திங்கள், ஜூலை 02, 2012

பாரம்பரிய நகரம்


சென்ற டிசம்பரில் இந்த பதிவில் புதுதில்லியின் நூறு வருட நிறைவும் அதைக் கொண்டாடாத்தையும் பற்றி எழுதியிருந்தேன்.

ஆனால், சென்ற வருடம் இந்திய தேசிய கலை மற்றும் கலாசார பாரம்பரிய அறக்கட்டளை சென்ற வருடம் ஓர் முக்கிய கருத்தாக்கத்தை உருவாக்கியுள்ளது. அது என்னவென்றால் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) சென்ற ஆண்டுகளில் துவங்கியுள்ள கலாச்சார நகரங்களின் பட்டியலில் தில்லியை இணைப்பதற்கான முயற்சியே.

அது என்ன ’கலாச்சார நகரம்’ என்றால் இதுவரை உலக அளவில் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை, யுனெஸ்கோ கலாச்சார இடங்களாக அறிவித்து அவற்றை பாதுகாக்க உதவி வந்துள்ளது. இதில் இந்தியாவின் 28 இடங்கள் அடங்கியுள்ளன. [தமிழகத்தைப் பொறுத்தவரை தஞ்சை பெரிய கோவிலும், மதுரை மீனாட்சியம்மன் ஆலயமும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. (ஊட்டி மலை ரயில் பாதை மற்ற மலை ரயில் பாதைகளுடன் இந்திய மலை ரயில்கள் என்ற தனிப்பட்டியலில் உள்ளது)]. தில்லியைப் பொறுத்தவரை செங்கோட்டை, குதும்ப்மினார் (மற்றும் அதிலுள்ள இரும்புத்தூண்), ஹுமாயூன் கல்லறை ஆகிய மூன்றும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மேற்கூறிய 28 இடங்களைத் (இவற்றில் 23 மனிதரால் கட்டப்பட்ட பாரம்பரியமான இடங்கள் 5 காசிரங்கா வன காப்பகம், சுந்தர் வனம் போன்ற இயற்கையானவை) தவிர மேலும் 30 இடங்கள் வைப்புப் பட்டியலில் இருக்கின்றன. இதில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை இன்று பாரம்பரிய பகுதியாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் 2005-ஆம் ஆண்டு முதல் பாரம்பரிய நகரங்களைப் பட்டியலிட்டு அவற்றைப் பராமரிக்கவும் யுனெஸ்கோ நினைத்தது. பல்வேறு நாடுகளில் இது பற்றிய கருத்தரங்கங்களும் நடைபெற்றன.  2007-ஆம் ஆண்டு கருத்தரங்கம் இந்தியாவில் (சண்டிகரில்) நடைபெற்றது. ஆனால், அதன் செயல் வடிவம் சென்ற ஆண்டுகளில் தான் முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவின் அலகாபாத் நகரத்தின் பெயர் முதலில் பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தில்லியின் பெயரையும் இப்பட்டியலில் சேர்க்க யுனெஸ்கோவிடம் பரிந்துரை செய்ய இந்திய தேசிய கலை மற்றும் கலாசார பாரம்பரிய அறக்கட்டளை முயற்சி செய்து வருகிறது. சென்ற செப்டம்பர் ஆரம்பத்தில் 91 பக்கங்களைக் கொண்ட ஒரு பரிந்துரைப் படிவத்தை இந்திய தொல்லியல் ஆய்வு சமூகத்திடம் (Archeological Society of India), இந்திய தேசிய கலை மற்றும் கலாசார பாரம்பரிய அறக்கட்டளைக் கொடுத்த்து. இதன்படி,  நகரின் நான்கு முக்கிய பகுதிகள் (1. ஷஹஜானாபாத் என்று கூறப்படும் ஷாஜகானால் கட்டப்பட்ட செங்கோட்டை சார்ந்த பகுதிகள், 2. நிஜாமுதீன், 3. மெஹ்ரோலி (குதும்பினார் பகுதி), 4.  ல்யூடியன்ஸ் பங்களா பகுதி என்று அழைக்கப்படும் லுயூடியன்ஸ்-ஆல் வடிவமைக்கப்பட்ட குடியரசுத் தலைவர் மாளிகை,  இந்தியா கேட் மற்றும் அதைச் சார்ந்த புது தில்லி பகுதிகள்) இத்திட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும். இது தற்பொழுது யுனெஸ்கோவின் வைப்புப் பட்டியலில் இருக்கிறது.

இம்முயற்சி வெற்றி பெற்றால், சுற்றுலாத் துறையில் சற்று முன்னேற்றம் காண முடியும். அந்த அளவில் இது ஒரு வரவேற்கத்தக்க முயற்சி.

2 கருத்துகள்: