புதன், பிப்ரவரி 08, 2012

கலவை – 13



உத்திர பிரதேசத் தேர்தலில் இன்று முதற்கட்டமாக 55 தொகுதிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.  ஆரம்பத்தில் நீதிமன்றம் மாயாவதியின் சிலைகளை மூடிவைக்க ஆணையிட்டதைத் தொடர்ந்து சூடிபிடித்திருக்க வேண்டிய தாக்குதல்,  எதிர்தாக்குதல்கள் அதிகம் இன்றி பிரச்சாரம் நிலைமை மந்தமாகவே உள்ளது.

உத்திரபிரதேசத்தைப் பொறுத்தவரை போட்டி மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சிக்கும் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையில் தான். ஆளும் கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை மாயாவதியின் அணிக்கு பல இடங்களில் இழப்பை ஏற்படுத்தலாம். இதன் பயன் முழுதுமாக முலாயாம் சிங்கிற்கு கிடக்குமா என்பது தான் கேள்வி. முக்கியமாக, முஸ்லீம்கள், அவர் கல்யாண்சிங்-உடன் கைகோர்த்த்தால், இம்முறை அவருக்கு எதிராக வாக்களிக்கக் கூடும் கூறுகிறார்கள். அதனாலேயே அவர் கட்சி தற்போது முஸ்லீம்கள் வாக்கு வங்கிகள் அல்ல; அவர்களும் மற்றவர்களைப் போல தனி வாக்காளர்களாகவே செயல் படுகிறார்கள் என்று கூறிவருகிறது. பொதுவாக, முலாயம் 150 இடங்களைப் பிடிப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். பெரும்பாலும் தொங்கு சபைக்கு வாய்ப்பு அதிகம் என்பதால் தேர்தலுக்குப் பின் நடக்கும் கூட்டணி பேரங்களுக்கு காங்கிரஸின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.  ராகுல் காந்தி தேர்தலுக்குப் பின் கூட்டணி எதுவும் இருக்காது என்று இப்போது கூறினாலும் கூட அவர்கள் துணையின்றி ஆட்சியமைப்பது கடினம் என்றேத் தோன்றுகிறது. இம்முறை, ராகுலைப் பொறுத்தவரை உத்திர பிரதேசத்தில்  ஆட்சியை நிர்ணயிக்கும் அளவு இடங்களைப் பெறாவிட்டால் அவரின் அரசியல் எதிர்காலம் பெரிய கேள்விக்குறி ஆகிவிடும். அதனால், நேரு குடும்பத்தினர் (ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட் வதேரா) அனைவரும் வேறு வேறு பகுதிகளில் பிரச்சாரத்தை முடக்கிவிட்டுள்ளனர். தேர்தல் ஆணையமும் அவர்களுக்கு ஆதரவாக அவ்வப்போது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று கூட விதிகளை மீறி பவனி வந்த ராபர்ட் வதேராவின் காரைத் தடுத்து நிறுத்திய அதிகாரி இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை, உமாபாரதியின் வருகை கட்சியினரிடையே சற்று உற்சாகத்தைக் கொடுத்திருந்தாலும் கூட, மூன்றாம் இடத்திற்காக காங்கிரஸுடன் மோதும் நிலையில் இருப்பதாகக் கூடத் தெரியவில்லை. இதையும் மீறி காங்கிரஸ் குறிப்பிட்ட அளவு இடங்களைப் பெறாவிட்டால்

தேர்தல் பிரசாரத்தின் போது ’ராகுலுக்கு பிரதமராகும் எண்ணம் இல்லை’ என்று பிரியங்காவும், தன் கவனம் பிரதமர் பதவியில் இல்லை; உத்திர பிரதேசத்தின் வளர்ச்சியில் தான் என்று ராகுலும் மாறி மாறி கூறுவது ’எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதா அல்லது  ’சீ!சீ! இந்த பழம் புளிக்கும்’ என்பதா என்பதைக் காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.

2ஜி ஊழலில் நீதிமன்றம் 122 நிறுவனங்களின் உரிமையை ரத்து செய்துள்ள நிலைமையில், இஸ்ரோ-தேவாஸ் அலைகற்றை ஒப்பந்தத்தில் அரசின் விசாரணைக் குழு, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உட்பட மூன்று பேர் தவறிழைத்துள்ளதாகக் கூறியுள்ளது. அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே 2ஜி வழக்கில் ராஜாவை மட்டுமே பொறுப்பாக்கித் தப்பிக்க நினைக்கிறது. திமுக-வும் பெரிய அளவில் காங்கிரஸின் இந்த பொறுப்புத் துறப்பை எதிர்க்கவில்லை. ஒருவேளை, கனிமொழி வழக்கிற்கான பேரமாகக் கூட இருக்கலாம்.

உலகக் கோப்பை ஆட்ட நாயகன் யுவராஜ் சிங்கின் புற்று நோய் தாக்கியுள்ளச் செய்தி மிகவும் வருத்தம் தரும் நிகழ்வு. இது, சாதாரணமாக புகைபிடிப்பதால் நுரையீரலைத் தாக்கும் புற்றுநோய் அல்ல; ஜெனெடிக் கோளாறால் வந்த நோய் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். துவக்க நிலையிலேயே அது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதால் எளிதாக சரி செய்து விட முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளது சற்று நம்பிக்கையைத் தருகிறது.

இந்தியாவில் வருடத்திற்கு 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள்  புற்றுநோயால் பீடிக்கப்படுகிறார்கள் என்று  கணக்கிட்டுள்ளனர். இவர்களுள், 1½ - 2 லட்சம் பேருக்கு காரணம் புகைப்பிடிப்பதே. அடுத்த இடம் வாய் புற்றுநோய்க்கே. இதிலும் புகை பிடிப்பது ஒரு காரணம் என்றாலும் பெறும் பங்கு குட்கா போன்ற புகையிலைப் பொருட்களே முக்கிய காரணமாக உள்ளன.

பெண்களைப் பொறுத்தவரை 25%-33% சதவிகிதம் மார்பகப் புற்றுநோய்கே ஆளாகிறார்கள். கடந்த 20 வருடங்களில், புற்றுநோய்க்கானத் தீர்வும் மருத்துவமும் பெரிய அளவில் முன்னேறியுள்ளன என்று இந்த நோயிலிருந்து மீண்டு வந்து CanSupport என்ற சேவை நிறுவனத்தைத் துவங்கி நடத்திவரும் முன்ணணி சேவகி ஹர்மலா குப்தா கூறுகிறார். முன் காலங்களைப் போலன்றி மார்பகப் புற்று நோய்க்கு புற்று கட்டிகள் நீக்கப்பட்டு தரப்படும் லீனியர் அக்ஸெலெரேடர் எனப்படும் ரேடியோதெரபி, எக்ஸ்-ரே கருவியைப் போன்று துள்ளியமாக  இருந்து பக்கவிளைவுகளை தவிர்த்து வருவதாகவும் கூறுகிறார். மார்பகப் புற்று நோயைப் பொறுத்தவரை, முன் போலன்றி 80 சதவிகித நோயாளிகள் வெற்றிகரமாக மீண்டுவந்துள்ளதாகவும் கூறுகிறார். இதற்கு, நோயாளியின் உள்ள உறுதி முக்கியம். இந்நோயிலிருந்து மீள முடியும் என்பதை அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் அவர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

புற்று நோயைப் பொறுத்தவரை எவ்வளவு விரைவில் அது கண்டறியப் படுகிறதோ அவ்வளவு சதவிகதம் தீர்வு கிட்டும் என்பது தான் உண்மை. இந்தியாவைப் பொறுத்தவரை, இதில் தான் சற்று முடக்கம். பெரும்பாலும் ஏழைகளைக் கொண்ட நாட்டில் புற்றுநோயைக் கண்டறியும் ஆய்வகங்கள் குறைவாகவும் அவற்றிற்கான செலவு அதிகமாகவும் இருப்பதும் தான் காரணம். அரசு மருத்துவ மனைகளில் ஆய்வு, பயாப்ஸிக்கான உபகரணங்களும் அவற்றின் சரியான பராமறிப்பும் இருக்கும் பட்சத்தில் இதில் ஓரளவு முன்னேற்றம் காணமுடியும்.

இந்த ஆண்டுக்கான் ஐபிஎல் ஏலங்கள் நடந்துள்ளன. ஐபிஎல்-உம் சர்சைகளும் பிரிக்க முடியாதவை. இந்த ஆண்டு, புனே அணியின் உரிமையாளர்களும் இந்திய அணியின் விளம்பரதாரர்களுமான சஹாரா இந்தியா தங்கள் உரிமையையும் விளம்பரங்களையும் தானாக விலக்க முன் வந்துள்ளது ஒரு பெரிய எரிமலையின் சிறிய புகைச்சலே. லலித் மோடி இந்த குழப்பத்தில் மீன் பிடிக்கலாம் என்று தன் தலைமையின் கீழ் மூன்றாண்டுகள் எந்த குழப்பமும் இல்லாமல் நடந்ததாகக் கூறுகிறார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஆட்டக்காரர்கள் பொது ஏலத்திற்கு வந்து விடுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனாலும், சச்சின், தோனி, ரெய்னா, சேவாக் போன்றவர்கள் அந்த அணிகளினாலேயே தக்க வைக்கப்பட்டது விதி மீறல் என்று கூறுகிறார். இவர் தலைவராக இருந்த போது, ஆண்ட்ரூ பிலிண்டாஃப் எந்த ஏலமும் இல்லாமல் சென்னை அணிக்கு ஒப்பந்தம் செய்ய அனுமதித்து இவர் செய்த விதிமீறல் அனைவராலும் மறக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறாரோ என்னவோ? அப்பொழுது, இந்தியா சிமிண்ட்ஸ்-இன் சீனிவாசன் இவர் கோஷ்டி; இப்போது, இவர் பிஸிஸிஐ-யால் தள்ளி வைக்கப் பட்டு பழி வாங்கப்படுகிறார் அது தான் வித்தியாசம்.

ஐந்து நாள் போட்டிகளில் இந்தியா ஆஸ்த்ரேலியாவிடம் 4-0 என்று படு தோல்வி அடைந்துள்ளது. எல்லோரும் மட்டைவீரர்கள் சொதப்பியதைக் குறிப்பிட்டாலும் பந்து வீச்சைப் பற்றி எதுவுமே கூறவில்லை. என்னைப் பொறுத்தவரை பந்து வீச்சு(ம்) சரியில்லை என்று தான் கூறுவேன். புது பந்தில் விக்கெட் எடுத்து கை ஓங்கியிருந்த சமயத்தில், களத்தடுப்பு சரியாக அமைக்கப் படாததும் (எளிதாக ஒரு ஓட்டங்கள் எடுக்க முடிந்தது) ஒரு காரணம் என்றாலும் பந்து வீச்சும் சரியாக இருக்கவில்லை. மட்டை ஆட்ட்த்தைப் பொறுத்தவரை கோஹ்லியை சற்று மேல் வரிசையில் (மூன்றாவது ஆட்டக்காரராக) அனுப்பியிருக்கலாம். மொத்தத்தில், டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை  தோனியின் தலைமை சரியில்லை என்றே கூறலாம்.

உலகக் கோப்பை-யில் முதலிடம் பெற்ற அணியின் நிலைதான் இப்படி என்றால், இரண்டாமிடம் பெற்ற இலங்கை அணியும் தொடரை இழந்துள்ளது. அது ஓரளவு எதிர்பார்த்ததுதான் என்றாலும் இந்திய அணி அளவு மோசம் இல்லை.

பாகிஸ்தானுடன் இங்கிலாந்து  ஓரளவாவது போட்டியுடன் விளையாடும் என்ற எதிர்பார்ப்பு இருந்த்து. ஆனால், அவர்கள் இங்கிலாந்துக்கு வெளியே சுழல் பந்தை விளையாடுவதில் சொதப்புவது மீண்டும் தொடர்ந்துள்ளது.

ஆஸ்த்ரேலிய-இந்திய-இலங்கை முத்தரப்பு ஒருநாள் போட்டியைப் பொறுத்தவரை இந்திய-இலங்கை போட்டிகள் தான் எந்த அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும் என்பதை நிர்ணயிக்கும் என்று நினைக்கிறேன். கடைசி, இரண்டு போட்டிகளில் 300க்கும் மேல் அடித்து வெற்றி பெற்ற தெம்பில் இலங்கை இருக்கிறது. அதே நேரம் தென் ஆப்பிரிக்க களம் ஓரளவு மட்டை வீரர்களுக்கு  (குறிப்பாக ஒரு நாள் போட்டிகளில்) உதவும் என்பதையும் கருத வேண்டியுள்ளது. ஆஸ்த்ரேலிய ஆடுகளங்கள் பெரியவை. எனவே அடித்து ஆடுவதை விட ஓடி ரன் எடுக்கவேண்டியது அவசியம்.

4 கருத்துகள்:

  1. நல்ல கலவை சீனு...

    புற்று நோய்... - புகைப்பிடிப்பதால் எவ்வளவு கெடுதல் என்று தெரிந்தும் இன்னும் தொடர்ந்து புகையிலை பயன்படுத்துவது இன்னும் குறையவில்லை.... :(

    பதிலளிநீக்கு
  2. இந்தக் கலவை எழுதும் போது நல்ல ஃபார்ம்-ல் இருந்தீர் என்று நினைக்கிறேன்! பேசாமல் உங்களை ஆஸ்த்ரேலியா அனுப்பி இருக்கலாம்.

    புகைப்பிடித்து, குட்கா சுவைத்து புற்று நோய்க்கு ஆளானவர்களைப் பார்க்கும் போது இரக்கத்தைவிட எரிச்சல்தான் வருகிறது. ஆனால் ஜெனட்டிக் கோளாறால் வருகின்ற புற்று நோயால் அவதிப்படும் யுவராஜ் போன்றோர்க்காய் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி வெங்கட்.

    சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம். ஏனென்றால் பழக்கத்தை ஆரம்பித்துவிட்டால் நிறுத்துவது கடினம்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி பத்து,

    //இரக்கத்தைவிட எரிச்சல்தான் வருகிறது//
    பாதிக்கப் படுவது அவர்கள் மட்டுமல்லவே; ஒட்டு மொத்தக் குடும்பமும் பாதிக்கப் படுவது தான் வருத்தம் தருகிறது..

    பதிலளிநீக்கு