அக்டோபர் 31 ஆம் தேதி….
சரியாக இருபத்தி எட்டு
வருடங்களுக்கு முன் இதே நாளில் சீக்கிய மதத்தைச் சேர்ந்த அவரது பாதுகாவலர்களாலேயே
அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினம்.
இந்திரா காந்தி-யின் பன்முகத்
தலைமையைத் தேசம் கண்டிருந்தாலும் இன்று பொதுமக்கள் அவரை நினைவு கூறுவது என்பது
1977-இல் அவரால் கொண்டு வரப்பட்ட ’நெருக்கடி நிலை’ அறிவிப்பு தான்.
இந்திரா-வின் இந்த நினைவு நாளை ஒட்டி
எழுத்தாளர் நயன்தாரா சஹகல், தான் எழுதிய இந்திரா-வின் வாழ்க்கை வரலாற்றை மீண்டும்
‘Indira Gandhi : Tryst with Power’ என்ற
பெயரில் 1982-ஆம் ஆண்டு எழுதிய புத்தகத்தை 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் மறு வெளியிடு செய்துள்ளார்.
முதலில் யார் இந்த நயன்தாரா சஹகல்
என்று பார்ப்போம்.
ஜவஹர்லால் நேரு-வின் சகோதரி
விஜயலக்ஷ்மி பண்டிட்-இன் இரண்டாவது மகள் தான் இந்த நயன்தாரா சஹகல். 9 நாவல்களும் 8
பிற புத்தகங்களும் எழுதியுள்ள இவருக்கு வயது 85. நேரு குடும்பத்தைச்
சேர்ந்திருந்தாலும் இவர் அவர்களை எப்பொழுதும் விமர்சித்தே வந்துள்ளார். அதிலும்
குறிப்பாக ‘நெருக்கடி நிலை’யில் அதற்கு எதிராகப் போராடியும் உள்ளார். 1980-இல்
மீண்டும் பிரதமரான இந்திரா முதலில் செய்த செயல் இவரது வெளிநாட்டு தூதர்
பணிநியமனத்தை நீக்கியது தான். அந்த அளவு இந்திரா-வை இவர் எதிர்த்துள்ளார்.
1974-ஆம் ஆண்டு ’தெற்காசிய
தலைமைப்பண்பு’ என்ற மாநாட்டிற்கு இந்திரா காந்தியின் மனநிலை மெல்ல மெல்ல சர்வாதிகாரப் போக்கை
நோக்கிச் செல்வதை இந்த மாநாட்டின் கட்டுரையில் தெரிவித்தக் கருத்துகள் பின்னர்
விளக்கமாக எழுதப்பட்டது தான் இந்த புத்தகங்கள்.
புத்தக வெளியீட்டில், இந்திரா
ஒன்று தெய்வமாக (துர்கையாக) பார்க்கப்படுகிறார் அல்லது ஒரு சூழ்ச்சிக்காரியாகப்
பார்க்கப்படுகிறார்; வரலாறு அவரை அனுசரனையாகப் பார்க்கவில்லையா? என்ற கேள்விக்கு
”இரண்டுமே சரியானவை தான். வரலாறு யாரையும் அனுசரனையாகப் பார்க்க அவசியம் இல்லை;
அது அவர்களைக் கணித்து விமர்சிப்பது மட்டுமே அவசியம்.” என்றும்
கூறிய அவர் தன்னால் வரலாற்றில் இந்திராவின் நிலையை இன்று வரை முழுமையாகக் கணிக்க
முடியவில்லை என்று கூறியுள்ளார்.
அவர் கூறியதும்
முழுக்க ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஒருபுறம் வங்கத்தில் ஒரு குடியரசு அமையப்
போரிட்ட அதே நேரத்தில் இந்தியாவில் ஒவ்வொரு ஜனநாயக அமைப்புகளையும் இந்திரா
சீரழித்து வந்துள்ளார். அதிகாரம் அனைத்தையும் மையத்தில் குவித்து அதன் ஒரே
சர்வாதிகாரியாகத் தான் மட்டுமே இருக்கும் வகையில் அவரது ஒவ்வொரு செயலும் இருந்து வந்துள்ளது. குறிப்பாகக் காங்கிரஸ்
கட்சியின் உட்கட்சி ஜனநாயகம் இன்று வரை சீரமைக்கப்பட இயலாத நிலைக்கு
வித்திட்டதே இந்திரா தான் என்று கூறலாம். நேரு-வின் காலத்திலேயே இந்திரா கட்சியின்
தலைவர் பதவிக்கு வந்துவிட்டாலும் (1959), அதை முழுக்க முழுக்க நேருவின் செயலாகக்
கூறமுடியாது. ஏனெனில், நேருவே முதலில் இந்திரா அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை.
