ஞாயிறு, பிப்ரவரி 23, 2020

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் (பகுதி-1)


ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்


பகுதி-1


ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்
நேசமா மரியா மக்தலேனா
நேரிலே யிந்தச் செய்தியைக் கண்டாள்.
தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்;
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாசமின்றி நமை நித்தங் காப்பார்,
நம் அஹந்தையை நாம் கொன்று விட்டால்,

அன்பு காண் மரியா மக்தலேனா,
ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்.
பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே,
போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை,
அன்பெனும் மரியா மக்தலே னா.
ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே.-

உண்மை யென்ற சிலுவையிற் கட்டி,
உணர்வை ஆணித் தவங் கொண்டடித்தால்
வண்மைப் பேருயிர் – யேசு கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்.
பெண்மை காண் மரியா மக்தலே னா,
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து.
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியி லிஃது பயின்றிட லாகும்.
  

இப்பாடலை எழுதியவர் மஹாகவி பாரதியார். அவர், தன்னை சக்திதாசனாகக் கூறிக் கொண்ட போதிலும், பிற மத எதிர்ப்பைக் காட்டியதில்லை. சமயச் சார்பின்றிச் சமய நல்லிணக்கவாதியாகவே விளங்கியுள்ளார். இதை, அவரின் பல்வேறு பாடல்கள் மெய்ப்பிக்கின்றன.


இந்தப் பாடலில் பாரதியார் யேசுவை ஈசன் என்று குறிப்பிடுகிறார். அவர் யேசுவை கிருஸ்துவர்களின் கடவுள் என்று வைத்து ஈசன் என்று குறிப்பிட்டிருபார் என்று வைத்துக் கொண்டாலும் அஃது ஒன்றுதான் காரணம் என்று கூற முடியாது. அவர் கிருஸ்துவத்தின் திரித்துவத்தை (Trinity) அறிந்தவராகவே இருக்கிறார். இதை, அவருடைய புதிய ஆத்திசூடியின் காப்புப் பாடலின் (பரம்பொருள் வாழ்த்து என்ற தலைப்பிட்டுப் பாடியுள்ளார்) மூலம் அறியலாம். அதில்


ஆத்திசூடி, இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்



என பல்வேறு மதத்தினர் தொழும் தெய்வங்களைக் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவ மதக் கடவுளைப் பற்றிக் கூறும்பொழுது, “ஏசுவின் தந்தைஎன்ற வரியைக் குறிப்பிடுகின்றார். இதன் மூலம் அவர் பிதா சுதன் பரிசுத்த ஆவி என்ற திரித்துவத்தை அறிந்தவராகவே தெரிகிறார்.


ஆனால், முன்னர் குறிப்பிட்டுள்ள கவிதையில் ஏசுவை ஈசன் என்றே குறிப்பிடுகிறார்.



சிறுவயது முதலே இந்தப்பாடலில் வேறு தெய்வங்களைக் குறிப்பிடாமல் ஈசன் என்று ஏன் குறிப்பிடுகிறார் என்று எண்ணியது உண்டு.


பாரதியார் ஐரோப்பிய வரலாறு நன்கு அறிந்தவர். அதை அவர் பாடல்களின் மூலம் நாம் அறியலாம். அதனால், அந்தத் தொன்மங்களையும் அவர் அறிந்திருக்க வாய்ப்புள்ளது.


சில தொன்மங்களை அடுத்தப் பதிவுகளில் நாம் சற்றுப் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக