திங்கள், மே 06, 2013

குட்டிச் சுட்டீஸ் – ஒரு கோரிக்கை


சன் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிறு மாலையும் ‘குட்டிச் சுட்டீஸ்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


90களின் இறுதியில் (1999-2000) தூர்தர்ஷனில் DD-II என்ற சேனல் வந்து கொண்டிருந்தது. அதை DD-மெட்ரோ என்ற பெயரில் அழைத்து வந்தனர். நான்கு மெட்ரோ நகரங்களிலும் இதில் நிகழ்ச்சிகள் 9 கோல்ட் என்ற தனியார் நிறுவனத்தின் கூட்டுடன் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வந்தன. பின்னர் ஒன்றிரண்டு ஆண்டுகளில் இந்த 9 கோல்ட் ஸ்டார் டிவியுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பின் இது நிறுத்தப்பட்டுவிட்ட்து.

இதில் தில்லி மெட்ரோவில் ‘போல் பேபி போல்’ என்ற நிகழ்ச்சி நட்த்தப்பட்டு வந்தது. இந்தக் ’குட்டிச் சுட்டிஸ்’ நிகழ்ச்சி அந்நிகழ்ச்சியிலிருந்து வடிவமைக்கப்பட்ட்தே.

இந்த நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சியில் ‘சொல்லுங்கண்ணே’ புகழ் இமான் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு உள்ள அவர் தொகுத்து வழங்குவதால் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அனைவருக் கண்டு களிக்கும் வகையில் நட்ததப்பட்டு வருகிறது. சன் குழுமத்தின் தெலுங்கு சேனல்களில் இந்நிகழ்ச்சி பின்னணிப் பாடகர் மனோ அவர்களால் தொகுத்து வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் இமான் கேட்கும் கேள்விகளுக்குக் குழந்தைகள் அளிக்கும் பதில்கள் மிகவும் கலகலப்பாக இருக்கும். அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க ஒரு நல்ல நிகழ்ச்சி. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், நிகழ்ச்சியில் ஒரே ஒரு விஷயம் மட்டும் சற்று நெருடலாக இருக்கிறது. இமான் நிகழ்ச்சியில் அடிக்கடி தன் உருவத்தையும் தன் நிறத்தையும் கிண்டலடித்துக் கொண்டோ அல்லது குழந்தைகளை அதைப் பற்றி கிண்டல் அடிக்கும் விதத்திலோ கேள்விகளைக் கேட்கிறார். அனைவரும் அதைக் கேட்டு சிரிக்கிறார்கள்/சிரிக்கிறோம்.
 
ஆனால், இது குழந்தைகளிடம் அடுத்தவரின் உருவத்தையும் நிறத்தையும் (குறிப்பாக கரு நிறத்தில் இருப்பவர்களை) கிண்டல் செய்ய மேலும் தூண்டிவிடும். நாளடைவில், உடல் குறைப்பாடு உள்ளவர்களையும் கிண்டல் செய்வதிலும் இது வளர்ந்து விடும்.

இது சிறு குறை தான் என்றாலும் சிறு குழந்தைகளின் மனதில் இது போன்ற மாசுகளை மேலும் ஏறவிடாமல் செய்வது ஊடகங்களின் கடமை. அதிலும் குடும்பத்துடன் இணைந்து கண்டுகளிக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளில் இந்த குறைபாட்டை நிறுத்துவது மிகவும் அவசியம்.

இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு மிகுந்த இமான் போன்றவர்களால் இது போன்ற குறைகள் இல்லாமலும் நடத்த முடியும்.

சன் தொலைக்காட்சியும் இமான் அவர்களும் இந்தக் குறையை நீக்கி மேலும் சிறப்புடன் நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்பதே நம் கோரிக்கை.

8 கருத்துகள்:

  1. இமான் அவர்கள் மாறுவாரா...? பார்ப்போம்...

    பதிலளிநீக்கு
  2. சரியான வேண்டுகோள்தான். அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்து வருகிறேன்,அம்மாவை அப்பா அடிப்பார/அப்பாவை அம்மா எப்படி திட்டுவாங்க இது போன்ற கேள்விகள் எல்லாம் தவிர்க்கப் படலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் முரளி, கடந்த 20-30 வருடங்களாக அடுத்தவரை அடிப்பதையே அல்லது அடிவாங்குவதையே சிறந்த நகைச்சுவையாக நமது திரைப்படங்களும் காட்சி படுத்துகின்றன என்பதையும் இங்கே கவனிகக வேண்டியுள்ளது.

      வருகைக்கு நன்றிகள்!

      நீக்கு
  3. சரியான கோரிக்கை தான் சீனு. உருவமோ நிறமோ வைத்து யாரையும் கிண்டல் செய்யக் கூடாதென்பதை சிறுவயதிலேயே சொல்லிக் கொடுத்தல் சரியான விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ’உருவுகண்டு எள்ளாமை வேண்டும்உருள் பெருந்தேர்க்கு
      அச்சாணி அன்னார் உடைத்து.’

      என்று சிறுவயதில் திருக்குறள் படித்துள்ளோம். ஆனால், நடைமுறையில் இதை மறந்து விட்டு பிறரைக் கேலி செய்கிறோம்.

      வருகைக்கு நன்றிகள்

      நீக்கு
  4. ஒருதடவை இந்நிகழ்ச்சி பார்த்தேன் . நீங்கள் சொல்வதுபோல சில விடயங்களை தவிர்த்தால் நிகழ்ச்சி நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு