திங்கள், டிசம்பர் 10, 2012

10000 கோடி ரூபாய் சாக்கடை



சுமார் 10000 கோடி ரூபாய்கள் செலவிட்டு ஒரு பெரிய சாக்கடையைப் பராமரித்து வருகிறது தில்லி அரசு.

ஆம்! யமுனை நதியைத் தூய்மைச் செய்ய  1994-ஆம் ஆண்டு முதல் இன்று வரை செலவிடப்பட்ட்த் தொகை தான் இந்த 10000 கோடி ரூபாய்கள்!.

தில்லியில் தற்போது நிர்மாணப் பெருந்திட்டம் (Master Plan) செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதில் யமுனை நதியும் அது இழைந்த பகுதிகளும் ‘ஓ’ பிரிவில் (சுற்றுச்சூழல் சிறப்புப் பெற்றவை) வகைபடுத்தப்பட்டுள்ளது. தில்லியைப் பொறுத்தவரை யமுனை நதி சுமார் 48 கி.மீ நீளத்தில் வடகிழக்கிலுருந்து தென்கிழக்கு நோக்கிக் கடந்து செல்கிறது. இதன் அகலம் ஒன்றிலிருந்து மூன்று கி.மீ வரை இருக்கும். இந்த பகுதி சுமார் 9700 ஹெக்டேர் பரப்பளவை கொண்டுள்ளது

1970-களிலும் கூட யமுனையில் படகுப் போக்குவரத்து நடைபெற்று வந்துள்ளது. ஆனால் நாள்பட இதில் கழிவு நீர்கலக்க இதன் நிலை மாறியுள்ளது. வெறும் கழிவு நீர் கலப்பால் மட்டுமே யமுனையின் நிலைமை இவ்வாறு மாறிவிட்டது என்று கூற முடியாது. அதுவும் யமுனை போன்ற ஒரு ஜீவ நதியில் தினம் புது வெள்ளம் புரண்டு கொண்டிருந்தால் கழிவுகள் அடித்துச் செல்லப் பட்டிருக்கலாம். ஆனால், யமுனையின் நீர் வரத்து தற்போது ஹரியாணாவின் நீர்த் தேவைகள் போக மீதியிருக்கும் நீரைப் பொறுத்து அமைந்திருக்கிறது. தவிர ஹரியானாவிலிருந்து தில்லி நுழைவிடத்திலேயே தில்லியின் தேவைகளுக்காக நீரெடுக்கப் படுகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தால் நீர்த் தேவைகள் அதிகரிக்க நதியின் பெரும்பாலான நீர் உபயோகிக்கப்பட்டு நீர்வரத்துக் குறைந்து விட்டது. இன்று, தில்லியில் பாயும் யமுனை நீர் மிகவும் குறைவு. அதிலும் தொழிற்சாலைகளும் கழிவு நீர் கால்வாய்கள் நதியில் கலக்கின்றன. தில்லியின் தற்போதையக் கழிவு ஒருநாளைக்கு 600 மில்லியன் காலன்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ கணக்கின் படி இதில் 500 மில்லியன் காலன்கள் தூய்மைப் படுத்தப்பட்டு நதியில் கலக்கவிடப் படுவதாகக் கூறப்பட்டாலும் இதில் பாதி தான் செயல்பாட்டில் உள்ளது. ஆக ஒரு நாளைக்கு குறைந்த்து 350 காலன் கழிவுகள் நதியில் கலக்கப்படுகின்றன. தவிர 30-40% கழிவுகள் சாக்கடை வசதியின்றி தேங்கியுள்ளன. மழைக்காலங்களில் இவை வழிந்து சாக்கடைகள் மூலமோ அல்லது நேரடியாகவோ யமுனையில் கலக்கின்றன. இதன் மூலம் நதியின் 80 சதவீத நீர் கழிவாகவே உள்ளது.

[நீரின் தூய்மையை கணிக்க அதன் உயிரியல் பிராணவாயுத் தேவை (Biological Oxygen Demand) என்ற ஒன்றைக் குறிப்பிடுவார்கள். பிராணவாயுவின் தேவை அதிகம் என்றால் அதன் தூய்மை குறைவு என்பது பொருள். இந்திய அளவில் ஒரு லிட்டர் நீரில் 3 மில்லி கிராம் பிராணவாயுவை விடக் குறைவானத் தேவை இருந்தால் அது நன்னீர் என்று தரம் நிர்ணயித்துள்ளனர்.]

1983-ஆம் ஆண்டு தில்லியில் யமுனையின் ஒருநாளுக்கான ஆக்ஸிஜன் தேவை 117-டன் ஆக இருந்தது. தற்போது இது 285 டன்னாக உயர்ந்துள்ளது என்பதிலிருந்தே யமுனை நீரின்  அசுத்தத் தன்மைப் புரிபடும்.

நான் தில்லி வந்த புதிதில் (1990-ல்) கூட யமுனையில் நீர்வரத்து இருந்த்தைப் பார்க்க முடிந்த்து. ஆனால் கடந்த 5-6 வருடங்களாக யமுனை சாக்கடையாகவே உள்ளது. கடும் மழை பொழிந்து வெள்ளம் வரும் காலங்களில் மட்டும் நதியில் நீர் ஓடுகிறது.

நீர்வரத்துக் குறையக் குறைய ஆற்றுப் படுகைகளின் ஆக்ரமிப்புகளும் அதிகரித்து வருகின்றன. உத்திர பிரதேசத்தில் சட்ட்த்திற்குப் புரம்பாக சுமார் 300-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாகச் சமீபத்திய செய்தி ஒன்று குறிப்பிட்டுள்ளது. இதில் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களும் அரசு அதிகாரிகள் சிலரும் இணைந்து செயல்பட்டிருக்கக் கூடும் என்று கூறுகிறார்கள். இதற்கு மற்றொண்றாக, இந்த நிலங்களின் பராமரிப்பும் கட்டுப்பாடும் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் கீழ் இருப்பதையும், அவர்களிடம் ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பின்மையையும் காரணம் காட்டுகிறார்கள்.

இந்நிலையில், மூன்றாவது யமுனைச் செயல் திட்டம் என்றத் திட்டத்திற்கு அரசு மேலும் சுமார் 5000 கோடி ரூபாய்கள் ஒதுக்கீடு செய்துள்ளது. இதுவாவது யமுனையைத் தூய்மைப் படுத்துமா? அல்லது விழலுக்கு இறைத்த நீராக மாறுமா என்பதைக் காலம் தான் கூறவேண்டும்.

[இது சம்பந்தப்பட்ட முந்தைய இரண்டு பதிவுகள் இங்கே 1, 2]

11 கருத்துகள்:

  1. நேற்று கூட யமுனையைக் கடக்கும் போது வந்த வீச்சம்! பத்தாயிரம் கோடி ரூபாய் செலவு செய்தாலும், வாந்தி எடுக்க வைக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. நான் மெட்ரோவில் செல்வதால் நாற்றம் தெரியவில்லை. பிள்ளையார் சதுர்த்தி, தசரா (சட் பூஜையையும் சேர்க்கலாம்) போன்ற பண்டிகளுக்குப் பின் விசர்ஜனம் என்ற பெயரில் POP-யில் செய்த பொருள்களும், பிலாஸ்டிக் பைகள் கலப்பதும் யமுனை கெட ஒரு முக்கியக் காரணம்.

      வருகைக்கு நன்றிகள்

      நீக்கு
  2. நீங்கள் சொல்வது போல இவ்வளவு செலவு செய்து யமுனை தூய்மை அடைந்தால் சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தைய அனுபவங்களைக் கொண்டுப் பார்க்கும் பொழுது அப்படி நடக்கும் என்று தோன்றவில்லை என்பது தான் வருத்தம் தரும் விஷயம்!

      வருகைக்கு நன்றிகள்!

      நீக்கு
  3. 5000 கோடியில் யமுனைக்கு நிஜமாய் எவ்வளவு போகுமோ :((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணம் தண்ணீராக செலவிடப்படும் என்பது மட்டுமே நிதர்சனம்!

      நம் சென்னையில் கூவத்திற்கும் இது போல கோடிகளில் செலவிட்டிருப்பார்கள் என்று தான் நினைக்கிறேன். யமுனையும் தற்போது கிட்டத்தட்ட கூவத்தின் நிலையில் தான் இருக்கிறது. ஒரே வித்யாசம் என்னவென்றால் இதில் வெள்ளம் வரும் பொழுது சற்று சரியாகும், பின் மீண்டும் கழிவுகள் சேர்ந்து சாக்கடையாக மாறும் என்பது தான்.

      வருகைக்கு நன்றிகள்!

      நீக்கு
  4. எங்க வீட்டுக் கழிவும் யமுனைக்குத்தான் குளிக்கப் போகுதுன்னு சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  5. இன்னும் எவ்வளவு தான் செலவு செய்வாங்க....:((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதாவது செலவு செய்து கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். அது உபயோகமாக இருந்தால் நல்லது.

      வருகைக்கு நன்றிகள்!

      நீக்கு