வெள்ளி, ஏப்ரல் 06, 2012

புனித வெள்ளியும் உயிர்த்தெழுந்த ஞாயிறும்


இன்று (6.4.2012) புனித வெள்ளி நாளாக-வும் வரும் ஞாயிறு (8.4.2012) ஏசுபிரான் உயிர்த்தெழுந்த நாளாகவும் பெரும்பாலான கிருத்துவர்களால் கொண்டாடப் படுகிறது.

பொதுவாக கிருஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அதே டிசம்பர் 25-ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. ஆனால், புனித வெள்ளியோ வெவ்வேறு தினங்களில் – வெவ்வேறு தேதிகள் மட்டுமல்ல, வெவ்வேறு வெள்ளிக்கிழமைகளில் கொண்டாடப் பட்டு வருகின்றன. அப்படியானால் கிருத்துவர்கள் எந்த நாட்காட்டியின் அடிப்படையில் இப்பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள் என்ற கேள்வி நம் மனதில் எழும்.

இப்போது அதன் விவரங்களைப் பார்ப்போம்…

போதுவாக புனித வெள்ளி என்பது ஏசுபிரான் உயிர்த்தெழுந்த நாளாகக் கொண்டாடப்படும் ‘ஈஸ்டர்’ நாளுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகக் கொண்டாடப்படுவது ஆகும்.

புனித வெள்ளி மற்றுமல்லாது சற்றேறக்குறைய 10 கிருத்துவப் பண்டிகைகள் (குறிப்பாகக் கத்தோலிக பண்டிகைகள்) ஈஸ்டர் தினத்தை ஒட்டியே (அதாவது அந்த ஈஸ்டர்-தினத்திலிருந்து கணக்கிடப்பட்டே) கொண்டாடப்படுகின்றன.

இந்த ஈஸ்டர் தினம் பல்வேறு சமயங்களில் பல மாறுதல்களையும் கூடவே சர்ச்சைகளையும் கண்டுள்ளது. அவற்றுள் நான்கை மிக முக்கியமானதாகக் கூறுகின்றனர்.

முதலில்,  ஏசு சிலுவையில் உயிர் த்யாகம் செய்த வருடம் கி.பி. 1-ஆம் ஆண்டாகக் கருதப்படுகிறது (இதற்கு முந்தய வருடம் 0 அல்ல அது கி.மு. 1-ஆம் வருடம் – இதைப் பற்றி வேறு சமயத்தில் பார்க்கலாம்). ஆனால், இது எந்த தேதி-யில் நிகழ்ந்தது என்பது பற்றி சரியான குறிப்புகள் இல்லை. குறிப்புகள், இது யூதர்களின் பஸ்சல் மாத பௌர்ணமியைத் தொடர்ந்து வந்த ஞாயிறன்று நிகழ்ந்ததாகக் கூறுகின்றன.

இதையொட்டி, கி.பி.190-வரை, யூதர்களின் புனித பலி தினத்திலிருந்து (யூதர்கள் பயன்படுத்துவது சந்த்ர-சௌர நாட்காட்டி; இந்த புனித பலி நிஸான் மாதத்தின் புது நிலவு நாளில் கொண்டாடப்படும்)  14-வது நாள் வரும் பஸ்சல் பௌர்ணமி அன்று கொண்டாடப்பட்டு வந்தது. அதாவது, பௌர்ணமியன்று ஞாயிறாக இல்லையென்றாலும் அது ஈஸ்டராகக் கொண்டாடப்பட்டது. அதற்கு, இரண்டு நாட்களுக்கு முன் தியாக தினமாகக் (புனித வெள்ளியாக அல்ல புனித தினமாக) கொண்டாடப்பட்டது.

190-ஆம் வருடம் போப் முதாலம் விக்டர் ஈஸ்டரை யூதர்களின் பஸ்சல் பௌர்ணமிக்கு பின் வரும் ஞாயிறன்று கொண்டாடச் செய்ததே முதல் குறிப்பிடத்தக்க மாற்றம். ஆனாலும் சிலர் இதை ஏற்கவில்லை.

பின் இரண்டாவதான மாற்றம் 325-ஆம் வருடம், நிசியா கவுண்சில் மீண்டும் ஞாயிறன்று கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியதே. பெரும்பாலான கிருத்துவ சபைகள் ஈஸ்டரை ஞாயிறன்றே கொண்டாடத் துவங்கின. அதே போல் புனித வெள்ளியும் கொண்டாடப் பட்டது.

பின்னர் 590-604 வரை இருந்த புனித க்ரெகோரி சமயத்தில் கிருத்துவ பண்டிகையைக் கொண்டாட யூதர்களின் மாதத்தை ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கருதப்பட்டு, வெர்னல் ஈக்வினாஸ் என்று கூறப்படும் வசந்தகால சம இரவு-பகல் நாளுக்கு பின் வரும் பௌர்ணமிக்குப் பிந்தைய ஞாயிறு அன்று கொண்டாடத் தீர்மாணிக்கப்பட்டது. பெரும்பாலான, பாரம்பரிய கிழக்கு கிருத்துவ சபைகள் இதை எதிர்த்தன.

