படும்.

1972-ஆம் ஆண்டு முதல் இதுவரை 24 முறை இந்த லீப் நொடி ஏற்கப்பட்டுள்ளது. இது 25-ஆவது முறை. இதன் விவரங்களை ’நின்றஒரு நொடி’ என்ற தலைப்பில் பக்கத்தில்  ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்.

ஒரு நொடி வேறுபாடு என்றாலும் கணிணி மயப்படுத்தப்பட்ட இந்த நாட்களில் இது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை 2012-ஆம் ஆண்டு ஜூன் 30இல் நடந்த லீப் நொடி மாற்றம் reddit, Mozilla, foursquare ஆகிய தளங்களை வெகுவாக பாதித்தது. Amedeus மென்பொருள் பாதிப்பால் ஆஸ்த்ரேலியாவின் க்வாண்டாஸ் விமானம் தன் 50-க்கும் மேற்பட்ட விமானங்களைத் தாமதப்படுத்த/ரத்து செய்ய நேர்ந்தது.


இந்த முறை google தன் கடிகாரத்தில் லீப்  நொடிகளைப் பயன் படுத்தாமல்  கடைசி சில நொடிகளை நீட்டித்து சர்வதேச நேரத்திற்கு சமனாக்க முடிவெடுத்துள்ளது. அமேசான்-உம் லீப் நொடி இல்லாமல் வேறு ஏற்பாடு செய்யப் போவதாகக் கூறியுள்ளது.

வியாழன், ஆகஸ்ட் 07, 2014

முதல் உலகப் போர் – நூறு ஆண்டுகளுக்குப் பின் (இறுதிப் பகுதி)

சென்ற இரண்டு பகுதிகளில் முதல் உலகப் போருக்கானக் காரணத்தையும் அதன் நிகழ்வுகளையும் பார்த்தோம். இப்போது இப்போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்று பார்ப்போம்.

ஆரம்பத்தில், அமெரிக்கா இந்தப் போரில் நடுநிலையை வகிப்பதாக அறிவித்தாலும், அது நேசநாடுகளுக்கு மறைமுகமாக உதவி வந்தது. அமெரிக்கா நேச நாடுகளுக்கு ஆயுதங்களையும் மற்ற சாதனங்களையும் வழங்கி வந்தது.  1915-ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதி பிரிட்டிஷ் பயணிகள் கப்பல் ஜெர்மனால் மூழ்கடிக்கப் பட்டதில், அதன் 1195 பயணிகளும் இறந்தனர். அவர்களில் 128 பேர் அமெரிக்கர்கள். இதனால், அமெரிக்காவும் போரில் ஈடுபடவேண்டும் என்று குரல்கள் எழும்பின. ஆனாலும், அமெரிக்க அதிபர் வூட்ரோ வில்சன் அமைதி ஏற்பட முயற்சிகள் எடுத்தார்.

ஆனால் 1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெர்மன் பிரிட்டனுக்கு எதிராக கட்டுபாடற்ற நீர்மூழ்கி தாக்குதலை அறிவித்தது. இதன் மூலம் பிரிட்டனுக்கு வரும் அனைத்து கப்பல்களும் அது ராணுவ கப்பலாக இருந்தாலும் சரி பயணிகள் கப்பலாக இருந்தாலும் சரி அதை மூழ்கடிக்க முடிவெடுத்தது. தொடர்ந்த நிகழ்வுகளில் அமெரிக்க அதிபர் வில்சன் ஏப்ரல் மாதம் 3-ஆம் நாள், ஐரொப்பாவில் அமைதி திரும்ப தேவைபட்டால் அமெரிக்காவும் போரில் இறங்கும் என்று அறிவித்தார். ஏப்ரல் 6-ஆம் தேதி ஜெர்மனுக்கு எதிராக போர் அறிவிப்பை வெளியிட்டார்.

ஏற்கனவே மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து போர் புரிந்து கொண்டிருந்த இரு தரப்பினரும் சோர்ந்து போய் இருந்த நிலையில் அமெரிக்காவின் வரவு நேசநாடுகளுக்குப் புத்துணர்ச்சியை அளித்தது. மேலும், அமெரிக்க வரவினால் நேச நாடுகளுக்கு புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய ஆயுதங்களை பிரயோகிக்கக் கூடிய பொருளாதார பலத்தைக் கொடுத்தது. தொடர்ந்து போரில் பீரங்கி டாங்கிகளும் போர்விமானங்களும் பெருமளவில் உபயோகிக்கப் பட்டன.

ஜெர்மன் கிழக்கில் ரஷ்யாவுடன் பெரும் வெற்றி ஈட்டியிருந்தும் மேற்கில் அமெரிக்கப் படை நேச நாடுகளின் படையுடன் சேரும் முன்னர் அதை அழிக்கத் திட்டமிட்டது. அதன் ரஷ்ய வெற்றியின் நாயகனான கமாண்டர் எரிச் லுடெண்டார்ஃப் மேற்கு நோக்கி அனுப்பப்பட்டார். ஆரம்பத்தில் ஜெர்மன் வெற்றிகள் ஈட்டினாலும் அமெரிக்கப்படையின் வரவையொட்டி ஜெர்மன் படைகள் தடுத்து நிறுத்தப்பட்டன.

மெல்ல போரின் கோரத்தை மக்கள் உணர ஆரம்பித்தனர். மேலும், ஐரோப்பியா மக்களிடம் அரசியல் ரீதியாக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. மக்களிடம் முடியாட்சிக்கு எதிரான மனநிலை உருவாக  ஆரம்பித்தது. தொடர்ந்து ஜெர்மன் அரசருக்கு எதிராக மக்கள் போராட்டமும் வேலை நிறுத்தமும் செய்தனர்.  தொடர்ந்து 1918-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெர்மனின் கடற்படை அரசுக்கு எதிராகத் திரும்பியது; கமாண்டர் லுடெண்ட்ராஃப் பதவி விலகினார். நவம்பர் 9-ஆம் தேதி ஜெர்மன் அரசர் இரண்டாம் கெய்சர் வில்ஹெம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

1918 அக்டோபர் 11-ஆம் தேதி இரு தரப்பின் தலைவர்களும் கூடிப் பேசி அமைதி ஒப்பந்தம் செய்ததைத் தொடர்ந்து போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

1919-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லாய்ட் ஜார்ஜ், இத்தாலியின் ஒர்லண்டோ, பிரான்ஸின் க்லெமென்க்யூ ஆகியோர் வுட்ரோ வில்சனுடன் கூடி ஐரோப்பாவில் அரசியல் நிலைத் தன்மையை மீட்கவும் ஜெர்மனி கொடுக்க வேண்டிய நஷ்ட ஈட்டையும் தீர்மானித்தனர்.

அதில் அமெரிக்க அதிபர் 14 அம்ச திட்டம் ஒன்றை அறிவித்தார். அவை...

 
திறந்த ராஜீய உறவு இதன் மூலம் முன்னர் இருந்தது போல் எந்த நாடும் ரகசிய ஒப்பந்தங்கள் செய்து கொள்ளக் கூடாது.
தடையற்ற கடற்பயணம் கடற்பகுதிக்கு எந்த நாடும் சொந்தம் கொண்டாடக் கூடாது.
ஆயுதக் குறைப்பு எல்லா நாடுகளும் தங்கள் ஆயுதங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
காலணி ஐரோப்பாவின் காலணிகளின் மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும்.
ரஷ்யா அது விரும்பிய அரசை அது தானே தீர்மாணிக்கவும் அதை மற்ற நாடுகள் அங்கீகரிக்கவும் வேண்டும்.
பெல்ஜியம் பெல்ஜியத்தில் போருக்கு முந்தய நிலை திரும்ப வேண்டும்.
பிரான்ஸ் போரில் ஜெர்மனால் கைப்பற்றப்பட்ட அதன் நிலங்கள் அதற்கு திரும்ப அளிக்கப்பட வேண்டும்.
இத்தாலி இத்தாலியின் எல்லை திருத்தி அமைக்கப்பட வேண்டும்.
நாடுகளின் சுய நிர்ணயம் ஐரோப்பிய நாடுகள் அதன் மக்களின் விருப்பப்படி சுய நிர்ணயம் செய்து கொள்ளலாம்.
ரொமானியா, மாண்டேநெக்ரோ, செர்பியா மற்ற நாடுகளின் படைகள் செர்பியாவிலிருந்து விலக்கப்பட்டு மத்திய தரைக்கடல் வரை அதன் எல்லை நீட்டிக்கப்பட வேண்டும்.
துருக்கி மக்களுக்கு அவர்கள் எதிர்காலத்தைத் தீர்மாணிக்க அனுமதி.
போலந்து தனி நாடாக இயங்க வேண்டும்.                                 
நாடுகளின் கூட்டமைப்பு அமைதியை நிலை நாட்ட அனைத்து நாடுகளின் கூட்டமைப்பு நிறுவப் பட வேண்டும்.
 
