வெள்ளி, ஏப்ரல் 27, 2012

பெண்களுக்குத் தலைக்கவசம்


 
சில தினங்களுக்கு முன் ஒரு பொதுநல வழக்கில் தில்லி அரசு, இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் தலைக்கவசம் அணியத் தேவையில்லை என்று கூறியதை இங்கே எழுதியிருந்தேன்.

இப்பொழுது, தில்லி உயர் நீதி மன்றம் (முக்கிய நீதிபதி ஏ.கே.சிக்ரி மற்றும் நீதிபதி ராஜீவ் சஹாய் அடங்கிய பெஞ்ச்) இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் பெண்கள் தலைக் கவசம் அணிய வேண்டியதைக் கட்டாயமாக்கியுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இதற்கு ஏதுவாக விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர அரசுக்கும் ஆணையிட்டுள்ளது.

மத்திய அரசின் மோட்டர் வாகனச் சட்டம், 1993-ஐப் பொறுத்தவரை பெண்களுக்குத் தனியாக சலுகைகள் ஏதும் வழங்கப்படவில்லை என்றாலும், தில்லி அரசு, 1999-இலிருந்து இதை அவர்களின் விருப்பத்திற்கு விட்டுவிட்டது. மோட்டர் வாகனச் சட்டத்தின் 129-வது பிரிவின் படி, சீக்கிய ஆண்களைத் தவிர மற்ற இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம். ஆனால், சென்ற பிப்ரவரியில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எதிர்மனுவில் – தில்லி மாநில மோட்டர் வாகன விதியின் 115-வது பிரிவின் படி – பெண்களுக்கு தலைக்கவசம் அணிவது விருப்பத்தேர்வாக ஆக்கப்பட்டது என்றும் அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது என்றும் கூறியது.

இது பற்றி பொது நல வழக்குத் தொடுத்த சமூக ஆர்வலர் திரு.பி.ஆர்.உல்லாஸ், பாதுகாப்புச் சட்டங்கள் அனைவருக்கும் தேவை; அதில், மதம் பால் ஆகியவற்றின் அடிப்படையில் சலுகைகள் என்ற பெயரில் ஓட்டைகளை ஏற்படுத்தக் கூடாது என்று தன் மனுவில் கூறியிருந்தார். அதை ஒட்டியே தற்பொழுது தில்லி உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

தில்லி காவல் துறை இதை வரவேற்றுள்ளது. பெரும்பாலான விபத்துகளில் தலையில் அடிபடுவதுதான் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது என்பதே இதன் காரணம்.

இதற்கிடையில் தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் கமிட்டியின் தலைவர் பஜன் சிங் வாலியா கருத்து கூறுகையில், தங்கள் மத விதிகளின் படி ஆண்கள் தலைப்பாகையும் பெண்கள் தலையிம் முந்தானையையும் தவிர வேறு ஏதும் அணியக் கூடாது என்றும், இது அவர்கள் மத விதிகளுக்குப் புறம்பானது; எனவே, அரசு தங்கள் மதத்தினருக்கு இதில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கு, காவல் துறை சீக்கிய பெண்கள் என்று தனியாக பிரித்துப் பார்ப்பது கடினம்; எனவே, அனைவருக்கும் இந்த விதியைப் பொதுவாக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

ஆக, பெண்கள் தலைகவச விவகாரத்தில் தில்லி காவல் துறை தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியதுதான் போலிருக்கிறது.

6 கருத்துகள்:

  1. அப்பாடா! ஒரு வழியா சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.

    அடிபட்ட பின் புலம்பி என்ன செய்ய முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டத்தைத் திருத்தினாலும் அதை மாற்றக் கோரி மீண்டும் போராட்டம் நடத்தாமல் இருந்தால் சரி.

      பார்ப்போம்....

      நீக்கு
  2. இன்னும் இந்த விஷயத்தில் முடிவு எட்டப்படவில்லை.... :(

    இன்னும் போராட்டங்கள் தொடரும் எனதான் நான் நினைக்கிறேன்.... பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு