திங்கள், அக்டோபர் 24, 2011

வீட்டு விளையாட்டுகள்



விடுமுறை நாள் என்றால் எப்போதும் பையன் அப்பா, வா கேரம் விளையாடலாம்; கிரிக்கெட் விளையாடலாம்; Scrabble விளையாடலாம் என்று ஒரே நச்சரிப்புதான். இதே விளையாட்டு நண்பர்களுடன் விளையாடிய பொழுது போனதே தெரியவில்லை. ஆனால், இவனுடன் விளையாடும் பொழுது மட்டும் ரசிக்கவே முடிவது இல்லை. காரணம், விளையாட்டின் முடிவு. முன்னதில் நமக்கு அது தெரியாது; பின்னதில் பெரும்பாலும், நாம் குழந்தையின் மகிழ்ச்சிக்காகத் தோற்ப்போம், என்பதுதான்.

இப்படி விளையாடும் பொழுது பொதுவாக சந்தேகம் தோன்றும். நாம் எப்பொழுதுமே அவர்களுக்கு விட்டுக் கொடுத்துத் தோற்க வேண்டுமா? இது சரியா அல்லது தவறா? அப்படி விட்டுக் கொடுத்து ஜெயிப்பதால், (1) அவர்களின் திறமை வளர்ச்சி அடையாமல் போய் விடுமா? (2)  அவர்கள் எதிர்காலத்தில் சந்திக்கும் சிறு சிறு தோல்விகளிலே  மனம் உடைந்துவிடுவார்களா? என்ற கேள்விகள் எழத்தான் செய்கிறது. இதற்கு விடைதான் என்ன?

விடை என்னவோ சுலபமானது தான்.

குழந்தைகள் வெற்றியைத்தான் விரும்புகின்றன.  

ஆனால், தொடந்து வெற்றியே பெற்று வந்தால் அவர்களுக்கு அந்தப் போட்டியில் அவர்களை வெற்றி பெற வைப்பதற்காகவே பெற்றோர் தம் திறமையை முழுவதும் உபயோகிக்கவில்லையோ என்ற சந்தேகதை ஊட்டும். இது, அவர்கள் திறமை மேல் அவர்களுக்கு சந்தேகத்தை வளர்க்கும்; அல்லது, அவர்கள் வெற்றி பெற யாராவது தியாகம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற வீண் எதிர்பார்பை வளர்க்கும்.

எனவே, அவர்களுக்கு அவ்வப் பொழுது தோல்வியைச் சந்திக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால், அதை சற்று நாசூக்காக அவர்கள் மனம் கோணாத படியும் செய்ய வேண்டும். அந்தத் தோல்வியில் அவர்கள் ஏதாவது கற்றுக் கொள்ளும் படி அமைந்த்தாகக் காட்ட வேண்டும்.

சாதாரணமாக, இது போன்ற போட்டி விளையாட்டுகள் குடும்பத்தில் குழந்தைகளுக்கும் பெற்றொருக்கும் அன்பு, நெருக்கம் ஆகியவற்றை வளர்க்கும் ஒரு பாலமாகவே இருக்கின்றன. மிகச் சிறு வயதில் (2-5 வயது) தாயம், பரமபதம் போன்ற அதிர்ஷ்ட விளையாட்டுகளை விளையாடுவதுதான் சிறந்தது. ஏனெனில், இதில் குழந்தை, பெரியவர் இருவருக்குமே வெற்றி தோல்வியில் சமவாய்ப்பு இருக்கிறது.

பிறகு, அவர்களுக்கு, சொல் விளையாட்டு (Word Building, Scrabble போன்றவை), அறிவு / உடல் திறன் வளர்க்கும் (Chess போன்றவை) விளையாட்டுகளைச் சொல்லித் தரலாம். முதலில், மொதுவாகவும், எளிதான விளையாட்டுகளை அறிமுகம் செய்ய வேண்டும். போகப் போக அவற்றைச் சற்றுக் கடினமாக்க வேண்டும். அப்பொழுதுதான் திறமை வளரும். மேலும், வெற்றியையும் அவர்கள் அதிக உற்சாகத்துடம் விளையாடுவர். அப்படியேத் தோற்றாலும் போராடிதான் தோற்ற உணர்வை அவர்களுக்குத் தர வேண்டும். அது அவர்களின் திறமை, போராட்ட குணங்களை வளர்க்க உதவும்.

