வெள்ளி, மே 26, 2017

நெடுவாசல் திற!

நெடுவாசல் திற!
[வல்லமை இதழின் 113-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]

ஆற்றில் போட்டாலும்
அளந்து போடச் சொன்னார்கள்
ஆற்று மணல் தானெடுத்து
அழிவு நோக்கிப் போகின்றோம்

அணைக்கட்டி நீரதனைக்
காக்கும்வழிக் கண்டார்கள்
மனை போட்டு விற்றுவிட
சூழ்ச்சி பல செய்திட்டோம்

சுட்டெறிக்கும் சூரியன்
வெட்டவெளிக் காடு
பட்டுப்போன நிலமென்று-கை
கட்டி தினம் நின்றிருந்தோம்

பட்டினியைப் போக்குமொரு
பயிர் வளர்க்கும் பருவந்தனில்
கொட்டுகிற மழைக்குக்
காத்துக்கண் பூத்திருந்தோம்

கொட்டும் மழைக்காலத்திலோ-நீர்க்
காக்கும்வழி விட்டுவிட்டு
வறட்டு வாதம் பேசி நம்முள்
பிளவுபட்டு நின்றிருந்தோம்

மாரிமழைப் பொழியுமுன்னே
ஏரி குளம் வாவியெனும்
நீராதாரம் தூர்வாரி
சீரமைத்துக் காத்திடுவோம்

வீட்டுமனையாகிவிட்ட நிலம்
மீட்டு, தேன் குடிக்கும் ஊழல் நரி
கொட்டமதை அடக்கிடுவோம்;
நன்நீர் கிட்ட வழிசெய்வோம்.

பயிர் வளர்த்து உயிர் காக்கும்
அய்யாக்களைக் கண்ணாகக் 
காக்க வழிசெய்யும் தலைமைக்கு
நெடுவாசல் திறந்துவைப்போம்!!!

4 கருத்துகள்:

  1. ஆதங்கத்தைப் பதிவு செய்த விதமும்
    நம்பிக்கையூட்டும்படியாய்
    கவிதையை முடித்த விதமும்
    மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் இரமணி!

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கு நன்றிகள் முரளி!

      போட்டியின் முடுவுகள் இங்கே:
      http://www.vallamai.com/?p=77220

      நீக்கு