இதன் முதல் பகுதி இங்கே
ஒரு காலத்தில் இந்த ஹிண்டன் ஆற்றை ஒட்டியே வரலாற்று
சிறப்புமிக்க முஜாஃபர்நகர், மீரட், காஸியாபாத்
போன்ற நகரங்கள் அமைந்தன. ஆனால், இன்று அதே நகரங்களினால் இந்த
ஆறு தன் சிறப்பை இழந்து விட்டது என்றால் அது மிகையல்ல.
1990-களுக்கு
முன்னரே தொழிற்சாலைகள் இந்தப் பகுதிகளில் அமையத் தொடங்கிவிட்டன. என்றாலும்
1990-களில் நோய்டா விரிவாக்கம் துவங்கிய பொழுது அதனால் ஏற்பட்ட இழப்பு
என்னவென்றால் இந்த ஹிண்டன் ஆறு ஒரு சாக்கடையாக மாறியது தான். இதன் பாதிப்பு இன்று
யமுனை நதியிலும் தெரியத்துவங்கியது 1990-களின் பிற்பகுதியில் தான். தவிர இந்த
ஹிண்டன் ஆற்றங்கரையில் பல பண்ணைவீடுகள் [சிஜாரஸி, சோட்பூர், பிஸாரக், பர்தலா,
கஞ்சர்பூர், பஹலோல்பூர், ஜல்புரா, குலேசரா, சுத்யானா, லக்னாவலி, ஷஃபிபூர்,
மாம்னாதல்பூர் ஆகிய புறநகர் கிராமங்களைச் சேர்ந்தவை] வெளியேற்றும் கழிவுப்
பொருட்களும் கூடக் காரணம் தான்.
இன்று
தமிழகம் போன்ற வெளிமாநிலத்தில் இருந்து தில்லி வரும் நம் போன்றவர்கள் தில்லியில்
இந்த யமுனையைப் பார்த்தால் அதன் தற்போதைய நிலைமையைக் கண்டு
அதிர்ச்சியடைவோம் என்பது தான் உண்மை. சலசலத்து ஓடும் ஒரு
பெரிய ஜீவ நதி நம் கற்பனையில் விரிந்திருக்க ஒரு பெரிய சாக்கடையை
யமுனை என்று கூறுகிறார்களே இதைவிட கூவமே நன்றாக இருக்குமே என்று மனமொடிந்து
போவோம்.
கிழக்கு தில்லி மற்றும் கிழக்குப் பகுதி புறநகர் பகுதியில் இருக்கும் என்
போன்றவர்கள் தினமும் நோய்டா, காஸியாபாத் பகுதியைக் கடக்க வேண்டிய கட்டாயம்.
மழைக்காலங்களில் ஹரியானா மாநிலம் திறந்து விடும் உபரி நீர் வெள்ளமாக ஓடுவதைத் தவிர
மற்ற நேரங்களில் அதில் குட்டையாக நீர் தங்கியிருக்கும்; ஒரு ஓரத்தில் மட்டும்
சிறிய சாக்கடைப் போல கருப்பு நிறத்தில் நீர் ஓடிக் கொண்டிருக்கும்.
உயர்
நீதி மன்றம், உச்ச நீதி மன்றங்களின் வெவ்வேறு வழிகாட்டல்களுக்கும் கட்டளைகளுக்கும்
பின்னரும் கூட வெவ்வேறு அரசாங்கங்களால் (அது மத்திய அரசாகட்டும் அல்லது தில்லி,
உபி மாநில அரசாங்கங்களாகட்டும்) இதைச் சீரமைக்க ஒரு அடி கூட எடுத்து வைக்க வில்லை
என்பது தான் உண்மை.
சென்ற
மாதத்தில் தில்லியில் நதிகளின் தூய்மைக்காக ஒரு செமினார் நடந்தது. அதில் கலந்து
கொள்ள மாஸ்கோவிலிருந்து வந்திருந்த 7 பேர் கொண்ட நிபுணர் குழு இந்த யமுனை-ஹிண்டன்
இணையும் பகுதிக்குச் சென்று பார்த்துள்ளனர். அவர்களால் இது நதி என்பதையே நம்ப
முடியவில்லை.
ஹிண்டன்
ஆற்றின் மூலம் யமுனையில் கலக்கும் நோய்டாவின் சாக்கடை மட்டுமே யமுனையின் தற்போதைய
நிலைக்குக் காரணம் என்று கூற முடியாது. அது 50-60 சதவிகிதம் காரணம் என்று கூறலாம்.
