யமுனை நதியின் இன்றைய நிலைப் பற்றி முன்னரே
சிலமுறை எழுதியுள்ளேன்.
இதில் ’யமுனா ஜியே அப்யான்’ (யமுனை வாழ்க/மீட்பு
போராட்டம்) என்ற அமைப்பின் தலைவர் மஜோஜ் மிஸ்ரா என்பவர் சென்ற ஆண்டு தேசிய பசுமைத்
தீர்பாயத்தில் யமுனையை மீட்க ஒரு வழக்கைப் பதிவு செய்தார். இதில் யமுனையை மாசு படுத்துபவர்களே
அதை மீட்கத் தேவையாகும் செலவை ஏற்க வேண்டும் என்பது ஒரு கோரிக்கை. இந்த வழக்கு இன்னும்
நிலுவையில் உள்ளது.
சென்ற ஜனவரி மாதம் யமுனையில் கட்டிடக்
கழிவுகள் கொட்டுவதற்கு இந்தத் தீர்ப்பாயம் தடை
விதித்த்து.
சென்ற வாரம் இவ்வழக்குத் தீர்ப்பாயத்தின்
வாதத்திற்கு வந்த பொழுது தீர்ப்பாயம் தில்லி அரசு மற்றும் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம்,
தில்லியின் மாநகராட்சிகள், மாநில நீர்வளத்துறைச் செயலர் ஆகியோரை யமுனையில் கொட்டப்படும்
மாசுக்களின் அளவையும் அவற்றின் தன்மையையும் பற்றி அறிக்கை இரு வாரங்களுக்குள் அளிக்கும்படி
உத்தரவிட்டிருந்தது. மேலும், DDA, தில்லி
மெட்ரோ, உத்திர பிரதேச அரசு ஆகியவற்றை இந்த வருட மேமாத இறுதிக்குள் யமுனையில் கழிவுகளை
அகற்ற உத்தரவிட்டுள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவருக்கு இந்த கழிவு
அகற்றும் பணியைக் கண்காணிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
தில்லியில் மெட்ரோ தன் கட்டிடக் கழிவுகளை
இரண்டு இடங்களில் கொட்டி வருகிறது. அவை சராய்
காலேகாவ்(ன்) (நிஜாமுதின் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது) என்ற இடமும் சாஸ்த்ரி பார்க் என்ற இடமும் தான். ஆனால் இந்த இடங்களில்
கட்டிடக் கழிவுகளைக் கொட்ட அவர்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையான அனுமதி
எதுவும் பெறவில்லை. அவர்கள் கேட்டிருந்தாலும் கொடுத்திருக்க முடியாது. காரணம், இவை
இரண்டும் நதியின் படுகைப் பகுதிகள். அரசு நிறுவனமான மெட்ரோவே அனுமதியில்லாமல் கழிவுகளை
ஆற்றில் கொட்டிவந்துள்ளது என்றால் தனியார் நிறுவனங்களைப் பற்றிக் கூறவேத் தேவையில்லை.
இதன் முதல்கட்டமாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டுத்
துறை செயலர் தலைமையில் ஒரு குழு நேற்று முன்தினம் யமுனையின் கழிவுகளை மேற்பார்வையிட்டது.
அப்பொழுது இந்தக் கழிவுகளில் பிலாஸ்டிக்,
திடக்கழிவுகள் பல இருந்தாலும் முக்கிய கழிவு கட்டிடக் கழிவு என்றும் இதற்கு மெட்ரோ,
DDA ஆகியவையே முக்கியக் காரணம் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், தற்போது ஹரியானா, உத்திர பிரதேசத்திலிருந்து
கழிவு ஏற்றிவரும் லாரிகள் தில்லியில் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், இந்த லாரிகள்
தங்கள் கழிவுகளை தில்லி எல்லையில் ஆற்றில் கொட்டிவிடுகிறார்கள். கழிவுகளை தில்லியில்
கொட்டத்தான் அனுமதிக்க கூடாது; குறைந்த பட்சம் லாரிகள் கழிவுகளை எடுத்து தில்லியில்
நுழைந்து மறுபுறம் எடுத்துச் செல்ல அனுமதிப்பதித்தாலாவது அவர்கள் நதியில் இதுபோல கொட்டுவது
தடுக்க/தவிர்க்கப்படலாம்.
