காம்போஜம்
இதற்கு முன் புராதன இந்தியாவின் 56 நாடுகளைப் பட்டியல் இட்டிருந்தேன். அவற்றைப் பற்றி விளக்கமாக நேரம் கிடைக்கும் பொழுது எழுதுவதாகக் கூறியிருந்தேன். அந்த வரிசையில் முதலாவதாக இது....
1. காம்போஜம்
இந்திய வரலாறு மட்டுமன்றி மத்திய ஆசியா மற்றும் இந்தோனேசிய (குறிப்பாக கம்பூஜியா
(தற்போது கம்போடியா) வரலாற்றிலும் காம்போஜம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உலக வரலாற்று
அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
காம்போஜம் பற்றிய பல குறிப்புகள் இருந்தாலும் இது இந்தியாவில் இருந்ததா (அதாவது
காம்போஜர்கள் இந்திய ஆரிய வம்சமா அல்லது இந்தோ-ஐரோப்பிய வம்சமா அல்லது இந்தோ-இரானிய
வம்சமா) என்பது வரலாற்று ஆசிரியர்களிடையே பல
ஆண்டுகளாக விவாதிக்கப் பட்டு வந்துள்ளது.
காம்போஜர்களை இந்திய வம்சத்தினராகக் கருதுபவர்களிலும் காம்போஜம் எந்த பகுதியைச்
சேர்ந்த்து என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு.
தற்போது காம்போஜம் என்பது ஹிந்து குஷ் பகுதியிலுள்ள ஒரு பகுதி என்பது பெரும்பாலான
வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வேறுபாடுகளும் அவற்றின் காரணங்களையும் பார்ப்போம். முதலில் காம்போஜம்
பற்றிய வேத, புராண, இதிகாசக் குறிப்புகளைப் பார்ப்போம்
இந்திய பாரம்பரியத்தில் மேருமலைக்கு ஒரு பெரிய இடம் உண்டு. மேருமலை உலகத்தின் மையமாக இருப்பதாகத் தொன்மம் கூறுகிறது.
சில இடங்களில், இது இமயமலைக்கு வடக்கில் இருப்பதாகக் குறிப்பிடப்படுவதும் உண்டு. இந்த
மேருமலையின் சிகரங்களில் முக்கியமானது கௌமோதகி (விஷ்ணுவின் ’கதை’க்கும் கௌமோதகி என்ற
பெயர் உண்டு; ஒருவேளை, மலைபோல உறுதி வாய்ந்தது என்பதைக் குறிப்பதற்காகக் கூட அப்பெயர்
சூட்டியிருக்கலாம் அல்லது நேர் மாறாக விஷ்ணுவின் கதையின் பெயரை மேருவின் சிகரத்திற்கு
வைத்திருக்கலாம்!!!).
கௌமோதகி, கௌமோதகியைச் சுற்றிய பகுதிக்கு கோமுத த்வீபம் என்ற பெயர் உண்டு.
[ஆசியப் பகுதிக்கு ஜம்பூத்வீபம் என்று பெயர், அதில் மேருவின் தென் பகுதியில் இருப்பது
பாரத வர்ஷம் (அ) பாரத நாடு]. கோமுத த்வீபம் – கோமேத் – கோம்தேஷ் – காம் தேஷ் – காம்போதேஷ்
என்று திரிந்து காம்போஜமாக மாறியிருக்கக் கூடும் என்பது பொதுவான கருத்து.
கிரேக்க வரலாற்று அறிஞர் டால்மி (Ptolemy) மத்திய ஆசியாவின் கிழக்குப் பகுதியில்
(அதாவது, இந்து குஷ் மலைப் பகுதியை கோம்தேய் என்று குறிப்பிடுகிறார். யுவாங் சுவாங்-கும்
இப்பகுதியை கியூமிதோ என்றே குறிப்பிடுகிறார். அரேபியர்கள் இதை குமேத் (அ) குமாத் என்று
அழைப்பர். கிரேக்கர்கள் கம்பைசாஸ் என்று அழைப்பர் (அஹமேனியன் (இலியாத்-இல் ட்ராய்களின்
வில்லன்) வழித்தோன்றலிலும் ஒரு அரசனின் பெயர் கம்பேசாஸ் என்று தொடர்புபடுத்துகிறார்கள்)
பொதுவாக இந்த பகுதி வடமொழியில் காம் என்ற வேர் சொல்லினாலேயேக் குறிப்பிடப்படுகிறது.
காம்பேலா என்ற (தற்கால) காபூல், கமாதோல், கம்மஷில்மான், கம்மாதக்கா போன்ற இதை ஒட்டியுள்ள இடங்களின் பெயர்கள் இந்த வேர் சொல்லிலிருந்தே
எழுந்தவை.
மார்கண்டேய புராணத்தின் ஒரு பகுதியான தேவி மாஹாத்ம்யமத்தில் இதைப் பற்றியக்
குறிப்பு உள்ளது. தேவியுடன் சும்ப-நிசும்பர்கள் போரிட்டபோது, சும்பனுக்கு உதவியாக அசுர
சேனையில் மற்ற சாமுண்டன் போன்ற மற்ற அசுர சேனையுடன் 74 கம்பாசுரர்கள் தங்கள் சேனையுடன்
குதிரை ஏறிப் போரிட்டதாகக் குறிப்பிடப் படுகிறது.
இந்திய வேத/புராணக் குறிப்புகளில் மிகப் பழமையானதாகக் கூறப்படும் ரிக் வேதத்தில்
காம்போஜம் பற்றிய குறிப்பு இல்லை. ஆனால், ரிக் வேதத்தில் மிக முக்கியமான ரிஷியாகக்
கூறப்படுபவர் உபமன்யு என்பவர். அவருடைய வம்சத்தைச் சேர்ந்த (அ) அவருடைய சிஷ்யரான ‘காம்போஜ
அவுபமன்யு’ என்பவர் சாம வேதத்தின் வம்ச ப்ரஹ்மானத்தில் குறிப்பிடப் படுகிறார். [பொதுவாக ரிக் - சாம வேதங்களில்
பெரும்பாலான சூக்தங்களும், கர்மானுஷ்டங்களில் வேறுபாடு இல்லை; ஆனால் உச்சரிப்பு
சுர பேதங்கள் அதிகம் என்று கேள்விபட்டது நினைவுக்கு வருகிறது]
அவுபமன்யு, பெரிய இலக்கண சூக்தர் என்றும் நிகண்டு-ம் எழுதியுள்ளார் என்றும் கூறுவர்.
அக்காலத்தில் சாதாரணமாக ஒரே ஆசிரியரிடம் தான் கல்வி பயில்வர். ஆனால், அனந்தஜர் என்பவர்
முதலில் சாம்ப முனிவரிடம் கல்வி பயின்று பின் அவுபமன்யு-விடம் கல்வி பயின்றதாக வம்ச
ப்ரஹ்மானம் கூறுகிறது.
காம்போஜர்கள் ஆரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறுப்பவர்கள் பதஞ்சலியின்
மஹாபாஷ்யத்தில் “ஷவதி” (பொருள் – செல்) என்ற வினைச்சொல் காம்போஜத்தில் உபயோகப் படுகிறது;
ஆனால், அது ஸம்ஸ்க்ருதத்தில் மாறுதல் என்ற பொருளில் மிகக் குறைவாக உபயோகப் படுகிறது”
என்று கூறுவதைக் குறிப்பிடுகின்றனர். இந்த பொருள் வேறுபாடு வடமொழி இலக்கண நுலான யாசகரின் ’நிருக்த(ம்)’-த்திலும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த வார்த்தை (ஷவதி) இரானியர்களின் பொது உபயோகத்தில் இருப்பதையும் குறிப்பிடுகின்றனர்.
ஆனால், யாசகரின் நிருக்தத்தில் பல இடங்களில் அவுபமன்யு மேற்கோள் காட்டப்படுகிறார்.
இதிலிருந்து காம்போஜர்களின் வடமொழி அறிவு இருந்துள்ளது என்பது புலனாகிறது.
பொதுவாக, இந்த பகுதி மக்கள் (காம்போஜம்,
மத்ரா, காந்தாரம் போன்றவை) ‘பஹாலிகா’ (அதாவது வேற்றாள் அல்லது வெளி ஆள்) என்று ராமாயண-மஹாபாரதங்களில்
குறிப்பிடப்படுகின்றன.
குறிப்பாக, போதாயனரின் தர்ம சாஸ்த்திரத்தில் காம்போஜர்கள் மிலேச்சர்கள் தஸ்யூகள்
சூத்திரர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறார்கள்
மஹாபாரதப் போரில், மத்ர தேச மன்னன் சல்லியனால் சூதப் புத்திரன் என்று இகழப்படும்
கர்ணன், திரும்ப அவனை பஹாலிகா என்றும் மிலேச்சர்கள் என்றும் திரும்ப இகழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் இந்த மறுப்பாளர்கள் தங்கள் வாதத்தில் குறிப்பிடுகிறார்கள்.
பொதுவாக ஆரியவர்தம் அல்லது வேதகால ஆரியர்களின் இருப்பிடம் என்பது சப்த-சிந்துவிற்கும்
யமுனைக்கும் இடைப்பட்ட பகுதி என்று புராண இதிகாசங்களில் கூறப்படுகிறது; இது பெரும்பாலான
வரலாற்று ஆசிரியர்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. எனவே சில வரலாற்று ஆசிரியர்கள்,
தொடர்ந்த எல்லைப் பகுதி படையெடுப்புகளாலும் க்ரேக்க இராணியத் தொடர்பாலும் கிழக்கில்
இருந்த ஆரியர்கள் போலல்லாமல் இவர்கள் வேதநெறிமுறைகளில்
இருந்து விலகியிருக்கலாம்; எனவே, இவர்கள் கங்கைப் பகுதி ஆரியர்களால் ”மிலேச்சர்கள்”
என்று இகழப் பட்டிருக்கலாம், என்று கருதுகிறார்கள்.
ஆனால், இதே மஹாபாரதத்தில், பீஷ்ம பர்வத்திலும், இந்நாட்டு அரசன் (சுதக்ஷிண
காம்போஜன்) தன் 6000 படை வீரர்களுடன் போரிட்டதைக் கூறும் பொழுது ’வேத ஒழுக்கத்தில்
சிறந்த’ என்று குறிப்பிடப் படுகிறான். 15-ம் நாள் போரில் அர்ஜுனன் அம்பால் சுதக்ஷிணன்
வீழ்ந்தது மேருமலையே வீழ்ந்தது என்று குறிப்பிடப் படுகிறது. சுதக்ஷிணனின் தம்பி பரபக்ஷ
காம்போஜன் 17-ம் நாள் போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டான். அதே போல போருக்கு முன் பீஷ்மர்
அணிவகுப்பில் கர்ணனைத் தவிர்த்து மற்றவர்களை வரிசைப் படுத்தும் பொழுது மகாரதர்களின்
வரிசையில் சுதக்ஷிணளையும் குறிப்பிடுகிறார். யவனர்கள் ஷாகர்கள் காம்போஜர்களின் அணியில்
ஒன்றிணைணந்து போரிட்டதாகக் குறிப்பிடுகிறது. சபா பர்வம் காமத காம்போஜன், அர்ஜுனனின்
காண்டவ ப்ரஸ்த வெற்றி விழாவில் கலந்து கொண்டதாகக்
கூறுகிறது. கர்ணன் திக் விஜயத்தின் போது காம்போஜனுடன் ராஜபுரத்தில் (தற்போதைய ரஜோரி
(காஷ்மீர்)) போரிட்டதாகவும் குறிப்புகள் உள்ளன. ஆனால், இறுதி போரின் போது சுதக்ஷிணனே
துரியோதனன் பக்கம் போரிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. சுதக்ஷிணன், காமத காம்போஜனின்
மகனாக இருக்கலாம் அல்லது கர்ணனால் காமத காம்போஜன் நீக்கப்பட்டு அதன்பின் அரசனாக நியமிக்கப்
பட்டிருக்கலாம்; இது பற்றிய குறிப்புக்கள் எதுவும் இல்லை.
ஆனால், பரசுராமரால் வதம் செய்யப்பட்ட கார்த்தவீர்யார்ஜுணன் மற்றும் 21 தலைமுறை
ஷத்ரியர்கள் காம்போஜர்கள் என்று சில இடங்களில் குறிப்பிடப்படுவதும் உண்டு. கார்த்தவீர்யார்ஜுணன்
இருந்த்தாக்க் கருதப்படும் இடம் இன்றைய கொங்கணம் மற்றும் மராட்டிய தேசம்.
அதேபோல, அக்னி புராணம் காம்போஜ தேசம் என்று குஜராத்தின் தென்பகுதியைக் குறிப்பிடுகிறது.
ஆனால், அக்னி புராணம் குப்தர்களின் காலத்திற்கும் பின்னர் (குப்தர்காலத்தவர்களான சிஷ்ருஷர்
எழுதிய ஆயுர்வேதக் குறிப்புகள், தன்வந்த்ரியின் மருத்துவகுறிப்புகள் அக்னி புராணத்தில் இடம் பெறுவதால்) கி.பி.8-11 ஆம்
நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கருதுகிறார்கள்.
காம்போஜர்கள் இடம் பெயர்ந்த பொழுது 8-11 ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதியில் இருந்திருக்கலாம்.
காம்போஜர்கள் பிற்காலத்தில் அந்நிய படையெடுப்புகளாலும் சீன வழியாக (திபெத்
பர்மிய குறிப்புகள்) அல்லது குஜராத், தமிழகம் (தில்லை கல்வெட்டுக் குறிப்புகள்) இலங்கை
(மகாவம்ச குறிப்புகள்) வழியாகவும் இந்தோனேசியா சென்றிருக்கலாம். கம்போடிய அரச இனத்தவர்கள்
தாங்கள் கௌண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.
வசிஷ்டரும் அகத்தியரும் சகோதரர்கள். இவர்களில் வசிஷ்டரின் புதல்வர்கள் கௌண்டின்யரும்
இந்திர-பிரமாதியும். இந்திர-பிரமாதியின் மகன் வசு முனிவர். வசுமுனிவரின் மகன் தான்
ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் உபமன்யு என்றும் சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
விஸ்வாமித்திரர் (கௌசிகராக இருந்த பொழுது) வசிஷ்டரிடமிருந்து காமதேனுவைக் கவர
வந்தபோது காமதேனுவிலிருந்து வசிஷ்டருக்கு உதவியாக வந்து போரிட்டவர்கள் காம்போஜர்கள்
என்று வால்மிகி ராமயணக் குறிப்புகள் கூறுகின்றன. வசிஷ்டரின் மகன் கௌண்டின்யர் என்பதால்
அவர் வம்சத்தைச் காம்போஜர்கள் ஏற்றிருக்கலாம். அல்லது, அவர்களின் (காமதேனுவிலிருந்து) தோற்றம் ஒரு உருவகமாகவே எடுத்துக் கொண்டால், காம்போஜர்கள்
கௌண்டின்யரின் வம்சமாக அல்லது கௌண்டின்யர் அவர்ளுக்கு ராஜகுருவாக இருந்து பின்னர்,
அந்த குருவின் பெயராலும் கோத்திரங்கள் ஏற்பட்டிருக்கலாம். வர்ண வேறுபாடுகள்
அச்சமயத்தில் தொழில் வழியாக (குலவழியாக பின்பு மாறியது) இருந்ததால் சிலர் பிராமணர்களாகவும்
சிலர் க்ஷத்ரியர்களாகவும் மாறியிருக்க* வாய்ப்புள்ளது.
[* H.A.Rose எழுதிய Glossary of
Tribes and Castes of Punjab and North-West Province என்ற புத்தகத்தில் காம்போஜர்களில்
இரு பிரிவுகளாக 52 மற்றும் 84 வம்சங்கள் (1880 சென்ஸஸ் படி) இருந்ததாகவும் அதில் பல
பிராமணர்-க்ஷத்ரிய-ராஜபுத்திர கோத்ரங்களுடனும்
ஒத்து இருப்பதாகக் கூறுகிறார்.]
ரதசப்தமி விளக்கக் கதையிலும் காம்போஜ மன்னனின் பெயர்
குறிப்பிடப்படுகிறது. [யஷோவர்மன் என்ற காம்போஜ அரசன் நீண்ட காலமாக குழந்தையில்லாமல்
இருந்து இறைவன் அருளால் மகவு ஈன்றதாகவும் ஆனால் அக்குழந்தை நோய் வாய் பட்டிருந்ததாகவும்,
அப்பொழுது வினித முனிவர் கூறிய படி ரதசப்தமி விரதமிருந்து சூரியனை வழிபட்டதாகக் கதை]
ஆக, சில வரலாற்று ஆசிரியர்கள் இதை இந்தியாவின் பகுதியாக ஏற்க மறுத்தாலும்,
புராண இதிகாசங்களில் இது இந்திய தேசமாகவேக் கருதப்பட்டு வந்துள்ளது.
இடையில் வங்கத்திலும் காம்போஜர்கள் ஆண்டிருக்கிறார்கள். [வங்க மன்னன் தர்மபால
காம்போஜனுக்கு உதவியாக இராஜேந்திர சோழன் படையனுப்பி வென்று ‘கங்கை கொண்ட சோழன்’ பட்டப்
பெயர் கிட்டியது வரலாறு].
பொதுவாக, புராணங்களில் உயர்சாதிக் குதிரைகள் என்றால் அவை காம்போஜ குதிரைகள்
என்றே குறிப்பிடப்படுகின்றன. (சாண்டில்யனின் அரேபியக் குதிரைகள் நினைவுக்கு வந்து அரேபியத்
தொடர்பிற்கு வலு சேர்க்கிறதா?). காம்போஜர்களும் அஸ்வகர்கள் (குதிரைவீரர்கள்) என்றே
குறிப்பிடப் படுகிறார்கள். அதே போல் பட்டுக்கும் காம்போஜம்
பிரசித்தி பெற்றது. கிருஷ்ணரின் ரதம், காம்போஜ குதிரைகள் பூட்டப்பட்டு அதன் பட்டு
துணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக வர்ணிக்கப் படுகிறது.
பௌத்தர்கள், வட இந்தியாவில் மஹாபாதங்கள் (ராஜபாட்டைகள்)
என்று 16 நாடுகளைக் கூறுகிறார்கள். அதில் காம்போஜம் செல்லும் பாதை உத்தர
(வடக்கு) மஹாபாதமாகக் குறிப்பிடப் படுகிறது.
காம்போஜம் - ஜம்! ஜம்!
பதிலளிநீக்குநன்றிகள் பத்து.
நீக்குஅருமை நண்பரே... மந்திரங்களில் ஜம்பூத்வீபே என்று வருவதற்குப் பின்னாலிருக்கும பொருளிலிருந்து பல நல்ல தகவல்களை அறிய முடிந்தது. தொடரட்டும் உங்களின் இந்த நல்ல முயற்சி. என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.
நீக்கு’ஜம்பூ பலம்’ என்றால் நாவல் பழம். பழந்தமிழிலக்கியங்களில் இந்தியாவை நாவலந்தீவு என்று குறிப்பிடுவார்கள்.
வியப்பாக இருக்கிறது!!!!!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றிகள்.
நீக்குநல்ல பகிர்வு சீனு. புதிய விஷயங்கள் அறிந்துகொள்ள முடிந்தது....
பதிலளிநீக்குநன்றிகள் வெங்கட்.
நீக்குLot of new things to learn from you !
பதிலளிநீக்குஉங்களைப் போன்றோரிடமிருந்து நான் தான் நிறைய கற்று வரும் நிலையில் தங்களின் இது போன்ற ஊக்குவிப்புகள் என்னை வளப்படுத்திக் கொள்ள உதவும். நன்றிகள்.
நீக்கு