இந்த ஆண்டு பருவமழை சற்று
முன்னதாகவே வந்துவிட்டது. கடந்த வாரத்தில் வடமாநிலங்களையும் இந்த பருவமழை
வந்தடைந்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இப்பருவமழையால் உத்த்ராஞ்சல்
மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130க்கும் மேல்.
இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது
பெருமழையும் மேகம் உடைந்த்தும் என்று கூறுகிறார்கள். மழை, மேகம் உடந்த்தைத்
தொடர்ந்து மந்தாகினி நதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் புகழ் பெற்ற கேதாரிநாத்
கோவில் பெருமளவில் சிதைந்துள்ளது.
மழைக்கு முன் கேதார்நாத் கோவில் |
மழைக்குப் பின் கேதார்நாத் கோவில் |
முக்கியக் காரணமாகக் கூறப்படும் ’மேகம்
உடைதல்’ என்றால் என்ன?
நிலப்பரப்பிற்கு அருகில் காற்று சுழலும்
பொழுது அதிலுள்ள ஈரப்பதம் இணைந்து ஒரு உருவமில்லா நிலையைப் பெறும். காற்று
சூடாகும் பொழுது அது இலேசாகி விரிந்து மேலெழும்பிச் சென்றுக் குளிர்ந்துவிடும்.
குளிர்ந்த காற்று நீராவியைத் தாங்கிப் பிடிக்காது. ஆனால், சில நீராவித்
துணுக்குகள் ஒன்றை ஒன்றுத் தாங்கிப் பிடித்துக் கொள்கின்றன. பின் அவை மேலும் இறுகி
பனித்துகள்களாகவும் படிகங்களாகவும் (Crystals) மாற்றமடைந்து பின்னர் மேலும் இறுகி மேகங்களாகவும்
மாறுகின்றன. மாறிய இந்த மேகங்களின் படிகங்களும் துகள்களும் மேலும் குளிர்ந்து பருக்கும்
பொழுது துகள்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் ஏற்படும் வெப்பத்தில் இளகி
நீர்துளிகளாய் மழையாய் பொழியும். இவற்றை நாம் பள்ளிக் கூடங்களிலேயே
படித்திருப்போம்.
ஆனால், சில நேரங்களில் குறிப்பாக உயர்ந்த
மலைப் பிரதேசங்களில் உள்ளுக்குள் இந்த மேகத்தின் பனித்துகள்கள்/படிமங்கள்
உராய்ந்து இளகும் வேளையில் வெளிப்புறத்தில் குளிர்ந்த தட்பவெப்பத்தின் காரணமாய்
இறுகியே இருக்கும். மெல்ல மெல்ல மேகத்தின் உட்பகுதி இளகி அதன் வெளிப்புறத்தை
அழுத்த திடீரென்று ஒரே இட்த்திலேயே மொத்த மழையும் ஒரு பெரிய தண்ணீர் தொட்டி உடைந்தது
போல் மொத்தமாகக் கொட்டும். உத்தராஞ்சல் பகுதியில் உடைந்த இந்த மேகத்தின் அளவு ஒரு
பெரிய ஏரியை விட பெரிதாக இருந்துள்ளது. கீழே விழும் தண்ணீரின் வேகம் மணிக்கு 100
கி.மீ.க்கும் அதிகமாக இருக்கும் [சாதாரணமாக ஒரு நிமிடத்தில் 2 மிமீ க்கும் அதிகமாக
மழைபெழிந்தால் அதை மேகம் உடைதல் என்று கூறுகிறார்கள்]. பெரும்பாலும் இந்த மேகம்
உடைதல் மலைப்பகுதிகளில் நிகழ்ந்தாலும் சில நேரங்களில் மற்ற இடங்களிலும் நிகழ்வதுண்டு.
