திங்கள், அக்டோபர் 10, 2011

குற்றப் பத்திரிக்கை



அக்கா என்னை விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்கிறாள்!!
தம்பி என்னை எழுத விடமாட்டேங்கிறான்!!
 டீச்சர் என்னைத் திட்டுகிறார்
பக்கத்தில் இருக்கும் பையன் பேசிக்கொண்டே இருக்கிறான். அதனால் டீச்சர் நடத்துவதை கவனிக்கவே முடியவில்லை!!
பக்கத்து வீட்டுப் பெண் சண்டை போடுகிறாள்

குழந்தைகளுக்கு தினமும் இது போல் யார் மேலாவது ஏதாவது குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருக்கிறது. தினமும், இந்த குற்றச்சாட்டுகளுடன் தங்கள் பெற்றோரைக் கூப்பிட்டு உதவும்படி நச்சரிக்காத குழந்தைகளே இல்லை.

உடனே நமக்குக் குழப்பம் / வினா : “யார் நாள்தோறும் நடக்கும் குழந்தைகளின் இந்த சிறு சிறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது? குழந்தைகள் தானாகவே தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமா? அல்லது பெற்றோராகிய நாமா?

பொதுவாக பெற்றோராகிய நாம் குழந்தைகளுக்குத் தங்களின் பிரச்சனைகளின் பரிமாணங்களை ஆராய்ந்து அவற்றின் தீர்வை எட்டுவது கடினம் என்று நினைக்கிறோம். இது ஒரளவு சரிதான். குழந்தைகளுக்கு சில நேரங்களில் பிரச்சனையின் அடித்தளத்தையும் அதன் தீவிரத்தையும் ஆராயும் ஆற்றல் இருப்பதில்லை. அதற்குக் காரணம் அவர்களுக்கு அவ்வளவு அறிவாற்றல் இல்லை என்பதல்ல; அவர்களுக்கு அவ்வளவு அனுபவம் இல்லை என்பதுதான் காரணம்.  ஆனால், இது போன்ற சிறு சிறு பிரச்சனைகளில் நாம் அவர்களுக்கு அவர்களாகவே தீர்வு காணும் கலையைக் கற்பிப்பதன் மூலம் அவர்களை பிரச்சனைகளை அலசி ஆராயத் தயார் படுத்த முடியும்.

சிறு பிரச்சனைகளில் கீழ் காணும் கேள்விகள் மூலம் அவர்களைத் தயார் படுத்தலாம்:

·         என்ன / எப்படி நடந்தது
·         அதன் காரணம் / காரணங்கள் என்ன
·         அதனால் என்ன / யாருக்கு / எப்படி பாதிப்பு
·         அதற்கு என்ன என்ன தீர்வுகள்; அதில் எது மிக நல்ல தீர்வு
·         அதைச் செயல் படுத்துவது எப்படி
·         அதன் விளைவு(கள்) என்ன

முதலில் குழந்தைகளை நடந்த செயல்களை விளக்கச் சொல்லி, அதில் எங்கு (அ) எதனால் பிரச்சனை விளைந்தது போன்றவற்றை அவர்களே புரிந்து கொள்ளும் படிச் செய்யலாம் அதற்கு அவர்களையே தீர்வு கூறும் படியும் செய்யலாம். பிரச்சனைக்கு சில நேரங்களில் குற்றம் கூறும் அந்தக் குழந்தையே காரணமாகவும் இருக்கலாம். அது போன்ற நேரத்தில் அவர்களின் தவறுகளை அவர்களுக்குப் புரியும்படி மென்மையாக அதே நேரம் திடமாக விளக்கவேண்டிய கடமையும் நமக்கு உண்டு.

குழந்தைகளிடம் பொதுவாக எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு என்று உணரச் செய்வதுதான் நம் கடமை. அந்த பிரச்சனைகளைக் கையாள அவர்களை நாம் தயார் செய்ய வேண்டுமே தவிர நாம் அவர்களுக்காக பிரச்சனைகளைத் தீர்க்க நேரடியாக (Proxy போல) விழையக் கூடாது.

சிறு சிறு பிரச்சனைகளை இன்று சரியாகக் கையாளும் குழந்தைகள், எதிர்காலத்தில் தாங்களாகவே தங்களின் எதிர்காலத்தை எதிர்கொள்ளும் துணிச்சலும் தன்னம்பிக்கையும் பெற்றிருக்கும்.

4 கருத்துகள்:

  1. //குழந்தைகளிடம் பொதுவாக எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு என்று உணரச் செய்வதுதான் நம் கடமை.//

    சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்! spoon feeding என்பதை ஒரு கட்டத்தில் நிறுத்தி அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். நல்ல அலசல்!

    பதிலளிநீக்கு
  2. சேட்டை, வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  3. உனது அனுபவத்தினை மற்றவர்களுக்கும் பயன்படும்படி பகிர்ந்தது நல்லது சீனு... நல்ல பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு