வியாழன், ஆகஸ்ட் 09, 2012

மீரா


கிருஷ்ண பக்தி என்றால் உடனுக்குடன் நம் தமிழர்களுக்கு நினைவுக்கு வரும் பெயர் கோதை. அதே போல் அவருக்குப் பின் வடநாட்டில் ஒரு பெண்மணித் தோன்றினாள் அவள் தான் மீரா.

இந்த மீராவின் கதை தான் என்ன? பார்க்கலாம்...

இந்தியாவின் புகழ் பெற்ற வீர வம்சங்களில் ராஜஸ்தானின் ராஜபுதன வீரர்களுக்கு எப்பொழுதுமே ஒரு தனியிடம் உண்டு. குறிப்பாக முகலாயர்களின் காலத்தில் இந்த ராஜபுதன வீரர்களின் புகழ் மிகவும் உச்சத்தில் இருந்தது.  ஹுமாயூன் மீண்டும் தில்லியைக் கைப்பற்றிய பின் முகலாய சாம்ரஜ்யத்தை நிலைநாட்டி அதை விரிவு படுத்தும் பொறுப்பு அக்பரிடம் வந்த்து. வடமேற்கிலிருந்து வரும் வெளிநாட்டினரைத் தடுப்பதுடன் தெற்கில் தன் பேரரசை விரிவுபடுத்தவும் ராஜபுதனர்களுடன் பெரும்பாலும் இணக்கமாக இருக்கவே அக்பர் விரும்பினார். ஆனாலும், ராஜபுதனர்களுக்குள் இருக்கும் உட்க்கலகத்தினால் சிலர் அக்பருடன் விரோத மனப்பான்மையையே கொண்டிருந்தனர். அவ்வாறு இருந்த ராஜ்யங்களுள் சித்தூர் மேவார் நௌகர் ஆகியவை முக்கியமானவை.

15-ஆம் நூற்றாண்டில் நௌகர் பகுதியில் குர்கியின் ராஜாவாக இருந்தவர் துத்தா ராவ் ராத்தோர்(ட்). இவர் ஜோத்பூரின் ராஜவம்சத்தைச் சேர்ந்தவர். அவருடைய மகன் ரத்தன் சிங்.  ரத்தன் சிங்-இன் மகள் தான் மீராபாய். சிறுவயதிலேயே தந்தையை இழந்த மீராபாய் வளர்ந்தது அவர் தாத்தாவிடம் தான். வீரத்துடன் பக்தியும் இணைந்த துத்தா ராவ்-இன் அரணமனையில் எப்பொழுது பூஜை புனஸ்காரங்களுடன் சாதுக்களின் வரவும் நடந்து கொண்டிருக்கும். அவ்வழியில் அவர் அரண்மனைக்கு அடிக்கடி விஜயம் செய்பவர் சாது ராய்தாஸ் என்று அழைக்கப்படும் ரவிதாஸர்.

சிறுவயதில் ஒரு நாள் அவருக்கு அவர்தாய் மணப்பெண்ணைப் போல் அலங்கரிக்க மீரா அவரிடம் தன்னை மணக்கப் போகும் அந்த  வரன் யார் என்று வினவ, மீராவின் தாய் ராய்தாஸரின் கிரிதாரி கோபால விக்ரகத்தைக் காட்டி இது தான் உன் மாப்பிள்ளை என்று கூறினார். அச்சிலையில் அழகில் மயங்கிய மீராவின் மனதில் அவரது தாயின் இந்த பதில் ஆழமாகப் பதிந்தது. அன்று முதல்  கிரிதாரியையே தன் கணவனாகக் கொண்டாள் மீரா.

பூஜை முடிந்த்தும் ராய்தாஸர் அரண்மனையிலிருந்து கிரிதாரியைத் தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் சென்றுவிடுவார் என்றறிந்த மீரா தன் தோழி லலிதாவும் அவள் தமையன் ஜைய்மால் ஆகியோருடன் சேர்ந்து கிரிதாரியைத் திருடி தன் அறையில் வைத்து மகிழ்ந்தாள். அடுத்த நாள், கிரிதாரி அங்கில்லாததைக் கண்ட ராய்தாஸர் அதைத் தேடி அது மீராவின் அறையில் இருப்பதை அறிந்து அங்கிருந்து எடுத்துச் சென்றார். ஆனால், தன் இருப்பிடம் சென்ற ராய்தாஸர் கிரிதாரிக்குப் பூஜை செய்யும் பொழுது அதன் கண்ணிலிருந்து கண்ணீர் வடிவதைக் கண்டுத் துணுக்குற்றார். மீராவைப் பிரிந்தது தான் கிரிதாரியின் கண்ணீருக்குக் காரணம் என்பதை அறிந்த அவர் கிரிதாரியை மீண்டும் மீராவிடமே கொடுத்துச் சென்றார். மீண்டும் கிரிதாரியை அடைந்த மீரா மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினாள். கிரிதாரியின் கண்ணீரும் வடிந்து அது புதுப்பொலிவு பெற்றது.

மனித மனம் எப்பொழுதும் ஒரு நிலையில் இருப்பதில்லை. இன்று சுகமாகவும் அழகாவும் தெரியும் ஒன்று மறுநாளில் நமக்குச் சங்கடமாகத் தோன்றும். இதற்கு மீராவின் குடும்பத்தாரும் விதிவிலக்கல்ல. கிரிதாரியிடம் மீரா கொண்டிருந்த பக்தியைக் கண்டு ஆரம்பத்தில் மகிழ்ந்த அவள் குடும்பத்தினர் நாளடைவில் அதற்காகவே அவளைக் கடிந்து கொள்ள ஆரம்பித்தனர். தாத்தாவின் கடின மொழிகளைக் கேட்ட மீரா தன் மோதிரத்தில் இருக்கும் வைரத்தை உண்டு தற்கொலைச் செய்துகொள்ள முயன்றாள். ஆனால், அவள் பக்தியை உலகிற்கு உணர்த்தாமல் மீராவை இவ்வுலகிலிருந்து அழைத்துக் கொள்வானா? வைரம் உண்ட அவளும் வைரம் போல ஜொலிக்கலானாள்.

அவள் அழகைக் கேள்வி பட்ட மேவார் அரசனும் துத்தா ராவின் நண்பருமான ராணா சங்கா தன் மகன் போஜராஜனுக்கு மீராவைப் பெண் கேட்டார். முகலாயரைத் தன் விரோதியாகக் கருதும் துத்தாவிற்கு அதே எண்ணம் கொண்ட ராணாவின் இந்த சம்பந்தத்தை இழக்க விரும்பவில்லை. ஆனால், கிரிதாரியை ஏற்கனவே மனதில் மணமுடித்துவிட்ட மீரா நத கிரிதாரியிடமே தான் செய்ய வேண்டியதை முறையிட்டாள். அவள் கனவில் தோன்றிய கிரிதாரி அவளை போஜராஜனை மணமுடிக்கப் பணித்தார்.

போஜராஜனை மணமுடித்தவுடன் அவள் வாழ்வு தனலில் விழுந்த நிலையை அடைந்தது. ஆனால், மீரா புழுவல்ல; புடத்திலிருக்கும்  பொன். அதனால், அவள் புகழ் மேலும் மேலும் வளர்ந்த்து. சித்தூர் வந்த நாள் முதலே அவளுக்குச் சோதனை ஆரம்பித்தது. அவர்கள் குல தெய்வமான துல்ஜா பவானியை (துர்கை) தொழும்படித் தூண்டப்பட்டாள். ஆனால், மீராவோ கிரிதரியைத் தவிர வேறுயாரையும் வணங்க மறுத்துவிட்டாள். இதனால் முதலில் அவளிடம் கடுமையாக நடந்து கொண்ட போஜராஜான் மெல்ல மெல்ல அவள் பக்தியை உணர்ந்து தானும் கிரிதாரியின் பால் ஆட்கொள்ளப்பட்டான். ஆனால், நல்ல விஷயங்கள் நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை. போஜராஜன் சிறிது நாட்களிலேயே (6 வருடங்கள்) முகலாயருடன் ஏற்பட்ட போரில் இறைவனடி எய்தினான்.
அதன் பிறகு ஆட்சிக்கு வந்த போஜராஜனின் சகோதரன் ராணா கும்பா என்ற விக்கிரமாதித்யனும் அவன் சகோதரி உத்தா-வும் ராஜ பரம்பரையைச் சேர்ந்த மீரா சாதுக்களுடன் பகவான் நாமத்தை பாடி , ஆடிக் கொண்டிருப்பதை விரும்பாமல், அவளைத் தீர்த்துக்கட்ட பாலில் விஷத்தைக் கலந்து, அதனை கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்த சரணாம்ருதம் என்று கூறி மீராவிடம் கொடுத்தான். மீரா அந்தப் பாலை அருந்தும் போது அதனுள்ளே இருந்த விஷம் அமிர்தமாக மாறி அவளை ஒன்றும் செய்யாமலிருந்தது. மற்றொரு முறை நல்ல பாம்பை வைத்துள்ள கூடையில் பூமாலையும், சாளக்கிராமமும் இருப்பதாகச் சொல்லி அவளுடைய அறையில் வைத்தான் . மீரா குளித்துவிட்டு அந்தக் கூடையை திறந்து பார்த்தபோது உண்மையாகவே அந்தக் கூடையில் ஒரு பூமாலையும், சாளக்கிராமமும் இருந்தன.

