புதன், ஜனவரி 30, 2013

காந்தியடிகளும் மதுவிலக்கும்



நாம் நம் குழந்தைப் பருவத்திலிருந்தே காந்தியடிகளைப் பற்றிப் படிக்கும் பொழுது அவரின் மதுவிலக்கு நிலைப்பாட்டைப் பற்றியே படித்துவந்துள்ளோம். எனவே, காந்தியடிகள் என்றவுடன் அஹிம்சையும், மதுவிலக்கும் நம் அனைவராலும் அறியப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், சத்தீஸ்கர் அரசின் மதுபான நிறுவனம் (Chhattisgarh State Beverages Corporation) – சத்தீஸ்கரின் டாஸ்மாக் - தன் முக்கியச் செயலான மதுபான விற்பனையுடன் மதுவிலக்குப் பிரசாரத்தையும் செய்ய உத்தேசித்துள்ளது. இதற்கு, தேசத்தந்தை மஹாத்மா காந்தியின் பெயரைப் பயன்படுத்த உள்ளது. சமீபத்தில் (24.01.2013 அன்று) இந்த வருட காலண்டரை காந்தியடிகளின் உருவத்துடன் வெளியிட்டுள்ளது.

காந்தியடிகளின் படம் ’குடிமகன்’களின் மனவுணர்வைத் தூண்டி அவர்களைப் படிப்படியாக இப்பழக்கத்திலிருந்து விடுவிக்கத் தூண்டும் என்று காலண்டரை வெளியிட்ட சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் தெரிவித்துள்ளார். காலண்டரில் காந்தியடிகள் மதுபானப் பழக்கத்திற்கு எதிராக வெளியிட்டக் கருத்துக்களை வெளியிட்டுள்ளது. காந்தியடிகளின் இந்தக் கருத்துகளைப் படிப்பவர்கள் மெல்லத் தங்கள் குடிப்பழக்கத்தை விட்டுத் திருந்த ஒரு வாய்ப்பாக இது இருக்கும் என்று அந்நிறுவனத் தலைவர் தேவஜ்பாய் படேல் கூறியுள்ளார்.

ஆனால், மாநில எதிர்கட்சியான காங்கிரஸ், மதுபான நிறுவனத்தின் காலண்டரில் காந்தியடிகளின் படத்தை வெளியிடுவது காந்தியடிகளை அவமானப்படுத்தும் செயல் என அறிக்கைவிட்டுள்ளது.

சத்தீஸ்கர் அரசு மதுபான நிறுவனம் சமீபகாலமாகச் சில சமூகப் பொறுப்புள்ளச் செயல்களையும் செய்ய முனைந்துள்ளது. முதல் கட்டமாக, இரண்டாயிரத்திற்கும் குறைவான மக்கள் தெகையுள்ள கிராமங்களில் தன் மதுபானக் கடைகளை அகற்றியது. பின் அடுத்த கட்டமாக இந்த எல்லையை 2500க்கு விரிவாக்கியுள்ளது. இதன் மூலம் சுமார் 350 மதுபானக் கடைகளை சமீபத்தில் மூடியுள்ளது. தவிரவும் இந்த நிறுவனம் ‘பாரத் மாதா வாஹினி’ என்ற மாதர் சங்கங்களையும் அமைத்து மதுவிலக்குப் பிரசாரம் செய்து வருகிறது.

மற்ற மாநிலங்களைப் போலன்றி வெறும் மதுபான விற்பனையை மட்டும் செய்யாமல் – பூரண மதுவிலக்கை அறிவிக்க இயலாத நிலையில் – ஓரளவு இது போன்ற செயல்களையாவது செய்கிறதே என்றுத் தேற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் தான் இன்று நாடு உள்ளது.

காந்தியின் பெயரை உபயோகித்தாவது நிலைமையைச் சற்று சீர் செய்ய நினைக்கும் சத்தீஸ்கர் அரசின் மதுபான நிறுவனத்தின் இந்தச் செய்கையைப் பாராட்ட முடியாவிட்டாலும், தவறு என்று கூறமுடியாது.