இவற்றைத் தவிர, யமுனைப் பகுதியிலும் பல்லாயிரக்கணக்கான பண்ணைவீடுகள் உள்ளன.
குறிப்பாக ஹரியானாவின் எல்லைப்பகுதிகளில் இந்த பண்ணை வீடுகளுக்குப் பெயர் போனவை.
மங்க்ரௌலா, மங்க்ரௌலீ, சப்ரௌலீ, பாதௌலி, ஜட்டா, கோண்ட்லீ, அஸகர்பூர் போன்ற
தில்லியைச் சேர்ந்த பகுதிகளிலும் பல பண்ணை வீடுகள் அதிகம். இவற்றிலிருந்து
வெளியேறும் கழிவுகளும் யமுனையை மேலும் மாசுபடுத்துகின்றன. க்ரேட்டர் நோய்டா
என்றழைக்கப்படும் நோய்டாவின் பின் பகுதியிலிருந்து மட்டும் ஒரு நாளைக்கு 50
எம்.எல்.டி கழிவுப் பொருட்கள் யமுனையில் கலக்கின்றன. க்ரேட்டர் நோய்டா பகுதியில்
கழிவு நீர் வடிகட்டும் நிலையங்கள் ஒன்று கூட இல்லை என்பது இதில்
குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் நோய்டா நிர்வாகம் விரைவில் இந்த நிலையங்களை
ஏற்படுத்த ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது [2 நிலையங்கள் இந்த வருடமும் 3
நிலையங்கள் அடுத்த வருடத்திற்குள்ளும் இயங்கத் துவங்கும்] என்பது தான் இதில் ஓர்
ஆறுதல் தரக்கூடியச் செய்தியாகும்.
உத்திர
பிரதேச அரசும் யமுனையைத் தூய்மை படுத்த 30 வருடங்களுக்குப் பின் தற்போது புதிதாக
ஒரு திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதன் வேளைகள் சென்ற வாரம் ஆரம்பிக்கப்பட்டது. 24
மணி நேரமும் இந்த பணிகள் தொடரும் என்றும் இந்த பணி ஜூன் வரை இந்த பணி நிறைவேறும்
என்றும் கூறப்படுகிறது.
12
கோடி செலவிலான இத்திட்டம் வெற்றி பெற வேண்டுமானால் இதற்கு தில்லி அரசின்
ஒத்துழைப்பும் மிக முக்கியம். ஏனென்றால், ஹரியாணாவில் குடிநீராகப் பயன்படும் யமுனை
தில்லியில் நுழைந்ததும் சாக்கடையாக மாறிவிடுவது தான் காரணம். தில்லி அரசின் நதிப்புற
மேம்பாட்டுத் துறை, சுற்றுச்சூழல் துறை ஆகிய இரண்டிற்கும் இடையில் ஒத்துழைப்பு
இல்லை என்பதுதான் இன்றைய தினத்தின் நிலைமை. ஒரு அரசாங்கத்தின் இரண்டுத்
துறைகளிடமேயே ஒத்துழைப்பு இல்லை என்பது தான் கசப்பான உண்மை. ஆனால், இதற்கு நாம்
தந்து கொண்டிருக்கும் விலை நம் எதிர்காலச் சந்ததியின் நீராதாரம் என்பது தான்
வருத்தம் தரும் விஷயம்.
த்வாபர
யுகத்தில் யமுனையை காளிங்கன் என்ற பாம்பு கலங்கடித்து அதை அசுத்தப்படுத்த அவன்
தலைமீது நர்த்தனம் ஆடி கோபாலன் அதைத் துரத்தி நதியைத் தூய்மைப் படுத்தியதாகப்
படித்துள்ளோம். ஆனால், இன்றோ ஒரு காளிங்கன் இல்லை; ஓராயிரம் காளிங்கர்கள். இதில்,
நதியைத் தூய்மைப் படுத்த எந்த கோபாலன் வருவான் என்பதுதான் தெரியவில்லை.
//ஆனால், இன்றோ ஒரு காளிங்கன் இல்லை; ஓராயிரம் காளிங்கர்கள். இதில், நதியைத் தூய்மைப் படுத்த எந்த கோபாலன் வருவான் என்பதுதான் தெரியவில்லை.// தேடத்தேட கோபாலனுக்கு பதில் காளிங்கர்கள் கூட்டம் தான் பெருகி வருகிறது சீனு.....
பதிலளிநீக்குஇரண்டு பகுதிகளும் படித்தேன். நல்ல அலசல்.
நன்றி வெங்கட்.
நீக்குஅருமையான பதிவுகள்.
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள்
நீக்கு