திங்கள், மே 13, 2013

மூன்றா? நான்கா?


 
சமீபத்தில் தில்லி பல்கலைக் கழகம் வரும் ஜூலையில் துவங்கும் இந்த வருடக் கல்வியாண்டிலிருந்து பட்டப்படிப்பை மூன்று ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.

இத்திட்டத்தின் படி இதுவரை இருந்த கலை, அறிவியல் ஆகியவற்றில் வழங்கப்படும் பட்டப்படிப்புகள் நீக்கப்பட்டு அனைத்து மாணவருக்கும் (அவர்கள் 11-12 ஆம் வகுப்பில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்திருந்தாலும்) முதல் இரண்டு ஆண்டுகள் அடித்தளக் கல்வியும், மூன்றாம் ஆண்டில் பட்டப்படிப்பும் நான்காம் ஆண்டில் துறையின் நுணுக்க அறிவும் வழங்கப்படும் என்றுக் கூறப்படுகிறது.

இவ்வாறு மாற்றுவதற்கு அவர்கள் கூறும் முக்கியக் காரணம் இந்தியப் பல்கலைக் கழகங்களைத் தவிர்த்து அனைத்து சர்வதேசக் கல்லூரிகளும் நான்கு ஆண்டுகள் பட்டப்படிப்பைத் தருகின்றன. இந்திய மாணவர்கள் மேல் படிப்பிற்கு சர்வதேசக் கல்லூரிகளில் சேரும் பொழுது அவர்களுக்கு அங்கு ஒருவருடம் அடிப்படைக் கல்வி அளிக்கப்படும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இந்த மாற்றங்களின் தேவையைப் பற்றி நம் போன்ற பொதுமக்களின் கருத்து குழப்பத்தைத் தான் தரும். ஏனென்றால் கல்வியாளர்களும் துறைச் சார்ந்தவர்களும் தான் இதன் தேவையை விவாதிப்பது நல்லது.

இருந்தாலும் பொதுமக்களுக்கு இதில் சில கேள்விகள் உள்ளன. இதைப் பற்றி சரியான பதிலளிக்க தில்லி பல்கலைக் கழகம் கடமைப்பட்டுள்ளது. அக் கேள்விகள்…

1.    முதலில் இது பல்கலைக் கழக மானியக் குழுவால் அனைத்துக் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியாக மாற்றப்படாமல் தில்லி பல்கலைக் கழகத்தில் மட்டும் மாற்றம் நிகழ்வது ஏன்?
2.    இதன் சாதக பாதகங்கள் முறையாக கல்வியாளர்களாலும் துறைச் சார்ந்தவர்களிடமும் விவாதிக்கப்படாமல் திடீரென்று திணிக்கப்படுவது ஏன்?
3.    80-களுக்கு முன் வரை பட்டப்படிப்பு நான்கு ஆண்டுகளாகத்தான் இருந்தது. ஆனால், அப்பொழுது, பத்தாம் வகுப்பிற்குப் பின் பி.யூ.சி என்று ஒரு ஆண்டு மாணவர் தேர்ந்தெடுக்கும் துறையில் அடிப்படைக் கல்வி வழங்கப்பட்டு வந்தது. பின் அந்த அடிப்படைக் கல்வி இரண்டாண்டுகளுக்கு (+1, +2 என) நீட்டிக்கப்பட்டு பட்டப்படிப்பு மூன்றாண்டுகளாகத் திருத்தி அமைக்கப்பட்ட்து. தற்போது, 11-12 ஆம் வகுப்பில் அவர்கள் தங்கள் துறையை தேர்ந்தெடுக்கும் வழக்கம் நீக்கப்படுமா?
4.    சர்வதேசக் கல்லூரிகளில் மேல் படிப்பு பெற விழைபவர்கள் எத்தனைச் சதவிகித்த்தினர்? அவர்களை மட்டுமேக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் கொண்டுவரும் காரணம் என்ன?
5.    பட்டப்படிப்பு 4 ஆண்டுகளாக ஆக்கப்பட்டுள்ளதால் பட்ட மேற்படிப்பு ஓர் ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், வேறு பல்கலைக் கழகங்களிலிருந்து பட்டம் பெற்று தில்லியில் மேற்படிப்புப் படிக்க விழையும் மாணவர்கள் இரண்டாண்டுகள் (முதல் ஆண்டு அடிப்படைக் கல்வியும் இரண்டாம் ஆண்டு துறை மேற்படிப்பும்) கல்வி பயில வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தில்லியில் பட்டப்படிப்பு படித்து மற்ற பல்கலைக் கழகங்களில் மேற்படிப்புப் படிக்க விழைவோரின் நிலைமை என்ன? அவர்களுக்கு ஓராண்டு வீணாகுவதை எப்படித் தடுக்க முடியும். இது பற்றி மற்ற பல்கலைக் கழகங்களுடன் ஏதாவது புரிந்துணர்வு ஒப்பந்தங்களோ கல்வித்துறை மூலம் ஏதாவது அறிவிப்புகளோ வெளியிட ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவா?
6.    பட்டப் படிப்பு மூன்றாண்டுகள் நடக்கும் பொழுதே அதற்காக ஆகும் செலவு மிகவும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இப்பொழுது மேலும் ஓராண்டு அதிகமானால் அதற்காக ஆகும் மேற்செலவை யார் ஏற்பார்கள். மற்றவர்களைவிட வறுமை நிலையில் இருக்கும் மாணவர்களை இது மேலும் சுமையேற்றி அவர்கள் பள்ளிப் படிப்புடன் நிறுத்திவிட இது வழிவகுப்பதை எப்படி அரசு / மக்களால் சமாளிக்க முடியும்?
7.    நான்காண்டுகளுக்காக திருத்தி வடிவமைக்கப் பட்டப் பாடப்பகுதிகளை நட்த்துவதற்கு ஆசிரியர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா?
8.    புதிதாகப் பாடப்புத்தகங்கள் எப்பொழுது வடிவமைக்கப்படும்?

