புதன், ஆகஸ்ட் 22, 2012

மதக்கலவரம் in Waiting (அல்லது) inviting மதக்கலவரம்


கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் துவங்கிய கலவரம் அதன் கோரமுகத்தை சில இடங்களில் கலவரமாகவும் வேறு சில இடங்களில் கலவர வதந்தியாகவும் வெவ்வேறு பரிமாணத்துடன் பம்பாய், பெங்களூர், சென்னை என்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் விதவிதமாக காட்டி வருகிறது.

இந்நிலையில் தில்லியைப் பொறுத்தவரை இங்கு வசித்துவரும் வடகிழக்குப்  இந்தியர்கள் பதட்டமின்றியே இருந்து வருகிறார்கள். தில்லியைப் பொறுத்தவரைத் தங்களின் பாதுகாப்புக்கு எந்த இடையூறும் வராது என்று நம்புகிறார்கள். அந்த அளவுக்கு நல்லது தான்.

ஆனால், தில்லியில் கடந்த ஒரு மாதமாக வேறு ஒரு பதட்டம் நிலவுகிறது. இது மதக்கலவரமாக மாறாமல் இருக்க வேண்டும் என்பது தான் அனைவரது எண்ணமுமாக இருக்கிறது. அப்படி என்ன பதட்டம்?

இந்த பதட்டத்தின் முதல் விதை கடந்த ரமலான் மாதம் துவங்குவதற்கு சில நாட்கள் முன்னரே ஆரம்பித்தது. தில்லியில் பல இடங்களில் மெட்ரோ ரயில் இயங்குவது நாம் அனைவரும் அறிந்ததே. அதன் பணிகள் இன்னமும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதன் நான்காவது பகுதியாக பழைய தில்லி என்றழைக்கப்படும் செங்கோட்டையும் அதைச் சார்ந்த பகுதிகளும் மத்தியத் தலைமைச் செயலகத்துடன் இணைக்க நடந்து வரும் பாதையில் பள்ளம் தோண்டுதல், பூமிக்கடியில் சுரங்கப்பாதை அமைத்தல் என்று வேலைகள் துரிதமாக  நடைபெற்று வந்தன.

இந்த வேலைகளுக்குச் சோதனையாக ரமலான் மாதம் துவங்க சற்று நாட்கள் இருக்கும் நிலையில் ஜம்மா மசூதி-செங்கோட்டை அருகில் சுபாஷ் பார்க் பகுதியில் பூமிக்கடியில் 16-17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கட்டிடம் தென்பட்டது. இது ஷாஜகானால் அவரது மனைவி அக்பராபாதி பேகத்திற்குக் கட்டிக் கொடுக்கப் பட்ட அக்பராபாதி மசூதியாக இருக்கலாம் என்பது கணிப்பு. [மும்தாஜ் இறந்ததும் ஷாஜகான் அரசியல் காரணமாக இரண்டு திருமணங்கள் செய்து கொண்டார். அவர்களில் ஒருவர் அக்பராபாதி பேகம்; மற்றவர் காந்தாரி பேகம். பெயரிலிருந்தே ஒருவர் அக்பராபாத் (ஆக்ராவின் மறுபெயர்)-ஐயும் மற்றவர் காந்தாரத்தையும் சேர்ந்தவர் என்பது புரியும். காந்தாரம் ஜஹான்கீரின் ஆட்சியில் முகலாயர்களிடமிருந்து கைநழுவியது. ஷாஜகானின் இந்தத் திருமணங்கள் முகலாய சாம்ராஜ்யத்தின் விரிவாக்கம்/நிலைநிறுத்தல் ஆகியவற்றுக்காக நடைபெற்றன. அக்பராபாதி பேகம் பல வழிபாட்டு இடங்கள், நீராதாரங்கள் போன்றவற்றிர்கும் பல்வேறு புரவல்கள் செய்துள்ளார். அதில் இந்த மசூதியும் அடக்கம் என்று வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன]. இந்த மசூதி 1857-ல் சிப்பாய் கலகம் நிகழ்ந்த பொழுது பகதூர்ஷா-வின் ஆதரவாளர்கள் தங்கியிருந்ததால் பிரிடிஷார் செங்கோட்டையைக் கைப்பற்றிய பொழுது இடிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். முன்னர் எட்வர்ட் பார்க் என்று அழைக்கப்பட்ட இந்த பார்க்-இன் பெயர் 1960-களில் சுபாஷ் பார்க் என்று பெயரிடப்பட்டது.