வியாழன், அக்டோபர் 20, 2011

இனிப்பு விஷ(ய)ங்கள்



தீபாவளி வந்துவிட்டாலே எங்கும் கடைகள் தான். அதிலும் இந்த இனிப்பகங்கள் வாசலில் எப்பொழுதும் கூட்டம் தான். இவர்கள் தங்கள் கடைக்கு முன் பெரிய் பந்தல் போட்டு பாதி தெருவை அடைத்துவிடுவார்கள், அதனால் ஏற்படும் வாகன நெரிசல் வேறு. எங்கள் சிறு வயதில் அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் பெரும்பாலும் இனிப்பும் மற்ற பலகாரங்களும் வீட்டிலேயே செய்வது தான் வழக்கம். இங்கு தில்லியிலோ பெரும்பாலும் இதுபோன்ற கடைகளிலிருந்து வாங்கித் தான் கொண்டாடுகிறார்கள். இங்கிருக்கும் தமிழ்ர்களும் பெரும்பாலும் வீட்டிலேயே செய்வது போல் தான் தெரிகிறது. ஆனால் வட இந்தியர்கள் பெரும்பாலும் இந்த கடைகளின் பண்டங்களையே வாங்குகிறார்கள்.

இதில் முக்கிய பிரச்சனை என்ன என்றால், தில்லி மைய நகரிலாவது பராவாயில்லை, புறநகர் பகுதிகளில் விற்கப்படும் இது போன்ற திண்பண்டங்கள் பெரும்பாலும் தரம் குறைந்தவையாக இருக்கும். பெரும்பாலானவற்றில் கலபட்த்திற்கு உத்திரவாதம் தரலாம். அதிலும், குறிப்பாக உத்திரபிரதேசத்தின் காஸியாபாத் இதற்கு பெயர்போனது. சமீபத்தில் தில்லியில் இது போன்ற 75 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 50% கடைகள் முறைப்படி அனுமதி பெறாதவை. புறநகரில் நட்ததப் பட்டிருந்தால் நிலைமை 80% ஆக இருந்திருக்கும். தில்லி மையப் பகுதியில் கடந்த 70 நாட்களில் உணவுப் பொருட்கள் கலப்பட தடுப்புத் துறையினரால் (PFA) பரிசோதிக்கப்பட்ட 653 மாதிரிகளில் 17 மட்டுமே தரமானவை / கலப்படம் அற்றவை. முக்கியமாக, பால் பொருட்களில், பாலுக்கு பதிலாக வெள்ளை பெயிண்ட்; பாலேட்டிற்கு பதிலாக டாய்லெட் பேப்பர்கள்; நெய்க்கு பதிலாக மிருகக் கொழுப்புகள் ஆகியவை கலப்படம் செய்யப் பட்ட்டிருக்கின்றன.

எங்கள் வீட்டில் எப்பொழுதும் வீட்டில் செய்வதுதான். மனைவிக்கு நன்றாக சமைக்கத் தெரியும் என்பது மட்டுமன்றி அதில் அவருக்கு விருப்பமும் உண்டு. தவிர, வெளியில் வாங்கும் பண்டங்கள் அவருக்கு ஒத்துக்கொள்வதும் இல்லை (பெரும்பாலும் கடுகு எண்ணெயால் தயாரிக்கப் படுவதால்). இருந்தாலும், அக்கம் பக்கம் இருக்கும் நண்பர்கள் இவற்றை தீபாவளியன்று நமக்குக் கொடுத்துவிடுவார்கள். அவற்றின் மேல் தோற்றக் கவர்ச்சியைக் கண்டு குழந்தைகள் தமக்கு வேண்டுமென்று அடம் பிடிக்கும் அதை சமாளிப்பது தான் பெரிய பிரச்சனை.

செவ்வாய், அக்டோபர் 18, 2011

கலவை – 6



சென்ற வாரம் உச்ச நீதி மன்ற வழக்குரைஞர் ப்ரஷாந்த் பூஷன் (சாந்தி பூஷனின் மகனும் அன்னா ஹாசாரே-வின் சிவில் சொசைடி  உறுப்பினர்உச்ச நீதி மன்ற வளாகத்தில், காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்து அதற்கெதிராக, அவருடைய அறையில் தாக்கப்பட்டுள்ளார் இது வன்மையாகக் கண்டிக்கப் பட வேண்டியது அவசியம். நம்மிடையே மாற்றுக் கருத்தை வன்முறையின்றி எதிர்கொள்ளும் திறன் குறைந்து கொண்டே வருகிறது என்பத்ற்கு இதுவும் ஓர் உதாரணம்.

