நாம் நம் குழந்தைப் பருவத்திலிருந்தே
காந்தியடிகளைப் பற்றிப் படிக்கும் பொழுது அவரின் மதுவிலக்கு நிலைப்பாட்டைப் பற்றியே
படித்துவந்துள்ளோம். எனவே, காந்தியடிகள் என்றவுடன் அஹிம்சையும், மதுவிலக்கும் நம் அனைவராலும்
அறியப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சத்தீஸ்கர் அரசின் மதுபான நிறுவனம்
(Chhattisgarh State Beverages Corporation) – சத்தீஸ்கரின் டாஸ்மாக் -
தன் முக்கியச் செயலான மதுபான விற்பனையுடன் மதுவிலக்குப் பிரசாரத்தையும் செய்ய உத்தேசித்துள்ளது.
இதற்கு, தேசத்தந்தை மஹாத்மா காந்தியின் பெயரைப் பயன்படுத்த உள்ளது. சமீபத்தில்
(24.01.2013 அன்று) இந்த வருட காலண்டரை காந்தியடிகளின் உருவத்துடன் வெளியிட்டுள்ளது.
காந்தியடிகளின் படம் ’குடிமகன்’களின்
மனவுணர்வைத் தூண்டி அவர்களைப் படிப்படியாக இப்பழக்கத்திலிருந்து விடுவிக்கத் தூண்டும்
என்று காலண்டரை வெளியிட்ட சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் தெரிவித்துள்ளார். காலண்டரில்
காந்தியடிகள் மதுபானப் பழக்கத்திற்கு எதிராக வெளியிட்டக் கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
காந்தியடிகளின் இந்தக் கருத்துகளைப் படிப்பவர்கள் மெல்லத் தங்கள் குடிப்பழக்கத்தை விட்டுத்
திருந்த ஒரு வாய்ப்பாக இது இருக்கும் என்று அந்நிறுவனத் தலைவர் தேவஜ்பாய் படேல் கூறியுள்ளார்.
ஆனால், மாநில எதிர்கட்சியான காங்கிரஸ்,
மதுபான நிறுவனத்தின் காலண்டரில் காந்தியடிகளின் படத்தை வெளியிடுவது காந்தியடிகளை அவமானப்படுத்தும்
செயல் என அறிக்கைவிட்டுள்ளது.
சத்தீஸ்கர் அரசு மதுபான நிறுவனம் சமீபகாலமாகச்
சில சமூகப் பொறுப்புள்ளச் செயல்களையும் செய்ய முனைந்துள்ளது. முதல் கட்டமாக, இரண்டாயிரத்திற்கும்
குறைவான மக்கள் தெகையுள்ள கிராமங்களில் தன் மதுபானக் கடைகளை அகற்றியது. பின் அடுத்த
கட்டமாக இந்த எல்லையை 2500க்கு விரிவாக்கியுள்ளது. இதன் மூலம் சுமார் 350 மதுபானக்
கடைகளை சமீபத்தில் மூடியுள்ளது. தவிரவும் இந்த நிறுவனம் ‘பாரத் மாதா வாஹினி’ என்ற மாதர்
சங்கங்களையும் அமைத்து மதுவிலக்குப் பிரசாரம் செய்து வருகிறது.
மற்ற மாநிலங்களைப் போலன்றி வெறும் மதுபான
விற்பனையை மட்டும் செய்யாமல் – பூரண மதுவிலக்கை அறிவிக்க இயலாத நிலையில் – ஓரளவு இது
போன்ற செயல்களையாவது செய்கிறதே என்றுத் தேற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் தான் இன்று
நாடு உள்ளது.
காந்தியின் பெயரை உபயோகித்தாவது நிலைமையைச்
சற்று சீர் செய்ய நினைக்கும் சத்தீஸ்கர் அரசின் மதுபான நிறுவனத்தின் இந்தச் செய்கையைப்
பாராட்ட முடியாவிட்டாலும், தவறு என்று கூறமுடியாது.