திங்கள், ஜூன் 25, 2012

துக்ளக் என்றால் இளக்காரமா?

இந்திய  சரித்திரத்தைப் படித்தவர்களானுலும் சரி படிக்காதவர்கள் என்றாலும் சரி ஆட்சியில் இருப்பவர்கள் ஏதாவது குளறுபடி செய்தால் அல்லது முட்டாள் தனமான முடிவுகளை எடுத்தால் அந்த ஆட்சியாளரை அல்லது அந்த அரசாங்கத்தை ‘துக்ளக் ஆட்சி’ என்று கூறுவது வழக்கம்.

உண்மையிலேயே துக்ளக் அவ்வளவு மோசமான அரசரா? அவர் எடுத்த முடிவுகள் அனைத்தும் அத்தனை மோசமானவை தானா?

துக்ளக் வம்சம் என்பது கில்ஜி வம்சத்தைத் தொடர்ந்து கி.பி. 1321-1398 ஆண்டுவரை தில்லியில் நீடித்த ஒரு அரசாகும். இதில் ‘துக்ளக் ஆட்சி’ என்று அனைவராலும் இகழப்படும் அளவுக்கு ஒரு முட்டாள் அரசராகக் கருதப் படுபவர் 1325 முதல் 1351 வரை தில்லி சுல்தானாக இருந்த முகமது-பின்-துக்ளக் என்ற பெயரால் நாம் அனைவரும் அறிந்த சுல்தான் ஜௌனா-கான் தான்.

இவரது வாழ்க்கை அல்லது இவரது அரசைப் பற்றி நாம் அறிந்து கொள்ள அடிப்படையாகக் கருதப்படுபவை மூன்று வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்டப் புத்தகங்கள். அவை

1.            ஜியா-உத்தீன் பர்னி எழுதிய தாரீக்-ஏ-ஃபிரோஷாஹீ;
2.            இஸாமி எழுதிய ஃபுதூஹுஸ்ஸலாதீன்;
3.            இப்ன்-பதூதா எழுதிய கிதாபுல் ரேஹ்லா.

முகமது பின் துக்ளக் அரசராக இருந்த பொழுது அவர் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். அவற்றுள் முக்கியக விமர்சிக்கப்படுபவை

1.    1327-28 இல் தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு (தௌலதாபாத் என்ற பெயர் மாற்றப்பட்டு)  மாற்ற இட்ட ஆணை.
2.    கங்கை யமுனை ஆற்றுப் படுகையில் இருந்த விவசாய நிலங்களுக்கு  வரியேற்றம் (இரட்டை வரி) செய்து பின் அதைத் திரும்பப் பெற்றது.
3.    சீனாவின் குப்லாய் கானுடன் பொருளாதார ஒப்பந்தம் செய்தது.
4.    செம்பு, பித்தளை நாணயங்களை நீக்கி தங்க, வெள்ளி நாணயங்களை வெளியிட்டது.

இதில் முதலில் தலைந்கர் மாற்றத்தைப் பொருத்தவரை அதற்குக் காரணம், பூகோல ரீதியாக தேவகிரி மத்திய இந்தியாவில் இருப்பது; மங்கோலியர்கள் வலிமை பெற்று இந்தியா எல்லைப்பகுதிகளை நெருங்கியது (இது ஓரளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைத் தான் ஏனென்றால், துக்ளக் வம்சம் தன் வலிமையை இழக்க ஆரம்பித்த  1398-ல் மங்கோலியர்கள் படையெடுத்து தில்லியை சூறையாடினர்.) ஆனால், இதைப் பற்றி அதிகமாக விமர்சித்தவர் இஸாமி. அவர் இதை ‘தில்லியைப் பெயர்த்தெடுத்தல்’ என்று குறிப்பிடுகிறார். தில்லியே காலி செய்யப்பட்டது என்கிறார். ஆனால், உண்மையில் நடந்தது இஸாமி-யின் நண்பர்களைப் (அரசு பதவியிலும் அரச குடும்பத்திலும் இருந்தவர்கள்) பிரிந்து தலை நகரை விட்டுச் சென்றதைத் தான் குறிப்பிடுகிறார் என்று பிற்கால வரலாற்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், இஸாமி தன் புத்தகத்தில் அதை சுல்தானின் மருமகனுக்கு சமர்த்தித்து இருக்கிறார். தேவகிரி செல்லும் வழியில் அவருடைய பாட்டனார் இறந்துள்ளார். அதுவே அவர் துக்ளக்-ஐ விமர்சிக்கக் காரணம் என்கின்றனர்.

அடுத்து இப்ன்-பதூதா-வைப் பொருத்தவரை,  மொராக்கோ-விலிருந்து (அப்பொழுது மராகஷ் என்று பெயர்) இந்தியா வந்த பதூதா-வை தில்லியின் காஜியாக நியமித்தார். பதூதா நிறைய திருமணங்கள் செய்து மனைவிகளைக் கைவிட்டார் என்ற தகவல் அறிந்ததும் அவரைப் பதவி நீக்கம் செய்து சிறையிலிட்டார். அங்கிருந்து மீண்டும் ஹஜ் பயணம் மேற்கொள்ளப் போவதாகக் கூறி  பதூதா சிறையிலிருந்து தப்பினார். அவர்  துக்ளக்-ஐ அவர் விமர்சிக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.

கங்கை-யமுனை ஆற்றங்கரை இரட்டை வரியைப் பொறுத்தவரை, முதல் வருடம் விளைச்சல் அதிகமாக இருந்ததால் அங்கு இரட்டை வரியை விதிக்க ஆணையிட அந்த வருடமே அங்கு பெருவாரியான இடங்களில் பஞ்சம்.  எனவே, அதைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது கிட்டத்தட்ட நிதி நிர்வாகத்தில் அந்தந்த நேரத்திற்குத் தேவையான முடிவே. ஆனால், இதை அமுல் படுத்த நடக்கும் கால தாமதம் நிர்வாக ரீதியாக (அதுவும் தகவல் தொடர்பு சரியில்லாத எல்லைப் பகுதியில் பதட்டம் உள்ள நிலையில்) இயல்பானதே. 

குப்லாய்கானுடன் ஒப்பந்தம் செய்தது இவருக்கு நன்மை எதுவும் தரவில்லை. இவர் நம்பிக்கைத் துரோகத்தால் ஏமாற்றப்பட்டார் என்பதால் அந்த ஒப்பந்தமே தவரென்று கூற முடியாது. கிட்டத்தட்ட நேருவும் சீனாவால் இவ்வாறு தான் ஏமாற்றப்பட்டார். அதற்காக அவரை விமர்சனம் செய்தாலும் அதை முட்டாள் தனம் என்று யாரும் கூறுவதில்லை. ஆனால், துக்ளக் மட்டும் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறார்.

துக்ளக்-க்கு முன்னும் சரி அவருக்குப் பின்னரும் சரி அவரை விட மோசமான முட்டாள் தனமான முடிவுகள் எடுத்த பல அரசர்களும் அரசாங்கங்களும்  இருக்கும் நிலையில் துக்ளக்-ஐ மட்டும், அதிலும் அவரிடம் தனிப்பட்ட சொந்த விரோதம் உள்ள ஆசிரியர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட ஒரு பிம்பத்தைக் கொண்டு, குற்றம் சாட்டுவது  சரியானதாகத் தெரியவில்லை.

6 கருத்துகள்:

  1. ண்ணா.. தலைப்பு வச்சா இப்டி தாங்ண்ணா வைக்கணும்.

    "துக்ளக் என்றால் இளக்காரமா?" அப்படின்னதும் நிறைய பேர் அலறி அடிச்சுட்டு வுள்ளே வந்துட்டாங்க

    எனக்கு எப்படி தெரியும்னு கேக்குறீங்களா? தமிழ் மணம் ஜூடான இடுகையில் உங்கள் இடுகை கீதே அதனால தான் சொல்றேன்

    இங்கே பாருங்க : http://tamilmanam.net/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ சூடான இடுகையில் என் பதிவா?

      சில சமயம் இது போன்ற தவறுகளும் (:-)) நிகழ்ந்துதான் விடுகிறது.

      நீக்கு
  2. அதனால் தான் துக்ளக் என்ற பெயரை பெருமையாக நினைக்கிறாரோ சோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த துக்ளக்-ஐ கருத்தில் கொண்டே இந்திரா காந்தியை விமர்சித்து சோ எழுதிய நாடகம் ‘முகமது-பின்-துக்ளக்’. அதன் வெற்றியைத் தொடர்ந்து அவர் தன் (அரசியல் விமர்சன) பத்திரிக்கைக்கு ‘துக்ளக்’ என்று பெயர் வைத்தார். Rest is History.

      நீக்கு