திங்கள், மே 21, 2012

இராஜீவ் காந்தியின் மரணம்


1991-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி காலை சுமார் 6.00 மணி; நாங்கள்  (நானும் என் அறையில் தங்கியிருந்த நண்பரும்) தில்லி வந்து 7-8 மாதங்களே ஆன நிலைமை – அப்பொழுது தினமும் காலை நடைப்பயிற்சி செய்யும் அடுத்த அறையில் தங்கியிருந்த மராட்டிய நண்பர் பதட்டத்துடன் திரும்பி, ராஜீவ் காந்தி கொலை செய்யப் பட்டு விட்டார் என்று கூறினார். அவர் வரும் போது அருகில் கிடைத்த பிரட், பால் போன்றவற்றை கையோடு வாங்கி வந்திருந்தார்.

ராஜீவ் இறந்தார் என்று கேட்டதும் உடனே எங்கள் மனதில் எழுந்த கேள்வி கொலையாளி சீக்கியரா என்பதுதான். ஏனென்றால், அந்நேரத்தில் காலிஸ்தான் பிரச்சனை சற்று தீவிரமாக இருந்த நிலை. மேலும், சீக்கியர்கள் இந்திரா-வின் இறப்பிற்குப் பின் நடந்த படுகொலைகளுக்காக எந்நேரமும் பழிவாங்கக் காத்திருந்தனர்.

ஆனால் நண்பர் மேலும் தொடர்ந்து ராஜீவ், தமிழ் நாட்டில் கொல்லப்பட்டுள்ளார் என்றும் அவரைக் கொன்றது தமிழர்களே என்று கூறினார். அத்துடன் அவர், நாம் அனைவரும் இரண்டு மூன்று நாட்களுக்கு வீட்டை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்றும், பதட்டம் ஓய்ந்து நிலைமை சீரான பின்னரே வெளியில் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

அவர் அவ்வாறு கூறியது ஓரளவு சரிதான்; காரணம், இந்திரா இறந்த பொழுது சீக்கியர்கள் பெருமளவில் தங்கியிருந்த பகுதிகள் குறிவைத்துத் தாக்கப்பட்டதுதான்.

தில்லியைப் பொறுத்தவரை, மஹாராஷ்டிரத்திற்கு தெற்கில் உள்ளவர்கள் அனைவருமே மதராஸிகள் தான். (எப்படி நம் தமிழ்நாட்டில் வடவர் என்றாலே அவர்கள் சேட்டுகள் தான் என்று நினைக்கிறோமோ அது போல). அதிலும், நாங்கள் அப்பொழுது இருந்த்து, தமிழ் நாட்டிலிருந்து அனைவரும் முதலில் காலடி வைக்கும் ‘கரோல் பாக்’ பகுதி. நாங்கள் தங்கியிருந்த அந்த mansion-ல் குறைந்த்து 50 பேர் இருந்திருப்போம்;  அதில் 35 பேருக்கு மேல் தமிழர்கள்; மீதி மற்ற மாநிலத்தைச் சேர்ந்தத் தென்னிந்தியர்கள்.

இதனிடையே படபடப்புடன் வந்த mansion-ன் மேலாளர், அனைத்து கதவுகளையும் மூடச் சொல்லி யாரும் எதற்கும் வெளியில் செல்லக் கூடாது என்றும் வீட்டிலிருந்து எந்த சத்தமும் வெளியில் கேட்கக் கூடாது என்றும் எங்களை எச்சரித்தார்.

அந்த காலத்தில் இப்பொழுது இருப்பது போல், தொலைத் தொடர்பு வசதிகளும் இல்லை. இருந்த ஒரேத் தொலைக்காட்சிப் பெட்டியில் (கேபில் போன்ற வசதிகள் அவ்வளவாக இல்லாத நிலை) தூர்தர்ஷனையும், ரேடியோவில் செய்திகளையும் கேட்டுக் கொண்டிருந்தோம்.

ஆனால், நல்ல வேளையாக அப்பொழுது கலவரம் எதுவும் நிகழவில்லை.

அப்பொழுது, ஆட்சியில் காங்கிரஸ் இல்லை. மத்தியில் சந்திரசேகர் ராஜினாமா செய்து குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. மேலும் அப்பொழுது, குடியரசுத் தலைவராக இருந்த திரு.வெங்கட்ராமன் தமிழர்கள் பெருமளவில் இருந்த (கரோல் பாக், ஆர்.கே.புரம் போன்றவை) பகுதிகளில் இராணுவத்தை (mock-drill நடத்த) முன் கூட்டியே அனுப்பியிருந்தார்.  

மேலும், அப்பொழுது நாட்டில் காங்கிரஸுக்கு எதிரான மனநிலை (அதிலும் குறிப்பாக, தில்லியில் அத்வானியின் இரதயாத்திரையை ஒட்டி பாஜக-விற்கு ஆதரவான நிலை) இருந்ததும் ஒரு காரணம்.


மெதுவாக, உள்ளிருந்த நாங்களும் வெளியில் நிலவியது ஒரு ஆரம்பப் பதட்டமே அது கலவரத்திற்கான ஆரம்பம் இல்லை என்பதை உணர்ந்தோம். மதியமே, நாங்கள் உணவு மற்றையத் தேவைகளுக்காக வெளியே செல்லத் துவங்கினோம்.

4 கருத்துகள்:

  1. மீதியையும் எழுதுங்க சாமீ.. இண்ட்ரஸ்டிங்கா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கு நன்றிகள் ரவி.

      நல்ல வேளையாக கலவரம் எதுவும் நடக்கவில்லை. ஆனால், அந்த பதட்டம் இரண்டு நாட்களுக்கு நீடித்தது என்றே சொல்லலாம்.
      ஏனெனில், இந்திரா இறந்த பொழுது கலவரம் உடனே வெடிக்கவில்லை; அடுத்த நாள் மதியம் தான் அது துவங்கியது. (இதிலிருந்தே அது திடீரென வெடித்த கலவரம் அல்ல; தீய சக்திகள் இதைத் தங்கள் முன் விரோதத்தைத் தீர்த்துக் கொள்ள உபயோகித்தன என்பது புரிந்து கொள்ள முடியும். அதற்கு ஆதிக்கத்தில் இருந்தவர்களின் ஆதரவு கிட்டியதுதான் வேதனை).

      நீக்கு
  2. பதில்கள்
    1. மே 21-ஆம் தேதி இரவு (10-11 மணியளவில்) குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
      மேலே கூறிய அனுபவங்கள் 22-ஆம் காலை நிகழ்ந்தவை.

      நீக்கு