நேற்றுக் காலை குடியரசுத் தலைவர்
திருமதி பிரதிபா படில் தில்லி மெட்ரொ ரயிலில் 50 நிமிடங்கள் (உத்யோக் பவன் –
சுல்தான்புர் – உத்யோக் பவன்) பயணம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசும்
பொழுது தில்லியின் பெருமைகளில் மெட்ரோ ரயிலும் ஒன்று என்றும் அது இந்தியாவின்
வளர்ச்சிக்கான சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறியுள்ளார்.
தில்லியைப் பொறுத்தவரை, மெட்ரோ
ரயில் மிகச் சிறந்த மாற்றத்தையே கொண்டுவந்துள்ளது. குறிப்பாக, தில்லியின்
போக்குவரத்துச் சிக்கலை மெட்ரோ ரயில் திட்ட்த்தைப் போல வேறு எந்தத் திட்டமும்
தீர்க்கவில்லை.
இதைச் செயல் படுத்த முக்கியக்
காரணம் இதன் தலைவராக இருந்த திரு. ஸ்ரீதரன் என்றால் அது மிகையல்ல. தொலைநோக்குடன் கூடிய
அவருடைய திட்டங்களும் அவற்றைச் செயல் படுத்த அவருக்கு அளிக்கப் பட்ட சுதந்திரமும்
தான் இத்திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். இத்திட்டத்தின் (இது போன்ற
அனைத்துத் திட்டங்களிலும்) முதல் சவால் என்றால் அது நில கையகப் படுத்துதல் தான்.
அதில், இத்திட்டத்திற்கும் முதலில் எதிர்ப்புகள் வரத்தான் செய்தன. இங்கு தான் இதன்
தலைவருக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரம் குறிப்பிடப்பட வேண்டியதாக இருக்கிறது.
அரசியல் தலையீடு இதில் சுத்தமாக இல்லை என்றே கூறவேண்டும். ஒரு அரசாங்கம் ஒரு
திட்டம் நிறைவேற வேண்டும் என்று நினைத்து உறுதியாக இருந்தால் திட்டம் வெற்றிகரமாக
முடிக்க முடியும் என்பதற்கு இது அத்தாட்சி. அத்திட்டத்தைச் செயல் படுத்தத் திறமை
வாய்ந்த நேர்மையான அதிகாரிகள் இருப்பதும் முக்கியம் என்பதையும் குறிப்பிடவேண்டும்.
இரண்டும் ஒருசேர அமைந்த்து தான் இத் திட்ட்த்தின் வெற்றிக்குக் காரணம்.
Public Private Partnership (PPP)
என்று கூறப்படும் தனியார், பொதுத்துறை கூட்டுறவு திட்டத்தின் அடிப்படையில்
கட்டுமானப் பணிகள் தனியார் வசம் பணிகளின் அடிப்படையில் DMRC-யால் ஒப்பந்தம்
செய்யப் பட்டன. கட்டுமானப் பணிகள் தனியாரால் DMRC-யின் மேற்பார்வையில்
செய்யப்பட்டன.
இதுவரை, இரண்டு பகுதிகளாக
(Phases)ப் பிரித்து முடிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மொத்த நீளம் சுமார் 166 கி.மீ [3
முக்கிய வழிகள் – மூன்றும் ராஜீவ் சௌக் என்று அழைக்கப்படும் கனாட் ப்லேஸ் அல்லது
மத்திய செயலகம் (Central Secretariat) ஆகிய இடங்களில் ஒன்றுடன் ஒன்று இணைகின்றன;
125 ரயில் நிறுத்தங்கள் இருக்கின்றன]. இவற்றைத் தவிர புதுதில்லி ரயில் நிலையத்தில்
இருந்து தில்லி ஏர்போர்ட் வரை சுமார் 23 கி.மீ நீள வழியும் (6 நிறுத்தங்கள்) உண்டு.
ஆரம்ப காலத்தில், சில இடங்களில்
தரையினடியில் இல்லாமல் மேம்பாலத்தில் ரயில்கள் இயக்கப்படுவது எதிர்க்கப்பட்டது.