தில்லி மற்றும் தலைநகர் (NCR) பகுதிகளில் தற்பொழுதைய நிலவரப் படி ஒரு கோடியே இருபது லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்று போக்குவரத்து துறை தன் குறிப்பேட்டில் கூறியுள்ளது. இவற்றைத் தவிர ஹரியானா (குறிப்பாக மெற்கே குட்காவ்ன், தெற்கே ஃபரீதா பாத்), உத்திர பிரதேசம் (காசியாபாத், மீரட்) பகுதிகளில் இருந்து தினமும் லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் தில்லியின் சாலைகளில் சென்று வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தி நிலைமையைச் சீர் செய்ய தில்லி காவல் துறை பகீரதப் ப்ரயத்தனம் தான் செய்து வருகிறது. இதில் அவர்களுக்கு தலைவலியைத் தருவதில் முக்கிய பங்கு VVIP வாகன்ங்கள் தான். அதிலும், அனுமதியில்லாத சிவப்பு / நீல விளக்குகள் பொருத்தப்பட்ட வாகன்ங்கள் தான். இதைத் தொடர்ந்து மத்திய அரசு தில்லி மாநில அரசுக்கு (மற்ற மாநில அரசுகளுக்கும்) இந்த விளக்குகள் பொருத்துவதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல் துறையும் முடுக்கி விடப்பட்டு அனுமதியின்றி விளக்குகள் பொருத்தியிருக்கும் வாகன்ங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். [சென்ற வாரம் தில்லி புராரி பகுதி சட்டமன்ற உறுப்பினை ஸ்ரீக்ரிஷன் கூட இரண்டு முறை அபராதம் கட்டியுள்ளார்; அனுமதியின்றி பொருத்தியதற்கு அவர் கூறும் காரணம், அவர் பகுதியில் வன்முறை அதிகம்; ஆனால் அரசு போதிய காவல் தரவில்லை என்பதே. விளக்கினால் என்ன பாதுகாப்பு என்பது விளங்கவில்லை]. தவிர, தில்லி காவல் துறை வாகனங்களுக்கு விதி மீறலுக்கானத் தொகையை மேலும் அதிகரிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது. காமன்வெல்த் போட்டிகளின் போது அதற்காகப் போடப்பட்ட தடங்களில் விதி மீறலுக்கு அதிகத் தொகை அபராதமாக விதிக்கப் பட்டது. அந்த சமயத்தில் இதன் காரணமாக விதி மீறல் குறைவாகத்தான் இருந்த்து என்று கோடிட்டுக் காட்டியுள்ளனர். ஆனால், இது சரியான காரணம் தானா என்பது சந்தேகமே. ஏனென்றால், போட்டி நடைபெற்ற வழித் தடங்களோ குறைவு. அதிலும் காவல் துறையின் பெருங்கவனம் (ஏன் முழு கவன்முமே என்று கூடக் கூறலாம்) அங்கேயே இருந்து கண்காணிக்கப் பட்டது. இப்போதோ கண்காணிப்பு நகர் முழுவதற்க்கும் தேவை. இது முக்கிய் தடங்களில் காவல் துறையின் posting contract rate-ஐ தான் உயர்த்துமே அன்றி போக்குவரத்து விதிமீறலை ஒரளவுக்குத் தான் கட்டுப் படுத்தும். ஏனெனில், அதிக அபராதம் என்றால் மக்கள் அங்கிருக்கும் காவலருக்கு கையூட்டு கொடுத்து போய் கொண்டே இருப்பர். இதை நாம் எத்தனை வருடங்களாகப் பார்த்து வருகிறோம்.

சென்ற வாரம், தில்லி ஆர்கே புரம் மற்றும் இந்தியா கேட் பகுதிகளில நடந்த இரண்டு வெவ்வேறு கார் விபத்துகள் சற்று கவனிக்கப் பட வேண்டியவை. இரண்டு விபத்துகளிலும் ஓட்டுனர்களின் வயது இருபத்தியிரண்டுக்கும் குறைவு. மது அருந்தி உள்ளனர். அவர்களின் வாகனமோ ஒன்றரைக்கோடி மதிப்புள்ள மிகவேகக் கார். பொதுவாக, வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் இந்த மிகவேகக் கார்கள் அந்நாட்டு சாலைகளில் நீண்ட (inter-continental) பயணங்களுக்காக தனிப்பயனாக (ப்ரத்யேகமாக) வடிவமைக்கப் பட்டவை. ஆனால், தில்லி சாலைகளில் அந்த வேகம் கட்டுக்குள் அடங்குமா என்பது தெரியவில்லை. பணமும் குழந்தைகளின் பிடிவாதமும் சில நேரங்களில் போட்டி மனப்பான்மையும் பெற்றோர்களை இது போன்ற வாகனங்களை பிள்ளைகளுக்குக் கொடுக்க வைக்கின்றன. அவர்கள் இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப பின் விளைவுகளைப் பற்றி கவலைப் படாமல் நடப்பது தான் காரணம். இதில், அவர்கள் மட்டும் பாதிக்கப்பட்டால் அவர்களேத் தேடிக் கொண்ட்து என்று விட்டு விடலாம். ஆனால், இது மற்றவரையும் பாதிக்கிறதே அதுதான் வேதனை. இவர்களை யார் திருத்துவது.

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஒருநாள் போட்டிகள் துவங்கியுள்ளன. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. சொந்த மண்ணிலாவது இன்னமும் சரியாக விளையாடுகிறார்களே. இங்கிலாந்து ஆனாலும் மிக மோசமானத் தோல்வியையே தழுவியுள்ளது. அவர்களும் வீட்டிலே புலி வெளியிலே எலி தான் போலிருக்கிறது (atleast ஒருநாள் போட்டிகளில்). ஆனாலும் ஐயன் பில் தேர்வு செய்யப் பட்டிருந்தால் மத்தியில் ஓரளவு தாக்கு பிடித்திருக்கலாம். ஸ்ட்ராஸ் இல்லாததும் பின்னடைவே. இருந்த போதும், ஐந்து நாள் போட்டிகளை வைத்துதான் இங்கிலாந்து அணியின் தரத்தை விமர்சிக்க முடியும்.

கடைசியாக ஒரு கதை….

அது ஒரு வாடகைக்கு கார் தரும் டூரிஸ்ட் அலுவலகம். அதில், அப்பொழுது தான் சேர்ந்த ஒரு புது அப்ரசெண்ட் பெண். அவளிடம் சீனியர் கைப்புள்ள வாடிக்கையளரை சமாளிப்பது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு போன்கால். எதிர் முனை ஆசாமி அவர் 6 மணிக்கு ஏர்போர்ட் செல்ல வேண்டும் என்று வாடகை கார் கேட்டுள்ளதாகவும், மணி 7ஆகியும் இன்னமும் வண்டி வரவில்லை என்றும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். பெண் எவ்வளவோ பேசிப் பார்த்தும் முடியவில்லை. கைப்புள்ளையின் கையில் கைபேசி வந்தது. அவர், “ஐயா, நான் ஏர்போட் போன் செய்து கேட்டுவிட்டேன். விமானம் இன்னமும் கிளம்பவில்லை. இன்று தாமதமாம்” என்று சமாளித்தார்.

எதிர் முனை ஆசாமி கூறினார், “நீங்க சொல்றது சரிதான். இன்று ஃப்ளைட் தாமதம் தான். ஏனென்றால், நான் தானே அந்த விமானத்தின் பைலட். அப்புறம் எப்படி அது கிளம்பும்

திங்கள், அக்டோபர் 17, 2011

எந்திரனா? சுதந்திரனா?



தில்லி புறநகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு ஒரு வசதி. பொதுவாக, அலுவலகம் சென்றுவர இவர்கள் Chartered Bus”  என்று அழைக்கப் படும் ஒப்பந்த - ஒரே குறிப்பிட்ட இடத்திலிருந்து குறிப்பிட்ட இடம் வரை சென்று வர – பேருந்துகளைப் பயன்படுத்துவது. பயணம் செய்பவர்கள் அணைவருக்குள்ளும் ஒரு நட்பு வட்டம் உருவாகும்; ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே வருவதால் பயணக் களைப்பும் தெரியாது.

நேற்று ஒரு விவாதம்.

