முந்தைய பகுதிகள் காம்போஜம், தராடம், காந்தாரம், காச்மீரம், பஹாலிகா, மத்ர தேசம், த்ரிகர்தம், கைகேயம், ஸிந்துதேசம் மற்றும் ஸௌவீர தேசம்.
நிஷாதம்
மற்ற தேசங்களைப் போலல்லாமல்
நிஷாதம் என்பது தனி தேசமா என்பதே ஒரு கேள்வி தான். மஹாபாரதத்தில் நிஷாதம் பல
இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் இது எந்தப் பகுதியில் இருக்கிறது என்பது
சரியாகக் குறிப்பிடப்பட்டதாகவேத் தெரியவில்லை.
நிஷாதர்கள் என்பவர்கள் பொதுவாக
மலைபகுதிகளில் இருக்கும் ஆதிவாசி மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு நாளடைவில் ஆரவல்லி
மலைத்தொடர்கள் இருக்கும் இராஜஸ்தான் பகுதியில் அவர்கள் வாழ்ந்த இந்தப் பகுதி நிஷாத
தேசமாகக் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.
புராணங்களில் ஸ்வயம்பாஹு மனுவும்
அவரது மகன் உத்தமபாதனுக்குப் பிறந்த துருவனின் வம்சமும்
வரிசைப் படுத்தப் படுகின்றன. அந்த வரிசையில் சாஷுச மனுவிற்கும் நத்வதாவிற்கும்
பிறந்த 10 மகன்கள் வரிசைப் படுத்தப்படுகின்றனர். அதில் முதல் மகன் ஊரு-விற்கும்
அவன் மனைவி ஆக்ஞேயிக்கும் மகனாகப் பிறந்தவர் அறுவர். அந்த ஆறு பேரில் முதல் மகன்
அங்கனுக்கும் சுநிதா-விற்கும் மகனாகப் பிறந்தவன் வேணி. இந்த வேணியின் கதை
ருக்வேதத்திலும் குறிப்பிடப்படுகிறது.
வேணி-யின் காலத்தில் நற்காரியங்கள்
நடக்காமல் பூதேவி தன் சிறப்புகள் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு பாதாளத்தில்
அடைக்கலம் புகுந்தாள். சப்தரிஷிகள் வேள்வி செய்ய வேணியை அவ்வேள்வித் தீயில்
தன்னையே அவிர்பாகமாக அளித்தான். வேணியின் உடம்பிலிருந்த பழைய எண்ணங்கள் ஒரு
உருவமாக மாறி வெளியேறியது. அதனை அத்ரி முனிவர் ‘நி ஷத்’ (இங்கே அமர்க) என்று
கட்டளையிட்டு அங்கேயே இருக்கச் செய்தார் என்றும், பின்னர் அது நிஷாதன் என்ற
பெயரிலேயே அழைக்கப்பட்டதாகவும் கூறுகிறது. மீதியிருந்த வேணியின் உடலிருந்து
தோன்றியவன் ‘ப்ரித்வி’. [ப்ர்த்வி-யின் கதையை முன்னரே இங்கே எழுதியுள்ளேன்].
தத்துவ ரீதியாக இது பனியுகத்திற்க்குப் (ice age) பிறகு வேட்டுவத் தொழிலிலிருந்து
விவசாயத் தொழிலுக்கு மாறியதைக் குறிக்கும் என்று கூறுகிறார்கள். இதிலிருந்து
நிஷாதர் என்பது வேட்டுவரைக் குறிக்கும் என்பது புலப்படுகிறது.
[பாகவத புராணம், அக்னிபுராணம்
ஹரிவம்ச புராணம் போன்ற வெவ்வேறு புராணங்களில் இந்த கதை வெவ்வேறு விதமாகக்
குறிப்படுகிறது]
இராமாயணத்தில் வரும் குகன்
நிஷாதனாகவேக் குறிப்பிடப்படுகிறான். ஆனால் அவன் இருந்த பகுதி ஆரவல்லி மலைப்பகுதி
அல்ல; அது விந்திய மலையின் வடக்குப் பகுதியே. எனவே வனப்பகுதி/மலைப்பகுதி
வேட்டுவர்கள் நிஷாதர்களாகவே குறிக்கப்படுகின்றனர். இராமாயணத்தில் சபரி-யும்
நிஷாதப் பெண்ணாகவே குறிக்கப்படுகிறாள்.
