சென்ற மாதம் (ஜூலை 24) உச்ச நீதி
மன்றம் புலிகள் சரணாலயங்களில் புலிகள் வசிக்கும் மையப் பகுதிகளில் (core
area) சுற்றுலா நடவடிக்கைகள் தடை விதிப்பட்டன.
தடை விதிக்கப்பட்டதிலிருந்தே இது பெரும் விவாததிற்குள்ளாகியது.
சுற்றுச்சூழல் ஆர்வலர் அஜய் துபே
என்பவர், புலிகள் வசிக்கும் மையப் பகுதிகளையும் (core area) இணைப்பு பகுதிகளையும் (buffer area) சுற்றுப்பகுதிகளையும் (peripheral
area) அறிவிக்கக் கோரித் தொடுத்த மனுவைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் சென்ற ஏப்ரல் 3-ஆம் தேதி ஜார்கண்ட், ராஜஸ்தான்,
ஆந்திரா, அருணாசலப்பிரதேசம், உத்திரப்பிரதேசம்,
தமிழ்நாடு, பிஹார், கர்நாடகம், மஹாராஷ்டிர மாநிலங்களை அதற்கான
அதிகாரப்பூர்வ ஆணைகளை வெளியிடக் கூறியது. ஜூலை 24 வரை, ராஜஸ்தானையும்,
அருணாசலப் பிரதேசத்தையும் தவிர வேறு மாநிலங்கள் இதற்கான அறிவிப்பையோ இதை எதிர்த்து
பதில் மனுவோ தாக்கல் செய்யவில்லை. மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின்
கட்டுப்பாட்டில் இருக்கும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (National
Tiger Conservation Authority), சூழல் சுற்றுலாவிற்கான (ecotourism) விதிகளை வகுத்து அதை
நீதிமன்றத்தில் சமர்பித்தது. அறிவிப்புகளை வெளியிடாமலும் எதிர்மனு தாக்கல் செய்யாத
மாநிலங்களுக்கு ரூ.10000/- அபராதம் விதித்த நீதிமன்றம் அவர்களுக்கு 3 மாதத் தவணையை
கொடுத்து அதற்குள் மனுவோ அறிவிப்போ செய்யாவிடில் மேலும் ரூ.50000/- அபராதமும் நீதி
மன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுப்பதாகக் கூறியுள்ளது. NCTA-வின் விதிமுறைகள்
இறுதி முறையீட்டின் பொழுது விவாதித்த பின் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படும்
என்றும் அதுவரை மையப்பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட
வேண்டும் என்றும் ஆணையிட்டது.
இதைத் தொடர்ந்து மாநில அரசுகள்,
சுற்றுலாத்துறைப் பெருமுதலாளிகளின் அழுத்தத்தால் இதைப் பெருமளவில் எதிர்த்து
வருகின்றன. சுற்றுச்சூழல் ஆர்வலர்களைப் பொறுத்தவரை அவர்கள் இரு பிரிவாக பிரிந்து,
ஆதரித்தும் எதிர்த்தும் தொடர்ந்து கருத்து பரிமாறி வருகிறார்கள். இவற்றில்
சிலவற்றில் உண்மைகளும் சில சற்று உண்மைக்குப் புறம்பாகக் கற்பனையாகவும்
இருக்கின்றன. இந்தக் கருத்துக்களையும், உண்மையில் இந்தத் தடையினால் புலிகளின்
பாதுகாப்பு மேம்படுமா, அவற்றின் எண்ணிக்கை உயருமா என்பதையும் சற்றுப் பார்ப்போம்.
