வியாழன், டிசம்பர் 08, 2011

புறநானூற்றில் சிவன்




சங்கத்தமிழ் பாடல்களில் மிகவும் சிறப்பித்துக் கூறப்படுவது எட்டுத்தொகை நூற்களில் ஒன்றான புறநானூறு. அதன் முதல் பாடல் கடவுள் வாழ்தாகும். இதை எழுதியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். [பெருந்தேவனார் – இயற்பெயர்; தமிழில் பாரதத்தைப் பாடியதால், இவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என வழங்கப்படுகின்றார். பாரத வெண்பா வென்னும் நூல் இவர் பாடிய தென்று கூறுவர்.]

புறநானூறு தவிர, சங்கத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு ஆகியவற்றிற்குக் கடவுள் வாழ்த்துச் செய்யுட்களைப் பாடிச் சேர்த்தவர் இவரே. இவர் பெரும்பாலும் சிவனையும் முருகனையும் பாடியிருக்கின்றார் (எனினும், நற்றிணையில் உள்ள பாட்டு திருமாலைக் குறித்து நிற்பதாகப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரவர்களால் உரைகாணப்பட்டுள்ளது).

இனி பாடலைப் பார்ப்போம் :

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே

கண்ணி
திருமுடிமேற் சூடப்படுங் கண்ணி
[தலையில் சூடப்படுவது கண்ணி என்றும், மார்பில் அணியப்படுவது மாலை ன்றும் வழங்குவது மரபு].
கார் நறுங் கொன்றை
கார்காலத்து மலரும் வாசமிகு கொன்றைப்பூ
காமர் வண்ண மார்பின் தாரும் கொன்றை
அழகிய நிறத்தையுடைய திருமார்பின் மாலையும் கொன்றைப்பூ
ஊர்தி வால் வெள்ளேறு
ஏறப்படுவது தூய வெள்ளை ஆனேறு(காளை)
சிறந்த சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப
மிக்க பெருமைபொருந்திய கொடியும் அந்த காளை என்று சொல்லுவர்
கறை மிடறு அணியலும் அணிந்தன்று
நஞ்சினது கறுப்பு திருமிடற்றை (கழுத்து/கண்டம்) அழகு செய்தலும் செய்தது
அக்கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படும்
அக்கறுப்புத்தான் மறுவாயும் - வானோரையுய்யக் கொண்டமையின் வேதத்தைப் பயிலும் - அந்தணரால் புகழவும் படும்
பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று
பெண்வடிவு ஒருபக்கம் ஆயிற்று
அவ்வுறு தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்
அந்த வடிவுதான் தன்னுள்ளே ஒடுக்கி மறைக்கினும் மறைக்கப்படும்
பிறை நுதல்வண்ணம் ஆகின்று
பிறை திரு நுதற்கு (நெற்றி / முன் தலை) அழகானது
அப்பிறை பதினெண்கணனும் ஏத்தவும் படும்
அப்பிறைதான் பெரியோன் சூடுதலாற் பதினெண்கணங்களாலும் புகழவும்படும்.  

[கின்னரர் கிம்புருடர் விச்சாதரர் கருடர், பொன்னமர் பூதர் புகழியக்கர்- மன்னும், உரகர் சுரர்சாரணர் முனிவர் மேலாம், பரகதியோர் சித்தர் பலர்; காந்தருவர் தாரகைகள் காணாப் பசாசகணம், ஏந்து புகழ் மேய விராக்கதரோ டாய்ந்ததிறற், போகா வியல்புடைய போக புவி யோருடனே, ஆகாச வாசிகளாவார்” என்பவை சிவனின் 18 கணங்கள் என, அடியார்க்கு நல்லார் பழைய வெண்பாக்களால் குறிப்பிடப் படுவதாகப் பழைய உரைகளில் உள்ளது].
எல்லா வுயிர்க்கும் ஏமமாகிய
எவ்வகைப்பட்ட உயிர்களுக்கும் காவலாகிய
நீர் அறவு அறியாக்கரகத்து
நீர் தொலைவறியாக் குண்டிகை (குடம்) ஆகவும்
(கங்கை என்றும் கூறுவர்)
தாழ் சடை
தாழ்ந்த திருச்சடையானும்
பொலிந்த
சிறந்த
அருந்தவத்தோற்க
செய்தற்கரிய தவத்தை யுடையோனுக்கு

இப்பாட்டில் பெருந்தேவனார், சிவனை அருந்தவத்தோன் என்று குறிப்பிட்டு, அவனுக்குக் கண்ணியும் மாலையும் கொன்றை; ஊர்தியும் கொடியும் காளை என்று குறித்து, அவனுடைய கறைமிடறும், பெண்ணுருவாகிய திறனும், தலையிற் சூடிய பிறையும் முறையே அந்தணராலும் பதினெண் கணங்களாலும் புகழவும் ஏத்தவும் படும் எனத் தெரிவித்து, அதனால் நாமும் அவனை வணங்கி வாழ்த்துதல் வேண்டும் என்ற கருத்தை உணர்த்துகிறார்.

இத் திருக்கார்த்திகை நன்னாளில் அச்சிவனை வணங்கி அவன் அருள் பெறுவோம்.


3 கருத்துகள்:

  1. கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்...

    நல்ல பகிர்வு சீனு.

    “எட்டித் தொகை” - எட்டுத் தொகை?

    பதிலளிநீக்கு
  2. தவறைச் சுட்டிக் காட்டியதற்கும் சேர்த்து நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வு. பொருளுடன் பாடல் நன்று.

    பதிலளிநீக்கு