செவ்வாய், ஏப்ரல் 30, 2013

அடித்தளம் இல்லாக் கட்டிடம்



’எனக்கு பில்டிங் ஸ்ட்ராங்; பேஸ்மெண்ட்-தான் வீக்’

இது வடிவேலு நகைச்சுவைக்காகச் சொன்னது. ஆனால், நிஜத்தில் அடித்தளம் நன்றாக இல்லாவிட்டால் கட்டிடம் ஆட்டம் காணும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், அந்த அடித்தளமே இல்லாமல் கட்டிடம் கட்ட முடியுமா?

இந்திய அரசு மூன்றாண்டுகளுக்கு முன்னர் அதைத்தான் செய்ய நினைத்தது அதுவும் கல்வி உரிமை சட்டம் என்ற பெயரில்.

பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கைக் குறைவதற்குக் காரணம் அவர்கள் தங்கள் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தமே காரணம் என்றும் அந்த அழுத்தத்தை நீக்க அவர்கள் எட்டாம் வகுப்புவரை தேர்வுகளின் வெற்றி-தோல்வியைக் கணக்கில் கொள்ளாமல் அடுத்த வகுப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது.

மாணவர்களின் தேர்வு அழுத்தத்தை நீக்க எடுக்கப் பட்ட இந்த முடிவு இப்பிரச்சனையின் சில அடிப்படை உண்மைகளைக் கூட ஆராயாமல் எடுக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது பாடத்திட்டச் சீரமைப்பு. பாடங்களில் தேர்வு எழுதவில்லை என்றாலும் தொடர்ந்து அந்தந்த வகுப்புகளில் கலந்து கொண்டிருந்தால் ஓரளவு அப்பாடத்தின் அடிப்படைகளை அறியும் அளவு பாடத்திட்டம் சீரமைக்கப்பட்டிருக்க வேண்டும். மூன்றாண்டுகள் சென்ற நிலையிலும் இதில் எந்த முனைப்பும் காட்டப்படவில்லை. அடுத்து, ஆசிரியர்களின் அர்பணிப்பு. இன்றைய நிலையில் மாநிலங்களில் அரசுப்பள்ளிகளின் ஆசிரியர் நியமிப்பு என்பது பெருமளவில் அரசியலாக்கப்பட்டுள்ளது. (உதாரணமாக நிதீஷ்குமார் பீஹாரின் முதலமைச்சரானவுடன் அதற்கு முந்திய அரசின் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களை நீக்கி தேர்வையும் தடைசெய்து பட்டம் பெற்ற அனைவரையும்  முறையான பயிர்சி இல்லாமல் ஆசிரியராக நியமித்தது - இவர்களில் பெரும்பாலானோர் முறைதவறி பட்டம் பெற்றவர்கள் – இதுதான் பெரும்பாலான மாநிலங்களில் நடக்கிறது) இந்நிலையில் அரசுப்பள்ளிகளில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் அதைப் பகுதி நேரத் தொழிலாகவே ஆக்கிவிட்டுள்ளனர். மூன்றாவதாக, சரியான பெற்றோர்-ஆசிரியத் தொடர்பு இல்லாதமை. குறைந்த பட்சம் பாடங்களில் மேலதிக கவணிப்புத் தேவைப்படும் மாணாக்கர்களின் பெற்றோருக்கு அதைப்பற்றித் தெரிவிக்கப் பட வேண்டும். ஆனால், இது, Private tuition என்று அவர்களுக்கு மேலும் சுமையேற்ற மட்டுமே பயன்படுத்தி வருவது.

இதனால் கல்வியின் தரம் மிகவும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

2010-ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பில் தேரிய மாணவர்களில் 43% சதவிகத்தினர் 2ஆம் வகுப்பு பாடத்தையே புரிந்து கொள்ள முடியாத நிலைமையில் இருந்தனர். அதிலும் 29% மாணாக்கர்கள் இரு இலக்க ‘கடன் வாங்கி’ கழித்தல்களைச் செய்ய முடியாமல் திணறியுள்ளனர்.

2012-ஆம் ஆண்டு கணக்கின்படி இவர்களின் சதவிகிதம் 53% ஆக உயர்ந்துள்ளது. அதிலும் இரு இலக்கக் கழித்தல்களைச் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 46.5% ஆக உயர்ந்துள்ளது.

நிலைமையைக் கருத்தில் கொண்டு கல்விக்கான நாடாளுமன்றக் குழு இந்த முறையை மறு பரிசீலனைச் செய்ய உத்தரவிட்டுள்ளது.

அரசு இதை மறு பரிசீலனைச் செய்து கல்வி சீர்திருத்தம் செய்யுமா அல்லது மீண்டும் பழைய படியே தேர்வுகளை நடத்தி சும்மா இருக்குமா என்பது தான் தெரியவில்லை.

பெரும்பாலும் இரண்டாவது நடக்கத்தான் வாய்ப்புகள் அதிகம். கல்வி சீரமைப்பிற்கெல்லாம் நேரம் ஏது?

புதன், ஏப்ரல் 17, 2013

நோய்டா நாள்



ஏப்ரல் 17 நோய்டா நாள் என்று கொண்டாடப்படுகிறது.

1976-ஆம் ஆண்டு இந்த நாளில் தான் தில்லியில் ஓக்லா-வை ஒட்டிய யமுனையின் மறுகரையில் ’புது ஓக்லா தொழில் வளர்ச்சி பகுதி’ என்று உருவாக்கப்பட்டது (ஆங்கிலத்தில் New Okhla Industrial Development Area). இது சுருக்கமாக NOIDA என்று அழைக்கப்பட்டு நாளடைவில் நோய்டா என்பதே இப்பகுதியின் பெயராக ஆகிவிட்டது.

ஆனால், இன்றைய நோய்டாவின் நிலையே வேறு.  தில்லி-நோய்டா-ஆக்ரா வெகுவேக சாலை, சுங்கப்பாலம், மெட்ரோ ரயில் என்று தில்லியின் மையத்தை (கனாட் ப்ளேஸ், இந்தியா கேட், தில்லி கேட் ஆகிய பகுதிகளை தில்லியின் மற்ற பகுதிகளில் இருப்பவர்களை விட விரைவாக அடைந்துவிட முடியும்.

ஒரு காலத்தில் தில்லியில் துணைநகராக ஆரம்பிக்கப்பட்ட இந்த நோய்டாவே இன்று நோய்டா-க்ரேட்டர்நோய்டா என்று இரட்டை நகரங்களாகப் பரிமளிக்கிறது.

உத்திரப் பிரதேச மாநிலம் என்றாலே தில்லியிலிருந்து குடியேற யாரும் தயங்குவர். ஆனால் நோய்டா உத்திரப் பிரதேசத்திலிருந்தும் அதைப் பொதுவாக யாரும் தவிர்ப்பதில்லை. காரணம், நோய்டா உத்திரப் பிரதேச மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாமல் நோய்டா அதாரிடி-யின் கட்டுப்பாட்டில் விளங்குவதே.

இன்றைய நிலையில் நோய்டாவின் மக்கள் தொகை சுமார் 1.7 மில்லியன். தவிரவும், சுமார் மூன்று லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தில்லியில் வீடுகள் கட்டப்பட இடம் இல்லாத நிலையி, தில்லியைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் இவற்றுக்குக் குடிபெயர வாய்ப்புகள் அதிகம்.

தவிர நோய்டா-வினால் மத்திய-மாநில அரசுகளுக்கு ஆண்டொன்றுக்குச் சுமார் 10000 கோடி ரூபாய் வருமானம் கிட்டுகிறது. நோய்டாவின் தனிநபர் வருமானம் (Percapita Income) சுமார் 20000 ரூபாய். நோய்டாவில் 15000 தொழிற்கூடங்கள் உள்ளன.

