திங்கள், ஆகஸ்ட் 27, 2012

தேவையில்லா பாரம்பரியம்


சமீபத்தில், ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பாரம்பரிய நிறுவனம் (UNESCO) பாரம்பரிய இடமாகப் பராமறிக்கப்பட வேண்டிய இடங்களின் பட்டியலில் மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளை இந்தியாவின் 29-ஆவது இடமாக அறிவித்தது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் என்பது கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், கோவா, மஹாராஷ்டிரம், குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1½ லட்சம் ச.கி.மீ பகுதிகளைக் கொண்டது. ஆயினும், இவற்றில் பெரும் பகுதி விவசாய நிலங்களாகவும், தேயிலை, ரப்பர், பனைத் தோட்டங்களாகவும், அணைக்கட்டுகளாகவும் ஓய்வுப்பண்ணைகளாகவும் மாறிவிட்டன. 

இவற்றைத் தவிர பெரும்பாலன இடங்கள் மக்கள் குடியேற்றப்பட்டும் சுரங்க வேலைகளுக்காகவும் அணைக்கட்டுகள் கட்டபட வேண்டியும் ஒதுக்கப்பட்டு இந்த பகுதி மேலும் குறுக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற ஆணைகளும், சமூக ஆர்வலர்களும், சுற்றுச் சூழல் நிபுணர்களின் பல்வேறு முயற்சிகளாலும் கூட அரசியல்வாதிகளின் சாதுர்யத்திற்கும் சதியாலோசனைகளையும் குறுக்கு நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது தான் இதில் கவலைத் தரும் அம்சம்.

UNESCO சமீபத்தில் பராமரிக்கப்பட வேண்டிய பகுதியாக அறிவித்தது இதன் 5% பகுதியான சுமார் 7500 ச.கி.மீ. உள்ளடிக்கிய 39 பகுதிகள் தான்.

மகிழ்ச்சியான வரவேற்புடன் பெருமளவில் விளம்பரப் படுத்தப் பட்டு மக்களுக்கு இப்பகுதியின் சிறப்பையும் அதன் பராமரிப்பையும் செய்ய நல்ல வாய்ப்பாக இந்த அறிவிப்புகள் வந்தன. ஆனால், இப்பகுதிகளைப் பெருமளவில் உள்ளடக்கிய மாநிலங்களான கர்நாடகாவோ கேரளாவோ மஹாராஷ்டிராவோ இவற்றை வரவேற்கவில்லை என்பதைவிட மறைமுகமாக விரும்பவில்லை என்பதுதான் உண்மை. காரணம் கேரளாவைப் பொறுத்தவரை இப்பகுதிகளில் அணைக்கட்டுகள் எழுப்ப நடக்கும் முயற்சிகளுக்கு UNESCO-வின் இந்த அறிவிப்பு பெருமளவில் தடையாக இருக்கும் என்பதுதான் காரணம். மஹாராஷ்டிரம், கர்நாடகாவைப் பொறுத்தவரை அவர்களுக்கு அணைக்கட்டுகள் எழுப்ப வேண்டிய காரணத்தைத் தவிர சுரங்கத் தொழிலும் பெருமளவில் பாதிக்கப்படும். கர்நாடக அரசியல் பெருமளவில் சுரங்கத்தொழிலை ஒட்டியே நடந்து வருவது நாம் அனைவரும்  அறிந்ததே. சுரங்கத் தொழிலுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு ஆணைகளும் வழிகாட்டல்களும் காற்றில் பறக்கவிடப் பட்டுள்ளன. கர்நாடகம் கலிந்தி நதியில் எழுப்பத் திட்டமிட்டுள்ள அணை, சிந்துதுர்கை, ரத்தினகிரி ஆகிய பகுதிகளில் தொடங்க இருக்கும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை இந்த அறிவிப்பு பெருமளவில் பாதிக்கும்.

ஆக மொத்தத்தில் பாரம்பரிய இடமாக இப்பகுதிகள் அறிவிக்கப்பட்டது இப்பகுதிகளின் அரசாங்கங்களைப் பொறுத்தவரைத் தேவையற்றது என்பது தான் இன்றைய நிலைமை. இப்பகுதியில் சுற்றுச்சூழலும் பல்லாயிரக் கணக்கான உயிரிகளும் அவற்றின் பாதுகாப்பும் அரசியல் வாதிகளைப் பொறுத்தவரை அவர்களின் பண வரவையோ ஓட்டு வரவையோத் தீர்மானிக்கப் போவதில்லை என்பதால் அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு தேவையில்லாத   அறிவிப்பே.

2 கருத்துகள்: