சிவராத்திரி என்பது மாசி மாதத் தேய்பிறை
14-ஆவது நாள் (க்ருஷ்ண பட்ச சதுர்தசி திதி) அன்று வருவது. எல்லா மாதங்களிலும் சிவராத்திரி
வரும். மக (மாசி மாதம்) மாதத்தில் வருவதால் ’மக சிவராத்திரி’ என்று கூறப்பட்டு பின்
’மஹா சிவராத்திரி’ என்று திரிந்திருக்கலாம். 
த்ரயோதசி உமையின் வடிவம்; சதுர்தசி சிவனின்
வடிவம் – இரண்டு திதிகளும் சேர்வது தான் சிவராத்திரி. [நாம் பங்குனி உத்திரத்தை தான்
சிவ-பார்வதி திருமண நாளாகக் கூறுகிறோம்; ஆனால், வட இந்தியாவில் சிவராத்திரியை சிவ-பார்வதி
திருமண தினமாகக் கூறுகிறார்கள். காரணம் இதுவாகக் கூட இருக்கலாம்] இவை இரண்டும் சேர்வதை
வைத்து இதை மூன்று விதமாகப் பிரிப்பார்கள். அவை
1.  
உத்தம சிவராத்திரி:    பகலில் த்ரயோதசி இருந்து சூரிய
அஸ்தமனத்தின் போது சதுர்தசி வந்து அது இரவு முழுவதும் நீடித்து மறுநாள் பகல் வரை இருக்க
வேண்டும். அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப் பின் 10 நாழிகைக்குள்
சதுர்தசி வந்து விட வேண்டும். அது தான் உத்தமம் (சிறந்தது)
2.  
மத்திம சிவராத்திரி:    சதுர்தசி காலை முதல் மறுநாள்
வரை60 நாழிகை இருப்பது;  அல்லது சூரிய அஸ்தமனத்துக்கு
முன்னர் வருவது அல்லது இரவின் 10 நாழிகைக்குப் பின்னர் சதுர்தசி வந்தாலும் அது
மத்திமமே (ஏற்றுக் கொள்ளத் தக்கது).
3.  
அதம
சிவராத்திரி:      இரவு 20 நாழிகை நேரம் சதுர்தசி இருந்து அதன்
பின் அமாவாசை வந்தால் அது அதம சிவராத்திரி (ஏற்கத் தக்கதல்ல). அன்று விரதம் அனுஷ்டிக்க
மாட்டார்கள். முதல் நாளே சிவராத்திரி விரதம் இருப்பார்கள். 
இதில் வேறு இரண்டு விஷயமும்
கவனிப்பார்கள் அவை மகாநிசி காலமும் லிங்கோத்பவ காலமும். 
மகாநிசி
காலம்
என்பது இரண்டாம் ஜாமத்தின் கடைசி நாழிகையும் மூன்றாம் ஜாமத்தின் முதல் நாழிகையும் கொண்ட
48 நிமிடங்கள் மகாநிசி என்று கூறுவர். மகாநிசி காலத்தில் அமாவாசை சேரக்கூடாது.
சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு
மணி நேரத்திற்கு பின்னரும் மறுநாள் உஷாக்காலத்தின் ஒரு மணி நேரத்திற்கு முன் உள்ள
நேரத்திற்கு இடைப்பட்ட நேரம் – அதாவது மாலை 7 மணி முதல்
மறுநாள் காலை 3 மணி வரை (இது சூரிய அஸ்தமன உதய நேரத்தைப் பொறுத்து மாறும்) – சிவராத்திரி நேரம். இதை நான்காகப் பிரித்து நான்கு கால பூஜை செய்வார்கள்.
இதில் மூன்றாவது காலம் லிங்கோத்பவ காலம். லிங்கோத்பவ காலத்தில் சதுர்தசி
இருப்பது நல்லது.
இந்த வருடம் திங்கட்கிழமை
காலை 4.06 முதல் அடுத்த நாள் காலை 3.53 வரை சதுர்தசி (திருக்கணித முறை)
இருக்கிறது. அதாவது,
மகாநிசி காலத்தில்  அமாவாசை வரவில்லை, லிங்கோத்பவ
காலத்தில் சதுர்தசி இருக்கிறது.   ஆனால், பகலில் த்ரயோதசி இல்லை. எனவே இது மத்திம சிவராத்திரி தான்.
