வெள்ளி, ஜூன் 22, 2012

விளையாட்டும் சர்சையும்

திருவிளையாடல் படத்தில் வருவது போல இன்று கேள்வி-பதில் வைத்தால் ‘பிரிக்க முடியாதது?  சர்சையும் இந்திய விளையாட்டுத் துறையும்’ என்பதாகத் தான் இருக்கும்.

ஐபிஎல் சர்ச்சைகள் நாடு முழுவதும் அலசப் பட்டு வந்த நிலையில், ஆனந்த் – ஐந்தாவது முறை உலக சாம்பியன், சாய்னா – இரட்டைத் தங்கம், ஹாக்கியில் மூன்றாவது இடம், மகேஷ்-சானியாவின் க்ரண்ட் ஸ்லாம் என்று சற்றே சர்ச்சைகள் அடங்கித் தொடர் மகிழ்ச்சியில் விளையாட்டுத்துறை இருந்து வந்த நிலையில் மீண்டும் சர்ச்சைகள் ஆரம்பம்.

இதில் சர்ச்சையை முதலில் துவக்கியது மகேஷ் தான். க்ராண்ட் ஸ்லாம் வென்ற மகிழ்ச்சியைக் கொண்டாடக் கூட முடியாமல் அவர் லியாண்டருடன் சேர்ந்து விளையாட முடியாது என்று லண்டனிலிருந்தே பேட்டி கொடுத்தது தான் இதற்கெல்லாம் ஆரம்பம்.

மகேஷுக்கும் லியாண்டருக்கும் இருக்கும் பிணக்கு வெள்ளிடை மலை. 2003-ம் ஆண்டு(ம்) மகேஷ் (பூபன்னா-வுடன் சேர்ந்து என்று ஞாபகம்) WTA போட்டிகளின் போது பத்திரிக்கையாளர் கூட்டத்தில் லியாண்டர் அணித்தலைவராக இருந்தால் டேவிஸ் கோப்பைப் போட்டிகளில் ஆடமாட்டேன்(டோம்) என்று பேட்டியளித்தா(தன)ர். அதன் பின்னர் நடந்த இந்தியாவுக்காக விளையாடிய அணிப்போட்டிகளிலும் சரி மற்ற தனிப்பட்ட போட்டிகளிலும் சரி இருவரும் (பயஸ்-பூபதி) சில போட்டிகளில் பிரிந்தும் சிலவற்றில் இணைந்து விளையாடியுள்ளனர். கடைசியாக இருவரும் சென்ற ஆண்டு இணைந்து விளையாடினர். [அதில் எளிதாக இருவரும் வெல்லும் நிலையில் போட்டி திசைமாறி டை-ப்ரேகர் வரைச் சென்று தோல்வியைத் தழுவினர்] அப்போட்டி முடிந்ததுமே இருவரும் இனி சேர்ந்து விளையாடுவது சாத்தியம் இல்லை என்பது  விளையாட்டைப் பிந்தொடரும் அனைவருக்குமே புரிந்து விட்டது என்றே கூறலாம்.

இந்த ஆண்டைப் பொறுத்தவரை, லியாண்டருடன் மகேஷும் சரி பூபன்னாவும் சரி ஜோடி சேரவில்லை என்பது தான் உண்மை. ஆனால், மகேஷும் பூபன்னாவும் சேர்ந்து விளையாடியுள்ளனர். எனவே, தாங்கள் இருவரும் ஜோடி சேர்ந்தால் ஒலிம்பிக் போட்டிகளில் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று அவர்கள் நினைப்பதில் தவறில்லை.

ஆனால், ஒலிம்பிக் போட்டி என்பது தனிபட்டப் போட்டியில்லை. இது நாட்டிற்காக விளையாடுவது. இங்கு சங்கமோ, அணி பயிற்சியாளரோ, அணித் தலைவரோ எடுக்கும் முடிவுக்குக் கட்டுப் பட வேண்டியது வீரர்களின் கடமை. அணிக் கூட்டங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிடலாம். ஆனால், பொது அரங்கில் இவ்வாறு அறிக்கை விடுவது கூடாது.

லியாண்டரைப் பொறுத்தவரை சென்ற பல வருடங்களாகவே அவர் தனிப்பட்டப் போட்டிகளில் எப்படியிருந்தாலும் இந்தியாவிற்காக விளையாடும் பொழுது 100 சதத்திற்கும் அதிகமாகவேத் தன் திறமையை வெளிபடுத்துவார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் மகேஷாக இருந்தாலும் சரி பூபன்னாவாக இருந்தாலும் சரி அவர்களுடன் சேர்ந்து விளையாடவேத் தயாராக இருந்தார்.

இந்நிலையில் மகேஷும், பூபன்னாவும் லியாண்டருடன் இணைந்து விளையாட மறுத்து பொது வெளியில் அறிக்கை இட்டது ஒரு அத்துமீறலே. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர் லியாண்டர் தான். லியாண்டருக்கு எதிரான தங்களின் தனிப்பட்ட விரோதத்தை இருவரும் இந்த நேரத்தில் வெளிப்படுத்தியதாகவே எனக்குத் தோன்றுகிறது.

அகில இந்திய டென்னிஸ் சங்கத்தைப் பொறுத்தவரையில், இந்த நிலைமையில், கீழ்கண்ட முடிவுகள் தான் சாத்தியமாக இருந்த்து:

1.    பூபதி-பூபன்னா மீது அத்துமீறல் நடவடிக்கை எடுப்பது. லியாண்டருடன் வேறு வீரரை இணைப்பது.
2.    பூபதி-பூபன்னா மீது அத்துமீறல் நடவடிக்கை எடுப்பது. லியாண்டருடன் யாரையும் இணைக்காமல் எந்த அணியையும் அனுப்பாமல் இருப்பது.
3.    லியாண்டருடன் பூபதியையோ அல்லது பூபன்னாவையோ கட்டாயப் படுத்தி இணைப்பது
4.    இரண்டு அணிகளை – (1) பூபதி-பூபன்னா, (2) பயஸ்-வேறு வீர்ர் (விஷ்ணுவர்தன்) – அனுப்புவது

ஆனால் சங்கம் இரண்டாவது முடிவை எடுக்க முடியாது. ஏனெனில் மூன்று முன்ணணி வீரர்கள் இருக்கும் நிலையில் ஒருவரைக் கூட அனுப்ப முடியவில்லை என்றால் அது சங்கத்தின் செயலற்ற நிலையைப் பறை சாற்றும்.

மூன்றாவது முடிவை எடுதாலும் வீர்ர்களிடையே புரிந்துணர்வு இல்லாத நிலையில் அது பதக்க வாய்ப்பை விட பதட்ட வாய்ப்பைத் தான் அதிகரிக்கும்.

முதல் முடிவைப் பொறுத்தவரை, சங்கம் இப்பொழுது அதை எடுக்க நினைத்தாலும் லியாண்டர்-விஷ்ணுவர்தனுடன் சேர்ந்தால் பதக்க வாய்ப்பு குறைவு என்பதால் பின்னர் அரசாலும் மீடியாவாலும் பெரிதளவில் விமர்சனத்தைச் சந்திக்க நேரிடும்.

ஆக நான்காவது முடிவை எடுப்பதைத் தவிர் வேறு வழியில்லை. போட்டி முடிந்த பின், ஒரு வேளை மகேஷ்-பூபன்னா பதக்கம் வெல்லவில்லை என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்புள்ளது என்பது சாத்தியமே.

இதில் எந்த முடிவு எடுத்தாலும் அதில் பாதிப்பு லியாண்டருக்குத் தான். ஏனென்றால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பது தான். அவரைச் சமாதானப்படுத்த மாற்று-இரட்டையர் போட்டியில் சானியா-வுடன் லியாண்டர் ஜோடி சேர்க்கப்படுவார் என்று கூறியுள்ளது. ஆனால், வைல்ட்-கார்ட் என்று கூறப்படும் பட்டியிலிலாதவர்களுக்கான நேரடி வாய்ப்பு சானியாவுக்குக் கிட்டினால் தான் அவருடன் ஜோடி சேர்க்க முடியும். இது பற்றி நல்ல வேளையாக சானியா லியாண்டருக்கு எதிராக பேட்டி எதுவும் கொடுக்கவில்லை. இதுவும் சரியான முடிவா என்பது தெரியவில்லை; ஏனென்றால் மகேஷும் அவரும் சேர்ந்து க்ராண்ட்-ஸ்லாம் வென்றுள்ள நிலையில் மகேஷுடன் இருந்த புரிந்துணர்வு லியாண்டருடன் இருக்குமா என்பது கேள்வியே.

எப்படி இருந்தாலும், இன்றைய நிலையில் சங்கம், இது விமர்சனத்திற்கு உள்ளாகும் என்றாலும், இதைவிடச் சரியான முடிவை எடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.  

4 கருத்துகள்:

 1. லியாண்டர்- மகேஷ் ஈகோ மோதல்கள் மிக துரதிர்ஷ்டம்

  லியாண்டர் கூட ஜோடி சேர நிறைய பேர் தயங்குகிறார்களோ? ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் மேல் எந்த குற்றச்சாட்டும் இல்லை

  பதிலளிநீக்கு
 2. ஆம் முரளி மோதல்கள் துரதிர்ஷ்டம் தான். அனைவருக்குமே (AITA, லியாண்டர், இந்தியாவுக்கு ஏன் மகேஷ்-பூபன்னாவுக்கும் கூட) no-win situation தான். ஆனால் ego-வுக்கு முன்னால் எதுவுமே தெரிவதில்லை.

  தனிப்பட்டப் போட்டிகளில் (ATP, grand-slam) அவர் அவரைவிட நல்ல வெற்றி வாய்ப்புள்ள வீரர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். அப்பொழுது இந்திய வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. அதே நேரம் இந்தியாவிற்கு விளையாடும் பொழுது அவரின் ஆட்டத்திறன் அதிகமாகவே வெளிப்படும்.

  இந்திய வீரர்களுடன் சேரும் பொழுது அவர்களிடம் பெரியண்ணன்’ மனநிலையை வெளிப்படுத்துவதாக அவர்கள் நினைக்கின்றனரோ? அது உள் வட்டத்தில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும்.

  பதிலளிநீக்கு
 3. நல்ல அலசல்.... மொத்தத்தில் இந்தப் பிரச்சனையால் நமக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பிருக்கும் ஒரு போட்டியிலும் இந்தியா வெற்றி பெற வாய்ப்பில்லாமல் போய்விடுமோ எனத்தோன்றுகிறது.... :(

  பதிலளிநீக்கு
 4. இந்த வருடத்தில் பூபதி-பூபன்னா ஜோடியின் form நன்றாக உள்ளது என்பது தான் ஒரே ஆறுதல் தரும் விஷயம்.
  [இதை சங்கமும் வீரர்களும் அமர்ந்து பேசியிருந்தால் தீர்த்திருக்கமுடியும். ஆனால், முதலில் சங்கம் வீரர்களை taken for granted-ஆக போன முறை போல் (பயஸ்-பூபதி யை) தேர்ந்தெடுத்துவிட்டால் அவர்களை எப்படியும் ஆட வைத்துவிடலாம் என்று நினத்துத் தள்ளிப் போட்டது. மகேஷும் தன்னிச்சையாக அறிக்கை விட்டு சங்கத்திற்கு தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கினார்.]

  பதிலளிநீக்கு