வெள்ளி, மார்ச் 16, 2012

இளைய முதல்வர்


நேற்று, உத்திரப் பிரதேச் முதல்வராக அகிலேஷ் யாதவ் பதவியேற்றார். 38-வயதில் முதல்வராகப் பதவியேற்கும் அகிலேஷ், இந்தியாவின் மிக இளைய வயது முதல்வர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவருடன் முலாயம் சிங்-இன் சகோதரர் சிவபால் சிங் யாதவ்-உம், கட்சியின் மூத்த தலைவர் முஹமத் அஸம் கான்-உம் பதவியேற்றனர். முலாயம், [இவர்கள் இருவரையும் சமாதானப் படுத்தியே தன் மகன் அகிலேஷ் பதவியேற்க வழி செய்தார்.]

ஆனால், அவருடன் பதவியேற்ற நாற்பத்தி ஏழு அமைச்சர்களில், நான்கு பேர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகளும் குற்றச்சாட்டுகளும் உள்ளன. அதிலும், குறிப்பாக “ராஜூ பையாஎன்று அழைக்கப்படும் ராஜா ரகுராஜ் ப்ரதாப் சிங்; இவர் மீது ஆள் கடத்தல், கொள்ளை என்று பல்வேறு கிரிமினல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில், உள்ளன.

உத்திரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் சென்ற ஆட்சியின் (2003-07) மேலுள்ள முக்கியக் குற்றச்சாட்டே அவர்கள் ஆட்சியில் நடைபெற்றக் கிரிமினல் குற்றங்களே; அதிலும் குறிப்பாக அதில் அரசியல்வாதிகளின் பங்கும் அதற்கு ஆளும் கட்சி கொடுத்த ஆதரவும் அரசின் செயல்கள் (அல்லது செயலற்ற நிலை) தான்  வெகுவாக விமர்சிக்கப் பட்டது.

இந்நிலையில், இம்முறை முந்தய ஆட்சியின் தவறுகள் திரும்ப நடக்காது என்ற நம்பிக்கை, இம்முறை கிரிமினல் வழக்குகள் உள்ள முன்னாள் கட்சித் தலைவர்களுக்கு (குறிப்பாக டி.பி.யாதவ் போன்றவர்கள்) தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டபோது, தோன்றியது. அதிலும், இம்முறை முலாயம் சிங்-கும் அவர் மகன் அகிலேஷ் யாதவ்-உம் மேற்கொண்ட பிரசாரங்களும் அந்நம்பிக்கையை வலு செய்தன.

ஆனால் தற்போது ராஜு பையா-வை அமைச்சர் ஆக்கியதன் சமாஜ்வாதி கட்சி எதிரான பழைய கவலைகள் மீண்டும் தலைத் தூக்கியுள்ளன. இத்தனைக்கும் ராஜா பையா சமாஜ்வாதி கட்சி சார்பில்  போட்டியிட்டு வென்ற உறுப்பினர் இல்லை; சுயேச்சை உறுப்பினர்தான். சமாஜ்வாதி கட்சி தனிப்பெரும்பான்மை  பெற்று ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் அவரை அமைச்சரவையில் சேர்த்துள்ளது தவிர்த்திருக்க முடிந்த ஒரு நிலை தான். ஒருவேளை, அவர் முதல்வர் ஆவதற்குக்காகக் கொடுத்திருக்கும் விலையாகக் கூட இருக்கலாம்.

தவிரவும் அவரது பதவியேற்பின் போது அவரது கட்சியினர் மேடையிலேயே செய்த ரகளையும் போலிஸ் அதைத் தடுக்கக் கூட இயலாத நிலையில் இருப்பது மேலும் கவலைத் தருகின்றன.

பதவியேற்று ஒரு நாள் தானே ஆகியுள்ளது; போகப்போக ஆட்சியையும் கட்சியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார் என்று நம்புவோம்!

இதுதான் இன்றைய நிலையில் அவருக்கு முக்கிய சவால்!

4 கருத்துகள்:

  1. எதிர்பார்த்ததே.... இப்போது இவர்கள் ஆட்சி.. ஐந்து வருடத்திற்கு கேள்வி இல்லாமல் அடிக்கலாம்.... :(((

    பதவி ஏற்பு முடிந்தவுடனே நிகழ்ந்தவை பார்த்தேன் - புகைப்படங்களில்.... வெட்கம்....

    பதிலளிநீக்கு
  2. ”புதிய் மொத்தையில் பழைய கள்” என்பார்கள். அதே போல் பழைய அமைச்சர்கள் அதே இலாகாவில்; 47 அமைச்சர்கள் இருந்தும், முதலமைச்சரிடம் 50-க்கும் அதிகமான இலாகாகள். என்ன விதமான ஆட்சியாக இருக்கும் என்பதை இப்போதே உணர முடிகிறது.

    பதிலளிநீக்கு
  3. நூறு சதவிகித மாற்றத்தை எப்படியும் எதிர்பார்க்க முடியாதுதான். குறைந்தபட்சம் முலாயம் தானே உட்காராமல் இளையதலைமுறைக்கு இடம் கொடுத்தாரே. ஆனால் நம் ஊரில்!!! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவற்றை கட்டிக் காக்க, தொண்ணூறு வயதிலும் கண்ணியத்தோடு கடமையாற்றுவேன், பதவியை யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று கட்டுப்பாடோடு உழைக்கிறாரே, ஒரு மனிதர். அவரை நினைத்தால் கண்கள் கசிகிறது. நெஞ்சம் நனைகிறது.

    பதிலளிநீக்கு
  4. //கண்கள் கசிகிறது. நெஞ்சம் நனைகிறது.//
    பத்து உங்களுக்குத் தமிழ் தெரியவில்லை, அது ’கண்கள் பனித்தன; இதயம் (இ)நனைந்தன’ என்று இருக்க வேண்டும். பாவம் அவர் என்ன செய்வார். தகுதி இரண்டாம் மகனுக்கு இருக்கிறது. முதல் மகனும் இரண்டாம் மனைவியும் (மன்னிக்கவும் துணைவியும்) அதற்கு முட்டுக்கட்டு. 1989-ல் வாய்ப்பு இருந்தது.(அப்பொழுது முதல் மகனுடன் பிணக்கு; மகள் திருமணம் நடந்து முடிந்த தருணம்.) அப்பொழுது 13 வருட வனவாசம் இருந்ததால், ஒரு முறை ஆண்டு பார்த்து பின் மகனுக்குக் கொடுக்கலாம் என்று நினைத்திருப்பார். பின்னர், அவர்கள் போட்டிக்குத் தயாராகிவிட்டனர்.

    பதிலளிநீக்கு