பெரும்பாலான (தில்லிக் கல்லூரிகளின்) ஆசிரியர் சங்கங்கள் இத்திட்டத்தை எதிர்கத்தான் செய்கிறார்கள். அதே நேரம், இத்திட்டம் முன்னாள் மாணவர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றுத்தான் இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் சர்வதேச பல்கலைக் கழகங்களில் மேற்படிப்பு படிக்க முடியாமல் போயிருக்கலாம் அல்லது சர்வதேச நிறுவன்ங்களால் நிராகரிக்கப்பட்டும் இருக்கலாம்.

இத்திட்டத்தால்  கல்வியின் தரம் உயரம் என்பதை ஏற்றுக் கொண்டாலும் இது பொதுவெளியில் ‘வெளிப்படையாக’ விவாதிக்கப்படாமல் நடைமுறைப் படுத்தவது தவறு தான். சென்ற வருடம் தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை இதுபோன்றே ‘வெளிப்படையாக’ விவாதிக்கப்படாமல் நடைமுறைப் படுத்தப்பட்டது.

பொதுவாக, இந்தத் திட்டம் மட்டுமல்ல அனைத்துத் திட்டங்களுமே அது அணு உலை அமைப்பதாகட்டும் அணு ஆயுத ஒப்பந்தமாகட்டும் அல்லது தேர்தல் சீர்திருத்தம் ஆகட்டும் இவை எதுவுமே பொதுவெளியில் வெளிப்படையாக விவாதிக்கப்படாமல் திணிக்கப்படுவதே வழக்கமாக உள்ளது என்பது தான் இதில் வருத்தமான விஷயம்…

14 கருத்துகள்:

  1. நியாயமான கேள்விகள் சீனு.

    தில்லியில் எப்போதுமே இப்படித்தான். எதையாவது சில அறிவாளிகள் யாரையும் கேட்காது முடிவெடுப்பார்கள். பிறகு பிரச்சனை என்று வரும்போது திண்டாடுவார்கள். எல்.கே.ஜி.யில் சேர்ப்பதற்கு திடீரென 3+ என்று சொல்வார்கள், அடுத்த வருடம் மீண்டும் 4+.....

    அதுபோலவே இப்போது கல்லூரியில் விளையாட்டு.....

    பதிலளிநீக்கு
  2. நாம் வேடிக்கை மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று முடிவே செய்து விட்டார்களோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்றிலிருந்து admission துவங்கிவிட்டது. ஆனால், ஆசிரியர்கள் யூனியன் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. மாணவர்களின் நிலைமை தான் பரிதாபத்திற்கு உரியதாக இருக்கிறது.

      நீக்கு
  3. இத்திட்டத்தால் கல்வியின் தரம் உயரம் என்பதை ஏற்றுக் கொண்டாலும் இது பொதுவெளியில் ‘வெளிப்படையாக’ விவாதிக்கப்படாமல் நடைமுறைப் படுத்தவது சிக்கலைத்தான் ஏற்படுத்தும் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த அரசாக இருந்தாலும் அவர்கள் தங்கள் முடிவுகளை நம் மீது தொடர்ந்து திணித்தே வந்து கொண்டிருக்கிறார்கள்! சட்ட/நாடாளு மன்றங்களில் கூட விவாதம் என்பது பெயரளவில் தான் நடக்கிறது.

      வருகைக்கு நன்றிகள்!