கட்டுமான வேலைகளை உடனே நிறுத்திய மெட்ரோ நிறுவனம், இந்தக் கட்டிடத்தை ASI, தில்லில் அரசு, வடக்கு தில்லி கார்பரேஷன் ஆகியோரில் யாரிடம் இதை ஒப்படைப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட மூவரும் முடிவெடுப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில் இப்பகுதி (மதியா மஹல்) சட்டமன்ற உறுப்பினர் ஷோயப் இக்பால், ரமலான் மாதம் துவங்கும் நேரத்தில் இப்பகுதி மக்களுடன் சேர்ந்து பழைய இடிபாடுகளுக்கு மேலாகப் புதிதாக ஒரு கட்டிடத்தை எழுப்பி அதை வழிபாட்டுத் தலமாக மாற்ற முயற்சி செய்தார். ASI பொறுப்பில் இருக்கும் இடத்தில் வழிபாடு நடத்தக் கூடாது. நீதிமன்றம் இதில் தலையிட்டு புதிதாக மேலும் கட்டிடம் எழுப்புவதைத் தடுக்கச் சொல்லி காவல் துறைக்கு உத்தரவிட்டது. காவல் துறை இப்பகுதியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து புதிய கட்டுமானத்தைத் தடுத்தது. அப்பொழுது ஏற்பட்டப் பதட்டத்தில் நான்கு அரசு வாகனங்கள் சேதமுற்றன.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நீதிமன்றம் புதிதாக எழுப்பியுள்ளக் கட்டிடத்தை ரம்ஜான் முடிந்ததும் இடிக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.

இப்பொழுது ரம்ஜான் முடிந்துள்ள நிலையில் காவல்துறை பழைய புராதனக் கட்டிடத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ளவற்றை இடிக்கும் பொழுது தீய சக்திகள் இப்பகுதி இஸ்லாமிய மக்களைத் தூண்டிவிட்டுக் கல்வரம் உண்டாக்காமல் இருக்க வேண்டும் என்பதே சாதாரண மக்களின் விருப்பம்.

இப்பகுதி இஸ்லாமியத் தொண்டு நிறுவனங்களும் பொதுமக்கள் குழுவும் மற்ற மதத் தலைவர்களும் காவல்துறையினரும் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அவர்கள் மக்களுக்கு அமைதிகாக்கும் படிக் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தீயில்லாமல் வெறும் வதந்’தீ’யிலேயே பெங்களூர், சென்னை போன்ற அமைதியான நகரங்களே பதட்டம் அடைந்துள்ள நிலையில் தில்லி போன்ற இடங்களைப் பொறுத்தவரை இது சற்று நாசூக்காகவே கையாளப்பட வேண்டிய விஷயமாகும்.

இப்பகுதி இஸ்லாமியர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக இந்த சட்டமன்ற உறுப்பினர் எடுத்துள்ள இது போன்ற நடவடிக்கை மதக்கலவரத்திற்கு ஒரு invitation-தான்.

இப்பொழுது இங்குள்ள அனைவரின் கவலையும் இது பெரிதாகாமல் அடங்க வேண்டும் என்பதே…

6 கருத்துகள்:

  1. நல்ல அலசல் சீனு. பல விஷயங்கள் அரசியல், ஓட்டு என்பதாலேயே பெரிதாக்கப்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல்வியாதிகள் தான் பெரும்பாலும் இது போன்ற பிரச்சனைகள் ஆரம்பமாகக் காரணம்.

      ரம்ஜான் முடிந்து ஈகைத் திருநாளன்று மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஸப்தர்ஜங்-இல் இருக்கும் மதார்ஸாவில் (ASI-யின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இங்கு வழிபாட்டிற்கு அனுமதியில்லை) தொழுகையை நடத்தியுள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் அன்சாரியும் இதில் கலந்து கொள்வதாக இருந்தது. பின்னர், அவருக்கு நிலைமையை விளக்கப்பட்டதால் அவர் கலந்து கொள்ளவில்லை.

      நீக்கு
  2. இப்படி ஒரு பிரச்சனை கிளம்பிருக்கா? அரசியல் வாதிங்க ஓட்டுக்கு மட்டுமே கவலைப்படுவாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மோகன், இது மாதிரி ஏதாவது பிரச்சனையைக் கிளப்பிவிட்டால் தானே அதை வைத்து அவர்களின் பிழைப்பு நடக்கும்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. அதுதான் அனைவரின் விருப்பமும்.
      வருகைக்கு நன்றிகள்.

      நீக்கு