நோய்டாவில் பல்வேறு குறைபாடுகளும் உள்ளன. குறிப்பாக்க் கூற வேண்டுமென்றால், சட்டம் ஒழுங்கு (மற்ற உத்திர பிரதேசப் பகுதிகளைக் காட்டிலும் பரவாயில்லை என்றாலும் தில்லியுடன் ஒப்பிடும் பொழுது சற்று கவலை அளிக்கும் விஷயம் தான்), மின்சாரம், பொது போக்குவரத்து (மெட்ரோவைத் தவிர நோய்டா அதாரிடியின் பேருந்துகள் இருந்தாலும் அவை சரியாக இயக்கப்படுவதில்லை). அரசியலைப் பொறுத்தவரையில் இப்பகுதியில் மாயாவதியின் தொகுதி இந்த பகுதியில் அமைந்திருப்பதால் அவரது ஆட்சியில் இப்பகுதியின் வளர்ச்சி, கட்டுமானப்பணிகள் தடையில்லாமல் நடைபெற்றது. ஆனால், அதே காரணத்திற்காகவே இப்பொழுது அதில் சுணக்கம் உள்ளது. இது பொதுவாகவே அனைத்து மாநிலங்களுக்கும் உரித்தானதுதான் என்றாலும் உத்திர பிரதேசத்தில் இந்த தனிநபர் அரசியல் மிகவும் பிரசித்தி பெற்றது.

தில்லி வந்த பிறகு சுமார் இரண்டு வருடம் கழித்து (1992-93 ஆம் ஆண்டில்) தான் முதன் முறையாக இந்த நோய்டாவிற்கு சென்றேன். தில்லி எல்லைவரை பேருந்துகள் செல்லும். நோய்டாவின் பிற இடங்களுக்குச் செல்ல ஆட்டோவும் ‘ஃபட்ஃபடி’ என்றழக்கப்படும் புல்லட்டுகளுடன் பிணைக்கப்பட்ட பத்துபேர் அமரும் வகையில் மூடப்பட்ட ஷேர்ஆட்டோவும் தான் முக்கிய போக்குவரத்து சாதனங்களாக இருந்தன.

அப்போது மட்டும் யாராவது நீ இந்த நோய்டாவில் தான் இருக்கப் போகிறாய் என்று கூறியிருந்தால் ‘தில்லி’யை விட்டே ஓடி வந்திருக்ககூடும்.

வியாழன், ஏப்ரல் 11, 2013

யுகாதி


ன்று யுகாதி ஆந்திர கர்நாடக மராட்டிய மாநிலங்களில் கொண்டாடப்படும் புத்தாண்டு நாள்.

வட மொழியின் யுக்மம்” (இணை/ஜோடி) என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தவை யோகம், யுகம் ஆகியச் சொற்கள். யோகம் என்றால் இணைப்பு அல்லது இணைவது; யோக சாஸ்த்ரம் என்பது உடலும் உள்ளமும் இணைந்து கட்டுப்படுவது. யுகம் என்றால் இரண்டின் சந்திப்பு அல்லது இணைப்பு என்று பொருள்.

ராசிகள் அல்லது நக்ஷத்திரங்கள் இணைவதும் யுகம். இந்த இணைப்பு ஆதிராசியான மேஷத்தில் நிகழும் பொழுது அது யுகாதி எனப்படும். யுகாதியில் வரும் ’யுகம்’ என்ற வார்த்தைக்கும் சதுர்யுகம் என்பதில் வரும் ‘யுகம்’ என்ற வார்த்தைக்கும் இணைப்பு என்பதைத் தவிர வேறு சம்பந்தம் இல்லை. அதனால் இந்த யுகாதியை சதுர்யுகங்களின் ஆதி (ஆரம்பம்) என்று கொள்ளக் கூடாது.

வேறு சில கால சந்தி(இணைப்பு)களில் இந்த யுகம், யுகாதி என்ற வார்த்தைகள்  பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைப் பார்ப்போம்….

1.           சந்திரமான, சௌரமான யுகம் :  சந்திர, சூரிய ஆண்டுகள்.
2.           ப்ரஹஸ்பதி யுகம் :   இது 12 ஆண்டுகளைக் கொண்டது. சூரியன், சந்திரன், புஷ்ய (பூசம்) நக்ஷத்திரம், குரு ஆகியவை ஒரே ராசியில் இணையும். இதைக் கொண்டு தான் கும்பமேளா கணிக்கப்படுகிறது. சில இடங்களில் இது சற்று வேறுபாட்டுடன் 60 வருடங்கள் கொண்டதாகக் கூறப்படுவதுண்டு (சூரியன், சந்திரன், பூசம், குரு ஆகியவற்றுடன் சனியும் இணையும்)
3.           சஹஸ்ர சதுர் யுகம்  :         ஒரு பருவ ஆண்டு (tropical year based on vernal equinox) நகர்ந்து ஒரு நக்ஷத்திரத்தைக் கடக்க ஆகும் 1000 ஆண்டுகள் நான்கு யுகங்களாக பகுக்கப்பட்டு (400 க்ருத யுகம்; 300 த்ரேதா யுகம்; 200 த்வாபர யுகம்; 100 கலியுகம்) இருப்பது. [விளக்கங்களை பிரிதொரு சமயத்தில் தனி பதி்வாக முயற்சிக்கிறேன்].
4.           கவம் அயனம் :        இது நான்கு ஆண்டுகள் கொண்ட ஒரு தொகுப்பு. இதில் ஒவ்வொரு ஆண்டும் 365¼ நாட்களைக் கொண்டவை. முதல் ஆண்டு 365 நாளுடன் ஒரு கால் (பாதம் என்று கூறுவர்) நாள் இணைத்து அதைக் கலியுகம் என்றும், அடுத்த ஆண்டுகளில் 365 நாளுடன் மற்றொரு பாதங்கள்  இணைத்து அதை த்வாபர, த்ரேதா யுகங்கள் என்றும், கடைசி ஆண்டை க்ருத ஆண்டு என்றும் அழைப்பர். கடைசி ஆண்டின் கால் பகுதி முடிந்தவுடன் நாளின் மீதி பகுதி எதுவும் மீறாமல் இருப்பதால் அதை ஸத்ய அல்லது ரித யுகம் என்றும் கூறுவர்.
5.           ஸப்தரிஷி யுகம்        :         இது 2700 ஆண்டுகள் கொண்டது. ஸப்தரிஷி மண்டலம் ஒரு நக்ஷத்திரத்திலிருந்து அடுத்த நக்ஷத்திரத்திற்கு செல்ல 1000 வருடங்கள் ஆகும். பூமி தன்னைத் தானேச் சுற்றி, சூரியனையும் சுற்றுவதை அறிவோம். அதே போல் அதன் 23.5 டிகிரி சாய்வும் தலையாட்டி பொம்மைப் போல சுழலும். அப்பொழுது வான்மையத்தில் இருக்கும் ஸப்தரிஷி மண்டலமும் சுழலும். இதற்கான காலம் 2700 ஆண்டுகள் என வராஹமிஹ்ரர் கூறுகிறார். பாகவத, விஷ்ணு புராணங்கள் ஸப்த ரிஷிகள் மகத்திலிருந்து பூராட நக்ஷத்திரம் செல்லும் சமயத்தில் மகத வம்சாவளியைத் தொகுத்து பரிக்ஷிதிலிருந்து நந்த வம்சம் வரை விவரித்துள்ளது. இது 1015 ஆண்டுகளைக் கொண்ட வம்சாவளியுடன் ஒத்துப் போவதாகக் கூறுகிறார்கள்.

இவற்றைத் தவிர ரோமக சித்தாந்தம், சூர்ய சித்தாந்தத்திற்கு முந்தைய சித்தாந்தங்கள், சூரிய சித்தாந்தம், மார்கண்டேய யுகம், சஞ்சய யுகம், ஆர்யபட்டர் சித்தாந்தம், ப்ரஹ்ம ஸ்புடிக சித்தாந்தம் ஆகியவை வெவ்வேறு ஆண்டுக் கணக்குக்களைக் கொண்டுள்ளன.

அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள்!

திங்கள், ஏப்ரல் 08, 2013

அவந்தி தேசம்


56 புராண இந்திய தேசங்களைப் பற்றியத் தொடர்பதிவு.


அவந்தி தேசம் என்பது யாதவர்களால் ஆளப்பட்டத் தேசங்களுள் ஒன்று. இது மத்தியப்பிரதேசத்தின் க்ஷிப்ரா நதியின் (இது யமுனையின் துணைநதிகளில் ஒன்றான சர்மனதி நதியின் கிளைநதி; தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாயும் இந்த சர்மனவதியின் மற்றொரு துணைநதியான அஸ்வ நதியில் தான் குந்தி தன் குழந்தை கர்ணனை விட்டாள் என்றும் குழந்தையைச் சுமந்த அந்தக் கூடை பின் சர்மனவதியில் கலந்து பின் யமுனை மூலமாகக் கங்கையைச் சென்றடைய, கங்கை நதிக்கரையில் அங்கதேசத் தலைநகர் சம்பாபுரி நகரில் அதிரதனால் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறுவர்) கரைகளில் அமைந்த உஜ்ஜயினி நகரத்தைத் தலைநகராகக் கொண்ட நாடு.

இந்தியாவில் நான்கு இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறும். அலகாபாத், ஹரித்வார் இவை இரண்டும் பொதுவாக அனைவரும் அறிந்த இடங்கள். மற்ற இரண்டு இடங்கள் நாசிக்-உம் உஜ்ஜயினியும் ஆகும். உஜ்ஜயினியின் கும்பமேளாவிற்கு சிம்மஹஸ்தி என்று பெயர். குரு சிம்ம ராசியில் இருக்கும் வருடத்தில் இந்த கும்பமேளா நடைபெறும். குரு ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்குச் செல்ல சற்றேரக்குறைய ஒருவருடம் கும். தற்போது குரு ரிஷபத்தில் இருக்கிறது. (கடந்த மாசி, பங்குனி மாதங்களில் இரவில் மெல்ல ரோகிணி நட்சத்திரத்தை நெருங்கி மிகவும் அருகில் வந்து பின் தற்பொழுது மெல்ல மெல்ல அதிலிருந்து விலகி செல்வதை கொண்டிருப்பதை நாம் வானில் பார்க்க முடியும்; இந்த சித்திரை-1 ஆம் தேதியன்று சந்திரனும் இந்த ரோகிணிக்கு அருகில் வரும் பொழுது மாலை சூரிய வெளிச்சத்தில் கூட குருவை பார்க்கும் வாய்ப்புக் கிட்டலாம். ஏனென்றால், சந்திரன், குருவுக்கு மிகவும் அருகில் நெருங்கும்.). ரிஷபத்தில் இருக்கும் இந்த குரு இரண்டு மாதங்களில் மிதுனத்திற்கு வந்து விடும். 2015-16 இல் சிம்மராசியில் இருக்கும்; அந்த ஆண்டில் (21.04.2016-22.05.2016) உஜ்ஜயினியில் கும்பமேளா நடைபெறும்.

அவந்தி தேசம் வெற்றாவதி நதியால் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இந்த நதியின் தற்போதையப் பெயர் பேதவா (Betwa). வட அவந்தி தேசத்தின் தலைநகராக உஜ்ஜயினியும் தென்னவந்தியின் தலைநகராக மஹிஷமதி நகரமும் குறிப்பிடப்படுகின்றன.

புராணங்களின் படி சந்திரவம்ச ஹேஹயர்கள் (ஹைஹேயர்கள்) தான் முதலில் அவந்தியை ஆண்டு வந்தனர். இவர்களைப் பற்றிப் பின்னர் பார்க்கலாம்.

மஹாபாரதத்தில் பல இடங்களில் அவந்தி குறிப்பிடப்படுகிறது. கிருஷ்ணர் பலராமர் ஆகியோரின் குரு ஸாந்திபனி முனிவர் என்பவர். கிருஷ்ணரும் பலராமரும்  இவரிடம் அவந்தி தேசத்தின் உஜ்ஜயினியில் குருகுல வாசம் செய்ததாகக் குறிப்பிடுகிறது.

அவந்தி தேசத்தின் அரசர்களாக இருவர் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களின் பெயர் விந்தன், அனுவிந்தன். இருவரும் சகோதரர்கள். இவர்கள் ருக்மி, கம்சன், ஜராசந்தன் ஆகியோருடன் கூட்டு வைத்திருந்தவர்கள். தர்மர் ராஜசூய யாகம் நடத்திய பொழுது. அர்ஜுனன் வடக்கிலும், பீமன் கிழக்கிலும், நகுலன் மேற்கிலும் படை நடத்திச் செல்ல, சகாதேசன் தெற்கு நோக்கி அனுப்பப்பட்டான். கிருஷ்ணர் பாண்டவர்களின் நண்பர் என்பதால் சகாதேவனை இவர்கள் எதிர்த்தனர். சகாதேவன் இவர்களைத் தோற்கடித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. பின்னர் பாரதப் போரில் இவர்கள் (அவந்தி சகோதரர்கள்) கௌரவர் பக்கம் போரிட்டனர். இவர்கள் தனித்தனியே ஒரு அக்ஷௌனி படைக்குத் தலைமை தாங்கினார்கள். இவர்களின் வீரம் பல இடங்களில் துரியோதனன், பீஷ்மர், த்ரோணர், சஞ்சயன், த்ருதராஷ்டிரன் ஆகியோரால் புகழப்பட்டுள்ளது. கர்ணன் தலைமையில் கௌரவர் படைகள் போரிட்ட பொழுது விந்தனும் அனுவிந்தனும் அர்ஜுனனால் கொல்லப்பட்டனர். அவர்கள் இறந்த பின்னரும் அவந்தி தேசப்படைகள் கௌரவர்கள் சார்பில் போரிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொன்மங்களில் குறிப்பிடப்படும் பட்டி-விக்ரமாதித்த (மால்வ தேசத்தவனாகக் குறிப்பிடப்பட்டாலும்) இந்த அவந்தி தேசத்தின் தலைநகரான உஜ்ஜயினிதான் அவன் தலைநகரமாகவும் குறிப்பிடப்படுகிறது. போஜராஜன் (போஜர்களின் இனமும் மால்வா பகுதியைச் சேர்ந்ததாகவே குறிப்பிடப்படுகிறது) உஜ்ஜயினி நகரின் மரத்தடியில் தோண்டிய பொழுதே விக்ரமாதித்தனின் 32 பதுமைகள் கொண்ட சிம்மாசனம் கிடைத்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

 அசோகர் காலத்தின் 16 ஜனபாதைகளில் தெற்கு நோக்கி விதர்ப தேசத்தைத் தாண்டி ப்ரஸ்தானத்திற்குச் செல்லும் ஜனபாதையில் அவந்தி தேசம் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்தியாவில் ஏழு புண்ணிய க்ஷேத்திரங்கள் மோட்சத்தை அளிப்பவை என்று குறிப்பிடுவர். அது பற்றிய வடமொழி ஸ்லோகம் ஒன்று உள்ளது.

          ’அயோத்யா மதுரா மாயா காசி
                   காஞ்சி அவந்திகா
          பூரி, த்வாரவதி சைவ ஸப்தைத
                   மோக்ஷ தேயிகா’

இதில் அவந்தி-யும் குறிப்பிடப்படுகிறது.

திங்கள், ஏப்ரல் 01, 2013

ஆயிரம் ட்ரக் கழிவும் அழிந்து வரும் நதியும்



யமுனை நதியின் இன்றைய நிலைப் பற்றி முன்னரே சிலமுறை எழுதியுள்ளேன்.

இதில் ’யமுனா ஜியே அப்யான்’ (யமுனை வாழ்க/மீட்பு போராட்டம்) என்ற அமைப்பின் தலைவர் மஜோஜ் மிஸ்ரா என்பவர் சென்ற ஆண்டு தேசிய பசுமைத் தீர்பாயத்தில் யமுனையை மீட்க ஒரு வழக்கைப் பதிவு செய்தார். இதில் யமுனையை மாசு படுத்துபவர்களே அதை மீட்கத் தேவையாகும் செலவை ஏற்க வேண்டும் என்பது ஒரு கோரிக்கை. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

சென்ற ஜனவரி மாதம் யமுனையில் கட்டிடக் கழிவுகள் கொட்டுவதற்கு இந்தத் தீர்ப்பாயம் தடை  விதித்த்து.

சென்ற வாரம் இவ்வழக்குத் தீர்ப்பாயத்தின் வாதத்திற்கு வந்த பொழுது தீர்ப்பாயம் தில்லி அரசு மற்றும் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம், தில்லியின் மாநகராட்சிகள், மாநில நீர்வளத்துறைச் செயலர் ஆகியோரை யமுனையில் கொட்டப்படும் மாசுக்களின் அளவையும் அவற்றின் தன்மையையும் பற்றி அறிக்கை இரு வாரங்களுக்குள் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. மேலும், DDA,  தில்லி மெட்ரோ, உத்திர பிரதேச அரசு ஆகியவற்றை இந்த வருட மேமாத இறுதிக்குள் யமுனையில் கழிவுகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவருக்கு இந்த கழிவு அகற்றும் பணியைக் கண்காணிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

தில்லியில் மெட்ரோ தன் கட்டிடக் கழிவுகளை இரண்டு இடங்களில் கொட்டி வருகிறது. அவை  சராய் காலேகாவ்(ன்) (நிஜாமுதின் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது) என்ற இடமும்  சாஸ்த்ரி பார்க் என்ற இடமும் தான். ஆனால் இந்த இடங்களில் கட்டிடக் கழிவுகளைக் கொட்ட அவர்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையான அனுமதி எதுவும் பெறவில்லை. அவர்கள் கேட்டிருந்தாலும் கொடுத்திருக்க முடியாது. காரணம், இவை இரண்டும் நதியின் படுகைப் பகுதிகள். அரசு நிறுவனமான மெட்ரோவே அனுமதியில்லாமல் கழிவுகளை ஆற்றில் கொட்டிவந்துள்ளது என்றால் தனியார் நிறுவனங்களைப் பற்றிக் கூறவேத் தேவையில்லை.

இதன் முதல்கட்டமாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டுத் துறை செயலர் தலைமையில் ஒரு குழு நேற்று முன்தினம் யமுனையின் கழிவுகளை மேற்பார்வையிட்டது.

அப்பொழுது இந்தக் கழிவுகளில் பிலாஸ்டிக், திடக்கழிவுகள் பல இருந்தாலும் முக்கிய கழிவு கட்டிடக் கழிவு என்றும் இதற்கு மெட்ரோ, DDA  ஆகியவையே முக்கியக் காரணம் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், தற்போது ஹரியானா, உத்திர பிரதேசத்திலிருந்து கழிவு ஏற்றிவரும் லாரிகள் தில்லியில் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், இந்த லாரிகள் தங்கள் கழிவுகளை தில்லி எல்லையில் ஆற்றில் கொட்டிவிடுகிறார்கள். கழிவுகளை தில்லியில் கொட்டத்தான் அனுமதிக்க கூடாது; குறைந்த பட்சம் லாரிகள் கழிவுகளை எடுத்து தில்லியில் நுழைந்து மறுபுறம் எடுத்துச் செல்ல அனுமதிப்பதித்தாலாவது அவர்கள் நதியில் இதுபோல கொட்டுவது தடுக்க/தவிர்க்கப்படலாம்.

யமுனையாற்றின் கிழக்குப்பகுதியில் சுமார் 53000 கன மீட்டர் கழிவுகளும் மேற்குப் பகுதியில் 27000 கன மீட்டர் கழிவுகளும் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். ஆக மொத்தம் 90000 கன மீட்டர் கழிவுகள். அதாவது சுமார் 10000 ட்ரக் லோடு கழிவுகள். ஒரு ட்ரக்கிற்கு 2500 ரூபாய்கள் என்று வைத்துக் கொண்டாலும் 2 1/2 கோடி ரூபாயாவது செலவாகும்.
 
இந்தக் கழிவுகள் அகற்றப்பட்டாலும் மேலும் கழிவுகள் சேராமலும் இருக்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளில் தில்லி அரசு 10000 கோடி ரூபாய்களை நதியைத் தூய்மைப் படுத்த செலவிட்டுள்ளது. பயன் தான் எதுவுமில்லை. இந்த முயற்சி பலனளிக்க யமுனையின் துணைநதிகள் பலப்படுத்தப்பட வேண்டும். யமுனையின் பல துணையாறுகள் மெல்ல மெல்ல கழிவுகள் கொட்டி மூடப்பட்டு மேடாக்கப்பட்டு மனை நிலங்களாக ஆக்ரமிக்கப்படுகின்றன. யமுனையாற்றின் படுகைகளிலேயே பல மனை நிலங்களாக அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. உத்திரபிரதேசத்தின் நோய்டா, காஜியாபாத் பகுதிகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகள் யமுனையாற்றின் படுகைகளை ஆக்ரமித்தே கட்டப்பட்டுள்ளன. இதனால் நதியின் நீர்வரத்து மிகவும் குறைந்து விட்டன. ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாவிட்டால் ஆறு மீண்டும் மாசுபட்டுப் போகத்தான் செய்யும்.

இது போன்ற ஆக்ரமிப்புகள் தடுக்கப்படாத வரை, வெறும் கழிவு அகற்றலால் அதிக பலன் கிடைக்கும் என்றுத் தோன்றவில்லை….