திங்கள், டிசம்பர் 16, 2019

வெடிச்சிரிப்பு

வெடிச்சிரிப்பு
[வல்லமை இதழின் 236-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]

சுற்றுப்புரத்தைப் பாழ்படுத்தும் என
வெற்றுக் கோஷம் போட்டிடுவார்
மாற்றுத்துணிக்கோர் வழிசெய்யார்;
தேற்று நிலையும் தானுரையார்!
குளிர்பதனப் பெட்டியிலும்
குளிர்சாதனச் சூட்டினிலும்
பாழுறும் சீதனச் சூழ்நிலையைக்
கண்டும் காணாமல் ஒதுங்கிடுவார்!

பணம்படைத்தோர் பாழாக்கும் நிகழ்வெல்லாம்
தினந்தினந்தான் நடந்தாலும் சிந்தைசெய்யார்!
வலியோர்த் தம் வாய்ச்சொல்லும் சட்டமாகும்
எளியார் தம் வாழ்க்கையையார் எண்ணிடுவார்!

சுற்றும் வெடிக்கட்டினிலே
வெற்று வயிறு நிரம்பிடுமே...
கட்டும் தீப்பெட்டியிலே
கிட்டிய சில்லரைக் கொண்டிங்கே
வாடிய வயிறும் குளிர்ந்திடுமே...

திரிதனில் வைத்திட்ட தீயினாலே
வறுமை நீங்கி வயிறு நிறைந்தால்
இறுகிய முகத்திலும் வெடிச்சிரிப்பு
மத்தாப்புப் பூவாய்ப் பூத்திடுமே...

திங்கள், டிசம்பர் 09, 2019

நல்வழி

நல்வழி
[வல்லமை இதழின் 235-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]


கள்ளிப்பால் கடந்து
கல்வியறிவுதான் வென்று
எட்டா அறிவுதனை
எட்டிப் பிடித்துவிட்டு
பட்டங்கள் பலபெற்று
சட்டங்கள் தானறிந்து
திட்டமிட்டு தான் வாழும்
திறமனைத்தும் பெற்றிருந்தும்
பெட்டை பிள்ளை என்று
புறம் பேசித் திரிகின்றார்!

பட்டாம்பூச்சிபோல
சிட்டாகப் பறந்திடும் கனவை
கிட்டாமல் செய்கின்றார்...
வீட்டு முற்றத்தில் நிறுத்துகின்றார்!

காரியங்கள் பல செய்ய
காத்திருக்கும் காலத்திலும்
காமமொன்றே காரணமாய்
காரிகையை ஆக்குகின்றார் நெஞ்சைக்
காயம்தினம் செய்கின்றார்!

உயிருள்ள பொம்மையாக
உருவத்தைப் புணர்கின்றார்
உணர்ச்சிகளை மிதிக்கின்றார்
உள்ளத்தைக் காண்பதில்லை...

விட்டுவிடுதலையாகி நினறு
எட்டும் எல்லை தானடைந்து - வான்
முட்டும் மலைச் சிகரம்
தொட்டுவிடச் செய்யுமொரு
வழிதேடி இருக்கின்றேன் - நல்
வழிபார்த்துக் காத்திருப்பேன்...

இக்கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத்தேர்ந்தெடுக்கப்பட்டது.

திங்கள், டிசம்பர் 02, 2019

நாற்காலி ஆட்டம்


நாற்காலி ஆட்டம்
[வல்லமை இதழின் 234-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]



வெற்று கோஷத்திலே,
வீண் வாதத்திலே,
மதமாச்சரியத்திலே,
சாதி அபிமானத்திலே,
சுயநலத் தாக்கத்திலே
சூழ்நிலைக் கைதியாகி
தகுதியற்றோரைத் தேர்ந்தெடுத்தோம்
தலைவர்களை வீழ்த்திவிட்டோம்...

மன்னர் எவ்வழியோ மக்கள் அவ்வழியே…
குடியாட்சியிலோ மக்களே மன்னர் – எனவே
மக்கள் எவ்வழியோ மந்திரியும் அவ்வழியே…

தேர்ந்தெடுத்த மக்களையே
ஒரு பொழுது மேலேற்றி பின் கீழ்தள்ளி
மகாராட்டினத்தில் ஆட்டிவைக்கும
குறுமதிகொள் சிற்றோரை
அரியாசனம் ஏற்றிவைத்து
அறிவிழந்து வாழ்கின்றோம்...

கொள்கைக் கோலம் கலைந்து
பின்புலமும் களையிழந்து
எடுப்பார் கைப்பிள்ளையாய்
ஏமாற்றம் அறியாமல்
குரங்காட்டம் கண்டு
குதூகளித்து அமர்ந்துள்ளோம் ...