திங்கள், ஜூன் 11, 2012

ஒரு நதியின் கதை


இந்திய நதிகள் என்றால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கங்கையும் அதைத் தொடர்ந்து யமுனையும் தான். இமயத்தில் துவங்கி ஹரியானா வழியாக தில்லி, ஆக்ரா போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களைத் தாண்டி அலஹாபாத்தில் கங்கையுடன் கலக்கும் ஒரு ஜீவநதியாக நாம் நம் சிறுவயதில் பாடங்களில் படித்துள்ளோம்,

யமுனைக்கு, அதிலும் இந்த தில்லி-மேற்கு உத்திர பிரதேசப் பகுதிக்கு,  இதிகாச காலத்திலிருந்தே பெரிய வரலாறு உண்டு. தில்லிக்கு கிழக்குப் பகுதியில் தில்லி-நோய்டா இரண்டையும் பிரிப்பது ஒரு ஆறு. அதன் பெயர் ஹிண்டன். இது யமுனைநதியின் ஒரு கிளை நதியாகும். 

 ஹிண்டன் ஆற்றங்கரை சுமார் 7000 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இது கங்கை யமுனைக்கு இடையில் சுமார் 400 கி.மீ நீளத்தில் வட உத்திர பிரதேசத்தின் ஸஹாரன்பூர் மாவட்டத்தில் துவங்கி  முஜாஃபர்நகர், மீரட், பாகபத், காஸியாபாத், கௌதமபுத்தர் நகர் வழியாக நோய்டா-தில்லி எல்லையில் (தில்லி மயூர்விஹார் பகுதியில்) யமுனையில் கலக்கிறது. இந்த ஆறு பருவ மழையை சார்ந்த ஒரு சாதாரண ஆறுதான். என்றாலும் 1990-களில் ஆரம்பத்தில் நோய்டா பகுதி விரிவாக்கப்படும் வரை இது யமுனை நதியை வளப்படுத்தி தான் வந்துள்ளது. இதன் நீரும் தூய்மையாகத்தான் இருந்துவந்துள்ளது.

யமுனையுடன் கிழக்கில் இது இணையும் பகுதிக்கு எதிர்கரையில், அதாவது மேற்கு பகுதியில் இருக்கும்புராணா கிளாஎன்றழைக்கப்படும் பழையக் கோட்டை பாண்டவர்களின் இருந்ததாக நம்பப் படுகிறது. இந்த மேற்குப் பகுதி இன்றும் இந்த்ர ப்ரஸ்தம்என்ற பெயரில் தான் அழைக்கப் பட்டு வருகிறது.

இராமாயணக் காலத்தில் (த்ரேதாயுகத்தில்) விஷ்ரவா முனிவர் இங்கு தான் வாழ்ந்ததாகக் கூறுவர். அவரின் மகன் இராவணன் இங்கு தான் தவமியற்றியதாகக் கூறுவர். மஹாபாரத காலத்தில் த்ரோணாச்சாரியார் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பயிற்சியளித்தது இந்த யமுனை நதியும் ஹிண்டன் ஆறும் இணையும் இடத்தில் தான். 

புராண காலத்தில் இதற்கு  ஹரநதி அல்லது ஹரநந்தி நதி என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. 17-18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டியர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த தில்லி யுத்தம் இந்த பகுதியை அடுத்த செலேரா பகுதியில் தான் போர் நிகழ்ந்துள்ளது. இந்தப் போர் நினைவுத் தூணை இன்றும் செலேரா பகுதியில் உள்ள நோய்டா கோல்ஃப் விளையாட்டு மைதானத்தின் அருகில் காணமுடியும். 1857-ல் நடந்த சிப்பாய் கலகத்தின் பொழுது பகதூர்ஷா-வை இந்திய மன்னராக்க நடந்த கலவரம்  காஸியாபாத்தின் ஹிண்டன் நதிகரையில் தான் துவங்கியது 1857 மேமாதம் இங்கு நடந்த கலவரத்தில் சுமார் 30000 சிப்பாய்கள் கலந்து கொண்டதாகக் கூறுவர் (ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் 9000 வீரகளாகக் குறிப்பிடுகின்றனர்).   இது சிப்பாய்கலகத்தில் ’பத்லி-கே-சராய் யுத்தம்’ என்று குறிப்பிடப்படுகிறது.

ஒரு காலத்தில் இந்த ஹிண்டன் ஆற்றை ஒட்டியே வரலாற்று சிறப்புமிக்க முஜாஃபர்நகர், மீரட், காஸியாபாத் போன்ற நகரங்கள் அமைந்தன. ஆனால், இன்று அதே நகரங்களினால் இந்த ஆறு தன் சிறப்பை இழந்து விட்டது என்றால் அது மிகையல்ல. 

இத்தனைச் சிறப்பு மிக்க இந்த ஆறு தன் சிறப்பை எவ்வாறு இழந்தது என்பதையும் இதன் தற்போதைய நிலையையும் அடுத்த பதிவுகளில் பார்க்கலாம். 

அடுத்த பகுதி இங்கே

2 கருத்துகள்:

  1. இதற்கு முன்னர் அறிந்திராத விஷயங்களை இக்கட்டுரையில் எடுத்தெழுதியிருக்கிறீர்கள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றிகள்.
      முடிந்தால் இதன் அடுத்த பகுதியையும் படித்து தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்கவும்

      நீக்கு