வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

இளம் புயல்களின் எதிர்காலம்


கடந்த மாதம் நடந்த 19-வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பைக் கிரிகெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே.

பதினாறு அணிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டிகளில் நான்கு நான்காக குழுக்கள் பிரிக்கப்பட்டு அவைத் தங்களுக்குள் மோத வைக்கப்பட்டன. அவற்றுள் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் காலிறுதிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டன. இந்தப் போட்டிகளில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடாவிட்டாலும் அதன் குழுவில் இரண்டாமிடத்தைப் பெற்றது. இது போன்ற நீண்ட போட்டிகளில் ‘peaking at the right time’ என்று சரியான நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுதான் முக்கியம். இந்திய இளைஞர் அணி அதைச் சரியாகச் செய்தது. காலிறுதியில் பாகிஸ்தானையும் அரையிறுதியில் நியூசிலாந்தையும் வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் மட்டையாட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடாவிட்டாலும் பந்து வீச்சில் சிறப்பாக விளையாடியதால் வெற்றி பெற முடிந்தது. இறுதிப் போட்டியிலும் ஆரம்பத்தில் மட்டையாட்டத்தில் சற்றுத் தடுமாறினாலும் அணித்தலைவர் உன்முக்த் சந்த்-இன் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி இலக்கை எட்டினார்கள். இது இந்திய இளைஞர் அணி  வெல்லும் (2000, 2008-க்குப் பிறகு) மூன்றாவது உலகக் கோப்பை.

இந்த அணியின் வெற்றிக்குப் பின்னால் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் மூன்று தென்னிந்தியர்கள்.

முதலாமவர் இந்த அணியின் பயிற்சியாளர் பரத் அருண்; தமிழக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் [ரஞ்சிப் போட்டிகளில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதைத் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால், துரதிர்ஷ்ட வசமாகப் பெரிய அளவில் வரவில்லை]. இவர் இந்த இளைஞர்களைத் தேவையான அளவு ஊக்குவித்ததுடன் மட்டுமல்லாமல் மேற்கிந்திய அணியுடன் நடந்த முதல் போட்டியில் தோல்வியுற்றாலும் அணியினர் துவண்டுவிடாமல் அவர்களைத் தேவையான அளவு உற்சாகப்படுத்தி அவர்களின் திறமையைத் தீட்டியவர் என்று அணியினராலும் முன்னாள் வீரர்களாலும் பாராட்டப்படுகிறார்.

அடுத்து அணியின் தடுப்பாட்டப் பயிற்சியாளர் ஸ்ரீதர். ஹைதராபாத்-ஐச் சேர்ந்த இவர் இந்த அணியினருக்குக் கடந்த இரண்டு வருடங்களாக பெங்களூரின் தேசிய கிரிகெட் அக்டெமி-யில் பயிற்சியளித்து வருகிறார். லீக் போட்டிகளையும் கால், அரை இறுதிப் போட்டிகளையும் தடுப்பாட்டத்தினாலேயே வென்றார்கள் என்று கூறினால் அது மிகையில்லை. ஏனெனில், இவற்றில் மட்டையாட்டத்தில் மிகவும் குறைவான ஓட்டங்களையேப் பெற்றனர். இவர் பயிற்சி காலத்தின் பொழுது இந்திய அணியில் முன்னணி வீரர்களை (சச்சின், திராவிட், யுவராஜ் போன்றவர்களை) அழைத்து வந்து இந்த இளைஞர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

மூன்றாவதாக, அணியின் தேர்வாளர், முன்னாள் மிகவேகப்பந்து வீச்சாளர் அபய் குருவிலா [டெஸ்ட் போட்டிகளில் ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவரும் பெரிதாக சாதிக்கவில்லை என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டியிருக்கிறது]. இவர், அணியில் வேகப்பந்து வீச்சாளர், சுழல் பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர் என்று ஒரு balanced அணியைத் தேர்ந்தெடுத்துள்ளார். அதற்காகவே பாராட்டப்பட வேண்டியவர்.

இந்நிலையில் இந்த அணியைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த இயன் சேப்பல், இந்த இளைஞர்கள், குறிப்பாக உன்முக்த்-உம் பந்து வீச்சாளர் ஹர்மீத் சிங்-கும், இந்திய அணியில் சேர்க்கப்படத் தகுதியானவர்கள் என்று கூறியுள்ளார். ஹர்மீத் சிங் பற்றிக் குறிப்பிடுகையில் அவரை பேடி-யுடன் இணைத்துக் கூறி, இங்கிலாந்து தவிர வேறு எந்த நாட்டின் டெஸ்ட் அணியிலும் இவருக்கு இணையான சுழல் பந்து வீச்சாளர் இல்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து இந்த இளைஞர்கள் உடனடியாக இந்திய அணியில் சேர்க்கப்பட வேண்டுமா அல்லது கூடாதா என்ற விவாதம் எழுந்துள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் மனீந்தர் சிங், இவர்கள் இன்னும் இரண்டு ஆண்டுகள் முதல் நிலை (first class) ஆட்டங்களை ஆடிய பின்னரே அதன் அடிப்படையில் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். உதாரணமாக, தன்னையும் சேர்த்து பல்வேறு இளம் வீரர்கள் சிறுவயதிலேயே இந்திய அணியில் சேர்க்கப்பட்டும் பெருமளவில் ஜொலிக்காமல் போனதைக் குறிப்பிடுகிறார். இதற்கு உதாரணமாக லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், ஹிர்வானி, விக்கெட் கீப்பர் எம்.எஸ்.கே.பிரசாத் (இவரை நினைத்தால் குருவி தலையில் பனங்காய் என்ற பழமொழிதான் ஞாபகம் வரும். சிறந்த கீப்பரான இவரை 19 வயதில் அணியில் சேர்த்து இந்தியாவிற்கு வெளியில் நடக்கும் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராகக் களம் இறக்கினால் என்ன செய்ய முடியும்?), பார்த்தீவ் படேல் என்று கூறிக் கொண்டே போகலாம். இதற்கு மிகச் சிறந்த exception என்றால் அது சச்சின் தான்.

ஆனால், சஞ்சய் மஞ்ரேக்கரோ பல வீரர்கள் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நல்ல நிலையில் ஆடிவரும் வீரர் அவரது form-ஐ இழக்க நேரிடும் சமயத்தில் அணியில் சேர்க்கப்பட்டு அப்பொழுது சரிவர விளையாடாமல் வாய்ப்பு இழக்க நேரிடுவதைக் குறிப்பிடுகிறார். இதற்கு, அஜய் சர்மா, வி.பி.சந்திரசேகர் போன்றவர்கள் மிகச் சிறந்த உதாரணம். இதற்கு exception திராவிட்.

அணியின் தேர்வாளர் குருவிலா இதைப் பற்றிக் குறிப்பிடுகையில் இது அணியின் கூட்டு வெற்றி என்றும் வீரர்கள் பிரிந்து வேறுவேறு (மாநில) அணிகளுக்கு விளையாடும் பொழுது தங்களை எப்படி அதற்குத் தயார் செய்து கொள்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம் என்றும் இந்த கோப்பை  வெற்றியை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதும் முக்கியம் என்றும் எனவே அவர்கள் ஒரு சீசனாவது ரஞ்சிப் போட்டிகளை விளையாட வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார். இந்தக் கூற்றில் உண்மை இருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் கம்பீர், விராட் கோஹ்லி. இளைஞராக இருக்கும் போதே அணியில் சேர்ந்த இவர்கள் முதலில் சொதப்பினார்கள். அணியிலிருந்து நீக்கப்பட்டப் பின் ரஞ்சிப் போட்டிகளில் தங்கள் ஆட்டத் திறனை மேம்படுத்திக் கொண்டு மீண்டு வந்துள்ளனர்.

இப்பொழுது இவர்கள் ஒரு தொடரில் தான் விளையாடியுள்ளனர். இவர்களின் எதிரணிகளிலும் அனுபவமில்லாத இளைஞர்கள் தான் விளையாடியிருப்பார்கள். அனுபவமிக்க ஒரு அணியை எதிர்கொள்ள இவர்களுக்குக் குறைந்த பட்ச அனுபவமாவது இருக்க வேண்டும். இறுதித் தேர்வை எதிர்கொள்ளும் மாணவன் அதற்கு முன்னர் பயிற்சித் தேர்வு எழுதுவது போல ரஞ்சி மற்றும் முதல் நிலை போட்டிகள் (county போன்றவற்றிலும்) விளையாட வேண்டும். அப்பொழுதான் அவர்களின் திறமை மேலும் மெருகேரும்.

இதுவரை இந்திய அணியில் இடம் பெற்ற 19-வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் வீரர்களின் பட்டியலைப் பார்ப்போம்…
          1.       வெங்கடபதி ராஜூ         1988
          2.       நயன் மோங்கியா             1988
          3.       ஹர்பஜன் சிங்                 1998
          4.       விரேந்தர் சேவாக்            1998
          5.       முகமது கைஃப்                1998, 2000
          6.       யுவராஜ் சிங்                    2000
          7.       பார்த்தீவ் படேல்             2002
          8.       இர்ஃபான் படான்  2002
          9.       சுரேஷ் ரெய்னா               2004
          10.     தினேஷ் கார்த்திக்            2004
          11.     பியூஷ் சாவ்லா                2006
          12.     சதேஸ்வர் புஜாரா           2006
          13.     ரவீந்த்ர ஜடேஜா             2006, 2008
          14.     ரோஹித் ஷர்மா              2006
          15.     விராட் கோஹ்லி             2008

5 கருத்துகள்:

  1. நல்லதொரு அலசல். இளமையின் வேகம் சுலபமாய் கற்றுக் கொண்டு விடும் எதையும். உள்ளூரிலேயே வேறு நாடடு பெரிய அணிகளுடன் ஒரு ட்ரையல் சீரிஸ் விளையாட ஏற்பாடு செய்தால் அனுபவம் கிடைத்துவிடும் என்று தோன்றுகிறது எனக்கு. இளைஞர்களாக அணிக்குள் கொண்டு வருவதுதான் இந்திய அணிக்கு உத்தமமான செயல். பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. முதல் படியாக இவர்களை ‘A' அணிகளில் சேர்க்கலாம். ஆனாலும், domestic போட்டிகள் மட்டுமன்றி இங்கிலாந்தில் நடைபெறும் county போட்டிகளில் விளையாட வைக்கலாம். சௌரவ் கங்குலி IPL-இல் இவர்கள் விளையாடுவது நல்லது என்றும், உதாரணமாக உன்முக்த் இறுதிப்போட்டியில் தடுப்பாட்டம் மட்டுமே விளையாடாமல் counter attack செய்து தன் சதத்தில் நான்கு sixer-கள் என அடித்து விளையாடியதைக் குறிப்பிட்டுள்ளார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் கணேஷ்.

      நீக்கு
  3. நல்ல அலசல் சீனு.

    As an illiterate, அது என்னப்பா தடுப்பாட்டம்! :) தெரியலை அதான் கேட்கறேன்.

    த.ம. 1

    பதிலளிநீக்கு