நிஷாதர்களில் முக்கிய இனமாகக்
குறிக்கப்படுவர்கள் ’பில்’ என்ற இனத்தவர்கள். தற்போதைய இராஜஸ்தானின் பில்வாரா
மாவட்டம் இவர்கள் வாழ்ந்த பகுதியே. [இராமாயண மஹாபாரதங்கள் இந்தியாவின் பல்வேறு
பகுதிகளில் பல்வேறு வழக்கில் சொல்லப்படுவது நாம் அனைவரும் அறிந்த்தே. இந்த பில்
இனத்தவரின் ராமாயண மஹாபாரத செவிவழிக் கதைகள் மிகவும் பிரபலமானவை. பின் வேறு
சமயத்தில் அந்தக் கதைகளை எழுத முயற்சிக்கிறேன்]. சில இடங்களில் இந்த பில்
இனத்தவர்கள் துங்கார்-பில் என்று இவர்களைக் குறிப்பர். இதில் துங்கார்புர் என்ற
இடமும் இராஜஸ்தானில் தான் உள்ளது. இதுவும் ஆரவல்லி மலைகளை ஒட்டியே உள்ளது
(BCCI-இன் முன்னாள் தலைவர் ராஜ்சிங் துங்கார்புர் இந்த ராஜவம்சத்தைச் சேர்ந்தவரே.
ஆனால் அவர் பில் இனத்தவர் அல்லர். பின்னர் பில் இனத்தவரிடமிருந்து இவரது
முன்னோர்கள் இந்த இடத்தைக் கைப்பற்றினர்)
மஹாபாரதத்தைப் பொறுத்தவரை இரண்டு
முக்கிய நிஷாதர்கள் வருகிறார்கள். அவர்கள் இருவருமே இராஜஸ்தானின் ஆரவல்லி
பகுதையையேச் சேர்ந்தவர்கள். இருவருமே நமக்கு நன்கு அறிமுகமானவர்கள்.
முதலில் நளன். இவனைப் பற்றி நாம்
’வெண்பாவிற்கு ஒரு புகழேந்தி’ என்று சிறப்பித்துக் கூறக் காரணமான நளவெண்பா-வில்
படித்துள்ளோம். இவன் தந்தையின் பெயர் வீரசேனன். அன்னம் தூதுவிட தமயந்தியைச்
சுயம்வரத்தில் அக்னி, இந்திரன், சோமன், வாயு ஆகிய நான்கு தேவர்களின்
குறுக்கீட்டையும் மீறிக் கைப்பிடித்தவன், தன் தமையன் புஷ்கரனிடம் (அவனுக்கு கலி
உதவியதால்) சூதாட்டத்தில் தோல்வியுற, புஷ்கரன் நாட்டிற்கு பதிலாக மீண்டும்
தமயந்தியை வைத்து சூதாட அழைக்க அதை மறுத்து கானகம் சென்றான். தமயந்தியை விதர்ப
தேசத்திற்குச் சென்று அவள் தந்தையிடம் இருக்கும் படிக் கூற அவள் மறுத்து அவனுடனேயே
சென்றாள். அங்கும் விதி அவனைப் பின் தொடர அடித்தப் புழுதிப் புயலில் அவன்
துணிகளும் பறந்துவிட தமயந்தியின் புடவையின் மேல் பகுதியைச் சுற்றிக் கொண்டான். தன்
துரதிர்ஷ்டம் தன் மனைவியையும் வாட்டுவதை அறிந்து/உணர்ந்து அவள் புடவையின் மேல்
பகுதியைக் கிழித்துக் கொண்டு அவளை அங்கேயே விட்டுச் சென்றான். காலையில் கணவனைக்
காணாத தமயந்தி நீண்ட போராட்டங்களுக்குப் பின் தன் தந்தையை அடைந்தாள்.