சில இடங்களில் நிறுத்தங்களின் இடத்திற்கும் அந்த நிறுத்தங்களுக்கு இடப்பட்ட
அபத்தமான பெயர்களுக்கும் குழப்பங்களைத்
தந்ததால் எதிர்ப்புகள் இருந்தன. [உதாரணத்திற்கு, நோய்டா சிட்டி செண்டர் என்பது
நோய்டாவின் மத்தியிலும் இல்லை அந்த பெயரில் எந்த இடமும் இல்லை. அதே போல் ஜவஹர்லால்
நேரு ஸ்டேடியம் நிறுத்தம் என்பது CGO Complex நிறுத்தம் தான். ஜங்க்புரா என்பது
ஜ.நே.ஸ்டேடியம் அருகில் உள்ள நிறுத்தம் (ஜங்புரா என்ற பகுதி அங்கிருந்து சுமார் 1
1/2 கி.மீ தூரத்தில் உள்ளது). குட்காவ்(ன்) பகுதியிலும் இதே போல் குழப்பமே. தவிர
கனாட்ப்ளேஸ் நிறுத்தம் ராஜீவ் சௌக் என்று பெயரிடப்பட்டது அரசியல் காரணம்.
இது போன்ற சிறுசிறு குழப்பங்களும்
எதிர்ப்புகளும் இருந்தாலும், பொதுவாக மெட்ரோ ரயில் திட்டத்தினால் ஏற்பட்ட நன்மைகள்
இத்திட்டத்தைப் பற்றி மக்களிடையே இத்திட்டதைப் பற்றிய நல்லெண்ணத்தையே
வளர்த்துள்ளன. சாதாரணமாக ஏதாவது ஒரு
திட்டம் மீடியாவிற்கு ஏற்புடையதாக இல்லை என்றால் அத்திட்டத்தில் உள்ள சிறுசிறு
தவறுகளும் பெரிதாகப் படம் பிடித்துக் காட்டப்படும். ஆனால், மெட்ரோ ரயில்
திட்ட்த்தைப் பொறுத்தவரை மீடியாக்களும் இத்திட்டத்தைப் பற்றிய எதிர்மறைச்
செய்திகளை தருவதில்லை. பெரிய செய்திகள் தானாக இடம் பிடித்துவிடும்.
அது போன்ற செய்திகள் சமீப காலமாக அதிகமாக
வருவது தான் சற்றுக் கவலை அளிக்கிறது.
இத்திட்டத்தின் பெரிய கரும்புள்ளியாகக்
கருதப்படுவது 2009-ஆம் ஆண்டு ஜம்தார்புர் அருகில் தூண் இடிந்து விழுந்தது 6
தொழிலாளர்கள் உயிர் இழந்தது தான். [இதைத்
தொடர்ந்து ஸ்ரீதரன் பதவி விலகி கடிதம் அனுப்ப முதல்வர் அவரது பதவி விலகலைத்
திரும்பப் பெற வைத்தார்]
தற்போது இது சம்பந்தமாக 24 பேர்
மீது கவனக் குறைவு மற்றும் அதனால் ஏற்பட்ட இழப்புகளுக்காக முதல் தகவல் அறிக்கைப்
பதிவு செய்யப்பட்டுள்ளது,
சென்ற வாரம் இத்திட்டத்தின்
மூன்றாவது பகுதியான மத்திய செயலகம் – காஷ்மீரிகேட் என்றழைக்கப்படும் Inter-State
Bus Terminal பகுதி வழியில் பூமியடியில் தோண்டும் பொழுது 17-ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்த பழைய மசூதி ஒன்று வெளிப்பட்டுள்ளது. 1650-ஆம் ஆண்டு ஷாஜகானால் அவரது மனைவி
அக்பராபாதி பேகம்-த்திற்காகக் கட்டப்பட்ட மசூதியாகும். 1857 கலகத்திற்குப் பிறகு
பிரிடிஷாரால் இது அழிக்கப்பட்டது. வரலாற்று ரீதியாக இங்குதான் முதன் முதலில்
குரான் அரேபிய மொழியில் இருந்து உருது மொழியில் இங்குதான் மொழி பெயர்க்கப் பட்டது
என்று கூறுகிறார்கள்.