ஆனாலும், மணவாழ்வு கசந்த நிலையில் பொது வாழ்வில் ஈடுபடுவது அவரது மனத்துயரை
மாற்றியமைக்கும் என்பதால் அதை அனுமதித்ததாகத் தன் சகோதரி விஜயலக்ஷ்மிக்கு
(1957-இல்) எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதிலும், தான் பிரதமராக
இருக்கும் பொழுது தன் மகள் கட்சியின் தலைவர் ஆவது (1960) ஆரோக்கியமானதல்ல என்று
நேரு வெளிப்படையாகவே கூறியுள்ளார். ஆனாலும், ஜி.பி.பந்த், யு.என்.தெபார் ஆகியோரின்
வற்புறுத்தலை நேரு ஏற்க வேண்டியதாயிற்று.
ஆனால் இந்திராவோ தன்
மகன் சஞ்சய் காந்தியை வெளிப்படையாகவே தன் வாரிசாக நியமித்தார். அரசாங்கத்தின்
பல்வேறு முடிவுகள் சஞ்சய் காந்தியே எடுக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது. சஞ்சயின்
மறைவிற்குப் பின் அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சர்கள் பின் தள்ளப்பட்டு எந்த
முன்னனுபவமும் இல்லாத ராஜீவ் அரசியலுக்குள் திணிக்கப்பட்டார்.
புத்தகத்தில்
இந்திரா காந்தி-யின் சர்வாதிகார மனப்பான்மையை விளக்க பல்வேறு செயல்கள் கூறப்
பட்டாலும் அவர் பிரதமர் ஆவதற்கு முன்னரே நடந்த ஒரு முக்கிய நிகழ்வு முக்கியமாகக்
குறிப்பிடப்படுகிறது. அது தான் இந்தியாவின் மாநிலம் ஒன்றில் முதன் முதலாக மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நீக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக்
கொண்டுவரப்பட்டமை. 1960-இல் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தலைமையில் கேரளத்தில் நடந்த
கம்யூனிஸ்ட் ஆட்சியில் ரோமன் கத்தோலிக கிருத்துவர்களுக்கும் நாயர் சமூகத்தைச்
சேர்ந்தவர்களுக்கும் போராட்டம் நடந்தது. இதைக் காரணம் காட்டி, கேரள அரசை நீக்க
காங்கிரஸ் கட்சித் தலைவர் என்ற முறையில் பரிந்துரை செய்ததே இந்திராதான். அப்போதைய
உள்துறை அமைச்சர் ஜி.பி.பந்த் உடனே இதை மந்திரி சபையின் ஒப்புதலைப் பெற்று
நிறைவேற்றினார்.
1964-இல் நேரு இறந்த
பொழுது லால் பகதூர் சாஸ்திரி மந்திரி சபையில் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராகப்
பணியாற்றினாலும் கட்சி நிர்வாகத்தில் மிகவும் முனைப்புடன் பணிபுரிய முடியாதபடி (கணவரை
இழந்த நிலையில்) குழந்தைகளை வளர்ப்பதில் ஈடுபட்டதையும் உடல் நலக் கோளாறுகளுக்காகச்
(சிறுநீரகக் கல்) சிகிச்சைப் பெற்று வந்ததையும் குறிப்பிடுகிறார். நேருவின்
தொகுதியில் (உத்திர பிரதேசத்தில் பூல்பூர்) கூட அவர் சகோதரி விஜயலக்ஷ்மி-தான்
போட்டியிட்டார்.
Tryst என்பதற்கு ஆங்கிலத்தில் assignment,
rendezvous அதாவது கள்ள (காதல்) சந்திப்பு என்பது போன்ற பொருள் இருந்தாலும் இங்கு
உபயோகிக்க நினைத்தது போராட்டம் என்றப் பொருளில் தான். காரணம் நேரு இந்தியா
சுதந்திரம் அடைந்த பொழுது பேசிய சொற்பொழிவு ‘Tryst with Destiny’ அதாவது விதியுடன்
போராட்டம் என்பது தான். இங்கு நயன்தாரா, Power என்ற வார்த்தையை பலம், பதவி,
அதிகாரம் என்ற பொருளில் கூறினாலும் சங்கேதமாக, 1971-இல் வங்காள தேசம் உருவாக
நடந்தப் போரைத் தொடர்ந்து இந்திரா ‘சக்தி’யாகக் கூறப்பட்டதைக் கேலி செய்யவே
இப்படி எழுதியிருக்கிறாரோ என்றும் தோன்றுகிறது.
புத்தக வெளியீட்டின்
பொழுது சோனியா பற்றி நயனதாரா கூறிய இந்த கருத்து புத்தகத்திற்கு நல்ல விளம்பரம்
தரும் என்று நினைக்கிறேன். அது, ‘சோனியா அவரது மாமியாரின் பேசுவதையும் நடப்பதையும்
அவதனித்துள்ளார்; அவரைப் போலவே அரசியல் முடிவுகளுக்குக் (அவரது) குழந்தைகளைச்
சார்ந்துள்ளார். மேலும், அவரைப் போலவே மகனை வாரிசாகத் தேர்ந்தெடுத்துள்ளார்’
என்பது தான்.