புதன், ஜூலை 01, 2015

லீப் நொடி

லீப் நொடி


ஒரு நாள் என்பது பூமி தன்னைத் தானே சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம். ஆனால், பூமி எப்பொழுதும் ஒரே வேகத்தில் சுற்றுவதில்லை. அதன் சுழற்சி புவியின் ஈர்ப்பு விசை, சந்திரனின் ஈர்ப்பு விசை, காற்று சீதோஷணநிலை, புவிமையத்தின் தன்மை, புவித்தட்டின் (tectonic plates) நகர்வு என்று பல காரணங்களை அடிப்படையாகக் கொண்டது.

ஒரு நாள் என்பது சராசரியாக 24 மணி நேரத்தைக் கொண்டது. அதன் அடிப்படையில், ஒரு நொடி என்பது ஒரு நாளின் 1/86400 (60 X 60 X 24) பகுதியைக் கொண்டது. ஆனால், தற்போது சர்வதேச நேரம் என்பது சீசியம் அணு கடிகாரத்தின் மூலம் கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில் சீசியம் அணு மாறுபடாத வெப்பநிலையில் (0 டிகிரி கெப்லர்-இல்) 9192631770 நுண்ணலைகளை(radiations)ப் பரப்பும் கால அளவு ஒரு நொடியாகக் குறிக்கப்படுகிறது.

அணு கடிகாரத்தின் அடிப்படையில் பூமி தன்னைத் தானேச் சுற்றிக் கொள்ள 86400.025 நொடிகளை எடுத்துக் கொள்கிறது. (சில ஆய்வுகள்,  86400.0031 நொடிகள் என்றும் குறிப்பிடுகின்றன. மேலும், பூமியின் சுழற்சி வேகம் மேலும் மேலும் குறைவதாகவும் கூறப்படுகிறது.) அதாவது, பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரத்திற்கு மேலாக ஆயிரத்தில் இரண்டு அல்லது மூன்று பங்கு நொடிகள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.

இதன் அடிப்படையில் 1972-ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிட்ட சில நாட்களில் (ஜூன் 30 அல்லது டிசம்பர் 31-ஆம் தேதி இரவு) 12.00 மணிக்கு ஒரு நொடி நீட்டிக்கப்படுகிறது. அதாவது சாதாரணமாக 11.59.59 நொடிக்குப் பின் அடுத்த நாளின் 00.00.00 நொடியாக மாறுவதற்கு மாறாக ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் 11.59.59 க்குப் பின் 11.59.60 என்றும் அதன் பின் அடுத்த நாளின் 00.00.00 நொடியாகவும் குறிக்கப்படுகிறது.  சர்வதேசநேரத்திற்கும் இந்திய நேரத்திற்கும் 5.30 மணி நேர வேறுபாடு உள்ளதால், இந்த லீப் நொடி ஜூலை 1-ஆம் தேதி காலை 5.29.59க்குப் பிறகு 5.29.60 என்றும் அதன் பிறகு 5.30.00 என்றும் குறிப்பிடப்படும்.

1972-ஆம் ஆண்டு முதல் இதுவரை 24 முறை இந்த லீப் நொடி ஏற்கப்பட்டுள்ளது. இது 25-ஆவது முறை. இதன் விவரங்களை ’நின்றஒரு நொடி’ என்ற தலைப்பில் பக்கத்தில்  ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்.

ஒரு நொடி வேறுபாடு என்றாலும் கணிணி மயப்படுத்தப்பட்ட இந்த நாட்களில் இது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை 2012-ஆம் ஆண்டு ஜூன் 30இல் நடந்த லீப் நொடி மாற்றம் reddit, Mozilla, foursquare ஆகிய தளங்களை வெகுவாக பாதித்தது. Amedeus மென்பொருள் பாதிப்பால் ஆஸ்த்ரேலியாவின் க்வாண்டாஸ் விமானம் தன் 50-க்கும் மேற்பட்ட விமானங்களைத் தாமதப்படுத்த/ரத்து செய்ய நேர்ந்தது.


இந்த முறை google தன் கடிகாரத்தில் லீப்  நொடிகளைப் பயன் படுத்தாமல்  கடைசி சில நொடிகளை நீட்டித்து சர்வதேச நேரத்திற்கு சமனாக்க முடிவெடுத்துள்ளது. அமேசான்-உம் லீப் நொடி இல்லாமல் வேறு ஏற்பாடு செய்யப் போவதாகக் கூறியுள்ளது.

6 கருத்துகள்:

  1. நல்ல கட்டுரை; இதைப் பற்றி நானும் எழுத வேண்டும் நினைத்துக் கொண்டிருதேன்.
    நீண்ட நாட்களாயிற்று மீண்டும் தொடர்ந்து எழுத வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் முரளி!

      நீக்கு
  2. மாற்றத்தை அறிந்தேன்... விளக்கங்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  3. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று ஒரு பதிவு. வாழ்த்துகள்.

    மேலும் தொடர வாழ்த்துகள் சீனு.

    பதிலளிநீக்கு