என்பவையே இதன் முக்கிய அம்சங்கள். இந்த திட்டத்தை முழுமையாக அனைத்துத் தரப்பினரும் ஏற்கவில்லை. உதாரணமாக, ஐரோப்பிய நாடுகள் சுயநிர்ணயம் செய்து கொள்ளலாம் என்பதை பிரான்ஸ் ஏற்க மறுத்தது. அது ஆஸ்த்ரியா ஜெர்மனியுடன் இணைந்தால் தன் இறையாண்மைக்கு அது ஆபத்து உண்டாக்கும் என்று எண்ணியது. பிற்காலத்தில் (ஹிட்லர்) அது உண்மையாகவும் மாறியது. சில அம்சங்களை அனைவரும் ஏற்காவிட்டாலும் ஒப்பந்தம் கிட்டத்தட்ட இந்த அம்சங்களின் அடிப்படையிலேயே செய்யப்பட்டது.

ஜெர்மனி நஷ்ட ஈடாக 6600 மில்லியன் பவுண்டுகள் தர வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஜெர்மனியின் படை எண்ணிக்கை ஒரு லட்சமாகக் குறைக்கப்பட்டது. அது பீரங்கி டாங்கிகள் வைத்துக் கொள்ள அனுமதி மறுக்கப் பட்டது. அதன் கடற்படை 6 கப்பல்களைக் கொண்டதாக தீர்மாணிக்கப்பட்டது. அதன் விமானப்படை தடை செய்யப்பட்டது.

மேலும், அரசியல் ரீதியாக ஜெர்மனும் ஆஸ்த்ரியாவும் சேர தடை விதிக்கப்பட்டது. ஜெர்மனி கிழக்குப் பகுதியில் வென்ற அனைத்து பகுதிகளும் அதனிடமிருந்து பறிக்கப்பட்டது. அதன் பொறுப்பு நாடுகளின் கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆஸ்த்ரியா வென்ற நிலங்கள் இத்தாலிக்கும் செகோஸ்லோவாகியாவிற்கும் செர்பியவிற்கும் பிரித்து கொடுக்கப்பட்டது. ஹங்கேரியின் 2.80 லட்சம் ச.கி.மீ நிலம் செகோஸ்லோவாகியா, ரொமானியா, செர்பியா ஆகியவற்றிடம் கொடுக்கப்பட்டது. பல்கேரியாவின் நிலங்கள் க்ரீஸ், ரொமானியா, யுகோஸ்லேவியா ஆகியவற்றிடம் கொடுக்கப்பட்டது.

துருக்கி வென்ற பகுதிகள் க்ரீஸிடம் தரப்பட்டது. துருக்கியின் காலணிகள் நாடுகளின் கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், துருக்கியின் இந்த காலணிகளை பிரிட்டனும், பிரான்ஸும்

அரேபியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு தங்களுக்குள் பிரித்துக் கொண்டன.

போரில் தோல்வியுற்றதுமல்லாமல் ஆட்சி அதன் முந்தைய அரசரிடமும் இல்லாமல் இருந்ததால் ஜெர்மனி, துருக்கி, ஆஸ்திரியா போன்ற நாடுகள் இந்த ஒப்பந்தத்தை   வேறு வழியில்லாமல் ஏற்க வேண்டியிருந்தது.
நேச நாடுகள் சார்பில் 3 ½ கோடி வீரர்கள் இந்தப் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். மத்ய நாடுகள் சார்பில் 2 ¼ கோடி வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்திகளைத் தவிர, 1917-ஆம் ஆண்டு அமெரிக்கா போரில் இறங்கிய போது அதன்  சார்பில் 45 லட்சம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

போரில் சுமார் 85 லட்சம் வீரர்கள் உயிரிழந்தனர். 2 ¼ கோடி வீரர்கள் காயமுற்றனர். 75 லட்சம் வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர் அல்லது காணாமல் போயினர்.

போரில் உபயோகப்படுத்தப்பட்ட நச்சு வாயுக்களால் 1919-ஆம் ஆண்டு ஐரோப்பியாவில் கடும் ப்ளூ ஜுரம் பரவியது. போரின் கோரத்தால் தான் இந்த ஜுரம் பரவியது என்பதை அரசாங்கங்கள் மறைத்து வந்தன. ஆனால், இந்தப் போரில் ஈடுபடாத ஸ்பெயின் இதில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைத் தாராளமாக வெளியிட்டது. தங்களின் தவறுகளை மறைக்க பிரிட்டனும் பிரான்ஸும் இதை ’ஸ்பெயின் ப்ளூ’ என்று கிண்டலடித்தன. தற்சமயம், நாம் அவ்வப்போது எதிர்கொள்ளும் பறவைக் காய்சல் என்ற ‘bird flu’  இந்தப் போரைத் தொடர்ந்து தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது.

போரைத் தொடர்ந்த 10-12 ஆண்டுகள் ஐரோப்பியா பெரும் உணவுப் பஞ்சத்தையும் அதனால் விலைவாசி ஏற்றத்தையும் சந்தித்தன.

சென்ற பதிவுகளில் கூறியது போல் முதல் உலகப் போரை பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் ஆதரித்து வரவேற்றார்கள் என்றே கூற வேண்டும். ஐரோப்பிய ஊடகங்களும் இந்தப் போரை ’எல்லா சச்சரவுகளையும் தீர்த்துவைக்கப் போகும் போர்’ என்றே நம்பினார்கள்.

இந்தப் போரினால் ஏற்படப் போகும் அழிவையும் அதன் கோரத்தையும் அவர்கள் எண்ணிக் கூடப் பார்க்கவில்லை.

இவையனைத்திற்கும் மெலாக போரில் தோல்வியுற்ற ஜெர்மனி தனிமைப் படுத்தப்பட்டதால் அதையே தன் அரசியலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஹிட்லர் அடுத்தொரு பெரிய போருக்கு அஸ்திவாரம் போடுவான் என்பதை யாராலுமே நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது.

முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்ற பழமொழி எல்லாவற்றிர்கும் பொருந்தாது. போரைப் போரால் தடுக்க முடியாது.

இனியாவது பாரதி தாசன் கூறியது போல்…

 
புதியதோர் உலகம் செய்வோம்
         கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்… 

திங்கள், ஆகஸ்ட் 04, 2014

முதல் உலகப் போர் – நூறு ஆண்டுகளுக்குப் பின் (பகுதி 2)


முதல் உலகப் போரின் துவக்கத்தையும் அதன் பின்னணியையும் சென்ற பதிவில் எழுதியிருந்தேன்.

அந்த நிகழ்வுகள் பின்வருமாறு இருந்தன…           

ஜூன் 28-இல் ஆஸ்த்ரிய-ஹங்கேரியின் பட்டத்து இளவல் சுட்டுக் கொல்லப்பட்டவுடன் அதன் அரசரான83 வயதான முதலாம் ஃப்ரன்ஸ் ஜோசப், செர்பியாவிடம் ஆஸ்த்ரியாவிற்கு எதிரான குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இளவலின் கொலைவிசாரணையை நடத்தி முடிக்கவும் ஜுலை 23-ம் தேதி வரை கெடுவிடுத்தார். கெடுவையேற்ற செர்பியா குற்றவாளிகளை செர்பிய சட்டப்படி விசாரிக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையை விதித்தது. இதனை ஏற்க மறுத்து ஜூலை 28-ஆம் தேதி ஆஸ்த்ரோஹங்கேரி, செர்பியா மீது போர் அறிவித்தது.

செர்பிய சட்டப்படி விசாரணையை ஏற்க வியன்னா மறுக்க காரணம் இருந்தது. போஸ்னியாவின் ஐந்தில் இரண்டு பேர் செர்பிய இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆஸ்த்ரோஹங்கேரியின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி சுதந்திரம் பெற்று செர்பியாவில் இணைய நினைத்தனர். கர்னல் ட்ரகுடின் டிமிட்ரிஜெவிக் தலைமையிலான கருங்கை இயக்கத்தைப் போல பல இயக்கங்கள் இதற்கான முயற்சிகளை வெளிப்படையாகவும் இரகசியமாகவும் செய்து வந்தன. 11 வெவ்வேறு இனக்குழுக்களைக் கொண்ட செர்பியாவும் ரஷ்யாவும் அவர்களுக்கு உதவுவதாக எண்ணியது.

ரஷ்யா போன்ற பெரிய நாடு செர்பியாவிற்குத் துணைவரும் என்பதை அறிந்திருந்தும் ஆஸ்த்ரோஹங்கேரி போரில் இறங்கக் காரணம் அதற்கு ஜெர்மனியின் அரசர் கெய்சர் வில்ஹெம் -2 உதவுவார் என்ற நம்பிக்கையே.

ஆஸ்த்ரிய அரசர் ஜோசபின் நம்பியபடியே ஜெர்மனி செர்பியா ஓர் அழிக்கப்பட வேண்டிய அரசியல் விஷயம் என்று அறிவித்தது. இரண்டாம் வில்ஹெம், ஆஸ்திரிய தூதரான கவுண்ட் வான் ஹோயஸ்-இடம் ஆஸ்த்ரியாவின் ’செர்பிய விஜயத்தி’னால் ரஷ்யாவுடன் போரிட நேர்ந்தாலும் தன் ஆதரவு உண்டு என்று அறிவித்தது.  

1890-இல் பிஸ்மார்க்-ஐ சான்சிலர் பதவியிலிருந்து கட்டாய ஓய்வில் அனுப்பியது முதல் வில்ஹெம் அதிகாரத்தை தன் வசம் நிலை நிறுத்த பல நடவடிக்கைகளை எடுத்தார். ஜெர்மனி ஐரோப்பாவில் முக்கிய சக்தியாக நிலைபெற  அதன் கடற்படையை சீரமைக்க வேண்டும் என்று எண்ணினார். அதிலிருந்து பிரிட்டன் ஜெர்மனியின் வளர்ச்சியை எண்ணி கவலைக் கொள்ள ஆரம்பித்தது. அதன் கடற்படை வளர்ச்சி மூலம் தங்களுக்கு ஆபத்து என்பதை பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய மூன்றும் உணர்ந்தன. ஜெர்மனியும் தனக்கு எந்த நிலையிலும் உதவக் கூடிய நட்பு நாடு என்றால் அது ஆஸ்த்ரியா தான் என்பதை உணர்ந்திருந்தது. ஆஸ்த்ரிய உதவியினால் கிழக்கிலிருந்து ரஷ்யப் படையெடுப்பை தடுக்கவும் மேற்கில் பிரான்ஸ் தாக்கினால் அதைக் கட்டுப்படுத்த ஷிலிஃபென் திட்டம் (ப்ரான்ஸை ஹாலந்து, லுக்ஸெம்பர்க், பெல்ஜியம் மூலம் தாக்குவது) உருவாக்கியிருந்தது. இது போன்ற ஒரு சம்பவத்திற்காகவே காத்திருந்தது.

ஆஸ்த்ரிய போர் அறிவிப்பைத் தொடர்ந்து அனைவரது கவனமும் ரஷ்ய ஜார் மன்னன் இரண்டாம் நிக்கலோஸ்-இன் பக்கம் திரும்பியது. ரஷ்யா செர்பியாவிற்கு உதவ எந்த ஒப்பந்தமும் செய்திருக்கவில்லை; அதேபோல், அதற்கு பால்கன் பகுதியினால் அதற்கு பெருமளவில் எந்த பொருளாதார நன்மையும் இல்லை. ஆனால், செர்பியா வழியாக  அதன் எதிரி துருக்கியைக் கைப்பற்றி கான்ஸ்டாண்டி நோபில் ஜலசந்தி மூலம் மத்தியதரைக்கடல் பகுதியை அணுக வாய்ப்பு கிட்டும். மேலும் அரசியல் காரணங்களுக்காக மேற்குப் பகுதியில் ஆஸ்த்ரோ-ஹங்கேரியை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் இருந்தது. ஆனால் இவை அனைத்தையும் விட, ஜெர்மன் பிரான்ஸைத் தாக்கியபின் அதன் கவனம் ரஷ்யாவின் பக்கம் திரும்பினால் அதைச் சமாளிப்பது கடினம் என்பதை உணர்ந்திருந்தது.  எனவே, ஜெர்மன் பிரான்ஸை வீழ்த்துவதற்கு முன் அது ரஷ்யாவுடன் போரிட நேர்ந்தால் ஜெர்மன் தன் முழு படை பலத்தையும் ரஷ்யாவிற்கு எதிராக பிரயோகிக்க முடியாது என்றும் நினைத்தது. அது ஜூலை 30ஆம் நாள் தன் படையை தன் மேற்கு எல்லையில் குவித்தது. ஜெர்மன் வேறு வழியின்றி ஆகஸ்ட் 1 தேதி ரஷ்யாவின் மீது போர் அறிவித்தது.

இந்த சமயத்தில் பிரான்ஸில் ஜூன் மாதத்தில் தான் புதிய பிரதமராக விவியானி பதிவியேற்றிருந்தார். பிரெஞ்சு ராஷ்டிரபதி ரேமெண்ட் பாய்ன்கரெ ரஷ்யாவிற்கு கடற்பயணம் மேற்கொண்டிருந்தார். அதனால், அது உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரஷ்யாவின் படைக் குவிப்பைத் தொடர்ந்து அதுவும் தன் கிழக்கு எல்லையில் படையைக் குவித்தது. ஆகஸ்ட் 3ஆம் தேதி ஜெர்மன் பிரான்ஸின் மீது போர் அறிவித்தது. தொடர்ந்து பிரான்ஸை வடக்கிலிருந்து தாக்க (ஷிலிஃபென் திட்டப்படி) நடுநிலை வகித்த பெல்ஜியத்தின் மீது ஜெர்மனி படையெடுத்தது.

இந்த நேரத்தில் பிரிட்டனின் வெளியுறவுத் துறை செயலராக இருந்தவர் சர் எட்வர்ட் க்ரே. இவர் ஒரு சமாதான விரும்பி. இவர், ஜூலை 29 ஆம் தேதி ஜெர்மன் வெளியுறவுத் தூதரான இளவரசர் லிக்னோவ்ஸ்கி சமாதானத்தின் அவசியத்தை அறிவுறுத்தினார். ஆனால் இவரது கடிதத்தில் மறைமுகமாக பிரான்ஸ் தாக்கப்பட்டால் பிரிட்டன் ஜெர்மனிக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற எச்சரிக்கையும் இருந்த அதே நேரம் பிரிட்டன் தன் நட்பு நாடுகளுக்கு உதவ சட்டபூர்வமாக எந்தத் தேவையும் இல்லை என்றும் கூறியிருந்தார்.  இதை தனக்குச் சாதகமாக திருப்ப ஜெர்மன் முயன்று பிரிட்டன் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்று கூறியது. தன் தவறை உணர்ந்த க்ரே பதில் எதுவும் அளிக்கவில்லை. ஆகஸ்ட் 3-ஆம் தேதி பிரிட்டிஷ் மந்திரி சபைக் கூட்டத்தில் தான் அமைதிக்கான ஒரு வழியை மட்டுமே ஜெர்மனுக்குக் காட்டியதாகவும் வேறு எந்த  வாக்குறுதியையும் வழங்கவில்லை என்று அறிவித்தார். தொடர்ந்து ஆகஸ்ட்-4 தேதி பிரிட்டன் - ஜெர்மனி பெல்ஜியத்தின் மீது படையெடுத்ததையடுத்து  - ஜெர்மன் மீது போர் அறிவித்தது.

உலக வல்லரசுகளான பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மூன்றும் ஜெர்மனிக்கு எதிராக அணிதிரண்டதைக் கண்ட ஜப்பான் ஜெர்மன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சீனப் பகுதிகளை மீட்க ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஜெர்மனியின் மீது போர் அறிவிப்பு விடுத்தது.

இடையே ஜெர்மன் பெல்ஜியம் முழுவதையும் கைப்பற்றியிருந்தது. தொடர்ந்து ஜெர்மன் ப்ரான்ஸ்-இலும் நுழைந்தது. ஜெர்மானியப் படைகளின் முன்னேற்றத்தை ப்ரான்ஸ்-ஆல் சமாளிக்க முடியவில்லை. ஆனால், ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் (17-19 தேதிகள்) ரஷ்ய படைகள் ஜெர்மனியின் கிழக்குப் பகுதி (ப்ரெஷ்யா) ஜெர்மன் அதன் படையின் பெரும் பகுதியை அங்கு அனுப்ப நேர்ந்தது. அங்கு நடந்த போரில் ஜெர்மனி பெரும் வெற்றி பெற்றாலும், பிரான்ஸ் பகுதி முன்னேற்றத்தை அது தடுத்துவிட்டது. ஸெப்டம்பரில் ப்ரான்ஸ் தன் படையை முழுவதும் திரட்டியதையடுத்து மார்னே நதிக்கரையில் ஜெர்மன் தடுத்து நிறுத்தப்பட்டது. இரண்டு தரப்பிலும் பதுங்கு குழிகள் வெட்டப்பட்டு படைகள் முன்னேற முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் கிழக்குப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ரஷ்யப்படைகள் தோற்கடிக்கப்பட்டாலும் ஜெர்மனி ரஷ்யா போன்ற பெரிய நிலப்பரப்புள்ள நாட்டைக் கைப்பற்றுவது சாத்தியமற்றது என்று உணர்ந்திருந்ததால் வேறுவழியில்லாமல் செப்டம்பர் மாத பிற்பகுதியில் போரை கடல் வெளியில் நிகழ்த்த எண்ணியது. இதை, வரலாற்று ஆசிரியர்கள் ‘கடற்பந்தயம்’ (race to sea) என்றழைக்கிறார்கள். ஜெர்மனியின் இந்த முடிவிற்கு முக்கிய காரணம் அதனிடம் இருந்த (U-boat) நீர்மூழ்கிக் கப்பல்கள். இதன் மூலம் அது நேச நாடுகள் தங்கள் காலணிகளுக்கு சென்றுவரும் கப்பல்களை தாக்க ஆரம்பித்தது. போர்கப்பல்களை மட்டுமல்லாமல் பயணிகள் கப்பலையும் தாக்கியது. 1914 டிசம்பரில் போர் ஃபாக்லாண்ட் தீவுகள் அருகில் நடந்த கடற்போர் மிகவும் பிரபலம்.

கடற்போர்களைத் தொடர்ந்து, டிசம்பர் இறுதியில் ஜெர்மனும் பிரிட்டனும் நேரிடியாக போரில் இறங்கின. ஜெர்மன் பிரிட்டனின் மீது வான்வழித் தாக்குதலை ஆரம்பித்து வைத்தது. இதன் மூலம் போர் அடுத்த கட்டத்தை அடைந்தது. 

முதல் கட்டத்தில் நேச நாடுகளின் படைகள் பெரும் இழப்புகளையே சந்தித்தன. அதிலும் குறிப்பாக ரஷ்யா தான் மிக அதிகமான இழப்புகளை அடைந்திருந்தது.

ரஷ்யா செர்பியவிற்கு உதவியதையடுத்து ரஷ்யாவின் எதிரி நாடான துருக்கியின் ஒட்டாமன் அரசு நேச நாடுகளுக்கு எதிராகப் போரில் இறங்கியது. தன் வணிக வாய்ப்புகளுக்கு சூயஸ் பகுதியின் முக்கியத்தை உணர்ந்திருந்த பிரிட்டன் இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தது.

1915-இல், ஒரு பக்கம் சர்ச்சில் தலைமையிலான படை துருக்கியின் காலிபோலி-யில் ஒரு பெரும் சண்டையை நடத்தியது. பிரிட்டன் அதில் பெரும் தோல்வியைச் சந்தித்தது. [தொடர்ந்து சர்ச்சில் பதவியைத் துறந்ததும் அரசியலில் இறங்கியதும் வேறு கதை]. இந்தப் போரில் பிரிட்டனின் காலணிகளான ஆஸ்திரேலிய-நியூஸிலாந்து படையினரே அதிகம் பயன்படுத்தப் பட்டனர்.

மற்றொருபுறம், இந்தியாவிலிருந்து 13லட்சம் வீர்ர்களைக் கொண்ட ஒரு ராணுவ பிரிவு தரைவழியில் துருக்கியைத் தாக்க அனுப்பப்பட்டது. இந்தியப் (பிரிட்டிஷ் அரசிற்காகப் போரிட்டாலும் அதன் வீரர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களே) படை யூப்ரிடஸ்-டைட்ரிஸ் நதிப் பகுதிவரைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. ஆனாலும் அதனால் பாக்தாத்-ஐக் கைப்பற்ற முடியவில்லை. கிட்டத்தட்ட 6-7 மாதங்கள் (அக்-1915 முதல் ஏப்ரல்-1916 வரை) பாக்தாத்-ஐ அடுத்த குட் பகுதியில் முற்றுகையிட்டிருந்த இந்தியப் படையின் 13000-பேர் துருக்கியர்களால் முறியடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

பிரான்ஸுடன் அது ஒட்டமான் அரசைப் பிரித்துக் கொள்ள ரகசியமாக ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது. இதற்கு சைக்ஸ்-பைகாட்ஸ் ஒப்பந்தம் என்று பெயர் [இன்றைக்கும் சூயஸ் பகுதியில் நிலவி வரும் பாலஸ்தீனப் பிரச்சனைக்கு விதை பிரிட்டனின் மார்க் சைக்ஸ்-உம் பிரான்ஸின் பிரான்காய்ஸ் ஜார்ஜெஸ் பைகாட்-உம் உருவாக்கிய அந்த ஒப்பந்தத்திலும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளினாலும் தான் விதைக்கப் பட்டது].  இந்த ஒப்பந்தத்தில் பிரான்ஸும் பிரிட்டனும் ஒட்டமான் அரசு வரைபடத்தின் குறுக்கே ஒரு கோடு கிழித்து அதில் வட பகுதியை பிரான்ஸும் தென் பகுதியை பிரிட்டனும் பிரித்துக் கொண்டன. பின்னர் ரஷ்யாவிற்கும் ஓட்டமான் அரசின் வடபகுதியில் சில இடங்கள் ஒதுக்கப்பட்டது.

