வெள்ளி, மே 31, 2013

புகை இ(ல்)லை நாள்


இன்று மே 31-ஆம் நாள்.

உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை புகையிலை மறுப்பு/எதிர்ப்பு தினமாகக் கொண்டாடி வருகிறது.

இதில் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தைப் பொறுத்தவரை இது அமெரிக்க பழங்குடிகளிடமிருந்து, கொலம்பஸால் ஐரோப்பிய தேசத்திற்க்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் உலகமெங்கும் பரவியது என்று கூறுகிறார்கள். ஆரம்ப காலத்தில் இந்தப் புகையிலையைப் புகைக்கும் பழக்கம் மருத்துவ ரீதியாக நல்லது என்று கருதப்பட்டது. எனவே, பெரும் பணக்காரர்களாலும் அரச குடும்பத்தினராலும் கடைப்பிடிக்கப்பட்டு அதுவே இப்பழக்கத்திற்கு விளம்பரமாக அமைய வெகுவிரைவாகப் பரவியது.

பிற்காலத்தில் நீண்ட ஆராய்ச்சியின் விளைவாகப் புகைப்பழக்கத்தின்  கெடுதல்கள் எடுத்துரைக்கப்பட்டாலும் அதற்குள்  இப்பழக்கம் வெகுவாகப் பரவியுள்ளது.  இன்று உலக அளவில் இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை சுமார் நான்கில் மூன்று பேர் புகைப்பது அல்லது புகையிலைப் பொருட்களை உபயோகிப்பது என்பதில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆண்களை மட்டும் எடுத்துக் கொண்டால் பாதிபேர் அதாவது சுமார் 50 சதவிகித்தினரிடம் புகையிலைப் பொருட்களை உபயோகிக்கும் பழக்க்கம் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பெண்களைப் பொறுத்தவரை ஐந்தில் ஒருவர் (20 சதவிகிதம்) புகையிலை உபயோகிப்பாளர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்களில் சுமார் 20 கோடி பேர் (இதில் 10% 17 வயதுக்கும் குறைந்தவர்கள்) புகையிலைப் பழக்கத்தைக் கைவிடக் கூட முடியாத நிலையை அடைந்துள்ளார்கள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கூறுகிறது.

சிகரெட் பழக்கத்தைப் பொருத்தவரை இது சம்பந்தமாக எடுக்கப்பட்டத் தகவல்களின் படி சுமார் 55—60% பேர் இப்பழக்கத்தை தங்கள் பதின்ம வயதில் (13-20 வயதுக்குள்) துவக்கியுள்ளதாகக் கூறியுள்ளனர். சுமார் 10 % பேர் சிறார்களாக (13 வயதுக்கும் குறைவாக)  இருக்கும் பொழுதேத் துவங்கிவிட்டதாகக் கூறியுள்ளனர். மீதமுள்ள 30% மட்டுமே 20 வயதுக்கு மேல் இப்பழக்கத்தை ஆரம்பித்துள்ளனர்.

எனவே, பள்ளி-கல்லூரிகளின் அருகாமைப் பகுதிகளில் புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடைச் செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது.

சமீபத்தில் தில்லியில் 5000 புகைப்பழக்கம் உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் படி புகைப்பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கையில் 27% மட்டுமே 35 வயதுக்கும் குறைவானவர்களாக இருந்தனர். இதற்குக் காரணமாகக் கூறுவது என்னவெனில் பொது இடங்களில் புகைக்கதற்கும் 18 வயதுக்கு குறைவானவர்களுக்குப் புகைபொருட்கள் விற்பனைச் செய்வதில் போடப்பட்டத் தடையே. இந்தத் தடை பொதுவாக இந்தியா முழுவதும்  இருந்தாலும் பெருநகரங்களில் மட்டுமே முறையாகச் செயல்படுத்தப்படுகிறது. எனவே, இந்தத் தடையை பெருநகரங்களைத் தாண்டி மற்ற இடங்களிலும் முறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.

மேலும், தில்லியில் அரசு சார்ந்த அலுவலகங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் இந்த அரசு சார்ந்த பணியிடங்களில் புகைப் பிடிக்க உள்ளத் தடையும் ஒரு முக்கியக் காரணம் என்றும் கூறுகிறார்கள். எனவே தனியார் நிறுவனங்களையும் தங்கள் பணியிடங்களில் புகைபிடிக்கத் தடைசெய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்.