தமயந்தியைப் பிரிந்த நளன் நீண்டப்
போராட்டத்துடன் காட்டில் அளைந்து கொண்டிருக்கும் பொழுது தீயில் மாட்டிக் கொண்ட ஒரு
பாம்பிற்கு நளன் உதவ அந்தப் பாம்பு அவனைக் கடித்தது. அப்பாம்பின் விஷத்தால் அவன்
நெடிய உடம்பு குறுகி முகம் கருத்துப்
பொலிவிழந்து விகாரமாக மாறியது. பின்னர் அப்பாம்பு தான் ஜனமேஜயன் நாகங்களை அழிக்க
ஏற்படுத்திய வேள்வித் தீயில் தான்
மாட்டிக் கொண்ட கார்கோடகன் என்றும் தன் விஷம் நளனைக் காப்பாற்றும் என்றும் அவன் விரும்பும்
பொழுது விஷத்தை வெளியேற்றிக் கொண்டு மீண்டும் பழைய உருவை அடையலாம் என்றுக் கூறி
அவனை ரங்கராஜன் ரிதுபர்ணன் என்ற அரசனிடம் சென்று சேர்ந்து அவன் நம்பிக்கைக்குப் பாத்திரம்
ஆகும் படியும் அவனிடமிருந்து சூதாட்டத்தின் சூட்சமங்களை அறிந்து கொள்ளும் படியும்
கூறியது. அவ்வாறே, ரங்கராஜ ரிதுபர்ணனின் சமையலறையில் வேளைக்குச் சேர்ந்து படிப்படியாக
அவனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகினான்.
கணவன் வேறு நாட்டில் தக்கச்
சந்தர்பத்திற்காகக் காத்திருப்பதை உணர்ந்த தமயந்தி அவனைக் கண்டுபிடிக்க பல்வேறு தேசங்களுக்கும்
ஒற்றர்களை அனுப்பி அவர்களிடம் ‘மனைவியைக் கானகத்தில் தவிக்க விட்டுச் செல்பவன்
ஆண்மகனா?’ என்ற கேள்விக்கு விடை பெற்று வருமாறு அனுப்பி வைத்தாள். தக்க விடை
எங்கும் வராத நிலையில் ‘தன் கஷ்டம் தன் மனைவியைத் தாக்காமல் அவள் தந்தையிடம் செல்ல
வழி செய்பவன் தான் ஆண்மகன்’ என்ற பதில் ரங்கராஜ ரிதுபர்ணன்னின் நாட்டிலிருந்து ஒருவன்
கூறியதாகவும் ஆனால் அவன் உருவத்திற்கும் நளனின் உருவத்திற்கும் பொருந்தவில்லை என்ற
தகவல் கிட்டியது.
நிலைமையை ஊகித்த தமயந்தி தன்
தந்தையிடம் மீண்டும் தனக்கு சுயம்வரம் நடத்த கூறி அதற்கான நாளை ரங்கராஜன்
ரிதுபர்ணன் நாட்டிலிருந்து தன் நாட்டை அடைய குறைந்த பட்சம் தேவையான நாளிலேயே சுயம்வரத்தை
வைக்க ரங்கராஜனுக்கு நளன் தேரோட்டி வந்தான். வரும் வழியில் ரங்கராஜனின் மேலங்கி
கீழே விழ அதை எடுக்கச் சொல்ல அதற்கு நளன் குதிரைக் குளம்படியைக் கணித்து அதைத்
தாண்டி வந்த தூரம் எத்தனை என கணித்துக் கூறினான். பின் காற்றில் மரத்திலிருந்து
சருகள் விழ மொத்தம் எத்தனைச் சருகள் விழுந்ததென்றும் கூறினான். இதைக் கணிக்கும்
முறைகளை கற்பிக்கும் படி அவன் நளனிடம் கேட்க பதிலுக்கு நளனுக்கு சூதாட்டத்தின்
நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தான். இரவு தமயந்தி விருந்தினர் மாளிகையில்
ரங்கராஜ ரிதுபர்ணனின் உணவுகளை வரவழைத்து உண்ண அதில் நளனின் கைப்பக்குவத்தைக் கண்டு நளன்
அங்கிருப்பதை உணர்ந்து அவனைத் தேடிச் சென்றாள்.
அதே நேரத்தில் நளன் தன்
உடம்பிலிருந்த விஷத்தை கக்கி வெளியேற்றி மீண்டும் பழைய உருவத்தை அடைந்தான்.