துருக்கியை ஒடுக்க அவர்களுக்கு அரேபியர்களுடன் இருக்கும் 400-ஆண்டுப் பகையைப் பயன்படுத்திக் கொண்டது. நபிகளின் வழிவந்த, ஷரிஃப் ஹுஸைன் தான் அப்பொழுது மெக்காவை ஆண்டு வந்தவர். ஆனால், ஒட்டு மொத்த உலக முஸ்லீம்களின் தலைவராக (கலீபாவாக) ஒட்டமான் அரசர் இருந்து வந்தார். ஷரிஃப் ஹுஸைனை ஒட்டு மொத்த முஸ்லீம்களின் தலைவராக அறிவிக்க கோரி அவர் மகன் ஃபைஸல் தலைமையில் மறைமுகமாக கொரில்லா போரை நடத்தியது. 1918-இல் ஃபைஸல் தலைமையிலான படை வெற்றி பெற்று டெமாஸ்கஸைக் கைப்பற்றியது.

இடையே கடற்போரில் பிரிட்டனின் கடற்படைகளைத் தாக்கிய ஜெர்மன் 1915 மே மாதத்தில் பிரிட்டனின் பயணிகள் கப்பலான லுஸிதானியாவை மூழ்கடித்தது. அதில் அமெரிக்கப் பயணிகளும் உயிரிழந்தனர். அதனால், அதுவரை நடுநிலை வகித்த அமெரிக்கா நேரடியாகப் போரில் இறங்காவிட்டாலும் ஜெர்மனுக்கு எதிரான அரசியல் நிலையை எடுக்க நேர்ந்தது. தொடர்ந்து 1916-இறுதியில் அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் மீண்டும் தேர்தலில் நிற்க வேண்டியிருந்ததால் ஜெர்மன் கடற்படையை அச்சுறுத்த ஹைதி தீவில் அமெரிக்கக் கடற்படையை நிறுத்தினார். தொடர்ந்து போரிடும் இரு தரப்பினரிடமும் அமைதி ஒப்பந்தத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

1917 ஜனவரியில் நேசநாடுகள் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளித்தன. ஆனால், ஜெர்மன் தன் கடற்தாக்குதலை மேலும் தீவிரப் படுத்தியது. அதனால், அமெரிக்கா ஜெர்மனுடனான தன் ராஜீயத் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டது.

இடையில் 1917-மார்ச்சில் பிரிட்டன் பாக்தாத்-ஐக் கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த சண்டைகளில் வெற்றி தோல்வி இரு தரப்பினரிடையேயும் மாறிமாறி கிட்டி வந்தது. எனினும், ரஷ்யா மட்டும் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்தது. ரஷ்யாவின் தொடர் தோல்விகளையும் அப்போதையப் பஞ்சத்தினால் ஏற்பட்ட உணவு பற்றாக் குறையையும் தொடர்ந்து அரசுக்கு எதிராகப் புரட்சி வெடித்தது; ஜார் இரண்டாம் நிக்கலோஸ் தலைமறைவாக இடைக்கால அரசு பதவியேற்றது. பின்னர், நாடு கடத்தப்பட்டிருந்த  லெனினின் வரவால் நவம்பர் புரட்சி வெடித்து சோவியத் அரசு நிறுவப்பட்டது வரலாறு.

பொதுவாக வரலாற்று ஆசிரியர்கள் ஜெர்மனியையே போருக்குக் காரணமாகக் கூறினாலும். பிற்காலத்தில் ஆஸ்த்ரிய-ஹங்கேரி மீதும், ரஷ்யா மீதும் ஓரளவிற்கு செர்பியா மீதும் காரணம் காட்டுகிறார்கள். பொதுவாக, இந்தப் போரை அந்த நேரத்தில் இதில் ஈடுபட்ட ஐரோப்பிய அரசுகள் மட்டுமன்றி அன்றைய ஐரோப்பிய மக்களும் விரும்பினர் என்றே கூறலாம். ஐரோப்பிய மக்கள் போர் அறிவிப்பையும் போர் சம்பவங்களையும்  விழாப்போலக் கொண்டாடினர். இந்தப் போரின் ஆரம்பத்தில் இதை எல்லாப் போர்களையும் தீர்த்து வைக்கும் பெரும்போர் என்றே ஊடகங்களும் இதை வர்ணித்தன.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே இந்தப் போரின் கோரத் தன்மையையும் அது காலங்காலத்திற்கும் ஏற்படுத்திய விளைவுகளையும் மக்கள் உணர்ந்தனர்.

இந்தப் போரின் விளைவே பிற்காலத்தில் இருபது ஆண்டுகளுக்குள் இதைவிட பெரிய ஒரு போருக்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதையும் அவர்கள் அப்போது கணிக்கவில்லை.