தவிர இந்திய புகையிலைப் பொருட்கள் உபயோகிப்பாளர்களில் சிகரெட்  பிடிப்பவர்கள் எண்ணிக்கை சுமார் 10 -20% விதம் தான். 50% மேலானவர்கள் உபயோகிப்பது புகையிலை, குட்கா போன்றவையே. இவற்றுக்கும் மேற்கூறியக் கட்டுப்பாடுகள் முறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் அறிக்கையின் படி ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் புகையிலை பாதிப்பினால் இறக்கிறார்கள் என்று கூறுகிறது.  இதன் மற்றொரு அறிக்கைப்படி இந்தியாவில் வாய் பகுதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகிலேயே அதிகம் என்பதே. இதற்கு முக்கியக் காரணம் புகையிலையே.

உலகச் சுகாதார நிறுவனம் இவ்வாண்டு அறிக்கையில் புகையிலைப் பொருட்கள் சந்தைப் படுத்துவதற்கு முழுத் தடை விதிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஆனால், முழுத் தடை என்பது இந்தியா போன்ற நாடுகளில் தற்போது சாத்தியமா பெரிய கேள்வி. குறைந்த பட்சம் இவற்றின் கட்டுப்படுத்துவதாவது முறைப்படுத்தப்படுவது தான் அவசியம்.

மற்றபடி, உலக சுகாதார நிறுவனம் மே-31 ஐ புகையிலை மறுப்பு தினமாக அறிவித்தாலும் மக்கள் தாங்களாகவே எப்பொழுது புகையிலையின் கெடுதல்களை உணர்ந்து கைவிடுகிறார்களோ அந்தத் தினம் தான் உண்மையான புகையிலை மறுப்பு தினம்.

12 கருத்துகள்:

  1. மற்றபடி, உலக சுகாதார நிறுவனம் மே-31 ஐ புகையிலை மறுப்பு தினமாக அறிவித்தாலும் மக்கள் தாங்களாகவே எப்பொழுது புகையிலையின் கெடுதல்களை உணர்ந்து கைவிடுகிறார்களோ அந்தத் தினம் தான் உண்மையான புகையிலை மறுப்பு தினம்.

    அந்த நாள் விரைவில் மலரட்டும் புகை இல்லாமல்..!

    பதிலளிநீக்கு
  2. முடிவில் சொன்னீர்களே அது தான் நடக்க வேண்டும்...

    புகைக்க ஆசை எழும் நேரத்தில் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால், அதில் நிகொட்டினை எதிர்க்கும் சக்தி இருப்பதால்,புகைக்கும் விருப்பத்தை அது கட்டுப்படுத்துவதாக... :-

    http://iniya-kavithai.blogspot.in/2013/05/blog-post_31.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் புதுத் தகவலுக்கும் நன்றிகள் தனபாலன்!

      நீக்கு
  3. நானும் இன்றுதான் ஒரு பதிவிட்டேன். என்ன, இது வேறு அது வேறு. உம்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா! படித்துவிட்டேன்!

      வருகைக்கு நன்றிகள்!

      நீக்கு
  4. //மற்றபடி, உலக சுகாதார நிறுவனம் மே-31 ஐ புகையிலை மறுப்பு தினமாக அறிவித்தாலும் மக்கள் தாங்களாகவே எப்பொழுது புகையிலையின் கெடுதல்களை உணர்ந்து கைவிடுகிறார்களோ அந்தத் தினம் தான் உண்மையான புகையிலை மறுப்பு தினம்.//

    உண்மை.

    பதிலளிநீக்கு
  5. என் நண்பர்கள் யாரும் புகைப்பிடிப்பதில்லை என்பது எனக்குப் பெருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு நேர்மாறாக தில்லி வரும்வரை (கல்லூரியில் எங்கள் கூட்டத்தில்) நானும் இன்னும் ஒருவரையும் தவிர மற்ற அனைவரும் புகைப்பவர்களே! தில்லியில் கிடைத்த அறைத்தோழர்கள் யாருக்கும், நெருங்கிய நண்பர்களில் பெரும்பாலோருக்கும் நல்ல வேளையாகப் புகைபழக்கம் இல்லை!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

      நீக்கு