முதலில் இந்தத் தடைகளை
ஆதரிப்பவர்கள் கூறுவதில் மிகவும் முக்கியமானது சுற்றுலா நடவடிக்கைகளால் இந்தப் பகுதிகளின்
நீராதாரங்களும் சூழலும் மாசுபடுவதும் அதனால் புலிகளின் வாழ்வியல் வழக்கங்கள்
மாறுபடுவதால் அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பது கடினம் என்பதே. இக்கூற்றில் ஓரளவு
உண்மை உள்ளது. நம் நாட்டில் வனவிலங்கு சுற்றுலா என்பது புலிகளையே மையமாகக்
கொண்டுள்ளது. தகவல்களின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 50 லட்சம் பேர் இந்திய
காடுகளுக்குச் சுற்றுலா மேற்கொள்கிறார்கள். அதாவது ஒருநாளைக்கு சுமார் 14000 பேர்.
இவர்களுக்கு உதவியாக சுமார் 1000 பேர் (கைடு, உதவியாளர்கள்) தினமும் காடுகளைச்
சுற்றுகிறார்கள். இவர்களுக்கு நீர், உணவு இப்பகுதிகளைச் சுற்றியே கிடைக்கிறது.
[வனப்பகுதிகள் விஸ்தரிபிற்காக இப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட இருப்பவர்கள்
சுமார் 15000 குடும்பங்கள் என்பதை நாம் இங்கே நினைத்துப் பார்க்க வேண்டி
இருக்கிறது]. இவற்றைத் தவிர இவர்கள் இங்கே தங்கியிருக்க விருந்தினர் மாளிகைகளும் ஹோட்டல்களும்
சக்தி தேவைக்காக உபயோகிக்கும் மின்சாரமும் எரிபொருளும் கணக்கில் கொள்ள
வேண்டியிருக்கிறது. இதனாலேயே இப்பகுதிகளின் தனியார் சுற்றுலா மையங்கள் பல விதிகளை
மீறி இப்பகுதிகளின் வளங்களைத் தங்கள் வருமானத்திற்காக உபயோகிக்கின்றன என்பதை
மறுக்க முடியாது.
அதே நேரத்தில் இத்தடையை
எதிர்ப்பவர்கள், 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன விலங்கு (பாதுகாப்பு) சட்டத்தைக்
காட்டுகிறார்கள். இதன்படி, இந்த வனப்பகுதிகளின் நுழைவுக் கட்டணம் இப்பகுதியை
வாழ்வாதாரமாகக் கொண்டவர்களும் இவ்வனப்பகுதி மேம்பாட்டிற்கும் உபயோகப்படுத்தப்
படும் என்பதே. ஆனால், இதைப் பற்றி ஆய்வு செய்பவர்கள், மத்தியபிரதேச மாநிலத்தைத்
தவிர மற்ற மாநிலங்களில் இந்த நுழைவுக் கட்டணமும் அவற்றின் செலவினங்கள் பற்றிய வரவு
செலவு கணக்கும் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
இத்தடையை எதிர்ப்பவர்கள் சுற்றுலா
பயணிகளால் வனபிரதேசங்கள் பாதிக்கப்படும் என்று வனப்பகுதிச் சுற்றுலாவிற்குத் தடை
விதித்தால், பாரம்பரிய இடங்களுக்கும்
சுற்றுலா பயணிகளால் ஆபத்து வரும் அதனால் அவ்விடங்களுக்கும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொன்றாகத் தடை விதித்தால் மொத்த சுற்றுலாத் துறையே பாதிக்கப்படும்
என்கிறார்கள். அவர்களின் இக்கூற்றிலும் ஞாயம் இருக்கிறது. மொத்தமாகத் தடை என்பதை
விட நீதிமன்றம் சில விதிமுறைகளை ஏற்படு்த்தி அவற்றை நெறிமுறைப்படுத்தலாம். அதற்கு,
NCTA-வின் விதிமுறைகள் சிலவற்றை ஏற்கலாம்.
இத்தடையை எதிர்ப்பவர்கள் இந்த
வனப்பகுதி விஸ்தரிப்பால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப் படுவார்கள்; அவர்களுக்கு
வேலை, இருப்பிடம் போன்றவை வழங்குவதில் இருக்கும் சிக்கலைக் காட்டுகிறார்கள். அதே
வேளையில் சுற்றுலா அனுமதிக்கப்பட்டால் அப்பகுதி மக்களை வனமேம்பாடு,
சுற்றுலாத் துறை ஆகியவற்றில் ஈடுபடுத்தலாம் என்றும்
வாதாடு்கிறார்கள். ஆனால், இக்கூற்று பெரும்பாலும் தவறானதே. காரணம், ஆய்வுகளின்
படி, வனப்பகுதிகளில் (காட்டின் 10 கி.மீ. சுற்றளவில்) 1000 பேருக்கு ஒருவர் கூட
சுற்றுலா துறையில் இருப்பதில்லை. சற்று மாறுபாடாக மத்திய பிரதேசத்தின் பாந்தவ்கர்
பகுதியின் 1200 மக்கள் தொகையில் 62%
இந்த சுற்றுலாத் துறையில் இருப்பதாக
தகவல்கள் கூறினாலும் பெரும்பாலானவர்கள் சமையல்காரர்களாகவும், கைடுகளாகவும், வாகன
ஓட்டிகளாகவும், கூலித் தொழிலாளிகளாகவுமோ அல்லது சுயதொழில் செய்பவர்களாகவும்
இருக்கிறார்களே அன்றி வனபாதுகாப்பும் அதனைச் சீரமைப்பதில் உயர் பதவிகளிலோ ஈடுபடுத்தப் படவில்லை என்பது தான் உண்மை. எனவே, இந்த வாதத்தில்
பெயரளவில் சாரம் இருப்பது போல் தோன்றினாலும் செயலளவில் உண்மையில்லை என்று தான்
கூறவேண்டும்.
அடுத்ததாக தடையை எதிர்ப்பவர்கள்
அடுத்ததாகக் கூறுவது வனச் சுற்றுப்பகுதிகளை மேம்படுத்த அப்பகுதி மக்களை வெளியேற்ற
வேண்டியிருப்பதால் அவர்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டியிருக்கும். அந்த இழப்பீடு
அவர்கள் குடியேறும் இடத்தில் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொள்ளவது மற்றும் உடனடி
செலவீனங்களுக்கே செலவு செய்யப்படும். தொடர்ந்து அவர்கள் வாழ்க்கை நடத்த முறைசாரா
(unorganized) வேலைகளையே மேற்கொள்ள வேண்டியிருக்கும். அது சாத்திய
படாத பட்சத்தில் தொடர்ந்து அவர்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டியிருக்கும். அது அவர்களைச் சோம்பேறிகளாகத் தான் ஆக்கி வரவில்லா
செலவீனம் அதிகரிக்கும். ஆனால், அதே நேரம், சுற்றுலாத் துறை
நெறிமுறைப் படுத்தப்பட்டால் இவர்களை அத்துறையில் ஈடுபடுத்தலாம் என்கிறார்கள். இதில் ஓரளவு உண்மை
இருக்கத்தான் செய்கிறது.
மேலும் இத்தடையை எதிர்ப்பவர்கள்
கூறுவது என்னவென்றால் சுற்றுலாத் தடை புலிகளின் பாதுகாப்பிற்கு உதவுவதற்கு
எதிர்மாறாக அதைத் தடுக்கும் என்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம்.
சுற்றுலாத் தடையால் இப்பகுதிகளில் அதிகாரிகளின் கவனிப்பு குறைந்துவிடும் என்பதுடன்
வருவாய் இழப்பினால் புலிகள் பாதுகாப்பிற்கு நிதி ஆதாரங்கள் குறையும் என்றும் கூறுகிறார்கள்.
ஆக முழுத்தடை என்பது புலிகள்
பாதுகாப்பு, வனசீரமைப்பு ஆகியவற்றிர்கானச்
சரியானத் தீர்வு என்று கூற முடியாவிட்டாலும் நிலைமையை இப்படியே விட்டுவிட
முடியாது என்பது தான் உண்மை. சுற்றுலாத் துறைச் சரிசெய்யப்பட்டு அவற்றிர்காண நெறிமுறைகள்
சீரமைக்கப்படுவதுடன் அவை சரியாகச் செயல்முறைப் படுத்துவதுதான் இதற்கானச் சரியானத்
தீர்வாக இருக்கமுடியும். ஆனால், இந்தத் தடை உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு
வரும் வரையிலானத் தற்காலிகமானது என்று
தான் தோன்றுகிறது.
வரும் 27-ஆம் தேதி நீதிமன்றத்தில்
இந்த வழக்கில் தீர்வு கிடைக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.
நீங்கள் பதிவில் போட்டிருக்கும் புகைப்படத்தைப் பார்த்தால் கண்டிப்பாக சுற்றுலாத் தடை சரியே என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குநிலைமை கட்டுமீறிப் போனதால் தான் நீதிமன்றம் இந்தத் (இடைக்கால!) தடையைப் போட்டிருக்கிறது. ஆனால், வைத்தால் குடுமி சரைத்தால் மொட்டை என்ற நிலையும் நல்லதல்ல. பார்ப்போம்.
நீக்குநாம் எந்த கவனிப்பும் செய்ய வேண்டாம். காட்டுக்குள் அனாவசியமாக நுழைந்து அதன் அமைப்பை கலைக்காமல் இருந்தாலே போதுமானது.
பதிலளிநீக்குமுரளி நீங்கள் கூறியது மிகவும் சரி.
நீக்குஇதில் ’அனாவசியமாக’ என்பது மிகவும் முக்கியமான வார்த்தை. ஆனால், சுற்றுலா குறைந்திருக்கும் மழைக்காலங்களில் தான் கள்ளத்தனமாகப் புலி வேட்டை நடத்துபவர்களின் நடமாட்டமும் அதிகம். சில நேரங்களில் அவர்களுடன் காட்டிலாகா அதிகாரிகளும் உடந்தை என்பதையும் பார்க்க வேண்டும். ஒரே அடியாகச் சுற்றுலாவைத் தடை செய்து விட்டாலும் புலிகள் பாதுகாப்பில் சுணக்கம் ஏற்ப்பட்டுவிடும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
வருகைக்கு நன்றிகள்.
சிறப்பான அலசல் சீனு....
பதிலளிநீக்குத.ம. 2
நன்றி வெங்கட்.
நீக்குசிக்கலான பிரச்சனை தான். இரண்டு பக்கமும் நியாயம் இருக்கு தீர்ப்பு என்ன ஆகிறது என பார்ப்போம்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றிகள் மோகன்.
நீக்குபுலிப் பாதுக்காப்பு அவசியம் சார் ... ஆனால் என் போன்ற காடு விரும்பிகளுக்கு இது மாபெரும் ஏமாற்றம்.. எங்கள் ஊர் காடுகளிலும் புலிகள் சரணாலயம் இருப்பதால் கட்டுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
பதிலளிநீக்கு’அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்று கூறுவார்கள். சுற்றுலா என்ற பெயரில் காட்டில் நட்சத்திர விடுதி கட்டி அதை வணிகமயம் ஆவதைத் தடுக்கவும் வேண்டும். எனவே, இந்த முழுத் தடை என்பது தற்காலிகமானது என்று தான் தோன்றுகிறது. கடந்த வாரம் இந்த வழக்கு முறையீட்டிற்கு (hearing) வந்த பொழுது நீதிபதிகளின் கேள்விகளும் வழிகாட்டுதல்களும் இதை நோக்கி இருந்ததாகவேத் தெரிகிறது.
நீக்குசுற்றுலா ஆர்வலர்களின் அபிலாசைகளும் பூர்த்தியாக வேண்டும். அதே நேரம், வனப்பகுதிகளும் அதிக பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது.
பார்ப்போம்....