இதனிடையில் மெல்லப் பரவிய மீராவின் புகழ் முகலாய சக்ரவர்த்தி அக்பரையும் அவர் ஆஸ்தான பாடகர் தான்சேனையும் அடைந்தது. தன் வாழ்நாளில் மீரா பாடுவதை ஒரு முறையாவது கேட்டுவிட வேண்டியது தான் தன் லட்சியம் என்ற தான்சேனின் வார்த்தையைக் கேட்ட அக்பரையும் அந்த ஆவல் ஆட்கொண்டது. அவள் கணவனையே கொன்ற தன் நாட்டிற்கு அவள் வரமாடடாள் என்பதை உணர்ந்த அக்பர், தான்சேனுடன் மாறுவேடத்தில்  வந்த அக்பரை மீரா யார் என்று வினவ அவர் தான் பிருந்தாவன(விருந்தாவன்)த்திலிருந்து வருவதாகவும் தன் பெயர் ஹரிதாஸ் (தான்சேனின் குருவின் பெயர்) கூறினார். அக்பரின் வாயிலிருந்து பிருந்தாவனத்தின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் மீராவின் மனம் அதையே நாட ஆரம்பித்தது.

ஒற்றர்களால் அக்பரின் வரவையும் மீரா அவரை வரவேற்று உபசரித்த்தையும் அறிந்த விகிரமாதித்யன் அவளை மேலும் கடிந்து நதியில் வீழ்ந்து உயிர்விடும்படிக் கூறினான். நதியில் வீழ்ந்த மீரா அத்துடன் மேவாருடனான தன் உறவையும் துறந்து நடந்தே பிருந்தாவனம் சென்றாள். அங்கு, ஹரிதாஸைரின் ‘பாங்கே பிஹாரி’-யைக் கண்டு அது தன் கிரிதாரியின் வடிவம் என்பதை உணர்ந்தாள். பிருந்தாவனத்தில் சைதன்யரின் சீடரான ஜீவ்கோஸ்வாமியை சந்திக்க விரும்பினார். ஆனால் ’கோஸ்வாமி பெண்களைச் சந்திக்கமாட்டார்’ என்று அவரின் சீடர்கள் கூற, பிருந்தாவனத்தில் கிரிதாரி மட்டும் தான் ஆண் மற்றவர்கள் அனைவரும் பெண்களே என்று மீரா கூற அது கோஸ்வாமியைச் சென்றடைந்த்து. மீராவின் வார்த்தையில் இருந்த உண்மையையும் பக்தியையும் உணர்ந்த கோஸ்வாமி தானே மீராவைச் சந்தித்து தன் குரு சைதன்யரின் விக்ரகத்தை மீராவிடம் காட்டினார். சைதன்யரைக் கண்ட மீரா, ‘கிருஷ்ணர், குஞ்சவிஹாரி ஆனால் இங்கோ பாஷாண்டியாக இருக்கிறாரே’ என்று கண்ணீர் விட்டுப் பாட ஆரம்பித்தார். மீரா பாடப்பாட அச்சிலையில் சிகை வளர்ந்த்து. சைதன்யர், கிருஷ்ணரின் அம்சம் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.

ப்ருந்தாவனத்தில் மீராவின் புகழ் மேலும் மேலும் வளர்ந்த்து. இடையில் மேவார் மன்ன்ன் விக்ரமாதித்யனும் தன் தவறை உணர்ந்து பிருந்தாவனத்தை அடைந்து அங்கு மீராவைச் சந்தித்து தன் தவறுகளுக்காக வணங்கினான். மீண்டும் மீராவை மேவார் வரும்படி வேண்டினான். மனமிற்ங்கிய மீரா தான் மேவார் வருவதாகவும் ஆனால் தான் கோவிலில் தான் தங்குவேன் என்று கூற, மன்னன் மீராவிற்கெனத் தனி கோவிலைக் கட்டினான். சிலகாலம் அங்கிருந்த மீரா அங்கிருந்து த்வாரகை சென்றார்.  த்வாரகை தான் தன் உலகத்திலிருந்து கிரிதாரியை அடையும் வாயில் என்பதை உணர்ந்த மீரா ’கோகுலாஷ்டமி’-யன்று கிருஷ்ணரை புகழ்ந்து பல பாடல்களைப் பாடினார். அப்படி பாடியாடிக் கொண்டே திடீரென்று கோவிலின் கருவறையில் மீரா நுழைய ஒரு ஒளிக்கீற்று மின்னலாக கோவிலின் கருவறையை மூடியது. மீண்டும் கருவறையைத் திறந்த பொழுது கண்ணனின் சிலையில் மீராவின் ஆடைமட்டுமே இருந்த்து. மீரா கிருஷ்ணனோடு கலந்திருந்தாள்.

