நாம்
அனைவரும் நம் குழந்தைகள் எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும் என்று விருப்பப்
படுவோம்.
திடீரென்று
ஒருநாள் நாம் எதிர்பாராத ஒரு பொழுது அவர்கள் உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதை
அல்லது அவர்கள் முன்னர் சொன்ன ஒரு பொய் வெளிப்படும் பொழுது, நம் மனதில் ஒரு பெரிய
வெற்றிடமும் அவர்களைப் பற்றிய பெரிய கேள்வியும் உருவாகும். இனி அவர்கள் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்;
படிப்பு, நன்னடத்தை, எதிர்காலம் ஆகியவை பாதிக்கப்படும் என்ற பயமும் உருவாகும்.
மேலும், மனதின் மற்றொரு பகுதியில் ‘நம் வளர்ப்பு முறைச் சரியில்லையா’ அல்லது
‘அவர்களின் சேர்க்கைச் சரியில்லையா’ என்பது போன்ற கேள்விகளும் வரும்.
ஆனால்,
சமீபத்திய மனோதத்துவ ஆராய்சிகள் கூறுவது என்னவென்றால், 4 – 6 வயதில் அவர்களுக்கு
இந்த பொய் சொல்லும் வழக்கம் துவங்கிவிடுகிறதாம். இது அவர்களின் மன வளர்ச்சியின் முக்கிய கட்டமாகும்.
குழந்தைகளின் ’பொய் சொல்லுதல்’ என்ற இச்செயல் எப்படி நடக்கிறது என்பதைப் பற்றி
நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், பொய்
சொல்லத் துவங்கும் குழந்தை முதலில் உண்மை என்ன என்பதை தன் மூளையில் ஏற்றி தனது அறிவால்
அதை பகுத்து ஆய்ந்து பின் அதற்கு மாற்றாக ஒரு கற்பனையை தன் மூளையில் உருவாக்கி அதை
மற்றவர் நம்பும் வகையில் அவர்களிடம் எப்படி எடுத்து வைப்பது என்பதை ஆராய்ந்து அந்த
செயலைச் செய்கிறது. மேலும், இதை வளர்ப்பு, சமூக நிலை என்பவற்றைத் தாண்டி அவர்களின்
இயல்பான மூளை வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் கருதுகிறார்கள்.
இந்த
பொய் சொல்லுதல் அவர்களுக்கு அவர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களின் நுட்பங்களைப்
புரிந்து கொள்ளுவதையும், அவற்றின் உண்மைத் தன்மையை புரிந்து கொள்ளவும் அவற்றுக்கு
மாற்றான தன்மையை கற்பனை செய்ய அல்லது அனுமானிக்கவும் உதவுகிறது.
ஆக,
சிறுவயதில் குழந்தைகள் கூறும் சிறு சிறு பொய்களைப் பற்றி கவலைப் படுவதற்கு எதுவும்
இல்லை. பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் அந்த பொய்கள் அளவுக்கு அதிகமாகப்
போய்விடக் கூடாது என்பது தான்.
அவர்கள் பொய் சொல்லும் அளவுக்கு அழுத்தம் கொடுக்காமல் அவர்கள்
உண்மை சொல்ல ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவது தான். அதாவது, அவர்கள் தங்கள் தவறுகளை
ஏற்றுக் கொள்ளும் பொழுது அதைக் கோவமாக வெளிப்படுத்தாமல் அவர்கள் உண்மை உண்மையை
உரைத்த்தற்கு பாராட்டியோ அல்லது அந்தத் தவறுகளை மன்னிப்பதன் மூலமோ இதை அவர்களுக்கு
உணர்த்தலாம். சில நேரங்களில் நாம் செய்யும் அதீத எதிர்வினைகள் (over reactions) அவர்களை பொய் செல்வதை நோக்கிச்
செலுத்துகின்றன. மேலும், உண்மை சொல்வதால் ஏற்படும் நன்மைகளையும் அது
தரும் சுயமதிப்பையும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். உண்மை உரைப்பதற்கும்
அதனால் ஏற்படும் சோதனைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு அவர்கள் தன்னம்பிக்கை
உடையவர்களாக வளர்க்கவும் வேண்டும்.
உண்மை சொல்வதால் ஏற்படும் நன்மைகளையும் அது தரும் சுயமதிப்பையும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.//
பதிலளிநீக்குநன்றாக சொன்னீர்கள்.