மேகங்களின் அமைப்பைக் கொண்டு
அவற்றை வகைப்படுத்தியுள்ளார்கள். அவற்றைப் பார்ப்போம். முதலில் இந்த
வகைப்படுத்தல்களைப் பற்றிய சிறு வரலாறு. 1803-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் வேதியியலாளர்
லூக் ஹோவர்ட் என்பவர் தான் முதன் முதலில் இந்த மேகங்களை அவற்றின் நிலைகளைப்
பொறுத்து பிரித்து, பின் அவற்றின்
தன்மைகளைப் பொறுத்து வகைப்படுத்தினார். பிரித்த மேகங்களுக்கு அவற்றின் தன்மையைப்
பொறுத்து லத்தின் பெயர்களிட்டுக் குறிப்பிட்டார். இப்பொழுது அவற்றின் வகைகளைக்
காண்போம்….
உயர் நிலை மேகங்கள்: இந்த
மேகங்கள் வானில் மிகவும் உயரத்தில் இருக்கும். இவை சிறுசிறு பனித்துளிகளைக் கொண்டு
இருக்கும். இவற்றின் குளிர் நிலை மைனஸ் 40 டிகிரிக்கும் குறைவாக இருக்கும்.
இவற்றின் வகைகள்…
சைரஸ் (கீற்று): இவை இறகுகள் போல மென்மையாக சுருட்டையாக
இருக்கும். சாதாரணமாக நீல வானத்தில் இவைதான் அதிகமாகத் தெரியும். ஆனால், இவை மிக
உயரத்தில் இருப்பதால் பெரும்பாலும் மழையைத் தராது. இந்த சைரஸ் வகையில் பல
உள்வகைகளும் உண்டு. 1951-ஆம் ஆண்டு கடைசியாக சைரல் இண்டார்டஸ் (இண்டார்டஸ் என்றால்
ஒழுங்கற்று வளைந்த என்று பொருள்) என்ற வகை உலக வளிமண்டல அமைப்பால் ஏற்றுக்
கொள்ளப்பட்ட வகையாகும்.
சைரோக்யூமுலஸ் (கீற்றுத் திரள்) : இவை வெள்ளை நிறத்தில் சிறுசிறு
பந்துகளைப் போலத் திரண்டு (க்யூமுலஸ் என்றால் ’குவியல்’ என்று பொருள்) இருக்கும். பந்துகளை
வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட சிறிய அலைகள் போல இருக்கும்.
சைரோஸ்ட்ரடஸ் (கீற்றுப்பட்டை) : இவை பெரிய தகடுகள் போல
படர்ந்திருக்கும். இவற்றின் தடிமன் சில நேரங்களில் 5-6 கி.மீ. பருமன் கொண்டதாகக்
கூட இருக்கும். ஆனாலும் இவை ஒளி ஊடுறுவும் (transparent) வகையில் இருக்கும்.
இவற்றில் நிலவொளி ஊடுறுவும் பொழுது இவை வட்ட வடிவில் ஒரு ஒளிவட்டம் போல்
நிலவொளியைச் சுற்றி ஒளிவிடும்.
இடை நிலை மேகங்கள்: இந்த
மேகங்கள் வானில் 2-6 கிமீ தூரத்தில் இருக்கும். இவற்றின் வகைகள்…
ஆல்டோஸ்ட்ரடஸ் (உயர் பட்டை/போர்வை)
: இவை பெரும்பாலும் பனித்துகள்களும் படிமங்களும் சிதறி இருப்பது போல் இருக்கும்.
சாதாரணமாக இவை வானத்தில் மூடுபனியைப் போன்று இருக்கும்.
ஆல்டோக்யூமுலஸ் (உயர்திரள் முகில்)
: இவை மேல் பகுதியில் வெள்ளை அல்லது
வெளிர் சாம்பல் நிறத்திலும் கீழ்பகுதியில் சற்று கறுத்த நிறத்திலும் இருக்கும்.
சில நேரங்களில் இவை கீற்றுத்திறள் போல காட்சியளிப்பதும் உண்டு.