நவீன அறிவியல், மீராவும் கோதையும் கிருஷ்ணரிடம் கொண்டது ’Obsession Syndrome' என்று வேறுவேறு பெயர்களைக் கூறினாலும் பக்தி என்றவுடன் இந்த இருவரின் வாழ்க்கைச் சரிதமும் என்றும் நம் மனத்தில் நீங்காமல் இருக்கும் என்பது மட்டும் உறுதி.

12 கருத்துகள்:

 1. ’கோகுலாஷ்டமி’-யன்று கிருஷ்ணரை புகழ்ந்து பல பாடல்களைப் பாடினார். அப்படி பாடியாடிக் கொண்டே திடீரென்று கோவிலின் கருவரையில் மீரா நுழைய ஒரு ஒளிக்கீற்று மின்னலாக கோவிலின் கருவறையை மூடியது.

  ஜன்மாஷ்ட்டமியில் அற்புத பதிவுக்குப் பாராட்டுக்கள்,, வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 2. // மனித மனம் எப்பொழுதும் ஒரு நிலையில் இருப்பதில்லை. இன்று சுகமாகவும் அழகாவும் தெரியும் ஒன்று மறுநாளில் நமக்குச் சங்கடமாகத் தோன்றும்.//

  மிக உண்மை

  மீரா காப்பிய பாத்திரமா? நிஜமாய் வாழ்ந்தாரா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றிகள் மோகன்.

   மீரா ஆண்டாள் போல பூமியில் பிற்ந்து வளர்ந்தவர் தான். வள்ளலார் ஜோதியில் கலந்ததைப் போல இவரும் த்வாரகை க்ருஷ்ணருடன் கலந்ததாகக் கருதப்படுகிறார். பின்னர், சில தொன்மங்கள் மேலதிகமாக அவர் மேல் ஏற்றப்பட்டிருக்கலாம்.

   நீக்கு
 3. The same media which claims to be 'Scientific', porojects film actors and sportsmen as idol for youngsters and when it comes to religion it is termed as Obsession syndrome. What a paradox?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராம்குமார் இது பார்க்கும் பார்வையைப் பொறுத்தது.
   கண்ணதாசன் கூறியது போல்,
   ‘தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
   சிலை என்றால் அது சிலை தான்’

   நாம் எந்தக் கண்ணாடி அணிந்துப் பார்க்கிறோம் என்பதுதான் காட்சியின் வண்ணத்தைத் தீர்மானிக்கும்.

   நீக்கு
 4. Naan kadavul nambika illada pathi solala. Business kaga oru velayum publica rationalist vesham podrada pathidan solren. U have misunderstood. Ivanagluku atheist evlo vo melu, enna they atleast believe in what they say.

  பதிலளிநீக்கு
 5. நம்பினவருக்கு நடராஜா
  நம்பாதவருக்கு எமராஜா
  அவ்வளவுதான்.
  கடவுள் நம்பிக்கையும் அப்படிதான்
  அது அவரவர் மனம் சம்பந்தப்பட்டது .
  கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் நம்பட்டும்
  இல்லாதவர்கள் கட்டுக்கதை என்று தள்ளிவிட்டு போகட்டும் .

  பதிலளிநீக்கு
 6. நம்பினவருக்கு நடராஜா
  நம்பாதவருக்கு எமராஜா
  அவ்வளவுதான்.
  கடவுள் நம்பிக்கையும் அப்படிதான்
  அது அவரவர் மனம் சம்பந்தப்பட்டது .
  கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் நம்பட்டும்
  இல்லாதவர்கள் கட்டுக்கதை என்று தள்ளிவிட்டு போகட்டும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் சரியாகக் கூறியுள்ளீர்கள். அதனால் தான் இரண்டு தரப்பையும் குறிப்பிட்டுள்ளேன்!

   வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

   நீக்கு
  2. இறை நம்பிக்கை என்பது
   ஒரு குழந்தை தன் தாயை
   நம்புவதுபோல இயல்பாக வரவேண்டும்
   திணிக்கும் நம்பிக்கை நிலைக்காது.
   அது மாறிக்கொண்டே போகும்.

   நீக்கு
  3. இறை நம்பிக்கை என்பது
   ஒரு குழந்தை தன் தாயை
   நம்புவதுபோல இயல்பாக வரவேண்டும்
   திணிக்கும் நம்பிக்கை நிலைக்காது.
   அது மாறிக்கொண்டே போகும்.

   நீக்கு