ஆனால், நட்சத்திரத்திற்கும்
கிழமைக்கும் கூட முக்கியத்துவம் உண்டு. பொதுவாக மகாசிவராத்திரியன்று திருவோணம்,
அவிட்டம், சதயம் ஆகிய நட்சத்திரங்களே வரும். அதில் திருவோணம் சிறந்தது. கிழமைகளில்
சிவனுக்கு உகந்தது திங்கட்கிழமை (சோமவாரம்); அன்று அதம சிவராத்திரியாக இருந்தாலும்
கூட கொண்டாடலாம் என்றும் சிலர் கூறுவர். இந்த வருடம் சிவராத்திரி திருவோண
நட்சத்திரத்துடன் கூடிய திங்கட்கிழமை. எனவே இது மிகச் சிறந்தது என்றும் கூறுவர்.
கோவில்களில், சிவராத்திரியன்று
நான்கு காலத்திலும் செய்யும் பூஜைகளைப் பார்ப்போம்.
முதல் காலம்:       சோமஸ்கந்த ரூபம்
                             பஞ்ச கவ்ய அபிஷேகம் செய்வர்
                             பின் சந்தனப் பூச்சு பூசுவர்
                             சிவப்பு பட்டு சாற்றுவர்
                             காய்கறியுடன் அன்னம் நைவேத்யம் செய்வர்
வில்வ
பழம் படைப்பர்
                             ரிக் வேதம் ஓதுவர்
                             விளக்கெண்ணெயால் ரதரத்தி என்ற தீபம்
ஏற்றுவர்
                             திருநீற்றுபச்சிலை, தாமரை, அரளி பூ
சமர்பிப்பர்
                             மாணிக்க
வாசகரின் சிவபுராணம் படிப்பர்
2-ஆம் காலம்:      தக்ஷிணாமூர்த்தி ரூபம்
                             பஞ்சாமிர்த அபிஷேகம்
                             பச்சைக் கர்பூர பூச்சு
                             மஞ்சள் பருத்தி ஆடை
                             பாயசம், லட்டு நைவேத்யம்
                             பலா பழம் படைப்பர்
                             யஜுர் வேதம் ஓதுவர்
                             இலுப்பை
எண்ணெயால் ஏக தீபம் ஏற்றுவர்
                             தாமரை,
வில்வம் சமர்பிப்பர்
                             ருத்திர
தாண்டகம் (எ)நின்ற திருத்தாண்டகம் படிப்பர்
3-ஆம் காலம்       லிங்கோத்பவ ரூபம்
                             தேன்
அபிஷேகம்
                             அகில்
பூச்சு
                             வெள்ளைக்
கம்பளி
                             சத்துமாவு,
பாயசம் நைவேத்யம்
                             மாதுளம்
பழம் படைப்பர்
                             சாம
வேதம் ஓதுவர்
                             நெய்
விட்டு கும்ப தீபம் ஏற்றுவர்
                             அருகம்
புல், தாழம்பூ சமர்பிப்பர்
                             லிங்கபுராண
திருக்குறுந்தொகை படிப்பர்
 [இதே நேரத்தில் கருவரைக்குப் பின் உள்ள
லிங்கோத்பவ மூர்த்திகு, நெய் பூசி வெந்நீரால் அபிஷேகம் செய்து கம்பளி ஆடை அணிவிப்பர்.
ஸ்ரீ ருத்ரம், சமகம் பாராயணம் செய்வர். சிவசஹஸ்ரநாம அர்ச்சனை செய்து எள் சாதம், பொரி
உருண்டைகள் நிவேதனம் செய்வர்.]
4-ம் காலம்           சிவ ஸ்வரூபம்
                             கருப்பஞ்சாறு
அபிஷேகம்
                             கஸ்தூரி
பூச்சு
                             பச்சை
மலர் ஆடை
                             கோதுமை
நெய் சீனி சேர்த்த உணவு நைவேத்யம்
                             அதர்வண
வேதம்
                             நல்லெண்ணெய்
விட்டு மகாமேரு தீபம்
                             எல்லா
விதமான பூக்களும் கலந்து சமர்பிப்பர்
                             அப்பர்
எழுதிய திருத்தாண்டகம் படிப்பர்