யமுனையாற்றின் கிழக்குப்பகுதியில் சுமார்
53000 கன மீட்டர் கழிவுகளும் மேற்குப் பகுதியில் 27000 கன மீட்டர் கழிவுகளும் இருப்பதாகக்
கணக்கிட்டுள்ளனர். ஆக மொத்தம் 90000 கன மீட்டர் கழிவுகள். அதாவது சுமார் 10000 ட்ரக்
லோடு கழிவுகள். ஒரு ட்ரக்கிற்கு 2500 ரூபாய்கள் என்று வைத்துக் கொண்டாலும் 2 1/2 கோடி
ரூபாயாவது செலவாகும்.
இந்தக் கழிவுகள் அகற்றப்பட்டாலும் மேலும்
கழிவுகள் சேராமலும் இருக்க வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளில் தில்லி அரசு
10000 கோடி ரூபாய்களை நதியைத் தூய்மைப் படுத்த செலவிட்டுள்ளது. பயன் தான் எதுவுமில்லை.
இந்த முயற்சி பலனளிக்க யமுனையின் துணைநதிகள் பலப்படுத்தப்பட வேண்டும். யமுனையின் பல
துணையாறுகள் மெல்ல மெல்ல கழிவுகள் கொட்டி மூடப்பட்டு மேடாக்கப்பட்டு மனை நிலங்களாக
ஆக்ரமிக்கப்படுகின்றன. யமுனையாற்றின் படுகைகளிலேயே பல மனை நிலங்களாக அடுக்கு மாடிக்
கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. உத்திரபிரதேசத்தின் நோய்டா, காஜியாபாத் பகுதிகளில்
சுமார் 1500க்கும் மேற்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகள் யமுனையாற்றின் படுகைகளை
ஆக்ரமித்தே கட்டப்பட்டுள்ளன. இதனால் நதியின் நீர்வரத்து மிகவும் குறைந்து விட்டன. ஆற்றில்
போதிய நீர்வரத்து இல்லாவிட்டால் ஆறு மீண்டும் மாசுபட்டுப் போகத்தான் செய்யும்.
இது போன்ற ஆக்ரமிப்புகள் தடுக்கப்படாத
வரை, வெறும் கழிவு அகற்றலால் அதிக பலன் கிடைக்கும் என்றுத் தோன்றவில்லை….
ஆக்ரமிப்புகள் தடுக்கப்படுவதே தீர்வாக அமையும் ..
பதிலளிநீக்குவருகைக்கு நன்றிகள்!
நீக்குபார்க்கவே கொடுமையான நிலைக்கு வந்து விட்டது நம் யமுனா நதி. கொட்டிய குப்பைகளுக்கு நடுவே வீணாகப் போன பல ஆயிரம் கோடி ரூபாய்களும் தெரிகிறது.... :(
பதிலளிநீக்குமெல்ல மெல்ல கூவத்திற்கு இணையாக சாக்கடையாகி விடும் போலிருகிறது. ஏதோ மழைக்காலத்தில் நதியில் வெள்ளம் வருவதால் அந்த அளவுக்கு மோசமாவது தடுக்கப்படுகிறது.
நீக்குவருகைக்கு நன்றிகள் வெங்கட்!