ஒரு நண்பர் தன் வீட்டில் எல்லாம் ஒரு குறிப்பிட்ட கால அட்டவணைப் படி நடப்பதால் தான் என்றுமே பேருந்திற்குச் சரியான நேரத்திற்கு வருவதாகக் குறிப்பிட்டார். உடனே, வேறு ஒரு நண்பரோ தன் வீட்டில் இப்படி அட்டவணையெல்லாம் கிடையாது; ஏனெனில், அது குழந்தைகளின் சுதந்திரத்தைப் பாதிக்கும்; அவர்கள் எந்திரங்கள் இல்லை; மேலும், அவர்கள் எப்பொழுதும் யாரையாவது சார்ந்தே இருக்க வேண்டியிருக்கும்; சுய முடிவுகள் எடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இதில், எது சரி?

தினசரி செய்யும் வேலைகளுக்கு ஓர் அட்டவணைத் தேவையா? அல்லது, நண்பர் கூறியது போல் குழந்தைகளை அவர்கள் விருப்பத்திற்கு சுதந்திரமாகவிட்டுவிடலாமா?

இதில் ஒன்றை நாம் கவனத்தில் கொள்வது முக்கியம். “Independent” என்ற ஆங்கில வார்த்தையை நாம் அனைவரும் தவறாகவே பயன்படுத்தி வருகிறோம். அதற்கு பொருள்யாரையும் சார்ந்து இல்லாமல் தனிப்பட்டு இயங்குவதுஎன்பதே. ஆனால், நாம் அதை எந்தக் கட்டுபாடும் இன்றி தான் தோன்றிதனமாக இருப்பது என்ற பொருளிலேயே பயன்படுத்துவதுதான் இந்த குழப்பத்திற்கும் குளறுபடிக்கும் காரணம். சுதந்திரம் என்றால் ஒழுங்கின்மை என்று பழகிக் கொண்டுவிட்டோம். அதை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். சுதந்திரம் அடைந்த தேசத்திற்கு கட்டுபாட்டுடன் ஓர் அரசியல் சட்டமோ, மக்களுக்கு ஒரு சிவில் சட்டமோ இல்லை என்றால் அங்கு அமைதியும் சமாதானமும் எப்படி இருக்க முடியும்.

எனவே, தினசரி நடவடிக்கைகளில் ஒரு ஒழுங்கு இருப்பது மிகவும் தேவை. அது காலதாமங்களைத் தவிர்க உதவும். மேலும், குழந்தைகளுக்கு அவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும், அவர்களின் கடமைகள் என்ன,  அதை எப்படி செய்ய வேண்டும் என்ற தெளிவும் பெற பெருமளவில் உதவும். பெரும்பாலான நேரங்களில், குழப்பமும் சிக்கலும் இல்லாத நடைமுறை தான் குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும். செய்யும் முறைகளில் அவர்கள் தங்கள் விருப்பப்படி, அது மற்றவர்களைப் பாதிக்காத வண்ணம், செய்ய அனுமதிக்கவும் வேண்டும். அது தான் சுதந்திரம். மாறாக, ஒழுங்கின்மை சுதந்திரமாகாது என்பதுடம் அது மேலும் அவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்வதில் தான் முடியும்.

பாரதி கூட இதனால் தான்,
காலை எழுந்தவுடம் படிப்புபின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டுஎன்று
      வழக்கப் படுத்திக் கொள் நீ பாப்பா  என்று பாடினான்.

இதில் காலை படிப்பு மாலை விளையாட்டு என்பதிலெல்லாம் கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு கவனமாக இருக்கும் நாம், இந்தவழக்கப்படுத்திக் கொள்வதில் மட்டும் வழுக்கி விடுகிறோம். [ஒருவேளை விளக்கெண்ணெய் அதிகமாகி அதில் கால் வைத்துவிட்டோமோ?]

இங்கு, ஆங்கிலத்தில் சொல்வதென்றால், catch word () key word இந்த வழக்கப்படுத்திக் கொள்வதுதான். மற்றபடி இரவு படிக்கக் கூடாது என்பதோ அல்லது காலை உடல் பயிற்சிக்காக விளையாடுவது கூடாதோ என்பது அல்ல இதன் சாரம்.

எனவே, ஒர் அட்டவணை, அவரவரின் தேவை மற்றும் கால அவகாசம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஏற்படுத்திக் கொண்டு, அதை சரியாகச் செயல் படுத்தவும் வேண்டும்.