இதனால், இப்பகுதியில் தற்காலிகமாக
வேலைகள் முடக்கப்பட்டுள்ளன. வெறு பாதையில் திட்டம் செயல்படுத்த வேண்டுமானால் அது
சற்று தாமதமாகலாம்.
இதுவாவது பரவாயில்லை
எதிர்பாராத்து; ஆனால், சமீபகாலமாக தொழில்நுட்பக் காரணங்களால் (குறிப்பாக சிக்னல்
சிக்கல்களால்) அவ்வப்பொழுது ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டு அல்லது மெதுவாக
இயக்கப்படுவது வழக்கமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் ஏர்போர்ட் எக்ஸ்ப்ரெஸ்
லைன் என்று அழைக்கப்படும் புதுதில்லி ரயில் நிலையம் – விமான நிலைய வழி, சமீப
காலமாக ஏற்பட்ட தடங்கல்களை நீக்க புணர் சீரமைப்புச் செய்வதற்காகத் தற்காலிகமாக,
நிறுத்திவைக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்த
கோளாறுகளுக்கானக் காரணமோ அதற்குப் (தவறுகளுக்கு) பொறுப்பானவர் யார் என்பதோ அல்லது
இந்த பணிகளுக்கான செலவுகளை யார் ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பது பற்றியோ
ஒன்றும் கூறவில்லை.
இவ்வளவு பெரிய வெற்றிகரமான ஒரு
திட்டத்தில் இது போன்ற சிறுசிறு
சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், இவை ஆரம்பத்திலேயே களையப் படாமல்
விட்டால் பின்னர் பெரிதாக வெடிக்கக் கூடும் என்பதால் இவற்றையும் சீர் செய்வது
முக்கியம். செய்வார்களா பார்ப்போம்….
டில்லி மெட்ரோ ரயில் பற்றி நிறைய விபரங்கள் அறிய முடிகிறது. நாங்கள் டில்லி வந்தபோது என்ஜாய் செய்தோம் இன்னும் விரிவடைந்து நல்ல முறையில் நடந்தால் மகிழ்ச்சி
பதிலளிநீக்குநல்ல செயல் திட்டம், நேரிய செயல்முறை இரண்டும் சேர்ந்ததால் கிடைத்த வெற்றி. தற்போதைய தேவை சரியான பராமரிப்பே.
நீக்குவிரிவாக்கத்தைப் பொறுத்தவரை மேலே படத்தில் குறிப்பிட்டுள்ள அடர்நீலம், குங்குமபூ வண்ண கோடுகள் தான் அடுத்ததாகத் திட்டமிடப் பட்டுள்ளவை.
மிக மிக தெளிவாக அழகாக கூறியுள்ளீர்கள். நீங்கள் கூறிய இடங்களில் சிலவற்றின் பெயர்களைத் தான் கேட்டுள்ளேன். பல கோடி கொட்டி பணி செய்து இருகிறார்கள் முறையாக பராமரித்தால் நலம். ஆமாம் அங்கே பணி நடக்கும் பொழுது சாலை நெரிசலை எப்படி சமாளித்தார்கள் டெல்லி வாழ் மக்கள்.
பதிலளிநீக்குத ம 3
சென்னையைப் போலல்லாமல் தில்லியின் சாலைகள் சற்று அகலமாவை. அதே நேரம் தில்லியில் வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். கட்டுமானப் பணிகள் நடக்கும் பொழுது சற்று கடினமாகத்தான் இருந்தது. சென்னையைப் போல் சாலைகளில் நீர் தேங்கி நிற்பதில்லை (மழை பெய்து கொண்டிருக்கும் பொழுதுதான் நீர் தேங்கி போக்குவரத்து ஸ்தம்பிக்கும்). பழைய தில்லி பகுதிதான் அதிகம் கஷ்டப் பட்டது என்று கூறலாம்.
நீக்குநல்ல தகவல்களுடன் கூடிய ஆராய்ச்சி. வாழ்க.
பதிலளிநீக்குமெட்ரோ ரயில் உள்ளவரை ஸ்ரீதரன் பெயர் நிலைத்திருக்கும்.