தற்போது கிருத்துவர்கள் உபயோகிப்பது உலகம் முழுவதும் பொதுவாக ஏற்கப்பட்டுள்ள க்ரெகேரியன் நாட்காட்டியாகும். இது கி.பி. 1582-ஆம் ஆண்டு போப் க்ரெகோரி-யால் (இவர் பெயரும் 5- நூற்றாண்டின் புனித க்ரெகேரியின் பெயர் தான்) நியமிக்கப்பட்ட குழு-வின் ஆலோசனையின் பெயரில் தயாரிக்கப்பட்டது. இவர் பெயராலேயே க்ரெகேரியன் நாட்காட்டி என்று அழைக்கப்படுகிறது.  இதில் உண்மையான ஈக்வினாக்ஸுக்கும் பழைய ஜூலியன் நாட்காட்டியில் கணக்கிடப்பட்ட ஈக்வினாக்ஸுக்கும் இடையே 10 நாட்கள் வித்யாசம் இருப்பது கணிக்கப்பட்டு, அவ்வருடம் (1582) அக்டோபர் 4-ம் தேதி(ஜூலியன் முறையில்)க்குப் பிறகு 10 நாட்கள் நீக்கப்பட்டு அக்டோபர் 15-ம் தேதி (க்ரெகேரியன் முறையில்)யாகக் கொண்டு திருத்தப்பட்டன.  முதலில் ப்ரொடஸ்டண்ட் கிருஸ்த்துவ நாடுகள் இதனை ஏற்க மறுத்தாலும் நாளடைவில் அவையும் (குறிப்பாக ரஷ்யா, க்ரீஸ் போன்ற நாடுகள் 20-ஆம் நூற்றாண்டில் மாறிய பொழுது 13 நாட்களை நீக்கி) இந்த க்ரெகேரியன் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டன.

இடையில் பிரிட்டன் அரசு தனது பாராளுமன்றத்தில், ஏப்ரல் மாத இரண்டாம் சனிக்கிழமைக்குப் பின் வரும் ஞாயிறை (ஏப்ரல் 8-15 இல் வரும் ஞாயிறு) ஈஸ்டராகக் கொண்டாட சட்டம் இயறவும் முயன்றது.

கீழை பாரம்பரிய கிருத்துவ சபைகள் சில (குறிப்பாக ஆசியா மைனர் பகுதியைச் சேர்ந்தவை) இன்னமும் இந்த க்ரெகேரியன் முறையை ஏற்காத நிலையில் 1997-ஆம் ஆண்டு ஒரு முயற்சி நடந்தது. 2000 ஆண்டுக்குப் பின் உலகம் முழுவதும் ஒரே நாளில் ஈஸ்டர் கொண்டாட அனைத்து கிருஸ்த்துவ சபையின் மாநாட்டில் முடிவு செய்யப் பட்டது. ஆனால், இது இன்னமும் நடைமுறையில் வரவில்லை.

2011-ஆம் ஆண்டில்  ஈக்வினாக்ஸைத் தொடர்ந்த  பௌர்ணமி இரண்டு நாட்காட்டிகளிலும் ஒரே நாளில் வந்தது; அதனால், ஈஸ்டர் ஒரே நாளில் கொண்டாடப் பட்டது. 

ஆனால், இந்த ஆண்டு க்ரிகேரிய முறையில் இன்று புனித வெள்ளியாகவும், ஜூலியனில் 13-ஆம் தேதி புனித வெள்ளியாகவும்  வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான கத்தோலிகத் திருச்சபைகள் வாடிகனைத் தலைமை பீடமாக ஏற்றவை. அதனால், இந்தியாவைப் பொறுத்தவரை இன்றுதான் புனித வெள்ளி தினம்.
 
எப்படி இருந்தால் என்ன... பண்டிகைகளின் நோக்கமே அந்த த்யாகத்தையும் கருணையையும் நினைவு கூர்ந்து  அதைப் போற்றுவது தானே!

ஆகவே, அனைத்து நண்பர்களுக்கும் புனித வெள்ளி மற்றும் உயிர்த்தெழுந்த தின நல்வாழ்த்துகள்.

5 கருத்துகள்:

  1. எப்படி இருந்தால் என்ன... பண்டிகைகளின் நோக்கமே அந்த த்யாகத்தையும் கருணையையும் நினைவு கூர்ந்து அதைப் போற்றுவது தானே!

    இனிய் புனித் வெள்ளி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. பண்டிகைகளின் நோக்கமே அந்த த்யாகத்தையும் கருணையையும் நினைவு கூர்ந்து அதைப் போற்றுவது தானே!

    ஆகவே, அனைத்து நண்பர்களுக்கும் புனித வெள்ளி மற்றும் உயிர்த்தெழுந்த தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. @ வெங்கட், இராஜராஜேஸ்வரி

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு