சென்ற பதிவில் 13-ஆவதாக ஒரு ராசி இருக்கிறதா என்ற கேள்வியைக் கேட்டு,
ஆஃபியூகஸ்-இன் கதையைக் கொடுத்திருந்தேன். அதற்கும் பதிமூன்றாவது ராசிக்கும் என்ன சம்பந்தம்?
பதிமூன்றாவதாக ஒரு ராசி இருக்கிறதா? என்ற கேள்விகள் உங்களுக்குத் தோன்றக் கூடும்.
கெப்லர் நட்சத்திரக் கூட்டத்தைக் கொண்டு வரைந்த ஆஃபியூகஸ்-இன் படம் |
ஒரு சிலரைப் பொறுத்தவரை பதிமூன்றாவதாக ஒரு ராசி இருக்கிறது. [ஏன்,
பதினான்காவதாகவும் ஒரு ராசி இருக்கிறது அதைப்பற்றி வேறு ஒரு சமயத்தில் பார்க்கலாம்].
இப்பொழுது பதிமூன்றாவது ராசியைப் பார்ப்போம்…
நம் இந்திய ஜோதிடத்தைப் பொறுத்தவரை ஒருவரின் ராசி என்பது அவர்
பிறந்த நட்சத்திரம் எந்த ராசியில் அமைந்திருக்கிறதோ அதைப் பொறுத்தது. வான்வெளியில்
பல்வேறு நட்சத்திரங்கள் (நட்சத்திரம் என்பதைவிட நட்சத்திரக் கூட்டம் என்று கூறலாம்)
இருந்தாலும் சில நட்சத்திரக் கூட்டங்கள் நேராக சூரியன் மற்றும் மற்றக் கோள்கள் தென்படும்
பாதையில் அமைந்துள்ளன. பூமியின் சுழற்சிப்பாதையில்
சூரியன், சந்திரன் மற்றும் மற்ற கோள்கள் வான்வெளியில் தெரியும் பாதையில் அமைந்துள்ளவையே
அந்த 27 நட்சத்திரங்கள். இந்த 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளாகப் பிரித்து ஒவ்வொரு
ராசியிலும் 2¼ நட்சத்திரங்கள் குறிக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு அமைந்த ராசிகளுக்கு அந்த கால மக்கள் அவற்றில் கற்பனையாக
உருவம் அமைத்து அவற்றை அப்பெயரினாலேயே அழைத்து வந்தனர். அவை தான் ஆடு போல தென்பட்ட
Aries என்கிற மேஷம், காளை போல தென்பட்ட Taurus என்கிற ரிஷபம், இரட்டையராகத் தென்பட்ட
Gemini என்கிற மிதுனம், நண்டு போல் தென்பட்ட Cancer என்கிற கடகம், சிங்கம் போல் தென்பட்ட
Leo என்கிற சிம்மம், பெண் படுத்திருப்பது போல் தென்பட்ட Virgo என்கிற கன்னி, தராசு
போல் தென்பட்ட Libra என்கிற துலாம், தேள் போல் தென்பட்ட Scorpius என்கிற விருச்சிகம்,
வில் வீரன் போல் தென்பட்ட Sagittarius என்கிற தனுசு, மான் அல்லது நீர்யானை போல் தென்பட்ட Capricorns என்கிற மகரம், குடம் போல் தென்பட்ட Aquarius என்கிற கும்பம், மீன் போல்
தென்பட்ட Pisces என்கிற மீனம் ஆகியவை.
இந்திய ஜோதிடத்தில் பிறந்த தினத்தில் (நேரத்தில்) சந்திரனுக்கு
அருகில் இருக்கும் நட்சத்திரமே ஒருவரின் பிறந்த
நட்சத்திரமாகவும் அந்த நட்சத்திரம் இருக்கும் ராசி சின்னமே அவரது ராசியாகவும் குறிக்கப்
படுகின்றன.
ஆனால், மேற்கத்திய ஜோதிடத்தைப் பொறுத்தவரை ஒருவரின் ராசி பருவ
நிலையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு வருடத்தின் 365/366 நாட்களும் 12-மாதங்களாகப் பிரிக்கப்படுகின்றன.
Vernal equinox என்று அழைக்கப்படும் மார்ச் 22-ஆம் தேதியிலிருந்து ராசிகள் துவங்குகின்றன.
மார்ச் 22 முதல் ஏப்ரல் 21 வரை பிறந்தவர்களின் ராசி Pisces எனப்படும் மீனத்திலிருந்து
ராசிச் சக்கரம் துவங்குகிறது.
பொதுவாக பூமியின் சுழற்சியில் வான்வெளியில் மொத்தமாக 360 டிகிரியில் தெரியும் இந்த 12 ராசிகளும் ஜோதிடத்தைப் பொறுத்தவரை
சரிசமமாக 30 டிகிரிகளில் கணக்கிடப்பட்டாலும் உண்மையில் அப்படி இருப்பதில்லை. சில சற்று
பெரிதாக அதிக டிகிரி கோணமும் சில சற்று குறைவாகவும் இருக்கின்றன. உதாரணமாக கடக, துலா
ராசியின் கோணம் மிகவும் குறைவாக இருக்கிறது (கடக ராசியில் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 9 வரை,
19 நாட்கள் தான் இருக்கும்) மீனம், சிம்மம் போன்றவற்றின் கோணம் அதிகம் (மீனராசியில்
சூரியன் இருப்பது மார்ச் 12 முதல் ஏப்ரல் 18 வரை). இதற்கு பூமியின் சுழல் பாதை வட்டமாக
இல்லாமல் நீள்வட்டமாக இருப்பதும் ஒரு காரணம்.
அதே நேரத்தில் பூமியில் இந்த கிரகங்களும், சூரியனும் சந்திரனும்
கடக்கும் பாதையில் மேற்கூறிய 12 ராசி சின்னங்களைத் தவிர வேறு சில நட்சத்திரக் கூட்டங்களும்
இருக்கின்றன.
மேற்கத்திய கணக்குகளைப் பொறுத்தவரை, சூரியன் நவம்பர் 23 ஆம் தேதி
துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு நேராக வருகிறது. இதற்கு அடுத்த ராசி தனுசு;
இதற்கு சூரியன் வரும் டிசம்பர் 18ஆம் தேதியன்று வரும் [இந்த வருடம் லீப் வருடம் என்பதால்
ஒரு நாள் முன்னதாகவே வந்துவிடும்; சாதாரண வருடங்களில் இந்தக் கணக்குகள் ஒரு நாள் பின்னர்
வரும்].
எனவே நவம்பர் 23-இலிருந்து டிசம்பர்-18 வரை விருச்சிக ராசியாகவும்
இதில் பிறந்தவர்கள் விருச்சிக ராசிக்காரர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
ஆனால் உண்மையில் சூரியன் இந்த விருச்சிக ராசியில் நவம்பர் 29-ஆம்
தேதி வரைதான் இருக்கும். நவம்பர்-30 முதல் டிசம்பர்-18 வரை சூரியன் ஆஃபியூகஸ் என்ற
பாம்புப்பிடாரனில் இருக்கும். இந்த ஆஃபியூகஸ் நட்சத்திரக் கூட்டம் விருச்சிகத்திற்கும்
தனுசுக்கும் இடையில் இருக்கிறது.
இதையும் ராசிச் சக்கரத்தில் சேர்க்க வேண்டும் என்று சிலர் கூறிவந்தனர்/கூறிவருகின்றனர்.
நீல் டிக்ரேஸ் டைசன் என்பவர் 'Universe Down to earth' என்ற புத்தகத்தில் இதைப் பற்றி
விளக்கமாக எழுதியுள்ளார்.
ஆனால் ஜோதிடர்களைப்
பொறுத்தவரை ஆஸ்க்லிபியஸ் விருச்சிக ராசியின் ஒரு நீட்சியாகவே கருதுகின்றனர். [ஆஸ்க்லிபியஸ்
கதையில் அவர் தேளை மிதித்து அடக்கியதாகப் படித்தோம் அந்த தேள் தான் விருச்சிக ராசி.]
மேலும், இந்த ராசிக்கென்றுத் தனியாக செயற்பாடுகளும் இல்லை எனவே இவற்றை ஏற்க முடியாது
என்று மறுப்புத் தெரிவிக்கிறார்கள்.
இன்று நவம்பர் 30 ஆம் தேதி சூரியன் ஆஃபியூகஸ் ராசியில் நுழைகிறது. அதாவது, பூமியிலிருந்து ஆஃபியூகஸ் நட்சத்திரக் கூட்டம் தெரியும் பாதையில் சூரியன் வருகிறது.