புதன், மே 27, 2020

அடிமாடு

அடிமாடு

மேய்ச்சல் நிலம் காய்ந்ததென்று
விளைநிலம் சீர்கெட்டுப் போனதென்று
வயக்காடு வீட்டுமனையானதென்று
ஊரைவிட்டு புலம்பெயர்ந்து வந்துவிட்டோம்…
வந்தயிடம் தந்தமிச்சம் உண்டு வாழ்ந்தோம்
சொந்தமென்று ஏதுமின்றி சுற்றி வந்தோம்
பந்துபோல அடிபட்டு ஓடிநின்றோம்
சொந்தமண்ணே சொர்கமென்று திரும்புகின்றோம்….
உழைப்பதனை உறிஞ்ச விட்டு
உயிர் மட்டும் மிச்சம் கொண்டு
வீடு நோக்கி செல்கின்றோம் – இங்கு
அடிமாடாய் வாழுகின்றோம்…

வியாழன், மே 21, 2020

போதுமென்ற மனம்

போதுமென்ற மனம்

பாடுபட்டு தானுழைக்கும் பாட்டாளிக்குக்
காடு வேண்டாம் கழனி வேண்டாம்
பட்டுச் சட்டை பீதாம்பரம் வேண்டாம்
மேலுடுத்தி மானங்காக்க ஆடை போதும்
வீடு கட்டி வாழ வைக்கும் உழப்பாளிக்கு
கோட்டை வேண்டாம் கொத்தளம் வேண்டாம்
தங்கம் வெள்ளி பித்தளை வேண்டாம்
ஓய்வொடுக்க கூரை வீடு அஃதே போதும்
சோறு போட்டு உயிர் காக்கும் விவசாயிக்கு
கூழ் கஞ்சி இருந்தால் போதும்
பாதை போடும் தொழிலாளியை தெருவில்
நடக்க அனுமதி தந்தால் போதும்
நாட்டு மக்கள் நலங்காண
திட்டம் தீட்ட வகையின்றி
ஓட்டதனை காசுக்குப் பெறும்
குடியாட்சி ஒன்றே போதும்
கனவு கொண்டு முயற்சி இன்றி
மதுக்கடையில் வாழ்வு தொலைத்து
இலவசத்தில் வாழ்ந்திருந்தால்
போதுமென்ற மனமே போதும்!

சனி, மே 16, 2020

புது வேலி


புதுமைகள் புகும் நல்வேலையிலே
கலாச்சாரக் காவலன் நாமென்றுக் கூவிப்
பழமை என்னும் பூட்டுக்குப்
புது வேலி செய்துக் காவலிட்டோம்..
கண்ணியமான அன்பதனைக்
கடிவாளம் போட்டு ஒதுக்கி வைத்தோம்
காமக்களிக் கூத்தினையே – உண்மைக்
காதல் என்றேக் காட்சி செய்தோம்..
அமைதி சாந்தி அகிம்சையெலாம்
அடிமைத்தனம் என்றொதுக்கி
வன்மமும் வன்முறையம் வீரமென்று
வருந்தலைமுறைக்குப் பாடம் சொன்னோம்..
உண்மை நேர்மை என்பதெல்லாம்
வெற்றிக்குதவா வீண்செயலாக்கி
பொய்யும் புரட்டும் திறமையென -புது
தத்துவம் செல்லி வாழுகின்றோம்...

திங்கள், மே 11, 2020

மந்திரக் கோலம்

மந்திரக் கோலம்

அந்தி கருக்கும் வானத்திலே
சிந்தை மயங்கும் வேளையிலே
சந்திரனின் தன்னை வரவேற்க – இயற்கை செந்நிறக் கம்பளம் இட்டிருக்கும்
விந்தைகள் ஆயிரம் செய்து தினம்
இரவின் வாசலில் செந்நீர் தெளிக்கும்
முந்தைய தினத்தைப் போல அன்றி – புதுச்
சிந்தைகள் தோன்றிட வழிவகுக்கும்
எந்திர வாழ்க்கை மறந்திடுவே
மந்திர ஜாலங்கள் செய்து தினம்
சுந்தர நிகழ்வைச் செய்திருக்கும்
தந்திரன் யார் நீ சொல்லிடுவாய்…

வியாழன், மே 07, 2020

அன்பின் அரிச்சுவடி

அன்பின் அரிச்சுவடி

அன்னைமடி மெத்தையிலே
ஆடுமொரு தத்தை நான்
இத்தரையில் பிறந்தவரில்
ஈடுஇணை அற்றவள் நான்
உத்தமராய் இவருமெனை
ஊட்டி தினம் வளர்த்திடவே
எத்தனையோ பிறவிக்கடன்
ஏட்டினிலும் எழுதவொண்ணா
ஐயிரு திங்கள் வைத்தீன்று
ஒப்புரவுடனே வாழ்வதற்கு
ஓயாமல் காத்து நிற்கும்
ஒளடாதமாம் இவர் அன்பெனும்
ஆயுதமேயென் உயிர் காப்பு.

திங்கள், மே 04, 2020

முரண்பாடு

முரண்பாடு

மனக்கடலில் ஆசையலைப்
பேரிரைச்சல் போட்டு ஆட
முகந்தனிலே அமைதி காட்டி
மௌனத்தாழ்ப் போட்டிருந்தேன்
கயமையது உள்ளிருந்துக்
களிநடனம் புரிகையிலே
விடியல் நோக்கிக் காத்திருக்கும்
வேடமதைத் தாங்கி நின்றேன்
பொறாமைத் தீயில் நாளும்
பொசுக்கி வெந்து போனாலும்
அழுக்காறு ஏதுமில்லா
ஆன்றோனாய் காட்டிவைத்தேன்
பெருவெள்ளம் தாண்டி நின்றும்
கரைச்சேர மனமில்லா படகாக
ஆசை நீரில் தத்தளிக்கும்
தக்கையென உழலுகின்றேன்.
முரண்பாட்டின் மொத்த உரு
அசுரனாய் உள் வளர்ந்து நிற்க
முற்றும் துறந்த முனிவனென
முகங்காட்டி நிற்கின்றேன்