//நேற்றுக் காலை குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா படில் தில்லி மெட்ரொ ரயிலில் 50 நிமிடங்கள் (உத்யோக் பவன் – சுல்தான்புர் – உத்யோக் பவன்) பயணம் செய்தார்//
பின்னே எவ்வளவு நாட்கள்தான் விமானாத்திலேயே பயணம் செய்வார். அவருக்கும் ரயிலில் போகணும்னு ஆசையிருக்காதா!
//நோய்டா சிட்டி செண்டர் என்பது நோய்டாவின் மத்தியிலும் இல்லை அந்த பெயரில் எந்த இடமும் இல்லை.//
அப்புறம் எந்த நாய்டா அப்படி பேர்வச்சதுன்னு யாரும் கேட்கலையா!
வருகைக்கு நன்றிகள் பத்து.
நீக்குஸ்ரீதரன் அவர்களின் பணியில் இது ஒரு மணிமகுடம்... பாம்பன் பாலம், கொங்கன் ரயில்வே என பல சிறப்பான பணிகள் ஆற்றியுள்ள இவருக்கு பாரத ரத்னாவே தரலாம்... ஆனால் யாரும் பரிந்துரைக்கத்தான் மாட்டார்கள்.
பதிலளிநீக்குஆம்... பாரத ரத்னா-விற்கு அவர் பெயர் எதிர்காலத்தில் பரிந்துரைக்கப்பட வேண்டும். நல்லது நட்க்கும் என்று எதிர்பார்ப்போம்.
நீக்குAirport line:Like me ppl just getting annoyed while seeing the pics published in paper.It seems very serious issue.To some extend quality and supervision has been sacrificed.
நீக்குஆம் குமார், மெட்ரோ திட்டத்தின் சிறந்த பகுதியாகத் திட்டமிடப் பட்ட இது இன்று இதன் கரும்புள்ளியாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. நேஷனல் ஜியாக்ரபியில் டைட்டானிக் கப்பல் மூழ்கிய investigation-ல் அதற்கு அதன் rivet சரியில்லாததுடான் என்று பார்த்ததுண்டு. இதிலும் அதேபோல் தூண்களில் முடுக்கப்பட்ட 295 நட்டுகள் சரியில்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் (தனியார் கூட்டுனர்) கூறியது. ஐஐடி, கரக்பூர் மாணவர்குழுவின் ஆய்வில் இது 400-500 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றிய விசாரணை நடக்கிறது.
நீக்குநிலமைச் சீரடைந்தால் நல்லது. ஆனால் அவர்கள் முன்னர் கூறியது போல் ஒரு மாதத்தில் (ஆகஸ்ட்-க்குள்)சீரடையும் என்றுத் தோன்றவில்லை.
வருகைக்கு நன்றிகள்.
என்னது நட்டுகளா? அவ்வளவு நட்டுகளுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்காதே!! உள்ளூர் செய்தி தாளில் ஏதாவது படம் வந்தால் போடவும்.
நீக்குநான் பார்த்த அளவில் கான்கிரீட் தரமும்,அளவியல் (Survey) குற்றமும் புகைப்படங்களில் கண்கூடாக தெரிகிறது. Poor supervision or no supervision at all.இந்த குறைபாடை இப்போது நான் செய்யும் வேலையிலும் பார்க்கிறேன்.அய்யோடா என்று தலையில் கை வைத்துக்கொள்ளத்தான் முடிகிறது.
மிகப் பெரிய defects-ஆக தூண்களையும் அவற்றின் மேல் இருக்கும் girders-ஐ யும் இணைக்கும் தட்டுகளான கான்க்ரீட் bearings-ல் பெரும்பானவற்றின் தரம் சரியில்லை. போகப்போக ஒவ்வொன்றாக இப்போது அவற்றைப் பிணைக்கும் நட்டுகளின் தரம் கூட ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்திலிருந்தே ஸ்ரீதரன் ரிலையன்ஸை எச்சரித்து வந்த்துள்ளார். ஆனாலும் மெட்ரோ தன் பொறுப்பை கை கழுவ முடியாது என்பது தான் உண்மை
நீக்கு