ஸ்ட்ரடஸ் : இது பூமிக்கு அருகில்
ஒரு போர்வை போல ஒரே மாதிரி மூடியிருக்கும். பூமியில் இது படியும் பொழுது இதை
மூடுபனி என்று அழைக்கிறோம்.
ஸ்ட்ரடோக்யூமுலஸ் : இவை சாம்பல் நிறத்தில் ஒன்றின் மேல் ஒன்று
படிந்தது போல் இணைந்திருக்கும். சாதாரணமாக புயல் மழைக்குப் பின்னர் இவை வானில்
தோன்றும்.
நிம்போஸ்ட்ரடஸ் (மழை முகில்): நிம்பஸ்
என்ற வார்த்தைக்கு நெடிய/ஆழ்ந்த/உள்வாங்கிய/வியர்த்த
என்று பல பொருள்கள் உள்ளன. ஸ்ட்ரடஸ் என்றால் பட்டை அல்லது போர்வை என்று
பொருள். மேகப்படுக்கைகள் ஒன்றின் மேல்
ஒன்று பல படுகைகளாய் அமைந்தது நிம்போஸ்ட்ரடஸ். சில நேரங்களில் இவற்றின் பருமன்
2000-3000 மீட்டர்கள் கூட இருக்கும். இவை சூரியனை முழுவதுமாக மறைக்கும் தன்மைக்
கொண்டவை.
செங்குத்து மேகங்கள்: சில
நேரங்களில் மேகங்கள் படராமல் ஒன்றின் மேல் ஒன்றாக நீண்டு இருக்கும். இவற்றின்
வகைகள்…
க்யூமுலஸ் : சாதாரணமாக நீலவானத்தில் வடிவற்று அலையும்
மேகங்கள் தான் இவை.
க்யூமுலோநிம்பஸ்: வடிவற்று அலையும் க்யூமுலஸ் மேகங்கள் பற்பல்
ஒன்றிணைந்து பெருமேகமாக வடிவெடுத்து மழை மேகமாக மாறும். அவ்வாறு மாறும் மேகங்கள்
சில 12-15 கி.மீ.க்கும் உயரமாக வளர்ந்து நிற்கும். கீழே பனித்துகள்களும் மேலே பனிப்படிகங்களுடனும்
இவை இருப்பதாகக் கூறுவர்.
உலக வளிமண்டல அமைப்பு 1975 ஆம்
ஆண்டு வரை சர்வதேச மேக வரைபட்த்தை வெளியிட்டு வந்தது. 1975-ஆம் ஆண்டின் வரைபடம்
இரண்டு தொகுதிகளாக முதல் தொகுதி 1975-இலும் இரண்டாம் தொகுதி 1987-இலும்
வெளியிடப்பட்ட்து. பின்னர் இது தொடரப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் 2009-ஆம்
ஆண்டு அண்டுலேடட் ஆஸ்பிரடஸ் (Undulated Asperatus) – ஒழுங்கற்ற அசைவுறு அலை - என்ற
புதுவகையை ஏற்கக் கோரி ’மேகப் பாராட்டு சமூகம்’ என்ற அமைப்பு உலக வளிமண்டல
அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.
மேகங்களின் வகைகளும், மேகம் உடைதல் பற்றிய விளக்கங்களுக்கும் நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் தனபாலன்!
நீக்குமேகங்கள் பற்றிய தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன் சார்... நல்ல பதிவு
பதிலளிநீக்குவருகைக்கு நன்றிகள் சீனு!
நீக்குமேகம் உடைவது பற்றி விரிவான தகவல்கள் அறிந்ததில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குபலவிதமான மேகங்கள் பற்றியும் கூறியது பயனுள்ளது
வருகைக்கு நன்றிகள் முரளி
நீக்குபயனுள்ள தகவல்கள் அய்யா
பதிலளிநீக்குவருகைக்கு நன்றிகள் ஜெயக்குமார்!
நீக்கு