      நீக்கு
  4. சர்வதேச கல்லூரிகளுக்கு இணையான தரத்தில் கல்வியை வழங்குவதற்க முயற்சிக்க வேண்டுமே தவிர, சர்வதேச தரத்திற்கு இணையான கால அளவைக் கொண்டவருவதினால மட்டுமே பயன் விளையுமா என்றால் சந்தேகமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான்கு வருடங்களில் நடத்தப்பட உள்ள 42 பாடங்களில் 10 கூட துறை சார்ந்து இல்லை என்று கூறுகிறார்கள். உதாரணத்திற்கு இயற்பியல் அல்லது வேதியல் தேர்ந்தெடுத்த ஒரு மாணவனுக்கு அது சம்பந்தப்பட்ட படிப்பு 3-4 ஆம் ஆண்டுகளிலே தான் பயிற்றுவிக்கப்படும். மாணவர்கள் தனிப்பட்டத் துறையில் நிபுணத்துவம் பெற வேண்டுமென்றால் பட்ட மேற்படிப்பு படித்தே ஆக வேண்டும்.

      இதில் சர்வதேசத் தரம் எப்படிப் பெற முடியும் என்பது புரியவில்லை!

      வருகைக்கு நன்றிகள்!

      நீக்கு
  5. முழுமையாக ஆராயாமல் எடுக்கப் படும் முடிவுகள் கல்வித் துறைக்கு நல்லதல்ல.
    42பாடங்களையும் முழுவதுமாக அறிந்து கொள்வது சாத்தியமில்லை.தொடர்புடைய பாடங்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் ஆழமாக படிப்பதுதான் நல்லது.
    பொறியியல் கல்லூரியில் நான்கு ஆண்டுகளில் ஏராளமான பாடங்களைப் படித்து தேர்ச்சி பெறுகிறார்கள். பலருக்கு அத்தனை பாடத் தலைப்புகளாவது நினைவு இருக்குமா என்பதுகூட சந்தேகம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிதாகச் சேரும் மாணவர்களுக்குத் தகவல் தரும் வகையில் ‘Open Day' என்ற தகவலரங்கம் நடத்தப்படுகிறது. இதுவரை 3 ‘திறந்த நாள்’ அரங்கங்கள் நடந்துள்ளன. இவற்றில் மாணவர்களின் ஒரு சில கேள்விகளை தவிர்த்து பல் அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறுகிறார்கள். புதிய பாட முறையைப் பற்றிக் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையானத் தகவலில்லாமல் மாணவர்கள் எப்படித் தங்கள் துறையைத் தேர்ந்தெடுக்க முடியும்?

      வருகைக்கு ந்னறிகள் முரளி!

      நீக்கு
  6. //...அப்பொழுது, பத்தாம் வகுப்பிற்குப் பின் பி.யூ.சி என்று ஒரு ஆண்டு மாணவர் தேர்ந்தெடுக்கும் துறையில் அடிப்படைக் கல்வி வழங்கப்பட்டு வந்தது.//

    ஒரு திருத்தம் - பத்தாம் வகுப்பிற்குப் பின் அல்ல பி.யூ.சி. பதினொன்றாம் வகுப்பிற்குப் பின். அதாவது இப்போது - 10 (SSLC) + 2 (HSC) + 3 (Degree). அப்போது, 11 (SSLC) + 1 (PUC) + 3 (Degree). ஆக மொத்தம் இரண்டிலும் 15 வருடங்களே! அது இனிமேல் 10 + 2 + 4 = 16 ஆக மாறலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தகவல் பிழையைச் சுட்டியதற்கும் நன்றிகள்.

      நீக்கு
  7. பெரிய வம்பாப் போச்சுங்க. என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டிருக்கேன். கரெக்டா இந்த வருசம்தான் என் பொண்ணு ப்ளஸ் டூ முடிக்கணுமா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டப்படிப்பும் பட்ட மேல் படிப்பும் தில்லி பல்கலைக் கழகத்திலேயே முடிக்கும் எண்ணம் இருந்தால் ஓரளவு பிரச்சனை இல்லை என்று நினைக்கிறேன். (4+1) ஐந்து ஆண்டுகளிலேயே முடித்துவிடலாம். அறிவியல் துறையை எடுப்பவர்களுக்கு பி.டெக்-க்கு இணையான அந்தஸ்தும் கிடைக்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

      இந்த வருடமே இந்தத் திட்டத்திற்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது கொஞ்சம் சிரமம் தான்!

      என் போன்றவர்களுக்கு 5-6 ஆண்டுகள் இருக்கின்றன என்று சந்தோஷப் படலாம். ஆனால், அந்த நேரத்தில் புதிதாக ஏதும் திடீரென்று மாற்றங்கள் செய்யாமல் இருக்க வேண்டும்!

      வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள்!

      நீக்கு