ஆறுகள் தொடர்ந்து மாசுபடுத்தப் படுவது கவலைக்குரியது.அரசு இதற்குஅதிக முக்கியத்துவம் தர வேண்டும். நவீன மயமாதலின் விளைவுகளில் இதுவ ஒன்று. நல்ல பதிவு வெங்கட். ஸ்ரீநிவாசன்
பதிலளிநீக்குஆம் முரளி! நகரமயமாக்களும் ஒரு காரணம். கட்டுமானப்பணிகளைத் திட்டமிடும் பொழுதே கழிவு அகற்றலைக் கருத்தில் கொள்ளாமல் இருப்பது முக்கியக் காரணம்.
நீக்குவருகைக்கு நன்றிகள்!
வெங்கட ஶ்ரீனிவாசன்,
பதிலளிநீக்குமிக அவசியமானப்பதிவு.
அரசு எந்திரங்களே முன்னின்று மாசுப்படுத்திவிட்டு,பொதுமக்களுக்கு நகரை சுத்தமாக வைத்திருங்கள் என போதிப்பார்கள்.
மதுராப்போகிறவழியில் தென்ப்படும் யமுனை ஆற்றில் கடுகு எல்லாம் பயிரிட்டு இருப்பதைப்பார்த்துள்ளேன்,நடுவில கொஞ்சமா பேருக்கு ஆறு இருக்கு.
நகர்ப்புரத்தில் இருக்கும் நீர் நிலைகள் மாசடைவதில் அரசின் பங்கே அதிகம்.
எக்மோர்- சென்ட்ரல் இடையே கூவத்தில் நகரின் பாதாள சாக்கடையை நேராக திறந்துவிட்டிருப்பார்கள்,அரசே இப்படி பல இடங்களில் சாக்கடையை கூவத்தில் கலக்கிறது,அப்புறம் எப்படி கூவம் சுத்தம் ஆகும்.
அதே போல பெரிய நிறுவனங்களும் செய்கின்றன, அம்பா ஸ்கை வாக்கின் சாக்கடை கூட கூவத்தில் தான் விடப்படுகிறது,இதுக்கெல்லாம் அரசு தெரிந்தே அனுமதிக்குது போல.
நீங்கள் கூறுவதும் சரிதான் வவ்வால்!
நீக்குஅரசு மட்டுமல்ல எதிர்கட்சிகளும் இதை எதிர்த்துக் குரல் கொடுப்பதில்லை
ஒருவேளை, நீர் விநியோகத்தில் தனியாரை ஈடுபடுத்தச் செய்யும் hidden agenda-வும் இதில் இருக்கிறதோ என்னவோ?
யமுனையின் நீளம் தில்லியில் வெறும் 22 கி.மி தான்; அதாவது 2% தான். ஆனால், யமுனையின் 75% மாசுக்கு தில்லி தான் காரண்ம். இத்தனைக்கும் தில்லியில் பெரிய தனியார் தொழிற்ச்சாலைகள் இல்லை; அவை அனைத்தும் தேசிய தலைநகர் பகுதி என்ற தில்லியை ஒட்டிய நோய்டா, குர்காவ்ன், ஃபரிதாபாத், காஸியாபாத் ஆகிய இடங்களில் தான் உள்ளன. இருந்தும் இந்த நிலைமை!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!
யமுனையாற்றிலே ஈரக்காற்றிலே கண்ணணோடு நான் ஆட!
பதிலளிநீக்குயமுனையாற்றிலே நாறக்காற்றிலே மூக்குப் பொத்தி நாம் ஒட!
என்ன கொடுமை சீனு. இதற்குத் தீர்வுதான் என்ன?
ஆக்ரமிப்புகள் தடுக்கப்படுவதே தீர்வாகும்.
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள
சரஸ்வதி நதி போல்
பதிலளிநீக்குஒருநாள் யமுனாவும்
காணாமல் போகும்
சரஸ்வதி நதி போல் ஒருநாள் யமுனாவும் காணாமல் போகும்
பதிலளிநீக்குநல்ல பகிர்வு. ஆக்கிரமிப்புகளால் நதிகளும் அழிந்துகொண்டுபோவது கவலைதருகின்றது.
பதிலளிநீக்கு