11 கருத்துகள்:

  1. அன்புடன்
    புத்தம் புது பொலிவுடன்,

    அமர்க்களம் கருத்துக்களம்
    தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் களம்

    www.amarkkalam.net

    பதிலளிநீக்கு
  2. மது வாங்க காந்தி படம்
    போட்ட ரூபாய் நோட்டு தேவைப்படுகிறது.

    மதுவை குடித்தவுடன் எல்லாம் மறந்துபோகும்.

    மதுவிற்கு அடிமையானவர்கள்.இருந்தும் பயனில்லை.

    இறக்கும்போதும் அவர்கள் குடும்பத்தையும், நாட்டையும் நாசப்படுத்திவிட்டுதான் போவார்கள்.

    எப்போது இந்தியா இரண்டாக பிளவுபட்டதோ அவர் மனம் உடைந்துவிட்டார்.

    காந்தியின் கொள்கைகள்அவர் கண் முன்னாலேயே அவரின் அழிவதை கண்டு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார்.

    அவர் உயிரற்ற உடலைத்தான் கோட்சே கொன்றான் என்பதுதான் உண்மை.

    பதிலளிநீக்கு
  3. // மற்ற மாநிலங்களைப் போலன்றி வெறும் மதுபான விற்பனையை மட்டும் செய்யாமல் – பூரண மதுவிலக்கை அறிவிக்க இயலாத நிலையில் – ஓரளவு இது போன்ற செயல்களையாவது செய்கிறதே என்றுத் தேற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் தான் இன்று நாடு உள்ளது.//

    அதே! அதே! சபாபதே!

    (இன்னைக்கு 11.00 மணிக்கு சங்கு சத்தம் கேட்டதா! எனக்குக் கேட்கவில்லை, அதான் கேட்டேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றிகள் பத்து!

      நேற்று 11 மணிக்கு சங்கொலி கேட்கவில்லை. ஒருவேளை தியாகியர் தினத்தில் மௌன அஞ்சலி செய்யும் வழக்கத்தை அரசு மறந்து விட்டதோ?

      நீக்கு
  4. அனைத்து மாநிலங்களும் கடைப்பிடிக்குமா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூரண மதுவிலக்கை யாரும் கடை பிடிக்கப் போவதில்லை!

      இதையாவது செய்யலாமே!

      நீக்கு
  5. காந்தியின் பொன்மொழிகளும், மதுவுக்கு எதிரான கருத்துக்களும் அச்சிட்ட காலண்டர் எவரையும் மாற்றிவிடும் என்ற நம்பிக்கை எனக்கில்லை ஸ்ரீனி. சிகரெட் பாக்கெட்டில் இது தீங்கானது என்று பம்மாத்துக்கு அச்சிடுவது போலத்தான்... ஏதோ... ஒண்ணு ரெண்டு காந்தியின் கருத்துக்களாவது குடிக்கறப்ப அவங்க மனசுக்குள்ள லேசா எட்டிப் பாக்காதான்னு வேணா நாம நப்பாசைப்பட்டுக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றிகள் கணேஷ்!

      படிப்படியாகக் குடிப்பழக்கம் விடுவதென்பது எப்பொழுதுமே நடக்காத ஒன்றுதான்! படித்ததால் (காந்தியின் பொன்மொழிகளை) விட்டுவிடுவார்கள் என்றால் எல்லா இடத்திலும் வைத்தால் போதுமே. திருடனாய் பார்த்துத் திருந்துவது போல் குடிகாரனாய் பார்த்து விடுவதுதான் வழி!

      ’இருந்தாலும் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூச் சர்க்கரை’ என்பது போல இதுமாதிரி ஏதாவது செய்கிறார்களே என்றுத் திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியது தான்.

      நீக்கு
  6. உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடு தான் ஸ்ரீனி!
    காந்திஜி அவர்களின் படத்தையும், அவரது கருத்துக்களையும் படிக்கும் போது ஒரு சின்ன உறுத்தலாவது மனதில் ஏற்படும் இல்லையா? பெரிய மாற்றத்திற்கு அடிகோலும் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியாவது நடக்காதா என்ற நப்பாசைதான்!

      வருகைக்கு நன்றிகள்.

      நீக்கு