தமயந்தியும் நளனும் ரங்கராஜ ரிதுபர்ணனுக்கும் உண்மையை விளக்கி அவனைச் சமாதானப்படுத்தி
அனுப்பி வைத்தனர். பின் மீண்டும் தன் தமையன் புஷ்கரனை சூதாட்டத்திற்கு அழைக்க,
இம்முறை கலியின் உதவியில்லாத புஷ்கரன் தோல்வியுற்றான். அவனை மன்னித்து அவனுக்கு
தன் நாட்டில் ஒரு பகுதியையும் அளித்தான். இது தான் நளனின் கதை.
மற்றொரு நிஷாதன் ஏகலவ்யன்.
ஏகலவ்யன் என்ற பெயரில் இருவர் இருக்கிறார்கள். முதலாமவன் ஹிரண்யதனுஸ் என்ற நிஷாத
அரசனின் மகன். பில்வாரா பகுதி பில்-கள் தங்களை ஏகலவ்யனின் வாரிசுகளாகக்
கூறுகிறார்கள். துரோணரிடம் அர்ஜுனனுக்காகக் கட்டை விரலை இழந்த ஏகலவ்யன்
கிருஷ்ணருடன் ஏற்பட்டப் போரில் இறந்தான். நிஷாதர்கள் பாரதப் போரில் கௌரவர்
சார்பில் போரிட்டனர்.
மற்றொரு ஏகலவ்யன் பாரதப் போருக்குப்
பிறகு அஸ்வமேத யாகம் செய்ய வந்த அர்ஜுனனுடன் போரிட்டுத் தோல்வியுற்று தெற்கு
நோக்கி நகர்ந்து சென்று விட்டதாகக் குறிப்பிடப்படுகிறான்.
இவர்களைத் தவிர கேதுமதன் என்ற
நிஷாத மன்னனும் பாரதப் போரில் பங்கு பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் இவன்
மேற்கூறிய நிஷாதர்களுடன் கூறப்படாமல் கலிங்கப்படையுடன் சேர்த்துக் கூறப்படுகிறான்.
இவற்றைத் தவிர ஆந்திரம் கலிங்கம் ஆகிய இடங்களிலும் சில நிஷாத தேசங்கள்
குறிப்பிடப்படுகின்றன. கேதுமதன் இந்தப் பகுதியைச் சேர்ந்தவனாக இருக்கலாம்.
ஆக, பெரும்பாலும் இவை மலைவாழ்,
வனவாழ் வேட்டுவர்களின் நாட்டைக் குறித்திருக்கக் கூடும் என்றேத் தோன்றுகிறது.
பல தகவல்கள் புதிது...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றிகள் தனபாலன்!
நீக்குசிறப்பான தொகுப்பு. நளன் கதையை அழகாகக் கொடுத்தீர்கள். வாழ்க.
பதிலளிநீக்கு(நிஷாதம் என்றதும் சீனு கச்சேரி வாசிக்கப் போகிறாரோ என்று நினைத்தேன்!)
நன்றிகள் பத்து!
நீக்கு[இது மாதிரி புரளி கிளப்பி, என் வலைப்பூவைப் படிக்கவரும் நாலு பேரையும் கூடத் தடுத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே!]
பஹாலிகா - பாஹ்லிக
பதிலளிநீக்குஸ்வயம்பாஹு மனு- ஸ்வாயம்புவ மநு[ஸ்வயம்பூ ஸ்வாயம்புவ என ஆகிறது]
சாஷுச மனு - சாக்ஷுஷ மநு [சக்ஷுஸ் - கண்]
ரங்கராஜன் - இப்பெயரை எங்கிருந்து பிடித்தீர் ?
அம்மன்னனின் பெயர் ரிதுபர்ணன், தமிழில் இருதுபன்னன்
ஆகும். புகழேந்திப் புலவர் அப்பெயரைக் குறிப்பிட்டுள்ளார்
தேவ்
வருகைக்கு நன்றிகள் தேவராஜன்!
நீக்குஸம்ஸ்கிருத பெயர் விளக்கங்களுக்கு நன்றிகள்.
அக்னி புராண ஆங்கில புத்தகத்தில் (நளன் கதையில்) அரசனின் பெயர் ரங்கராஜன் என்று தான் போட்டிருந்தது அதை அப்படியே எழுதிவிட்டேன். நளவெண்பாவைப் பார்க்க மற்ந்து விட்டேன்.
தவறுகளைச் சுட்டியமைக்கு நன்றிகள்